தமிழ் இனி 2026!

காலச்சுவடு பதிப்பகம், முப்பது ஆண்டுகளைக் கடந்து, இன்று உலக அரங்கில் தெற்காசிய மொழி இலக்கியங்களின் பிரதிநிதித்துவத்தை முதன்மைப்படுத்தி, லண்டனில், பாரீஸின் சோர்போன் நூவெல் Sorbonne Nouvelle (Université Sorbonne-Nouvelle) பல்கலைக்கழகத்தில், நார்வே ஓஸ்லோவில் தனது செயல்பாடுகளை விரித்துக் கொண்டு போகிறது. 1988ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் முதல் இதழை வெளியிட்ட சுந்தர ராமசாமி அவர்களின் பெரும் கனவென்பது அதற்கும் முன்னாடியே உருப்பெற்றிருந்தது.

காலச்சுவடு தொடங்குவதற்கு ஏழெட்டு ஆண்டுகள் முன்பிருந்தே, தமிழில் ஒரு மாற்று சிந்தனையை இலக்கியத்திற்கான புதிய பாதையை தொடங்க வேண்டும் என்கிற விழைவு சுந்தர ராமசாமிக்கு இருந்தது. அவருடைய “ஜேஜே சில குறிப்புகள்” நாவலின் முன்னுரையில், அடுத்த இருபது ஆண்டுகளில், தமிழ் இலக்கியம் தன்னுடைய குறுகிய எல்லைகளைக் கடந்து, பரந்த வெளியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் என்கிற தீர்க்கதரிசனத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதற்கான ஒரு தொடக்க முயற்சியாகவே காலச்சுவடு பதிப்பகம் அமைந்திருந்தது. சமூகத்தில் பரவலான தாக்கம் உண்டாக்கவும், அதே சமயம், அதுவரையிலான சிறுபத்திரிகை மரபைத் தாண்டிய வேகமும் வீச்சும் கொண்டதாக இருக்கவேண்டும் என்கிற விருப்பத்தை சுந்தர ராமசாமி தன்னுடைய நண்பர்களுடனான கடிதப் பரிவர்த்தனையில் தெரிந்து கொள்ள முடிகிறது.

அந்த நோக்கைக் கொண்டு பலரையும் ஊக்குவித்து அவர் கடிதங்கள் எழுதியிருந்ததைக் காண முடிகின்றது. இப்போது சுந்தர ராமசாமி காலமாகி இருபதாவது நினைவு தினத்தை ஒட்டி வெளியாகியிருக்கும் காலச்சுவடு இதழில் அந்தக் கடிதங்களில் பல வெளியாகியிருக்கின்றன.

தமது வாழ்வின் வீச்சை, சிக்கல்களை, அதன் இருண்ட சமத்துவமற்ற பகுதிகளை சுயமான பார்வையில் மதிப்பிடும் பொறுப்பு படைப்பாளிகளுக்கு உள்ளதாகக் கருதியவர் சுந்தர ராமசாமி. தண்ணுணர்வு கொண்ட படைப்பாளி, தன் மொழித்திறன் கொண்டு, தனக்கு கைவரப்படும் கண்டுபிடிப்புகள் மூலம், வாசகர்களிடையே அதே உணர்வுகளைக் கடத்த முடிகிறது. அன்றைய காலத்தில் (1988), ‘புதுயுகம் பிறக்கிறது’ என்ற பத்திரிகையின் ஆசிரியரான வசந்தகுமாருக்கு (இன்றைய தமிழினி பதிப்பாளர்), சுந்தர ராமசாமி எழுதிய கடிதத்தில், அந்தப் பத்திரிகை தொடங்கப்படுவதற்கான தயாரிப்புகளைப் பற்றியும், அதன் பிரும்மாண்டமான திட்டங்களைப் பற்றியும் பாராட்டிக் குறிப்பிட்டிருக்கிறார்.

