‘பூச்சிக் கொல்லி மருந்துகளால் உணவு விஷமாகி விட்டது’ என்று பேசிய ஸ்ரீநிவாசனிடம், அப்படியென்றால் ‘நீங்கள் புகைக்கும் சிகரெட்?’ என்ற கேள்விக்கு அவருக்கேயுரிய அட்டகாசச் சிரிப்பு மட்டுமே பதிலாக அமைந்தது. அதுதான் ஸ்ரீநிவாசன்.
மைதா உள்ளிட்ட வேதியல் கலப்புள்ள பொருட்களுக்கெதிரான அவரது உரைகளைப் புறம்தள்ளிய மலையாளிகள், பரோட்டோ போத்திறைச்சி உண்பதோடான தங்கள் உறவை மேம்படுத்திக் கொண்டாலும், இத்தகைய கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரு கலைஞன் என்ற வகையில் ஸ்ரீநிவாசன் எனும் பன்முகத் திறமையாளனைக் கொண்டாடத் தவறியதேயில்லை. அவருக்குப் போட்டியென்று சொல்லக்கூடிய அளவில் மலையாள சினிமாவில் வேறு யாருமில்லை. லோகிததாஸ் போன்ற மேதைகள் இருந்தாலுமே கூட, எம்.டி. வாசுதேவன் நாயரைப் போலவே, திரைத்துறையில் தான் தொட்டதையெல்லாம் பொன்னாக்கிய வித்தகர்.
எம்.டி. கதை, திரைக்கதை, வசனம், இயக்கமென்று தன்னை அடையாளப்படுத்தியது போலவே ஆனால் எம்.டி தடம் பதிக்காத நடிப்புத் துறையிலும் ஸ்ரீநிவாசன் சிறந்து விளங்கி தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கினார். கடந்த டிசம்பரில் எம்.டி. காலமானார். இந்த ஆண்டு இதோ… ஸ்ரீநி.
சாதாரண மனிதனின் குறைபாடுகளையும், தாழ்வு மனப்பான்மையையும் இவ்வளவு நேர்மையாகவும், அதே சமயம் நகைச்சுவையுடனும் வெளிப்படுத்திய மற்றொரு கலைஞன் மலையாளத் திரையுலகில் ஏன் இந்தியாவிலேயே கூட இல்லையென்று சொல்லலாம். சினிமாவில் அழகு என்பது மட்டுமே கதாநாயகத் தகுதி என்ற பிம்பத்தை உடைத்தெறிந்ததோடு, தனது உருவத்தையே நகைச்சுவையாக்கி, சாமானியர்களின் தாழ்வு மனப்பான்மையைப் பிரதிபலித்ததன் மூலம் புதிய பாதையை உருவாக்கிய கலைஞன் ஸ்ரீநிவாசன்.
சிலர் இந்த உத்தியை, ‘உருவக் கேலி’ செய்வதை இயல்பாக்குவதாக குற்றம் சாட்டினாலும் கூட, அது மிகைப்படுத்தப்பட்ட பார்வை என்றுதான் கருதத் தோன்றுகிறது. அதனால்தான் அவரது கதைமாந்தர்களால் காலத்தைக் கடந்தும் ரசிக்கப்படுகிறவர்களாக உலவ முடிகிறது.
எனக்கு மிகவும் பிடித்த ஸ்ரீநிவாசன் திரைப்படங்கள் என்று ஒன்றிரண்டோடு முடித்து விட இயலாது. அவரது எல்லாப் படங்களிலும் ரசிக்கத்தக்க கதாபாத்திரங்களும் சம்பவங்களும் நிறைந்தே இருக்கும்.
சத்யன் அந்திக்காடு, மோகன்லால் கூட்டணி கொடிகட்டிப் பறந்த வேளையில் மம்மூட்டிக்காக ஸ்ரீநி உருவாக்கிய “ஸ்ரீதரனின் ஒண்ணாம் திருமுறிவு” பெரும் வெற்றி பெறாமல் போனாலும் சீன உணவுகள் சமைக்கும் சமையல்காரனாக ஸ்ரீநி அதகளம் செய்திருப்பார்.
