தம்பி சீனிவாசனின் எழுத்துகளைத் தேடி..

தமிழ்ச் சிறார் இலக்கிய எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றைத் தொகுப்பதற்காக எழுத்தாளர் படைப்புகளைத் தேடிக்கொண்டிருந்த நேரம். பல முறை தள்ளிப்போட்டு, கடைசியாகப் பேசி, மடிப்பாக்கத்தின் பல்வேறு தெருக்களுக்குள் நுழைந்து அந்த அடுக்ககத்தை ஒருவழியாகத் தேடிக் கண்டறிந்து உள்ளே நுழைந்தேன். ஒரு பெட்டியில் இருந்த சில நூல்கள், தட்டச்சுப் பிரதிகள், பழைய இதழ்களின் நறுக்குகளை எடுத்து என் முன்வைத்தனர். எனக்கு மலைப்பாக இருந்தது.

ஏனென்றால், தமிழ்ச் சிறார் இலக்கிய வரலாறு குறித்து ஆதாரபூர்வமாக அறியப் புகுந்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சும். அந்தக் காலத்தில் பூவண்ணன், தற்போது ஓரளவுக்கு ஆர்.வி.பதி, தேவி நாச்சியப்பன் போன்றோர் சில விஷயங்களை ஆவணப்படுத்தி இருக்கிறார்கள். அதுவும்கூட நூல்கள் குறித்த, எழுத்தாளர்கள் குறித்த தொடக்கநிலைத் தகவல்கள் தானே ஒழிய, விரிவான தகவல்கள் என்று கூற முடியவில்லை.

நாம் நினைத்துப் பார்க்க முடியாத புதுமை விஷயங்கள், கடந்த நூற்றாண்டின் இரண்டாம் பாதி சிறார் இலக்கியத்தில் ஏதோ ஒரு வகையில் சிறிய அளவிலாவது தொட்டுக்காட்டப்பட்டுள்ளன. அவை தொடக்க நிலையில் இருந்திருக்கலாம், பரவல் ஆகாமல் இருந்திருக்கலாம். ஆனால், அந்தக் காலத்தில் என்ன வேலை நடந்துள்ளது என்பதை நாம் இன்றைக்கு முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை, காரணம் உரிய வகையில் ஆவணப்படுத்துதல் இல்லாமல் போனதே. எந்த ஒரு எழுத்தாளரது வாழ்க்கை வரலாறு, நூல் பட்டியல், புத்தகங்களை எங்கு வாசிக்க முடியும்?, அவை அச்சில் உள்ளனவா இல்லையா?, இணையத்தில் வாசிக்க இயலுமா? என்பது போன்ற தகவல்கள் எளிதில் கிடைப்பதில்லை.

தொடக்க காலம்
நான் தேடிப் போயிருந்தது தம்பி சீனிவாசனின் மகள் அனுராதாவின் வீடு. அவரும், அவருடைய கணவர் ராமசாமியுமே தம்பி சீனிவாசனின் நூல்கள், கட்டுரைகளை எனக்குக் காட்டினார்கள். தம்பி சீனிவாசன் – கடந்த நூற்றாண்டில் எழுச்சிபெற்ற தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் அழ.வள்ளியப்பாவுடன் இணைந்து சிறார் இலக்கியத்தை வளர்த்தவர். சாகித்ய அகாடமியின் தமிழ்ப் பிரிவில் வேலை பார்த்த அவர், சென்னை, புது டெல்லியில் வசித்திருக்கிறார். சாகித்ய அகாடமியின் மண்டலச் செயலாளராகவும் பணிபுரிந்த அவர், நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தின் ஆலோசகராகவும் செயல்பட்டுள்ளார்.

மயிலாப்பூர் கேசவப் பெருமாள் கோயில் அருகில் அவரது பூர்விக வீடு இருந்துள்ளது. மயிலாப்பூர் பி.எஸ். உயர்நிலைப் பள்ளியில் இளம் வயதிலேயே அன்றைய பள்ளி இறுதித் தேர்வை முடித்துள்ளார். சிறிய வயதிலேயே முடித்துவிட்டாலும், படிப்பில் அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கு அவருக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதனால் தட்டச்சு பயின்றுள்ளார். அதிவேகமாக தட்டச்சு செய்பவராக இருந்துள்ளார்.

தமிழில் அறிவியல் எழுத்தைத் தொடங்கி வைத்தவர்களில் ஒருவரான பெ.நா.அப்புசாமியின் தட்டச்சு உதவியாளராக இருந்துள்ளார். அதேபோல் கம்ப ராமாயணம், சங்க இலக்கிய நூல்களைப் பதிப்பித்த மர்ரே ராஜம் பதிப்பகத்தினரிடம் மெய்ப்பு திருத்துபவராகப் பணிபுரிந்துள்ளார். சிறு வயதிலிருந்தே இப்படி எழுத்து சார்ந்து இயங்கியவர்களுடன் பணிபுரிந்ததால், வாசிப்பு, எழுத்தில் ஆர்வம் வந்து அவரும் எழுதத் தொடங்கியுள்ளார்.