மார்க்சியம் பற்றி, இந்திய தத்துவங்களைப் பற்றியும், அன்றைய காலத்தின் தீவிர எழுத்துச் செயல்பாடு கொண்டவர்கள் பற்றியும், ஆங்கிலத்திலும் தமிழிலும் பதிப்பிக்கப்படும் புத்தகங்களின் மீதான கூர் விம்ரசனங்கள் பற்றியும், இளைய தலைமுறையின் சிந்தைக்கான வளர்ச்சியும், அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் படைப்புகளும் இடம்பெற வேண்டிய அவசியத்தைப் பற்றி அக்கடிதங்களில் குறிப்பிடுகிறார். இலக்கியம், அறிவுத்துறை என்று எல்லைகளைக் குறுக்கிக் கொள்ளாமல், அனைத்துத் தொடர்புகளையும் விரித்துக் கொள்ள வேண்டிய காலம் என்று 80களிலேயே உணர்ந்திருக்கிறார் சுரா. எண்ணிக்கை சார்ந்து படைப்புகள் அதிகம் கிடைத்தாலும், அவற்றில் தரம் சார்ந்து மிகக் குறைவாகவே இருக்கின்றன என்ற பரிதவிப்பும் அவரிடம் இருந்தது.

பத்திரிகைத் தயாரிப்பு மற்றும் இதழாக்கச் செயல்பாடுகளை நான் அருகில் இருந்து கவனிக்கும் வாய்ப்பு எனக்கு அந்த முயற்சியின் வாயிலாகக் கிடைத்தது.. இப்படியான ஒரு விரிவான திட்டத்துடன், தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் தாக்கம் உண்டாக்கும் திறன் கொண்ட பத்திரிகையைப் பற்றிய சுரா-வின் விவரிப்பு வளர்ந்து கொண்டே போக, அதன் அழுத்தமான வடிவமாகத்தான் காலச்சுவடு பத்திரிகை 88ல் தொடங்கப்பட்டது. பிறகு வெளியான காலச்சுவடு மலரின் தயாரிப்பில், சுந்தர ராமசாமிக்கு உறுதுணையாக, அவர் குறிப்பிட்ட பணிகளை நிறைவேற்றும் பொறுப்பில் இருந்தேன். அதன்பின் உண்டான சிறு இடைவெளிக்குப் பின்னர், 94ம் ஆண்டு நானும், என்னுடைய இரு நண்பர்களும் சேர்ந்து காலச்சுவடு பத்திரிகையை மீண்டும் தொடங்கினோம். சுந்தர ராமசாமி திட்டமிட்டிருந்தபடி, அன்றைய சிறுபத்திரிகை வடிவைத் தாண்டி பல அம்சங்களை உள்ளடக்கிய சஞ்சிகையாக உருவாக்கினோம். ‘முத்தம்மா’ எனும் கூலிப் பணியாளரின் விரிவான நேர்காணல் ஒன்று அந்த ஆரம்ப இதழ்களில் இடம்பெற்றிருந்தது. நல்ல உள்ளடக்கங்களுடன், சிறப்பான வரவேற்புடன் வெளிவரத்தொடங்கிய காலச்சுவடு, 2004ம் ஆண்டிலிருந்து மாதமொரு இதழாக பரிமளித்தது.

அன்றைய காலத்துப் பதிப்பகத் தொழிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப முன்னேற்றங்களின் நன்மைகளால் அடுத்து காலச்சுவடு பதிப்பகம் உருவாகியது. நல்லெழுத்து, விரைவான முறையில் அச்சுபதிப்பு கண்டு, தரமான புத்தகங்களாக, விரிவான வாசகர்பரப்பை அடைய வேண்டும் என்ற நோக்கம் அதன் முதன்மையானது. அப்படித்தான் சுந்தர ராமசாமியின் எழுத்துகள் மட்டுமல்லாமல், ஜி. நாகராஜன், தி ஜானகிராமன், அசோகமித்திரன், ஜெயகாந்தன், கி ராஜநாராயணன் போன்ற முன்னோடி எழுத்தாளர்களின் படைப்புகளைச் செம்மையான பதிப்புகளாகக் காலச்சுவடு வெளிக்கொணர்ந்தது. இவற்றுக்கு இணையாக, புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகங்களின் சிற்றிலக்கியச் செயல்பாடுகளை, காலச்சுவட்டில் மீண்டும் பதிப்பித்து, உலக இலக்கியப் போக்கினைப் பற்றிய விழிப்புணர்வைத் தமிழக வாசிப்புலகின் கவனத்திற்குக் கொண்டு வந்தோம். ஈழத்துப் பத்திரிகையான ‘சரிநிகர்’ உடன் இணைந்து காலச்சுவடு ‘தமிழ் இனி 2000’ மாநாட்டை நடத்தியதும் இக்காலத்தில்தான். எல்லைகளைக் கடந்த புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தினைத் தொடர்பு படுத்தும் ஏடாகக் காலச்சுவடு பரிமளித்தது. காலச்சுவடின் மொத்த வெளியீடுகளில் குறிப்பிடத்தக்க சதவிகிதமானவை புலம்பெயர் தமிழர்களுக்கானது.

