தமிழே! அமிழ்தே! -7

This entry is part 6 of 7 in the series தமிழே அமிழ்தே

தமிழே! அமிழ்தே! -7

மிகவும் அறியப்பட்ட புதின எழுத்தாளரின் நூல் ஒன்றை நண்பர் அன்பாய் அளித்தார். திறந்து படிக்கத் தொடங்கிய எனக்கு முதற்பத்தியிலேயே வாசிப்பு இடறியது. காரணம், அத்தனை ஒற்றுப்பிழைகள் மலிந்திருத்தன. நண்பர் என் முகக் குறிப்பை உணர்ந்து காரணம் கேட்டுவிட்டு அவரும் ஆமோதித்தார். (எழுத்தாளரின் பிழை என்று அறுதியிட்டுச் சொல்ல இயலாது. பதிப்பகத்தார் செய்த பிழையாகவும் இருக்கலாம்).

தமிழில் ஒற்றுப்பிழைகளை விலக்கி நல்ல தமிழில் எழுதுவதன் அடிப்படையை உணர்த்தி எழுதும்படி எனக்கு வேண்டுகோள் வந்தது.
உண்மையில் இணையத்தில் எங்கெங்கு வலி மிகும் மிகாது என்பது பற்றி நிரம்பவே பாடங்கள் மிகுந்துள்ளன. ஒரு சிறிய முயற்சியிலேயே யாரும் இதனை அறிந்துகொள்ள முடியும்.
ஆயின், இங்கே ஒற்றுப் பிழைகளால் ஏற்படும் பொருள்பேதங்களையும் கருத்துமுரண்களையும் சுட்ட நினைக்கிறோம்.

காட்டாக,
மன்னர் ஆணை பிறப்பித்தார் என்றெழுதினால் மன்னர் கட்டளையிட்டார் என்று பொருள். ஆனால் தேவையேயின்றி இதில் வலி மிகுவித்து மன்னர் ஆணை’ப்’ பிறப்பித்தார் என்றெழுதினால் அரசருக்கு ஆண் குழந்தை பிறந்தது என்று பொருள் மாறிவிடும் அல்லவா!

அந்த மனிதரைக் காட்டு என்பதற்கு அவரைக் காட்டு எனலாம். இதில் ஒற்றெழுத்து மிகாமல் அவரை காட்டு என்று எழுதினால் அவரைக் கொடியைக் குறிப்பதாக பொருள் மாறிவிடும்.

கெட்டியாகப் பிடித்துக்கொள்வதற்கு உடும்புப்பிடி என்று சொல்லப்படும். இதில் ஒற்று மிகாமல் “உடும்பு பிடி” என்றெழுதினால் உடும்பு என்னும் ஊர்வன வகை விலங்கைப் பிடி என்று பொருள் மாறிவிடும்.

அறிஞர் கண்டார் என்பதும் அறிஞர்க் கண்டார் என்பதும் ஒரே பொருள் தராது. முன்னது அறிஞரே கண்டார் என்று பொருள். பின்னதில் அறிஞரைக் கண்டார் என்று பொருள் வரும்.

குற்றியலுகரத் தொடர்களில் வன்தொடர் குற்றியலுகரங்களில் மட்டுமே ஒற்று மிகும். புரிந்து ~க்~ கொண்டீர்களா?

ஒரு முறை குழுமம் ஒன்றில் ஒற்றுப் பிழை செய்த ஒருவரைத் திருத்த நினைத்துத் தவறைச் சுட்டிய போது, அதனைப் புரிந்து கொள்ளாமல் அல்லது விரும்பாமல் “தமிழ் அறிவில் உங்களுக்கு அகந்தை” என்பது போல மறுமொழி தந்தார். வேறு சிலரும் “ஆமாம் சாமி” என்றனர்.
“தமிழ் கந்தையாகிவிடக் கூடாது” என்பதற்காகவே சுட்டினோம் என்றும் வேறு எண்ணமில்லை என்பதையும் அவருக்கு உணர்த்தினோம். ஆகவே, பிழைகள் சுட்டவும் சற்றே தயக்கம் தான்.


இனி ஒரு வெண்பா :

கருவாடு, கறி, முட்டை, மீன், ஆகிய சொற்கள் வெண்பாவில் வரவேண்டும். ஆனால் அவை நேரடிப் பொருளில் அமையக்கூடாது, நேரிசை வெண்பாவாக அமைய வேண்டும் என்ற கட்டுகள் தந்தார்கள்.

அப்போது எழுதிய பாடல்:

‘கருவாடு’ மென்று கனிவுடன் உண்ணப்
பெரும்பாடு பட்டாளப் பெண்ணாள் – இரங்’கறி’ந்த
ஆகாயம் எத்தனையோ ‘மீன்’தந்தும் உள்ளத்தில்
ஆகாமல் ‘முட்டை’க்கும் ஆம்.

(முட்டைக்கும் = முள்தைக்கும்)

வயிற்றிலிருக்கும் கரு வாடுமென்று கனிந்த உணவுண்ணவும் பெரும்பாடு பட்டாள் அந்தப் பெண். அந்தப் பெண்ணுக்காக இரங்க அறிந்த ஆகாயம் இரவில் எத்தனையோ விண்மீன்களைத் தந்தாலும் அவள் உள்ளத்தில் அவை முள் தைத்த உணர்வு தான்.

என்பது பொருள்.

(தொடர்வோம்)

Series Navigation<< தமிழே அமிழ்தே – 5

Author

  • எழுத்தாளர், வெண்பா வித்தகர், தமிழ் ஆர்வலர், மேனாள் தலைவர் - ரியாத் தமிழ்ச் சங்கம்.

Related posts

எட்டுத் திக்கும் கட்டியெழுப்பும் | ஸ்ரீதர் நாராயணன்

சபராளிகளின் சிறகசைப்புகள் | ஆசிஃப் மீரான்

கொண்டங்கு சேர்ப்போம் | நகுல்வசன்

1 comment

Murugeswari January 11, 2026 - 1:52 pm
கருவாடுமென்று கறி..மீன்..முட்டை யெல்லாம் சிறப்பாய்ச் சேர்த்து அறுசுவை உணவைப் படைத்திருக்கிறீர். அசைவத்தை அசையாமல் செய்துவிட்டீர் வெண்பா வித்தகரே!
Add Comment