தமிழ் ஒளியின் சிறார் பாடல்கள்

சிட்டு

குள்ளக் குள்ள சிட்டு
கொட்டைப் பாக்கு சிட்டு
அம்பு போல தாவி
ஆகா யத்தில் பறக்கும்!
கம்பு நெல்லு பொறுக்கும்
காட்டில் எங்கும் இருக்கும்
கூரை மேலே வந்து
குந்தி சீட்டி அடிக்கும்.


கிளி

அழகுக் கிளியே இங்கே வா!
அருமைக்கிளியே இங்கே வா!
பழத்தைப் போல உன்மூக்கு!
பச்சைக் காய் போல் உன் மேனி!
குழந்தையைப் போல் பேசிடு வாய்
கோவைப் பழமும் தந்திடுவேன்!
உன்னைப் பார்த்தால் பசி தீரும்
ஓ..ஓ.. கிளியே பறந்து வா.


மயில்

பூவைப் போல கொண்டை
பொன்னைப்போலப் புள்ளி!
விசிறி போலத் தோகை!
வெள்ளை வெள்ளைக் கண்கள்!
நீல மயில் ஆடும்
வானில் மேகம் கூடும்!


கண்ணாடி

தண்ணீரைப் போல் என் உருவம்
காட்டும் கண்ணாடி
தங்கச்சியை அழகு பார்க்க
சொல்லும் கண்ணாடி
பெண்ணுக்கும் அவள் மாப்பிள்ளைக்கும்
ஆயிரம் சேதி
பேசிக்கொள்ளக் கற்றுக் கொடுக்கும்
பெரிய கண்ணாடி!

Author

Related posts

அனைவரும் சமம்

வாழ்த்துகிறோம்

ஊர்வலம் போன பெரியமனுஷி