தனிமைக்கான நேரமா கற்றலுக்கான வரமா

சூழ்நிலை பொறுத்து வரும் தனிமை (situational): கலாசாரம், இன பிரிவுகள், புலம்பெயர்தல், புதிய சூழலுக்குத் தன்னைத் தகவமைத்துக்கொள்ள முடியாமையால் ஏற்படுகிறது. இந்த வகைத் தனிமைகள் ஏன் ஏற்படுகின்றன எதனால் ஏற்படுகின்றன அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதைப் பார்க்கலாம்.

தனிமை என்பது மனித வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்ட நிலையில், அதன் பல்வேறு வகைகளை புரிந்து கொள்வது அவசியம். சில மணி நேரங்கள் அல்லது சில நாள்களில் தனித்து இருக்க வேண்டிய சூழல் தவிர்க்க இயலாது. அது தேவையும் கூட. ஆனால், மிதமிஞ்சிய அளவு தனிமை ஏற்படும் போது அல்லது நமக்கே விரும்பாத சூழல் திணிக்கப்படும் போது அது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். சில சமயங்களில் நாமே அறியாதவண்ணம் அத்தகைய சூழலை ஏற்படுத்திக்கொள்கிறோம். சூழ்நிலை பொறுத்து வரும் தனிமை என்பது ஒருவர் தனது பழக்கமான சூழலில் இருந்து மாறுபட்ட, புதிய சூழலுக்குச் செல்லும்போது எதிர்கொள்ளும் தனிமையைக் குறிக்கிறது. இது தற்காலிகமானது என்றாலும், அதன் தாக்கம் ஆழமானதாக இருக்கும்.

புதிய நாட்டில் அல்லது பகுதியில் வாழும்போது, மொழி தடைகள், பண்பாட்டு வேறுபாடுகள், உணவு பழக்கங்கள், மத நம்பிக்கைகள் போன்ற அம்சங்களில் உள்ள மாற்றங்கள் தனிமையை உருவாக்குகின்றன. சமுதாயத்தில் வேரூன்றி இருக்கும் இன பாகுபாடுகள் மற்றும் முன்னுரிமைகள் சிறுபான்மை சமூகத்தை தனிமைப்படுத்துகின்றன. சொந்த மண்ணை விட்டு பிற இடங்களுக்குச் செல்லும்போது, பழக்கமான சூழல், உறவுகள், ஆதரவு அமைப்புகள் எல்லாவற்றையும் விட்டு விலகிச் செல்ல நேரிடுகிறது.

புதிய பணிச்சூழல், கல்விச்சூழல் அல்லது வாழ்விடத்தில் உள்ள விதிமுறைகள், எதிர்பார்ப்புகள், நடைமுறைகள் ஆகியவற்றை புரிந்து கொள்ளும் காலத்தில் தனிமை அதிகரிக்கிறது. நான் வசிக்கும் அமெரிக்காவையே எடுத்துக்கொள்ளலாம். பல்கலைக் கழகங்களில் படிக்க பலநாடுகளில் இருந்து வரும் மாணவர்கள் கூட இயல்பாகவே முதலில் சட்டென்று நெருங்கிப் பழகுவது தமது நாட்டில் இருந்து வரும் மாணவர்களிடம் தான்.

முதலில் நாடு என்று தொடங்கி பிறகு அதனுள் மாநிலம், பிறகு ஊர் மொழி என பிரிந்து சிறு வட்டத்துக்குள் நண்பர்கள் என நெருங்கி பழக ஆரம்ப்பிப்பார்கள். இதனால் மெல்ல அவர்களை அறியாமலேயே பெரிய நட்பு வட்டத்தில் இருந்து பிரிந்து சிறிய வட்டத்துக்குள் வந்துவிடுவார்கள். அது இயல்புதான்.

இந்த மாணவர்களும் இப்போதுதான் அயல் நாட்டில் இருந்து வந்தவர்கள் என்பதால் அவர்கள் தேடலும் ஒன்றுபோல்தான் இருக்கும் ஆனால் அவர்கள் வாய்ப்புக்களை அறிந்திருக்கும் திறனும் அதேபோல்தான் இருக்கும். எனவே கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோல உணர்வது மெல்ல தொடங்கும். சிறுபான்மைக் குழுக்கள் மெல்ல தனிமையை உணரத் தொடங்குவது இங்கேதான்.

