இளம்பருவ தனிமை: வளர்வதால் வரும் தனிமை

பதினாறு வயது மிஷல் தன் அறையில் அமர்ந்து ஜன்னல் வழியாக வெளியே பார்க்கிறாள். வீட்டின் கீழே அக்கம் பக்கத்து குழந்தைகள் விளையாடும் சத்தம் கேட்கிறது, ஆனால் அவளுக்கு அங்கே போக மனமில்லை. பள்ளியில் நண்பர்கள் இருக்கிறார்கள், சமூக வலைதளங்களில் நூற்றுக்கணக்கான பின்தொடர்பவர்கள் இருக்கிறார்கள், ஆனால் ஏதோ ஒரு ஆழமான வெற்றுமை அவளை வாட்டுகிறது. இது வெறும் இளமையின் கோளாறு அல்ல – இது ஒரு கண்ணுக்குப் புலனாகாத நெருக்கடி, அவளது வாழ்க்கையின் பிற்பகுதியை நிர்ணயிக்கக்கூடிய ஒன்று.

வளர்ச்சியில் பிறக்கும் தனிமை
ராஜுவின் வீட்டில் மாலை ஆறு மணிக்கு மேல் வெளியே போவதற்கு அனுமதி இல்லை. “விளக்கு ஏற்றியபின் வெளியே போகக்கூடாது” என்பது அவன் வீட்டின் விதி. இதனால் நண்பர்கள் விளையாடச் செல்லும்போது அவன் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டியதாகிறது. பெற்றோர்கள் நல்ல நோக்கத்துடன் வைத்த இந்த விதி, அறியாமலேயே ராஜுவின் சமூக வளர்ச்சியை பாதிக்கிறது. இது வளர்ச்சியில் ஏற்படும் தனிமையின் ஒரு உதாரணம். ஒவ்வொரு வீட்டுக்கும் இருக்கும் பழக்கவழக்கங்கள், பெற்றோர்கள் சொல்லித்தந்த கொள்கைகள், வீட்டு பெரியவர்களின் கட்டுப்பாடுகள் சில நேரங்களில் இளைஞர்களை அறியாமலேயே தனிமையில் தள்ளிவிடுகின்றன.

மூளையும் உடலும் வளரும் வேளையில்
பதின்ம வயதில் மூளையும் உடலும் வளரும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேகத்தில் வளர்ச்சி அடைகிறார்கள். சுதாவுக்கு கணிதத்தில் நல்ல திறமை இருக்கிறது, ஆனால் விளையாட்டில் மற்றவர்களைப் போல் வேகமாக ஓட முடியவில்லை. அவளுடைய நண்பர்கள் விளையாட்டு மைதானத்தில் நேரம் செலவழிக்கும்போது, அவள் தனியாக நூலகத்தில் உட்கார்ந்திருக்கிறாள். இந்த இடைவெளி அவளுக்குள் தனிமை உணர்வை வளர்க்கிறது.
படிக்கும்போது ஏற்படும் இலக்குகளின் வேறுபாடுகள், பள்ளி சாராத விளையாட்டுத் திறன்களில் உள்ள வேறுபாடுகள் போன்ற பல காரணங்களால் இளைஞர்களிடையே தனிமை உருவாகிறது.

பெற்றோரிடமிருந்து நண்பர்களுக்கு
ரீவ்ஸ்க்கு பதினான்கு வயது. இதுவரை அம்மாவிடம் எல்லாம் சொல்வான், ஆனால் இப்போது நண்பர்களுடன் அதிக நேரம் செலவிட விரும்புகிறான். பெற்றோர்கள் இந்த மாற்றத்தை புரிந்துகொள்ளாமல் “ஏன் இப்போது வீட்டில் முன்னைப்போல அதிக நேரம் இருப்பதில்லை?” என்று கவலைப்படுகிறார்கள். இந்த புரிந்துணர்வின்மை ரீவ்ஸை மேலும் தனிமையில் தள்ளுகிறது. சில நேரங்களில் பிள்ளைகள் வளரும்போது பெற்றோர்களிடமிருந்து நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடும் காலம் வருகிறது. அவர்களின் இந்த மாற்றத்தை புரிந்துகொண்டு, பின்புலத்தில் பெற்றோரின் ஆதரவும் கண்காணிப்பும் இருத்தல் அவசியமாகிறது.

அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிவரங்கள்
அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு பெரிய அளவிலான ஆய்வு இளம்பருவ தனிமையின் உண்மையான முகத்தை வெளிப்படுத்துகிறது. 10,500க்கும் மேற்பட்ட இளைஞர்களை ஏழு ஆண்டுகள் கண்காணித்த இந்த ஆய்வு, தனிமையின் அதிர்ச்சிகரமான பரவலை வெளிப்படுத்துகிறது.
பதினெட்டு வயதில் எழுபது சதவீத இளைஞர்கள் தொடர்ச்சியான தனிமையை அனுபவிக்கின்றனர். இந்த எண்ணிக்கை மட்டும் பார்த்தால் நம்ப முடியாததாக இருக்கலாம், ஆனால் நமது சுற்றுப்புறத்தை கவனித்தால் இது உண்மை என்பது புரியும். வீட்டில் தனியாக இருக்கும் குழந்தைகள், பள்ளியில் தனியாக உட்கார்ந்திருக்கும் மாணவர்கள், மொபைல் போனில் மட்டுமே உலகை பார்க்கும் இளைஞர்கள் என அனைத்தும் இந்த புள்ளிவிவரத்தின் நேரடி பிரதிபலிப்பு.

