சூழலினால் ஏற்படுத்தப்படும் தனிமை

Thanimai

இளையவர்கள் முதல் முதியவர்கள் வரை மூன்று காரணத்தால் தனிமையில் இருப்பதாகப்  பார்த்தோம். அதில் முதல் பிரிவினரைப் பார்ப்போம் – அதாவது சூழ்நிலையால் தனிமையில் வாழ நேரிடுபவர்கள். இது நமக்கு மிகவும் பழக்கமானது, ஆனால் அதன் ஆழத்தை நாம் முழுமையாக உணரவில்லை. சில சமயம், நாம் அறிந்திருந்தாலும், நம்மை பாதிக்காதவரை அது நம்மில் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஒரு வித மறுப்பில் (denial) இருப்போம்.

எத்தனை பேர் “தாரே ஜமீன் பர்” திரைப்படம் பார்த்தீர்கள் என்று தெரியவில்லை. நன்றாகப் படிக்க வேண்டும் என்று ஆசைப்படும் பெற்றோர், தங்கள் மகனுக்கு கற்றல் குறைபாடு இருப்பது தெரியாமல், ஒரு போர்டிங் பள்ளிக்கு அனுப்பிவிடுவார்கள். பெற்றோர்களின் எண்ணத்தில் தவறில்லை. தங்கள் குழந்தையின் நல்வாழ்வு முக்கியம் என நினைக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு கிடைக்கும் அறிவுறை தவறான வழிகாட்டல். இருட்டைக் கண்டு பயப்படும் பிள்ளை அன்னையின் அன்புக்கு ஏங்கித் தவிக்கும். அதைப் போல நிஜ வாழ்விலும் பல பெற்றோர்கள் சரியான வழிகாட்டல் இன்றி தவிக்கிறார்கள். 

 சென்னையில் பொறியாளராக வேலை பார்க்கும் தந்தைக்கு நித்திலன் என்றொரு எட்டு வயது மகன் உண்டு. “நல்ல எதிர்காலத்திற்காக” கோவையில் உள்ள ஒரு பிரபலமான போர்டிங் பள்ளியில் சேர்க்கப்பட்டான். முதல்நாள் இரவிலேயே கண்ணீர் பெருக்கிய நித்திலன், “அம்மா, நான் வீட்டுக்கு வரணும்” என்று அழுதான். ஆனால் அடுத்த நாள் காலையில் அவன் கண்களில் ஒரு வித உறைவு தெரிந்தது. வாரங்கள் கடந்தன. வீட்டிற்கு வந்த சித்தரன் முன்பைப் போல சிரிக்கவில்லை. அவனது குழந்தைத்தனம் எங்கோ காணாமல் போய்விட்டது.

இப்படி இன்றும் பலர் பலவித காரணங்களுக்காக குழந்தைகளைத் தனிமையில் விடுகிறார்கள். “படிக்க நல்ல பள்ளிகளைத் தேடி விடுதியில் தங்கிப் படிக்க அனுப்பினேன், இப்படி ஆகும் என நினைக்கவில்லை” என மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் பெற்றோர்கள் அழுத கண்ணீர்க்காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்தோம். அந்த காயம் வாழ்நாளில் ஆறுமா?

வளரும் பருவத்தில் பல்வேறு காரணங்கள் தனிிமையை உருவாக்குகின்றன:

இடம்பெயர்வால் ஏற்படும் தனிமை: பெற்றோர்கள் பணியின் காரணமாக ஊர் விட்டு ஊர் மாறும்போது, பள்ளியை விட்டு குழந்தைகள் புதிய ஊரில் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுகிறார்கள்.  பழகிய நண்பர்களைப் பிரிவதால் ஏற்படும் தனிமை.

குடும்ப சிதைவால் ஏற்படும் தனிமை: பெற்றோர்களின் விவாகரத்தால் குழந்தைகள் அனுபவிக்கும் மன உளைச்சலும் தனிமையும்.

மரணத்தால் ஏற்படும் தனிமை: அன்புக்குரியவர்களின் மரணம் ஏற்படுத்தும் ஆழமான வேதனையும் தனிமையும்.

வன்முறைச் சம்பவங்கள் ஏற்படுத்தும் தனிமை: துன்புறுத்தல், பாலியல் வல்லுறவு போன்ற அனுபவங்கள் உருவாக்கும் மன அதிர்ச்சியும் தனிமையும்.