பலமுறை இந்த தனிமை கல்வி செயல்திறனில் தாக்கம் ஏற்படுத்துகிறது. பங்கேற்பு குறைதல், வகுப்பறையில் தன்னம்பிக்கையின்மை, போட்டிகளில் பின்னடைவு போன்ற விளைவுகள் காணப்படுகின்றன. அலுவலகத்திலும் இந்த பிரச்சினைகளை சந்திக்கலாம். மெல்ல மெல்ல சில நல்ல திட்டங்கள், வெளிப் பார்வைக்கு நமது திறன்களை காட்டக்கூடிய திட்டங்களும் அதிக உயரத்திற்கு போகக் கூடிய திட்டங்களும் தெரியாமல் போகும். நம்மை ஒத்த நண்பர்கள் குழுக்களில் இணைத்திருப்பது தொடக்கத்தில் மகிழ்ச்சியைத் தந்தாலும் போகப்போக நாம் அதிலேயே தள்ளப்படுவோம். சின்ன நுண்ணிய பாகுபாடுகள் (microaggression) அதனால் வரும் பின்னடைவுகளை கூட எளிதாக இனம் கண்டுகொள்ளக் கூடிய திறன்கள் இருக்காது.

அலுவலகத்தில் உள்ள தனிமை பல்வேறு வகையான தொழில்சார் பின்னடைவுகளை ஏற்படுத்துகிறது. முக்கிய முடிவுகளில் இருந்து விலக்கப்படுதல், பதவி உயர்வு வாய்ப்புகள் இழப்பு, தொழில்சார் வளர்ச்சி தடைப்படுதல், குழுவுடன் ஒருங்கிணைவு பிரச்சினை போன்ற விளைவுகள் ஏற்படுகின்றன. இதனால் பணியில் ஈடுபாடு குறைந்து சாதனையின்மை உண்டாகிறது.

பணிச்சூழலில் பதட்டம், தன்னம்பிக்கையின்மை, மனஅழுத்தம், உற்பத்தித்திறன் குறைவு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. நாளடைவில் இது குடும்ப வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தி, தொழிலில் இருந்து முழுமையாக விலகிக்கொள்ள வேண்டிய நிலையையும் உருவாக்குகிறது.

புலம் பெயர்ந்து வரும் பெண்கள், ஆண்களில் திருமணமாகி இன்னொருவரை சார்ந்து வரும் துணைக்கு பலவிதமாக தடைகள் இருக்கின்றன.

மாணவர்களின் துணைவர்கள், பணிக்கு செல்பவர்களின் துணைவர்கள் இவர்கள் பொதுவாக விசாவின் விதிமுறைகளால் வேறு எதுவும் செய்ய இயலாது. தங்கள் துணையை சார்ந்தே இருக்க பழகுகிறார்கள். இதனால் ஒரு கட்டத்தில் அந்த சார்புத் தனமை தவறாகப் பயன்படுத்திக்கொள்ளப்படுகிறது. சமன்பாடு இல்லா நிலை காணப்படுகிறது. பல உறவுமுறை குழப்பங்கள், வன்முறைகள் காண வழிகோலுகிறது.

குடும்ப வன்முறையின் தாக்கம் நாளடைவில் இன்னும் சிக்கலானதாக மாறுகிறது. பொருளாதார சுதந்திரமின்மை, மொழியை சரியாக புரிந்துகொள்ள முடியாமை, சட்ட உதவி எங்கு கிடைக்கும் என்பதில் அறியாமை, சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்படும் நிலை ஆகியவற்றால் இவர்கள் வன்முறையை எதிர்த்துப் போராடுவதில் பெரும் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். இதன் விளைவாக மனநலப் பிரச்சினைகள் பன்மடங்கு அதிகரிக்கின்றன.

புலம் பெயர்ந்த பெண்களுக்கு வரும் மொழித் தடைகள் வெறும் அலுவலக மொழிக்கு மட்டும் நின்றுவிடுவதில்லை. நல்ல ஆங்கில உச்சரிப்பு இல்லாததால் அமெரிக்க தொலைக்காட்சி கூட பார்க்க முடியாமல் முக்கிய பாதையில் இருந்து விலகியிருக்கின்றனர்.

அமெரிக்க விளையாட்டுகள், பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நடப்பு நிகழ்வுகள், பொதுவான பேச்சு வழக்குகள் போன்றவை தெரியாததால் சமூக உரையாடலில் பங்கேற்க முடியாமல் போகிறது. இதன் விளைவு அன்றாட வாழ்க்கையில் தென்படுகிறது. கணவருடன் அலுவலக பிக்னிக் சென்றாலும் பேச உரையாட அதுவே தடைகல்லாக இருக்கிறது. மற்றவர்கள் விளையாட்டு, சினிமா, அரசியல் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது, இவர்கள் மௌனமாக இருக்க நேரிடுகிறது. இது சமூக தனிமையை இன்னும் அதிகப்படுத்துகிறது.