இருதய நோயிலிருந்து மனச்சோர்வு வரை

வினோத்திற்கு இப்போது இருபத்தி மூன்று வயது. பள்ளியில் தனிமையில் இருந்த அவனுக்கு இப்போது உயர் கொலஸ்ட்ரால் பிரச்சினை இருக்கிறது. மருத்துவர் அவனை பார்த்து “இவ்வளவு இளம் வயதில் எப்படி இந்த பிரச்சினை வந்தது?” என்று ஆச்சரியப்படுகிறார். ஆனால் ஆய்வின் முடிவுகளை பார்த்தால் இது ஆச்சரியத்ததராது. தனிமையை உணரும் இளைஞர்களுக்கு இளம் வயதிலேயே உயர் கொலஸ்ட்ரால் வரும் வாய்ப்பு பதினொரு சதவீதம் அதிகம், உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயம் பன்னிரண்டு சதவீதம் உயர்வு, உடல்பருமன் வரும் சாத்தியம் கூடுதல். மனச்சோர்வு ஏற்படும் வாய்ப்பு நாற்பத்தி இரண்டு சதவீதம் அதிகரிப்பு. தனிமையால் ஏற்படும் மனச்சோர்வால் அதிகமாக அல்லது குறைவாக உண்ண நேரிடுகிறது. இது சங்கிலி விளைவுகளை உருவாக்குகிறது – தனிமை, மனச்சோர்வு, உடல்நலக் குறைபாடு, தாழ்வு மனப்பான்மை, தற்கொலை எண்ணங்கள் என ஒன்றின் பின் ஒன்றாக.

முந்தைய ஆய்வுகள் ஆண்கள் அதிக தனிமையை உணர்வதாக சொன்னன, ஆனால் இந்த தேசிய அளவிலான ஆய்வு வேறுபட்ட கதையைச் சொல்கிறது. மீரா என்ற பெண் மாணவியின் கதையைப் பார்ப்போம்.

பதினைந்து வயது மீரா வகுப்பில் அமைதியாக இருக்கிறாள். வீட்டில் அம்மாவிடம் “எல்லாம் நன்றாக இருக்கிறது” என்று சொல்கிறாள், ஆனால் உள்ளுக்குள் ஒரு ஆழமான வெற்றுமை உணர்கிறாள். தோழிகள் இருக்கிறார்கள், ஆனால் யாரிடமும் தன் உண்மையான உணர்வுகளைப் பகிர முடியவில்லை. ஆய்வின்படி, பெண்கள் ஆண்களை விட அதிக தனிமையை உணர்கின்றனர் என்பது எதிர்பாராத கண்டுபிடிப்பு. வளரும் நிலையில் பெண்கள் அதிகம் பெற்றோருடன் அல்லது தோழியருடன் இருப்பதை விரும்புவார்கள் என்று அனைவரும் நினைத்தார்கள், ஆனால் இந்த ஆய்வு அதற்கு மாறாக இளம் பெண்கள் தனிமையில் இருப்பதை உணர்த்தியது. 

மேலும் பயமுறுத்தும் உண்மை என்னவென்றால், தனிமையில் உள்ள இளம் பெண்களுக்கு மனச்சோர்வு வரும் வாய்ப்பு ஆண்களை விட அதிகம், உடல்பருமன் ஏற்படும் அபாயம் பதினேழு சதவீதம் கூடுதல், ஒட்டுமொத்த உடல்நலம் மோசமாவதற்கான சாத்தியம் அதிகம்.

இதற்கான காரணங்கள் சிக்கலானவை. பெண்களுக்கு நெருக்கமான நட்பு வலையமைப்புகள் உள்ளன, ஆனால் அவை சமூகத்தால் நிராகரிக்கப்படும்போது அதிக பாதிப்பு ஏற்படுத்துகின்றன. உணர்வுபூர்வ பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும், பெண்களுக்கே இருக்கும் ஹார்மோன் பிரச்சினைகளின் தாக்கங்களும் இதற்கு காரணம்.

ரமேஷின் வீட்டில் மிகவும் அன்பான சூழல். அம்மா அப்பா அவனை மிகவும் அக்கறையுடன் கவனித்துக்கொள்கிறார்கள். ஆனால் ரமேஷ் தனிமையை உணர்கிறான். ஏன்? ஏனென்றால் அவனால் பெற்றோரின் ஆதரவை சரியான முறையில் பயன்படுத்த முடியவில்லை.

