கடந்த வாரம் வேற்றுமை உருபுகளில் எங்கெல்லாம் ஒற்று மிகும் அல்லது மிகாது என்பதைப் பார்த்தோம். குறிப்பாக இரண்டாம் வேற்றுமை உருபான ஐ, நான்காம் வேற்றுமை உருபான கு– இவை வெளிப்படும் இடங்களில் வல்லெழுத்து மிகுத்து எழுதுவதனால் நாற்பது விழுக்காடு ஒற்றுப் பிழைகளைத் தவிர்க்க இயலும்.
இப்போது மேலும் சில இடங்களில் ஒற்று மிகும் / மிகாது என்பதைப் பார்ப்போம்.
காட்டாக,
மொழி, பற்று என்கிற இரு சொற்களில் முதலாவதை நிலைமொழி என்போம். இரண்டாவது சொல்லை வருமொழி என்போம்.
மொழி என்கிற நிலைமொழி இ என்கிற எழுத்தில் முடிந்து வருமொழி (பற்று) வல்லினத்தில் தொடங்கும் போது வல்லொற்று மிகும். அவ்வகையில் மொழிப்பற்று என்று ஆகும். இதனை இயல்பாய் நின்ற உயிரீற்றின் முன் வல்லினம் மிகும் என்று புரிந்து கொள்க.
இன்னொரு எடுத்துக்காட்டு: தங்கம் + சுரங்கம் = தங்கச் சுரங்கம்.
நிலைமொழி தங்கம் என்பதில் ஈற்றெழுத்து ம் நீங்க, க (க்+அ) உயிரெழுத்து இறுதியில் நிற்கும். இப்போதும் ஒற்று மிகுந்து தங்கச் சுரங்கம் என்று வரும்.
நிலைமொழி ய் ர் ழ் என்னும் மெய்களுள் நின்று வல்லின வருமொழி வரும் போதும் ஒற்று மிகும்.
காட்டு: தமிழ்ப்பற்று, தாய்குலம், போர்த்தொழில் (இத்தலைப்பில் திரைப்படம் வந்தபோது ஒற்று மிகாமல் தலைப்பிட்டனர்! ஏனோ)
ஆனால் நிலைமொழியில் வருவது பெயரெச்சத் தொடர் எனில், நிலைமொழி உயிரெழுத்தில் முடிந்து வருமொழி வல்லினத்தில் தொடங்கினாலும் ஒற்று மிகாது. காட்டு: படித்த பையன், எழுந்த பந்து
சுட்டுச் சொற்களில் ஒற்று மிகும். காட்டுகள் சில
அப்பக்கம்
அந்தக் கருத்து
எங்குச் சென்றாய்
எங்கே சென்றாய் என்று நிலைமொழி ஏ-காரத்தில் முடிகையில் ஒற்று மிகாது.
அப்படி, இப்படி, எப்படி என்பனவற்றின் பின் ஒற்று மிகும். அப்படிப் பார்க்காதீர்கள்.
ஆனால் படி என்னும் இடைச் சொல்லின் பின் வலி மிகாது.
சட்டப்படி தப்பில்லை.
இன்றைய வெண்பா:
காதலும் கழுதையும்
உன்னைப்போல் ஏதொன்றும் ஊரில் அழகில்லை
இன்னிசைப் பாட்டிலும் ஏதிணை – முன்னால்
‘கடி’கள் தருகின்ற காதல் கழுதை
படிப்பேன் உனக்கொரு பா
வெண்பா கற்றுக்கொண்ட போது எழுதியது. (விளக்கம் வேண்டாம் தானே)
(தொடர்வோம்)