எழுத்துப் பணி
மாமண்டூர் சுந்தரம் சீனிவாசன் – எம்.எஸ். சீனிவாசன் என்கிற பெயரிலேயே எழுதத் தொடங்கியுள்ளார். ஆசிர்வாதம் என்கிற பெயரில் பெரியவர்களுக்கான கவிதைகள் எழுதியுள்ளார். பின்னர் தம்பி சீனிவாசன் எனப் புனைப்பெயர் சூட்டிக்கொண்டுள்ளார். தம்பி என்கிற முன்னொட்டு எப்படி வந்தது? அவருடைய அக்கா, காலம்காலமாகப் பாசமாக அழைத்ததன் நினைவாகவே தம்பி என்கிற முன்னொட்டைச் சேர்த்து எழுதத் தொடங்கியுள்ளார். அதேநேரம், அன்றைய எழுத்துத் துறையில் வேறு பல சீனிவாசன்களும் இருந்திருக்க வேண்டும்.

தன் உறவினர் பெண் ராஜியையே மணந்த அவர், திருமணச் சீதனமாக பணத்துக்கு பதில் தமிழ் தட்டச்சுக் கருவியும் சைக்கிளும் கேட்டுள்ளார். இதற்காக ஜெர்மனியில் இருந்து தட்டச்சுக் கருவியும் மலேசியாவில் இருந்து தமிழ் தட்டச்சுப் பலகையும் வரவழைத்துத் தரப்பட்டுள்ளது. அது அவரது வாழ்க்கை முழுக்க உதவியுள்ளது.

நேரடி சிறார் கவிதை, சிறார் கதைகள், சிறார் நாடகம், சிறார் மொழிபெயர்ப்பு உள்ளிட்டவற்றைச் செய்துள்ளார். ‘கண்ணன்’, ‘கல்கி’, ‘கோகுலம்’ உள்ளிட்ட பல இதழ்களுக்கு எழுதியுள்ளார். நிறைய மொழிபெயர்த்துள்ளார். பெரும்பாலானவை நேஷனல் புக் டிரஸ்ட்டுக்காக செய்தவை. கதைகள் மட்டுமல்லாமல், பல்துறை சார்ந்தும் மொழிபெயர்க்கும் திறன் அவருக்கு இருந்துள்ளது.

நினைத்த வேகத்தில் தட்டச்சு செய்வதில் வல்லவர் தம்பி சீனிவாசன். காலையில் தட்டச்சு செய்யும் சத்தம் கேட்டுத்தான் பல நாள் நாங்கள் விழிப்போம் என்கிறார் அவருடைய மூன்றாவது மகள் அனுராதா. தம்பி சீனிவாசனுக்கு 3 மகள்கள், ஒரு மகன். மகள் கோதை அப்பாவின் எழுத்து சார்ந்து ஆர்வமாக இருந்துள்ளார். அதேநேரம் தனது வாரிசுகள் யாரும் எழுத்துத் துறையில் ஈடுபடவில்லையே என்கிற வருத்தம் அவருக்கு இருந்துள்ளது.

இலக்கியப் பணி
சிறார் இலக்கிய வளர்ச்சிக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட அழ.வள்ளியப்பாவுடன் இணைந்து தம்பி சீனிவாசன் இயங்கியுள்ளார். குழந்தை எழுத்தாளர் சங்கத்தில் செயலாளராக 3 ஆண்டுகளும், பின்னர் துணைத்தலைவராகவும் செயல்பட்டுள்ளார். பூவண்ணன், ரேவதி போன்ற அந்தத் தலைமுறை எழுத்தாளர்களுடன் அவருக்கு நெருங்கிய பழக்கம் இருந்துள்ளது.
டெல்லியில் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின், அவருடைய அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லாத நிலையில் மீண்டும் சென்னை வந்துள்ளார். சென்னை வந்த பிறகு அவருக்குத் தொடக்கநிலை பார்கின்சன் நோய் இருந்துள்ளது. அதனால் பேனா பிடித்து எழுதுவது சிரமமாக இருந்துள்ளது. இது அவரது மனதைப் பெரிதும் பாதித்ததாக அவருடைய மருமகன் ராமசாமி, மூன்றாவது பெண் அனுராதா ஆகியோர் தெரிவிக்கின்றனர்.

அவருடைய குரு வள்ளியப்பாவைப் போலவே தம்பி சீனிவாசனும் நீண்ட நாள் வாழவில்லை. 15.7.1930இல் பிறந்து 1998இல் 67 வயதில் காலமாகியுள்ளார். அவர் காலமான பின் கையிலிருந்த நூல்களை ரேவதி ஈ.எஸ்.ஹரிஹரனிடம் பார்வைக்காக அவருடைய குடும்பத்தினர் கொடுத்துள்ளனர்.