குடும்பச் சூழலில் வளரும் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆதரவு மனச்சோர்வு மற்றும் உடல்நல பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது. ஆனால் அதுவே நல்ல குடும்பச் சூழல் இல்லாதபோது தனிமையை இன்னும் அதிகரிக்கச் செய்யும். தனிமை உணரும் இளைஞர்களுக்கு பாதுகாப்பற்ற இணைப்பு பாணி இருக்கிறது, இதனால் அவர்களால் சமூக ஆதரவை பயனுள்ள முறையில் பயன்படுத்த முடியாது. இது ஒரு கொடூரமான முரண் – அவர்களுக்கு ஆதரவு தேவை, ஆனால் அந்த ஆதரவைப் பெற்றாலும் அதைப் பயன்படுத்த முடியாது.

முன்பு அஜயின் வீட்டின் பக்கத்து வீடுகளில் அவனுடைய வயதுள்ள பல குழந்தைகள் இருந்தார்கள். மாலை நேரம் எல்லோரும் சேர்ந்து விளையாடுவார்கள். ஆனால் இப்போது? பக்கத்து வீட்டுக் குழந்தைகள் வெவ்வேறு பள்ளிகளில் படிக்கிறார்கள், வெவ்வேறு டியூஷன் சென்டர்களில் போகிறார்கள். அக்கம் பக்கத்து நட்பு அரிதாகிவிட்ட சூழலில் தனிமை இணைய உலகமாகிப் போனது. 

உண்மையான நட்பு vs மெய்நிகர் நட்பு

ஜெனிஃபரின் இன்ஸ்டாகிராமில் ஐந்நூறு பின்தொடர்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவளுக்கு வயிற்று வலி வந்தால் யாரிடம் சொல்வது என்று தெரியாது. நல்ல நண்பர்கள் என்பது ஒருவரை சமூக ஊடகங்களில் பின்தொடர்வதைக் கொண்டு கணிப்பதில்லை. அல்லது நிஜவாழ்வில் இருக்கும் நண்பர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அமைவதும் இல்லை. சில நபர்கள் மட்டுமே இருந்தாலும், பல நண்பர்கள் இருந்தாலும் தனிமையை உணரலாம்.

தீர்வுகளின் திசையில்

அர்ஜுன் தனிமையை உணர்ந்தபோது நல்ல புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்தான். இசையைக் கேட்க ஆரம்பித்தான். பெற்றோருடன் மனம்விட்டுப் பேச ஆரம்பித்தான். மெல்ல மெல்ல அவனுடைய தனிமை குறைய ஆரம்பித்தது. வளரும் குழந்தைகளுக்கு பள்ளிகளும் பெற்றோர்களும் ஒரு பாதுகாப்பு வேலி.
அவர்களின் உடல்நலனுக்கு மட்டுமன்றி மனநலனுக்கும் கூட.

உயிரியல் தாக்கங்கள்
கார்டிசால் எனப்படும் மன அழுத்த ஹார்மோன் அளவு தனிமை உணரும் இளைஞர்களில் அதிகரிக்கிறது. இது நீண்டகாலத்தில் உடலின் பல அமைப்புகளைப் பாதிக்கிறது. நோய்த்தொற்றுகளுக்கு எதிரான எதிர்ப்பு குறைகிறது, உடலில் வீக்க அறிகுறிகள் அதிகரிக்கின்றன.

இந்திய சூழலில் பொருந்தும் தன்மை
இந்த அமெரிக்க ஆய்வின் முடிவுகள் இந்தியாவிற்கும் பொருந்தும். நகரமயமாக்கல், அணுகுடும்பங்கள், போட்டி நிறைந்த கல்வி முறை, தொழில்நுட்பத்தின் அதிகப் பயன்பாடு போன்றவை இங்கேயும் இளைஞர்கள் மத்தியில் தனிமை உணர்வை அதிகரித்து வருகின்றன.

சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு
இந்த ஆய்வு நமக்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்புகிறது: இளம்பருவ தனிமையை நாம் கண்டுகொள்ளாமல் விடக்கூடாது. ஒவ்வொரு தனிமையாக உணரும் இளைஞனையும் கண்டறிந்து, அவர்களுக்கு சரியான ஆதரவு வழங்குவது வருங்கால தலைமுறையின் உடல்நலத்தைப் பாதுகாப்பதற்கான முதல் படியாகும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் மனம்விட்டுப் பேச வேண்டும். ஆசிரியர்கள் வகுப்பறையில் தனியாக இருக்கும் மாணவர்களைக் கவனிக்க வேண்டும். சமூகம் இளைஞர்களுக்கான ஆரோக்கியமான செயல்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும்.

வளர்ந்து வரும் இந்த நெருக்கடியை நாம் இப்போதே எதிர்கொண்டால், லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க முடியும். இது நமது சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாகும். ஒவ்வொரு பிரியாவும், ராஜுவும், மீராவும் ஒரு நிறைவான, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கான உரிமை உண்டு. அந்த உரிமையைப் பாதுகாப்பது நம் அனைவரின் கடமை.

Series Navigation<< சூழலினால் ஏற்படுத்தப்படும் தனிமை

Author

Related posts

மினிமலிசம் – அறிமுகம்

நாணலிலே காலெடுத்து – அத்தியாயம் 4

அற்புத கண்டுபிடிப்பு