இன்னும் சில சிலேடைகள்.
கவிஞர்களின் தனிச்சிறப்புகளுள் ஒன்று உடனடி மொழித் திறனும் இரட்டுற மொழிதலும்.
24-ஆம் புலிகேசி படத்தில் வடிவேலு மன்னராக வருவார். அவரை வாழ்த்த வரும் புலவர் ஒருவர் அவரைப் பார்த்து “அண்டங் காக்கையே” என்று இரட்டுற மொழிவார். மிகவும் நகைப்பைத் தந்த அக்காட்சி, உண்மையில் வரலாற்றில் பதிவான ஒரு செய்தியிலிருந்தே எடுக்கப்பட்டதாம்.
அதிவீர ராமப் பாண்டியனும் வரதுங்கப் பாண்டியனும் உடன் பிறந்தவர்கள். அரச வழித்தோன்றல்களான இவர்களை வாழ்த்திப் பாடிய ஒரு புலவர் “அண்டங் காக்கைக்கு ஜனித்தவர்களே” என்று பாடவும் கருநிறம் கொண்ட வரதுங்கப் பாண்டியனுக்கு மிகவும் கோபம் வந்ததாம். புலவர் விளக்கம் சொல்கையில் “இந்த அண்டத்தைக் காக்கப் பிறந்தவர்களே” என்று பொருளுரைத்தாராம்.
கலைஞர் மு. கருணாநிதி முதல்வராக இருந்த சமயம், அவர் தலைமையில் நிகழ்வுற்ற ஒரு கவியரங்கில் கவிஞர்கள் சிலர் தாமதமாக வருகையளித்தனர். முதல்வராகக் கவியரங்கிலும் வந்திருந்த கலைஞர் மு. கருணாநிதி இதனைத் தன் தலைமையுரையில் சற்றே இடித்துக் காட்டவும் தவறவில்லை. பல்வேறு பணிகளிடையே முதல்வரே வந்த பின்னும் கவிஞர்களின் தாமத வருகை அளித்த வருத்தம் அவர் கவிதையிலும் இடையோடிற்று.
பிறகு கவிதை பாட வந்த கவிக்கோ அப்துல் ரகுமான் தன் கவிதையில் சிலேடையாகவே தலைவரின் வருத்தத்தைத் தணிக்கும் வகையில் இப்படித் தொடங்கினார்:
” ‘காக்க வைத்த கவிஞர்களே’ என்று
தாக்கி விட்ட தலைவரே!
காத்து இருக்க மாட்டீரா?
வாக்களித்தோம்; பதவியில் வைத்தோம்
எம்மையெல்லாம்
காக்கத் தானே வைத்தோம்
காத்து இருக்க மாட்டீரா?”
என்று இரு பொருள்படப் பாடவும் கலைஞர் மு. கருணாநிதியும் சிரித்து மகிழ்ந்தாராம்.
கர்நாடக இசை விமர்சகர் சுப்புடு ஒரு பாடகரைப் பற்றி, “அவருக்குக் காதிலும் கம்மல்; குரலிலும் கம்மல்” என்றெழுதியதும் நினைவுக்கு வருகிறது.
மதுரைக்கு வந்த கவிஞரொருவரிடம் நண்பர் இரண்டு சுவரொட்டிகளைச் சுட்டிக் காட்டினாராம். ஒன்று கரகாட்டம் பற்றியது. மற்றது பட்டிமன்றம் குறித்ததாம். கவிஞர் உடனே சொன்னாராம்: “இரண்டுக்கும் தலையில் ஏதாவது இருக்க வேண்டும்”
சில ஆண்டுகளுக்கு முன்பு, நண்பர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்த போது, ஆங்கிலத்து எழுதுகோல் ‘Pen’-க்கும் தமிழ்ப் ‘பெண்’ணுக்கும் ஒப்பிடலாக ஒரு கவிதை எழுத முடியுமா? என்று கேட்டார். அதன் பிறகு வேறு பல செய்திகளைப் பேசிக் கொண்டோம் எனினும், மனத்துள் Pen- க்கும் பெண்ணுக்கும் சிந்தனை ஓடிக்கொண்டே இருந்தது. அந்தச் சந்திப்பின் நிறைவில் அவர் எதிர்பார்த்தவண்ணம் ஒரு வெண்பாவை எழுதிக் கொடுத்தேன். வியந்து பாராட்டினார்.
அந்த வெண்பா, என் முதல் சிலேடை வெண்பாவாகும்..
மையிட்டுக் கொள்ளுதலால் மெய்த்தோற்றம் காட்டுதலால்
கைப்பிடித்த தன்னவரின் காரியத்தை ஆற்றுதலால்
காணா உலகினைக் காட்டித் தருதலால்
பேனாவும் பெண்ணாமென் பேன்
(தொடர்வோம்)
1 comment