ஃப்ராங்க்ஃபர்ட் புத்தகச் சந்தையில் குறைந்தது இருபது முறைகளாவது காலச்சுவடு பங்குபெற்றிருக்கும். தமிழகப் புத்தகச் சந்தையிலிருந்து, இந்தியப் பதிப்பக வட்டம் என்று வளர்ந்து இன்று உலகப் புத்தகச் சந்தையில் காலச்சுவடு அடியெடுத்து வைத்து இருபது வருடங்களுக்கு மேலாகி விட்டன. அந்தப் பயணத்தில் முக்கிய மைல்கல்லாக இருந்தது ஃப்ராங்க்ஃபர்ட் புத்தகச் சந்தையின் ஃபெல்லோஷிப் மற்றும் அந்தச் சந்தையின் தொடர்ந்த பங்கெடுப்பு. காப்புரிமை வணிகப் பரிமாற்றத்தில் ஒரு பதிப்பாளராக, இன்று உலக மொழி இணைப்பில் ஒரு கண்ணியாகக் காலச்சுவடு இருக்கிறது. திரைப்பட உரிமைகள், மொழிபெயர்ப்புகள், புத்தக உருவாக்கத்தின் தொழில்நுட்பங்கள், அச்சு வணிகம், என்ற பெரும் பாதையை ஃப்ராங்க்ஃபர்ட் புத்தகச் சந்தை அமைத்துக் கொடுத்தது. ஆங்கிலம் தாண்டி நார்வேஜியன், துருக்கியம், ஃபின்னிஷ், ஐஸ்லாந்தியம் போன்ற முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகள் மற்றும் கலாச்சார பின்புலத்திலிருந்து படைப்புகளை மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறோம்.

மேற்கத்திய இலக்கிய உலகில் அதிகம் அறியப்படாத மொழியாக இருந்தது, தமிழ் படைப்புகளைப் பிற மொழிகளுக்கு கொண்டு செல்லும் நடைமுறைகளில் ஆகப் பெரும் சிக்கலாக இருந்தது. ஒரு செவ்வியல் மொழியாக, தொடர்ச்சியான பண்பாட்டுச் செயலாக்கத்துடன் கூடிய நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட மொழி என்பதைப் புரியவைக்கும் பொறுப்பு காலச்சுவட்டிற்கு இருந்தது. புத்தகச் சந்தையில் வெளியிடப்பட்ட காலச்சுவட்டின் அட்டவணையில் (Catalogue) முதலாவதாக, தமிழ்மொழி பற்றிய அறிமுகப் பக்கம் ஒன்று சேர்க்கப்பட்டது. பெங்காலி மொழிக்கு விளம்பர பதாகையாகத் தாகூர் இருப்பது போல தமிழுக்கான உலகளவிலான ஒரு அடையாளத்தை அடையும் பெரும் பணி இப்போதும் இருக்கிறது. தமிழின் படைப்புகளுக்கு இந்திய அளவில் ஓர் அடையாளம் உருவாக்கப்பட்டு, அது உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டு பதிப்பகத் தொடர்பு வலைகளில் அவை அறிமுகப்படுத்தப்பட்டு, இன்றைக்கு மாசிடோனிய, அஸர்பைஜான், ஆர்மினீய மொழிகள் உட்பட குறைந்த பட்சம் இருபத்தைந்து மொழிகளிலாவது, , தமிழ் படைப்புகள் மொழி மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன என்பதே ஒரு பெருமைக்குரிய விஷயம். தமிழ் இனி உலக இலக்கிய அரங்கில் உயர்ந்து நிற்கும் காலம் உருவாகிக் கொண்டிருக்கிறது.

Author

  • கண்ணன் சுந்தரம், காலச்சுவடு இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியர் மற்றும் காலச்சுவடு பதிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் வெளியீட்டாளர்.  நவீன தமிழ் இலக்கியத்தை உலகளவிற்கு எடுத்துச் செல்வதில் பெரும் பங்காற்றி வரும் முக்கிய தமிழ்ப் பதிப்பாளர்.

Related posts

எட்டுத் திக்கும் கட்டியெழுப்பும் | ஸ்ரீதர் நாராயணன்

பேசும் சித்திரங்கள் | கிங் விஸ்வா

தொடரும் மாயவசீகரம் | விவேக் ஷான்பக்