உப்புக் காற்று

பொழுது விடியும் முன்பே
அவர்கள் புறப்பட்டனர்.
அவர்களது வலைகள்
நம்பிக்கையால் கனத்திருந்தன.
அமைதியாக இருந்தது
அடிவானம்.
நீல நிறத்தைப் பரப்ப
ஆயத்தமாகிக் கொண்டிருந்தது
ஆகாயம்.

அவர்களது தோலில்
நினைவுகளைப் போல்
ஒட்டிக் கொண்டிருந்தது உப்பு.
எழும் ஒவ்வொரு அலையும்
அவர்கள் வாழ்நாளெல்லாம் அறிந்த
ஒரு மூச்சினைப் போல் உயர்ந்தது.

எண்ணும் முன்பே
மேகங்கள் திரள்கின்றன.
ஒரு கனத்த மௌனம்
பிறகொரு பலத்த முழக்கம்.
அவர்களுக்காகவே
பாடிக் கொண்டிருந்த கடல்
காரணமின்றி
ரெளத்திரம் கொள்கிறது.
திடீர் காற்றில்
சலசலக்கும் இலைகளைப் போல்
தத்தளிக்கின்றன படகுகள்.

தனது எச்சரிக்கைகளை
வாசிக்கிறது இடி.
சுருக்கமான கதைகளை எழுதி விட்டு
மழையோடு மறைகிறது மின்னல்.
சுழன்றாடி ஓய்கிறது புயல்.
அவர்கள் படகுகளை வளைத்து
அலைகளைக் கடந்து
வெற்றுக் கைகளுடன்
வீடு திரும்புகின்றனர்
உறங்காத கடலின் உறுதியைக்
கண்களில் தாங்கி.

மீண்டும் புலர்காலையில்
நின்றிருந்தனர் கரையில்
வலைகளைப் பழுது பார்க்க
கடலின் மனதைப் படிக்க.

Author

  • ராமலக்ஷ்மி :
    எழுத்தாளர், கவிஞர், ஒளிப்படக் கலைஞர். பெங்களூரில் வசிக்கிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை மற்றும் ஆய்வு நிறைஞர் பட்டங்கள் பெற்றவர். சொந்த ஊர் நெல்லை. தனது வலைப்பூ மற்றும் இணைய இதழ்கள், சிற்றிதழ்கள், பத்திரிகைகளில் எழுதி வருகிறார். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை, நூல் விமர்சனம், ஒளிப்படம் ஆகிய பல தளங்களில் இயங்கி வருகிறார்.

    இவரது ‘இலைகள் பழுக்காத உலகம்’ கவிதைத் தொகுப்பு, ‘மு.ஜீவானந்தம்’ இலக்கியப் பரிசையும், ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய' விருதையும் பெற்றுள்ளது. ‘அடை மழை’ சிறுகதைத் தொகுப்பு ‘திருப்பூர் அரிமா சக்தி’ விருதைப் பெற்றுள்ளது. இவர் எடுத்த ஒளிப்படங்களும் பல பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. அட்டை முகப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Related posts

இறைவனின் இணையில்லாப் படைப்பு

5 நான்-கள்: அத்தியாயம் ஐந்து (இறுதிப்பகுதி)

திருவை மு.இரா. கவிதைகள் -3

1 comment

Radha Narasimhan January 31, 2026 - 11:20 am
அருமையான கதை படித்து ரசித்தேன்
Add Comment