பதின்மவயதின் சவால்கள்

பதின்ம வயதில் பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் முக்கியமல்லவா? அதைவிட மதிப்பெண்களும் பெற்றோரின் கனவுகளைச் சுமப்பதுமா குழந்தைகளின் பணி?

அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம்: 19 இலட்சத்திற்கும் அதிகமான பதின்ம வயதினர் இந்தியாவிலிருந்து அயல்நாடுகளுக்கு படிக்கச் செல்கிறார்கள். இந்தியாவிலேயே பல போர்டிங் பள்ளிகளுக்கு, அயல் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். மன அழுத்தம், சின்ன சின்ன தொல்லைகள், உடல்நலப் பிரச்சினைகளைக் கூட சொல்ல பெற்றோர்களோ உடன்பிறந்தவர்களோ இல்லை.

இந்தியாவில் இருந்து இப்போது பல மாணவர்கள் இளங்கலைப் படிப்பிற்காகவே அயல்நாடுகளுக்குச் செல்கிறார்கள். பதினாறு வயது ப்ரியா, பொறியியல் படிப்பிற்காக கனடாவிற்குச் சென்றாள். முதல் மாதத்தில் எல்லாம் புதுமையாக இருந்தது. ஆனால் குளிர்காலம் வந்ததும், நாள்கள் குறுகி இரவுகள் நீண்டதும், வீட்டுச் சாப்பாடு, அம்மாவின் கை வைத்தியம், தந்தையின் அரவணைப்பு எல்லாம் ஒரே நேரத்தில் நினைவுக்கு வந்தன. வீடியோ கால்லில் பேசும்போது சிரித்துக்காட்டினாலும், அறையில் தனியாக இருக்கும்போது மணிக்கணக்காக அழுவாள். மேலைநாடுகளில் கல்லூரிகளில் படிக்கும் பலரும் அவரவர் ஆண்/பெண் நட்புக்கள் அவரவர் சொந்த விஷயங்கள், பகுதி நேர வேலை, என்றிருக்க இந்தியாவில் வந்தவர்களால் எளிதாக ஒன்றிவிட முடிவதில்லை. இந்த உணர்வுகளை யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாத நிலையில், உணவில் அக்கறையற்றவளாகவும், தூக்கமின்மையால் அவதிப்படுபவளாகவும் மாறினாள்.

அயல்நாட்டிற்கு பணி நிமித்தம் உறவுகளைப் பிரிந்து செல்வோரின் தனிமை குறித்து எழுத வேண்டியதில்லை. அவர்களின் குடும்பம் சொந்த ஊரில் படும் தொல்லைகள் ஒருபுறம். இது தற்காலச் சூழல் மட்டுமில்லை – தனிமை ஆதிகாலத்திலிருந்தே இருந்திருக்கிறது.

“கத்தை கத்தையாய் கடிதம் பையில் வைத்திருப்பார், பற்றாக்குறைக்கு அந்தப் பையில் ஒரு கூடை உண்டு, ஐயா அஞ்சல் உண்டோ என்பேன், நான்; கையால் விரித்துரைப்பார். கண்கலங்கி நின்றிருப்பேன்” என்று கணவனைப் பிரிந்து வாடும் பெண்களின் துயரை மேகம் விடு தூதில் படித்திருக்கிறோம். பெண்களின் துயரம் ஒருபக்கம் என்றால் அவர்களின் கணவர்கள் துயரம் இன்னொரு புறம். 

எழுபது வயது முத்துலட்சுமி, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மகன் அமெரிக்காவிலிருந்து அழைப்பான் என்று காத்திருப்பார். அந்த ஒரு மணி நேர உரையாடலுக்காக வாரம் முழுவதும் ஏங்கி நிற்பார். சில நேரங்களில் மகன் வேலைமும்முரத்தில் இருந்து அழைக்க மாட்டான். அந்த நாட்களில் முத்துலட்சுமி சாப்பிடக் கூட மனமில்லாமல் இருப்பார். “என்னை மறந்துட்டானோ?” என்ற கேள்வி மனதில் சுற்றிக்கொண்டே இருக்கும்.