‘வடக்கநோக்கியந்திரம்’ – மலையாளத்தின் மிகச்சிறந்த உளவியல் கலந்த நகைச்சுவைத் திரைப்படங்களிலொன்று. பொறுப்புகளிலிருந்து தப்பிக்க ஆன்மீகத்தை ஒரு போர்வையாகப் பயன்படுத்தும் ‘விஜயன் மாஸ்டர்’ எப்போதும் கொண்டாடப்படுபவர்.
‘சிந்தாவிஷ்டயாய சியாமளா’ –
மனைவியை விட அழகில் தான் குறைந்தவன் என்று தாழ்வு மனப்பான்மையால் தவிக்கும் ‘தளத்தில் தினேசனை’ ரசிக்காதவர்களே இருக்க முடியாது. இரண்டுமே மனதிற்குகந்த உலகளாவிய பாத்திரங்கள்.
அவருடைய திரைக்கதைகளில் எல்லாமே நிறைவைத் தரும் படைப்புகள்தான் என்றாலும் எனக்கு மிகவும் பிடித்தது ‘மழையெத்தும் முன்பே’.
ஆசிரியர் மற்றும் மாணவிக்கு இடையிலான உறவில் இருக்கும் புனிதத்தையும், அதே சமயம் ஒரு மாணவியின் முதிர்ச்சியற்ற காதலால் ஏற்படும் விளைவுகளையும் இந்தப் படம் மிகத் தெளிவாகப் பேசியது. பொதுவாக ஸ்ரீநிவாசன் என்றாலே நையாண்டி, சமூக விமர்சனம் என்று நினைப்பவர்களுக்கு, அவர் ஒரு மிகச்சிறந்த ‘உணர்வுபூர்வமான’ கதையையும் எழுதக்கூடியவர் என்பதைச் சொல்வதற்கு இந்தப் படம் ஒரு சாட்சி.
அவரது மற்ற குறிப்பிடத்தக்க படைப்புகளைப் பற்றிக் கொஞ்சம் பேசலாம்.
- சந்தேசம் (Sandhesam): அரசியலை நையாண்டி செய்த இப்படம், “போலந்தைப் பற்றிப் பேசாதே” என்ற வசனம் மூலம் இன்றும் நிலைத்து நிற்கிறது.
- அழகிய ராவணன் (Azhakiya Ravanan): இதில் அவர் ‘அம்புஜாக்ஷன்’ என்ற எழுத்தாளராக, தான் எழுதிய “சிரிக்காதே கபாலி…” என்ற கதையை விவரிக்கும் காட்சிகள், படைப்பாளிகளின் ‘ஈகோ’வை அற்புதமாகப் படம்பிடித்தது.
- வெள்ளானகளுடெ நாடு (Vellanakalude Nadu): அரசு அலுவலகங்களில் நிகழும் ஊழலையும், ஒரு பழைய ‘ரோடு ரோலரை’ யும் வைத்து அவர் செய்யும் கலாட்டாக்கள் அபாரம். குதிரவட்டம் பப்புவின் “தாமரசேரி சுரம்” வசனம் ஒரு மைல்கல். அதிலும் குறிப்பாக, “இப்ப செரியாக்கித் தராம்” என்ற வசனம் தற்போதைய கேரள அரசியலில் ஒரு பொன் வாக்கியமாகவே கருதப்படுகிறது
- வரவேல்பு (Varavelpu): வளைகுடா நாடுகளில் இருந்து வரும் மலையாளிகள் சொந்த ஊரில் தொழில் தொடங்கும்போது சந்திக்கும் தொழிற்சங்கப் போராட்டங்களை எதார்த்தமாகப் பேசியது. கம்யூனிசத் தோழர்களை முகம் சுளிக்கச் செய்தாலும் அவர்களும் சேர்ந்தே சிரிக்கும்படியாக வசனங்களை வைத்ததில் இருக்கிறது ஸ்ரீநிவாசனின் ‘மிடுக்கு’
- நாடோடிக்காற்று (Nadodikkattu): வேலையில்லாத் திண்டாட்டத்தைச் சொல்லும் இப்படம் ‘தாசன்-விஜயன்’ ஜோடியைத் தந்தது. ‘பட்டினப்பிரசேசம்’, ‘அக்கரெ அக்கரெ’ என்று இதன் தொடர் பாகங்கள் வெளிவந்தது மலையாளத் திரையுலகில் அதுவரை யாரும் செய்யாத சாதனை.
