தமிழே! அமிழ்தே! – 8

This entry is part 8 of 9 in the series தமிழே அமிழ்தே

எனக்கு வந்த ஓர் அலைபேசி விளிப்பு “வலி மிகும்/மிகா இடங்களை இன்னும் சொல்ல வேண்டும்” என்று கேட்டபோது “இணையத்திலேயே இருக்கிறது; ஊன்றிப் படிக்கலாமே” என்று மறுமொழி சொன்னாலும் “உங்கள் வழியில் நீங்களும் சொல்லுங்களேன்” என்று கேட்டுக்கொண்டது.

மீண்டும் ஒரு முறை, ஒற்றுப் பிழைகளால் ஏற்படும் பொருள் மாறுபாடுகளை நாம் கருத்தில் எடுக்க வேண்டுகிறேன்.

“பட்டுப் புடவை உடுத்தினாள்” என்பதற்கும் “பட்டு புடவை உடுத்தினாள்” என்பதற்கும் பொருள் மாறுபாடு இருக்கிறது இல்லையா!

முன்னது அவள் உடுத்திய புடவை பட்டுப் புடவை என்பதாகும்.

அடுத்தது பட்டு எனும் பெண் புடவை உடுத்தினாள் என்பதாகும்.

தமிழ் இலக்கணத்தைக் கற்றுத் தேர்வதன் மூலம் ஒருவர் தம் எழுத்தில் பொருள் பேதம் இல்லாமல் சொல்ல வரும் கருத்தைத் தெளிவாக உரைக்க இயலும்.

ஆங்கிலத்தில் Prepositions என்னும் இடைச்சொற்கள் எப்படி பொருள் முழுமை பெற உதவுகின்றனவோ, அப்படித் தமிழில் வேற்றுமை உருபுகள் இருக்கின்றன.

தொடரின் பொருளை வேறுபடுத்திக் காட்டும் எட்டு வகை வேற்றுமைகள் தமிழில் உள்ளன. இதில் ஒன்றாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை நீங்கி மற்ற ஆறு வேற்றுமைகளின் உருபுகளில் எதில் ஒற்று மிகும் அல்லது மிகாது என்பதை இப்போது பார்ப்போம்.

1). முதலாம் வேற்றுமைக்கு எடுத்துக்காட்டு : “அண்ணன் சொன்னான்”
இது நேரடிப் பொருள் தருவதால் இதற்கு உருபு இல்லை. எனவே ஒற்று (வலி) மிகும் வாய்ப்பில்லை

2). இரண்டாம் வேற்றுமை உருபு : ஐ ஆகும்.
செய்யுள் கூறு என்பது இந்த ஐ சேர்த்து செய்யுளைக் கூறு என்று விரிக்கப்படும் போது ஒற்று மிகும். அதாவது, இரண்டாம் வேற்றுமையை விரித்து எழுதும் போது கட்டாயம் ஒற்று மிகும்.

இன்னும் சில காட்டுகள் :

கையைப் பிடித்தான்
படத்தைப் பார்த்தான்
பாட்டைப் பாடினான்

3). மூன்றாம் வேற்றுமையின் உருபு ஆல், ஓடு ஆகியவை

எடுத்துக்காட்டு :
கை காட்டினான் என்பதை விரித்து எழுதினால் கை யால் காட்டினான் என்றாகும். இதில் வலி மிகாது என்பது இயல்பாகப் புரிகிறது அல்லவா. இதனை விரிக்காமல் தொக்கி நிற்கும் வகையில் தொகையாக எழுதினாலும் கை காட்டினான் என்று வரும். அப்போதும் விரித்து எழுதிப் பார்த்து ஒற்று மிகாது என்று புரிந்துகொள்க. ஆல் என்கிற உருபை விடுத்து ஓடு என்கிற உருபைக் கொண்டாலும் வலி மிகாது. (கை யோடு காட்டினான்).

இன்னொரு எடுத்துக்காட்டு *தங்கக் காசு *

இதனை விரித்து எழுதினால் தங்கத் தால் (செய்த) காசு என்றாகும். இங்கு வலி மிகுமா என்றால் ஆம், மிகும். காரணம், செய்த என்கிற பயனும் மூன்றாம் வேற்றுமை உருபுடன் தொக்கி நிற்கிறது. அதனால் மூன்றாம் வேற்றுமை உருபுடன் பயனும் உடன் தொக்கி வந்தால் வலி மிகும்.

4). நான்காம் வேற்றுமை: ‘கு’ ஆகும்

எனக் கு க் கொடுத்தான்

இதில் வலி மிகும்.

வள்ளித் திருமணம்
இதனை விரித்து எழுதினால் வள்ளிக்குத் திருமணம் என்றாகும். கு உருபில் வலி மிகும்.

5). ஐந்தாம் வேற்றுமை: இன், இல் என்பன

பாண்டியன் செயல்
விரித்து எழுதினால் பாண்டியனின் செயல். இதில் வலி மிகாது.

ஆனால் பழச்சாறு என்று எழுதுவதில் பழத் தில் பிழிந்த சாறு என்று பயனும் உடன் தொக்கி வருவதால் அப்படி வருகையில் ஒற்று சேர்க்க வேண்டும்.

6). ஆறாம் வேற்றுமை: அது, அதன்
யானைப் பிளிறல்
இதனை விரித்து எழுதும் போது யானையதன் பிளிறல் என்றாகும்.
ஆக, ஆறாம் வேற்றுமையை விரித்து எழுதும் போது வலி மிகாது. பொருள் தொக்கி நிற்கும் படி தொகையாக எழுதுகையில் வலி மிகும். யானைப் பிளிறல்.

7). ஏழாம் வேற்றுமை: கண், இடம்

காடு செல்வோர். வலி மிகாது.
இதனை விரித்து எழுதும் போது காட்டின் கண் செல்வோர் அல்லது காட்டு இடம் செல்வோர் என்றாகும். அப்போதும் வலி மிகாது.

8). எட்டாம் வேற்றுமை: ஏ! ஓ என்ற விளித்தலைக் குறிப்பது.

‘தம்பியே! சொல்’
அண்ணனே! கேள்’

இவற்றில் வலி மிகாது.

இனி ஒரு சிலேடை வெண்பா

பாம்புக்கும் திரைப்படத்திற்கும் சிலேடை வெண்பா

படங்காட்டுந் தன்மை; பரவசத் தொண்டர்க்
கடமையெனப் பாலபிசே கங்கள் – நடமோடே
ஏகும் விளைவை எவரும் அறிகிலர்
நாகம்போல் வெண்திரை நம்பு.

(தொடர்வோம் )

Series Navigation<< தமிழே! அமிழ்தே! – 6தமிழே! அமிழ்தே! – 9 >>

Author

  • எழுத்தாளர், வெண்பா வித்தகர், தமிழ் ஆர்வலர், மேனாள் தலைவர் - ரியாத் தமிழ்ச் சங்கம்.

Related posts

அசுரவதம் பாகம் இரண்டு: (அத்தியாயம் – 2: மலைக்கோட்டை)

உப்புக் காற்று

தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 5 – மொழியாக்கம்