ஒரு தொலைபேசிக்காக காத்திருக்கும் முதியவர்கள் உண்டு. மருத்துவ உலகின் வளர்ச்சி காரணமாக நீண்ட காலம் வாழும் பெற்றோர்கள் ஒரு புறம், இளையவர்கள் இன்னொரு புறம், பொருளாதாரம் காரணமாக இன்னும் பணிக்குச் செல்லும் 60 வயதினர் இடையில் அல்லாடும் நடுத்தர வயதினர். இதில் மனம் விட்டுப் பேச வழியின்றி தனிமையில் தவிக்கும் முதியோர், தாமே தேடிச் செல்லும் முதியோர் இல்லத்தில் அனுபவிக்கும் தனிமை, அல்லது வீட்டில் தனிமையால் பழகிக்கொள்ளும் பழக்கவழக்கங்கள் என இது அதிகரித்துக்கொண்டே போகிறது.

இது உளவியல் ரீதியாக மிகப் பெரிய பிரச்சினை. பணக்காரர் ஏழை என்ற பாகுபாடின்றி, வயது வித்தியாசமின்றி சூழல் காரணமாக ஏற்படும் தனிமை வளர்ந்துவரும் பிரச்சினை.

இப்படி தனிமையால் இருப்பதால் என்னதான் பிரச்சினை? 

உன்னாலேயே உன்னுடன் மகிழ்ச்சியாக இருக்க முடியாதென்றால் வேறுயார்தான் உன்னுடன் மகிழ்வாக இருக்க முடியும் என்பதெல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. நாமே யாரையும் அணுகாமல் மகிழ்ச்சியாக இருப்போம் என நினைப்பவர்களை எளிதாக வீழ்த்த சில தீய வழிகளும் இருக்கின்றன. அவற்றில் ஒன்று கண்ணைக்கவரும் விளக்குகளுடன் மனதைப் பறிக்கும் விளையாட்டுகள்.

தொழில்நுட்ப அடிமைத்தனம்: இணையவழி விளையாட்டுகளில் அடிமையாதல், சமூக வலைத்தளங்களில் மணிக்கணக்காக நேரம் செலவிடுதல்.

போதைப்பொருள் அடிமைத்தனம்: மன வேதனையிலிருந்து தற்காலிக விடுதலை தேடி மது, புகையிலை, போதைப்பொருள்களை நாடுதல். உண்மையில் தட்டிக்கேட்க ஆளில்லாமல் சேமித்த நிதியை இணையவழி சூதாட்டத்தில் தொலைத்த முதியவர்கள் அமெரிக்காவில் நிறைய பேர் உண்டு.

மனநலக் கோளாறுகள்: மனச்சோர்வு, பதட்டம், தற்கொலை எண்ணங்கள், உணவுக் கோளாறுகள், தூக்கமின்மை.

சமூக விலகல்: நண்பர்கள், குடும்பத்தினரிடமிருந்து விலகி, மேலும் தனிமையில் ஆழ்ந்து செல்லுதல்.

இளம் பிள்ளைகளுக்கு இதே போல மனச்சோர்வும் மன அழுத்தமும் உருவாகின்றன. போதைப்பொருள்களின் அடிமைப் பழக்கங்கள் அவர்கள் வாழ்க்கையையே புரட்டிப்போட வல்லன.

இவற்றில் இருந்து எப்படி மீள்வது என்பது தனி ஆய்வுக்குரிய விஷயம். ஆனால் இந்தப் பிரச்சினையின் ஆழத்தையும் அதன் பரவலையும் முதலில் முழுமையாக உணர வேண்டும். சூழ்நிலையால் ஏற்படும் தனிமை என்பது தனிநபரின் தவறோ பலவீனமோ அல்ல – இது நமது சமுதாய அமைப்பின் மாற்றத்தால் ஏற்படும் விளைவு.

அன்பும் அரவணைப்பும் மனித இயல்பின் அடிப்படைத் தேவைகள். அவற்றை மறுக்கும் எந்த அமைப்பும் நீண்டகாலத்தில் நிலைக்காது.

Series Navigation<< நவீன உலகின் தனிமை நெருக்கடிஇளம்பருவ தனிமை: வளர்வதால் வரும் தனிமை >>

Author

Related posts

மினிமலிசம் – அறிமுகம்

நாணலிலே காலெடுத்து – அத்தியாயம் 4

அற்புத கண்டுபிடிப்பு