சமூக ஊடகத்தில் அறிமுகமான நண்பர் அவர். குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவாளர். அவருடைய பதிவுகள், ஏரணங்கள் அழுத்தம்திருத்தமானவை. அதற்காகவே விரும்பிப் படிப்பேன். அண்மையில் தன் கட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்டு விட்டு இறுதியில் ஒரு வரி இப்படி முடித்திருந்தார்.
“இவைகள் எம் இயக்கத்திற்கு வழு சேர்க்கின்றன”.
எனக்குப் புரிந்துவிட்டது, இவையெல்லாம் எம் கட்சிக்கு வலு சேர்க்கின்றன என்பதுதான் அவர் சொல்ல வந்தது. ஆனால் அவர் செய்த பிழையில் பொருள் பிறழ்ந்துவிட்டது. வலிமை என்று சொல்ல வந்து பிழை என்ற பொருளில் சொல்லி முழு ஆக்கத்தையும் எதிர்நிலைக்குத் தள்ளிவிட்டார். இப்படி அறியாமல் பிழை இழைப்பவர்கள் மிகுதி.
ஒளிவுமறைவு என்பதை ஒழிவுமறைவு என்று எழுதுகிறார்கள். அளிப்பதை அழிப்பதாக எழுதினால் சொல்ல வந்த கருத்து அழிந்துவிடாதா?
மேலும், இவை என்பதே பன்மைதான் என்றிருக்கும்போது இவைகள் என்று பலரும் – எழுத்தாளர் என்று தம்மைச் சொல்லிக்கொள்கிறவர்கள் கூட – எழுதுகிறார்கள். எனினும் அவைகள் என்கிற இரட்டைப் பன்மையை செவ்விலக்கியங்களில் ஓரிடத்தில் கண்ணுற்றேன்:
அரவினம் அரக்கர் ஆளி
அவைகளும் சிறிது தம்மை
மருவினால் தீய ஆகா
(பாம்புகள், அரக்கர், சிங்கங்கள் ஆகியவை கூட தம்மோடு பழகியோர்க்குத் தீங்கு செய்வதில்லை என்ற பொருள்)
என்று குண்டலகேசியில் பன்மை பலவற்றை அடுக்கிச் சொல்லும்போது சொல்லப்பட்டுள்ளது. அவ்வகையில் பன்மையானவை அடுத்தடுத்து வரும் போது ‘கள்’ சேர்க்கலாம் என்பதே புரிதல்.
வருகை தந்து வாழ்த்துமாறு கோருகிறேன் என்பதை ‘கோறுகிறேன்’ என்று எழுதினால் காவல்துறையிடம்தான் செல்ல வேண்டியிருக்கும். ஆகவே, இத்தகைய மயங்கொலிச் சொற்களில் மிகுந்த கவனம் வேண்டும்.
தமிழல்லாத பிற மொழிகளில் எழுத நேரும்போது, இதே நாம் ஒன்றுக்குப் பன்முறை சரிபார்க்கிறோம், அறிந்தோர் தெரிந்தோரிடம் காட்டித் தெளிவு பெறுகிறோம். தமிழ் என்றால் ஏன் இந்தக் கூர்நோக்கு நம்மிடம் இருப்பதில்லை?
சொற்களைக் குறித்த என்னுடைய கவிதை ஒன்றில்
பாலைப் போலவும் சொற்கள்
பாலகருக்கு ஊட்டமளிக்கும்
பாலை போலவும் சொற்கள்
ஒட்டகங்களுக்கே உகந்ததாகும்
என்று எழுதினேன்.
ஒற்றெழுத்தின் தேவையை இது உணர்த்துகிறது.
மேலும் தமிழில் எழுதும் பலரும் போதிய இடைவெளி விடாமல் எழுதுவதால், சொல்ல வரும் கருத்து அல்லது செய்தி திரிந்து பொருட்சிதைவு ஏற்படுகிறது.
பார்த்தசாரதியும் பார்த்த சாரதியும் ஒரே பொருளைத் தருவதாக ஆகார்.
ஒரு வயதுப்பெண்ணும் ஒரு வயதுப் பெண்ணும் ஒருவரல்லர்.
இன்றுமுதல் பாடம் படிப்போமா?
இன்று முதல் பாடம் படிப்போமா?
(தொடர்வோம்)
3 comments