தம்பி சீனிவாசனின் நூல்களில் பெரும்பாலானவை நேஷனல் புக் டிரஸ்ட், சில்ரன் புக் டிரஸ்ட், பப்ளிகேஷன் டிவிஷன், சாகித்ய அகாடமி போன்ற அரசு நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளன. இன்றைக்கு அவருடைய நேரடி நூல்கள் பெரும்பாலும் அச்சில் இல்லை. மொழிபெயர்ப்பு நூல்கள் சில அச்சில் உள்ளன. அவருடைய நூல்களைத் தேடுவதும் அறிவதும் சற்று சிக்கலாகவே இருக்கிறது.

தங்கக் குழந்தைகள்‘ என்கிற சிறார் நாடகத்துக்காக மத்திய அரசின் விருது பெற்றிருக்கிறார். இவருடைய ‘சிவப்பு ரோஜாப்பூ’ சிறார் பாடல் தொகுதியை ஓவியர் கோபுலுவின் சித்திரங்களுடன் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டது. இவருடைய ஆரம்ப கால நூல்கள் பலவற்றை பிராட்வே பாரி நிலையம் வெளியிட்டுள்ளது.

சிறார் இலக்கியப் பங்களிப்பு
அவருடைய முக்கியமான பங்களிப்பு சிறார் பாடல்களும் சிறார் இலக்கிய மொழிபெயர்ப்புகளும் என்று நான் கருதுகிறேன். சிறார் பாடல்களை பலரும் எழுதியிருந்தாலும் சந்தம், பாடக்கூடிய நயம், புதுமை போன்ற அம்சங்கள் தம்பி சீனிவாசன் பாடல்களில் இருக்கின்றன. அதேநேரம் அவர் எழுதி 2 தொகுதிகள் மட்டுமே வந்திருப்பதாகத் தெரிகிறது. புத்தகம் தயாராகும் முறை, பத்திரிகை தயாராகும் முறை போன்றவற்றைக் குறித்து கதை போல அந்தக் காலத்திலேயே சிறு நூல்களாக எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மிக்கி பட்டேல் எழுதி இவர் மொழிபெயர்த்த ‘குட்டி யானை பட்டு’, சுவாரசியமான கதையை எளிய மொழிநடையில் தந்த ஒன்று. எவரெஸ்ட் மலையில் ஏறிய முதல் இந்தியப் பெண்ணான பச்சேந்திரி பால் எழுதிய ‘எவரெஸ்ட் எனது உச்சி யாத்திரை’ மொழிபெயர்ப்பு நூலும் முக்கியமானது. அதேபோல் கே.டி. அச்சயாவின் உணவு வரலாற்று நூலான ‘உங்கள் உணவும் நீங்களும்’ நூல் முன்னோடி முயற்சி.

பெட்டிச் செய்தி: தம்பி சீனிவாசன் நூல்கள்

சிறார் இலக்கியம்
ஓலை வெடி (சிறுகதை), பப்ளிகேஷன்ஸ் டிவிஷன்
யானையில் பறந்தவன்
எட்டுத்திக்குக் கதைகள்
பயத்தை வென்ற ராமன்
வேடன் மகன்
தங்கக் குழந்தைகள் (நாடகம்)
சிவப்பு ரோஜாப்பூ (பாடல் தொகுப்பு)
பத்திரிக்கையின் கதை
புத்தகம் தயார்

மொழிபெயர்ப்பு
•குட்டி யானை பட்டு (நேஷனல் புக் டிரஸ்ட்)
•யார் கெட்டிக்காரர் (நேஷனல் புக் டிரஸ்ட்)
•ஜானுவும் நதியும் (நேஷனல் புக் டிரஸ்ட்)
•தேடிப்பார் (நேஷனல் புக் டிரஸ்ட்)
•பெண் படிப்பறிவு பெற்று விட்டால் (நேஷனல் புக் டிரஸ்ட்)
•எவரெஸ்ட் எனது உச்சி யாத்திரை (நேஷனல் புக் டிரஸ்ட்)
•உங்கள் உணவும் நீங்களும் (நேஷனல் புக் டிரஸ்ட்), கே. டி. அச்சய்யா
•யுகோஸ்லோவியச் சிறுகதைகள், சாகித்ய அகாடமி
•காலக் கறையான் (பெரியவர்களுக்கான கவிதைகள்), மீனாட்சி புத்தக நிலையம்
•காலத்தின் ஓரத்தில் (பெரியவர்களுக்கான கவிதைகள்), மீனாட்சி புத்தக நிலையம்

Author

Related posts

அனைவரும் சமம்

வாழ்த்துகிறோம்

தேசிய கீதம்