ஸ்ரீநிவாசன் ஒரு படைப்பாளியாக எப்போதும் சமூகத்தின் அடியாழத்தில் நடக்கும் மாற்றங்களைக் கூர்ந்து கவனிப்பவர். நடுத்தர வர்க்கத்தினர் தங்களைக் கௌரவமானவர்களாகக் காட்டிக்கொள்ள எவ்வளவு பொய்களைச் சொல்கிறார்கள் என்பதைத் ‘தலையண மந்த்ரம்’, ‘சன்மனஸ்ஸுள்ளவர்க்கு சமாதானம்’ போன்ற படங்களில் தோலுரித்துக் காட்டினார். அரசியல் சித்தாந்தங்கள் மனித உறவுகளைச் சிதைப்பதை அவர் கடுமையாக எதிர்த்தார். உலக அரசியலைப் பற்றிப் பேசுபவர்கள் தன் வீட்டில் நடக்கும் பசியைக் கவனிக்கத் தவறுவதை அவர் கிண்டல் செய்தார். அதுதான் ‘சந்தேசம்’ படத்தின் கதையும் கூட.
அவரது கதைகளில் பெண்கள் பெரும்பாலும் ஆண்களை விடப் புத்திசாலியாகவும், பொறுப்புள்ளவர்களாகவும் இருப்பார்கள். ‘சிந்தாவிஷ்டயாய ஷியாமளா’ படத்தில், ஒரு பெண் தற்சார்புடன் முடிவெடுப்பதைக் காட்டியது அவரது முற்போக்கான பார்வையின் அடையாளம். அரசு இயந்திரம் எவ்வளவு மெதுவாக இயங்குகிறது, சாமானிய மனிதன் ஒரு சிறு காரியத்திற்காக அதிகாரிகளிடம் எப்படிக் கையேந்தி நிற்கிறான் என்பதை அவர் ஆவணப்படுத்தியதுதான் வெள்ளானகளுடெ நாடு.
வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், தாழ்வு மனப்பான்மை, சாமானியனின் அப்பாவித்தனமான தகிடுதத்தங்கள் என அனைத்தையும் ஒரு காலக்கட்டத்தின் வரலாறு போல நகைச்சுவையில் பொதிந்து, பல படங்களில் ஓவியம் போல வரைந்து காட்டிய மகா கலைஞன் அவர்.
அவர் வெறும் நடிகர் மட்டுமல்ல, மலையாளிகளின் சமூக மாற்றங்களைக் கூர்ந்து கவனித்து, அதைத் திரையில் ஆவணப்படுத்திய ஒரு ‘சமூக விமர்சகர்’.
சமூக வலைத்தளங்களில் அறிவியல் விரோதப் போக்குகளுக்கு எதிராகவும், நவீன மருத்துவத்திற்கு எதிராகவும், இயற்கை விவசாயப் பாதுகாப்பு குறித்தும் என்னென்னவோ பேசி அதன் மூலம் எதிர்ப்பைச் சம்பாதித்த ஆளுமையும் ஸ்ரீநிவாசன்தான்.
பல ஆண்டுகளுக்கு முன்பு, “கீமோதெரபி மருந்துகளைக் கடலில் எறிய வேண்டும்” என்ற அவருடைய கூற்றை ஒட்டுமொத்த மருத்துவ உலகமும் எதிர்த்தது. ஆனால், தன் மனதிற்குச் சரியென்று பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்த ஸ்ரீநிவாசன் அதுகுறித்து அலட்டிக் கொண்டதில்லை.
சில கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும், ஸ்ரீநிவாசன் என்ற மேதையையும், யதார்த்தமான அந்த மனிதனையும் நேசிக்காமல் மலையாளிகளால் இருக்க முடியாது. ஸ்ரீநிவாசன் என்ற கலைஞன் நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவர் தந்த சிரிப்பும் சிந்தனைகளும் காலத்தால் அழியாதவை.
என்றும் பிரியத்திற்குரிய ஸ்ரீனிவாசனுக்கு அன்பு அஞ்சலிகள்!