பயணங்கள் செய்வதென்றால் யாருக்குத்தான் பிடிக்காது? புது ஊர், புதிய இடங்கள் பார்ப்பதில் இருக்கும் மகிழ்ச்சியை விட, ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கையிலிருந்து சிறிது காலத்திற்காவது விடுபட்டுப் போகும் ஆனந்தமே பல நடுத்தரக் குடும்பப் பெண்களுக்கு, அந்தப் பயணங்களை ஆவலோடு எதிர்நோக்க வைக்கும். ஆனால், அந்தப் பயணங்களுக்குத் தயாராவதற்கு அவர்கள் செய்யும் முன்னேற்பாடுகள் இருக்கிறதே, அது சில நேரங்களில் பயணம் செய்வதையே மறுபரிசீலனை செய்ய வைத்துவிடும்.
எனது பயண நினைவுகள் பள்ளிப் பருவத்தில் மன்னார்குடியில் உள்ள தாத்தாவின் வீட்டிற்குச் சென்ற கோடை விடுமுறையிலிருந்து தொடங்குகிறது. அங்குள்ள ‘கே ஆர் எம் எஸ்டேட்’ என்ற பரந்த தோட்டமும், அதன் நடுவே அமைந்திருந்த மிகச்சிறந்த நூலகமும் இன்றும் என் நினைவுகளில் பசுமையாக இருக்கிறது; பகல் முழுதும் அந்த நூலகத்திலேயே தொலைந்து போயிருந்த நாட்கள்தான் எனக்குள் தேடலை விதைத்தன.
சீதையைத் தேடிச் சென்ற அனுமனின் பயண விவரங்களை கம்பர் விவரித்த அழகைவிடவா நான் எழுதிவிடப் போகிறேன்? கவுந்தியடிகளோடு கண்ணகியும் கோவலனும் சென்றதையும் பின் கண்ணகி தனித்து நீதி கேட்டு நெடும்பயணம் சென்றதையும் சிலப்பதிகாரம் விவரித்துக்கூறுகின்றது.
அவ்வளவு ஏன்?
உலகம் சுற்றும் தமிழன் என்று 19ஆம் நூற்றாண்டிலேயே பெயர் பெற்ற ஏ.கே. செட்டியார் அவர்களின் எளிமையான பயணக் கட்டுரைகள் ஜப்பான், அமெரிக்கா ஐரோப்பா நாடுகளின் அக்காலத்தின் தோற்றத்தையும் வாழ்வியல்முறைகளையும் சித்தரித்துக்காட்டுகின்றன.
மணியன் அவர்களின் உணர்ச்சிகரமான விவரிப்புகளும், எழுத்தாளர் வாசந்தி அவர்கள் ஒரு பெண்ணாக உலகை உற்று நோக்கிய அந்த நுட்பமான பார்வையும் எனக்குள் பயணங்கள் குறித்த பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தின.
தந்தை பணி நிமித்தம் கும்பகோணத்தைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு மூன்று வருடத்திற்கு ஒருமுறை இடம் பெயர்ந்ததும், பேருந்திலும் புகைவண்டியிலும் தினசரி பள்ளி சென்றதும் பயணங்கள் என்றாலும், அவை வெறும் ஆரம்பங்கள் மட்டுமே.
எனது உண்மையான ‘தனிப்பயணம்’ தொடங்கியது ஆராய்ச்சிக்காக நான் புது தில்லிக்குச் சென்றபோதுதான். தமிழ்நாட்டிலிருந்து புகைவண்டியில் இரண்டு நாட்கள் பயணம் செய்து, மொழி தெரியாத ஊரில் கால் பதித்த அந்தத் தருணம் ஒரு சவால். இன்று போலத் இணையவழித் தொடர்பு வசதிகள் இல்லாத காலம் அது; நான் எழுதும் கடிதம் என் பெற்றோருக்குச் சென்றடையப் பல நாட்களாகும்.
அந்தப் புதிய சூழலில் என் அண்ணனும் அங்கிருந்தது எனக்குப் பெரும் ஆறுதலாக அமைந்தது. நாங்கள் இருவரும் கல்லூரிக்கு அருகிலேயே ஒரு வீடெடுத்துத் தங்கினோம். தமிழகத்தின் தட்பவெப்ப நிலைக்குப் பழகிய எனக்கு, தில்லியின் அதீத குளிரும், கோடையின் சுட்டெரிக்கும் வெப்பமும் முற்றிலும் புதிய அனுபவங்கள்.
இந்தப் பயணத் தொடர் வெறும் இடங்களைப் பற்றியது மட்டுமல்ல; ஒரு பெண்ணாக இந்தியாவுக்குள்ளும், உலக நாடுகளுக்கும் தனியாகப் பயணம் செய்யும்போது சந்திக்கும் சிக்கல்கள், சவால்கள் மற்றும் அதிலிருந்து கிடைக்கும் எல்லையற்ற அனுபவங்களைப் பற்றியது. தொடர்ந்து பயணம் செய்வோம்.