நாளடைவில் இவர்கள் இத்தகைய சமூக நிகழ்வுகளுக்கே செல்வதை தவிர்க்க நேரிடுகிறது. தொழில்சார் திறன்களை வளர்க்க வேண்டிய நேரத்தில் பல்வேறு தடைகள் உருவாகின்றன. சமூக அங்கீகாரம் பெறுவதற்கான உரிமையான பயிற்சிகள், தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தம்மை மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்புகள், நெட்வொர்க்கிங் வாய்ப்புகள் போன்றவற்றில் இருந்து விலகிவிடுகிறார்கள். இதன் விளைவாக தொழில்சார் வளர்ச்சியில் பெரும் பின்னடைவு ஏற்படுகிறது. புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்முறை தரங்களை புரிந்துகொள்ள முடியாமல் இருக்கும் நிலையில் அவர்கள் தொழிலில் பின்தங்கிப் போகிறார்கள்.

மாணவர்களும் நீண்ட காலம் முக்கிய சமூக நீரோட்டத்தில் (mainstream) இருந்து விலகியே இருப்பதால் காலம் செல்ல செல்ல தங்கள் குழுவிலேயே மூழ்கிப் போகிறார்கள். உள்ளூர் மாணவர்களின் விளையாட்டு, இசை, கலை, சமூக நடவடிக்கைகளில் பங்கேற்காததால் வளாகத்தின் முக்கிய செயல்பாடுகளில் இருந்து தொடர்ந்து விலகி இருக்கிறார்கள். இதனால் அவர்களின் பல்கலைக்கழக அனுபவம் முழுமையடையாமல் போகிறது. நாளடைவில் இது அவர்களுக்கு உள்ளூர் சூழலைப் புரிந்துகொள்ளும் திறனையும் பாதிக்கிறது.

ஏற்கெனவே பணிக்கு செல்லாததால் புதிதாக கற்க ஆகும் செலவினத்தால் வரும் மனத்தடைகள் மிகப்பெரிய சவாலாக மாறுகின்றன. பணத்திற்காக தமது துணையை நம்பியிருக்கும் நிலையில், கல்வி அல்லது பயிற்சிக்கான செலவுகள் குடும்ப பட்ஜெட்டில் பெரும் சுமையாக மாறுகின்றன. இதனால் கல்வி பெறுவதற்கான விருப்பம் இருந்தாலும் அதற்கான வாய்ப்பு இல்லாத நிலை உருவாகிறது.

பொருளாதார சுதந்திரமின்மை தொடர்ந்து தீர்க்கப்படாமல் இருப்பதால், பல்வேறு பிரச்சினைகள் உருவாகின்றன. கல்வி மற்றும் தொழில் வாய்ப்பு இல்லாமை, சமூக அங்கீகாரம் பெறுவதில் சிக்கல், மனநல பிரச்சினைகள் போன்றவை ஏற்படுகின்றன. இதனால் தன்னைப் பற்றிய மரியாதை குறைந்து, தன்னம்பிக்கையின்மை அதிகரிக்கிறது.

நாளடைவில் இந்த பிரச்சினைகள் குடும்ப உறவுகளையும் பாதிக்கின்றன. நல்ல உறவுகள், ஆதரவான உறவுகள் உண்டென்றாலும் அதன் விகிதம் குறைவே. பொருளாதாரச் சிக்கலும் குழப்பங்களும் வர, ஏற்படும் தாழ்வு மனப்பான்மை தனிமையை இன்னும் அதிகப்படுத்துகின்றன.

சூழ்நிலை சார்ந்த தனிமையின் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்பு ஆரம்பத்தில் தூக்கமின்மை, பசியின்மை அல்லது அதிக உணவு உட்கொள்ளுதல் போன்ற வடிவங்களில் தென்படுகிறது. நாளடைவில் இது நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம் அபாயம் போன்ற தீவிரமான நோய்களுக்கு வழிவகுக்கிறது. இந்த உடல் பிரச்சினைகள் மனநலத்தை இன்னும் மோசமாக்கி, ஒரு கெட்ட வட்டத்தை உருவாக்குகின்றன.

மனச்சோர்வு, பதட்டம், தன்னம்பிக்கையின்மை, சுயமரியாதை குறைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவை நாளடைவில் தனிமையை இன்னும் அதிகப்படுத்தி, சமூகத்தில் இருந்து முழுமையாக விலகிக்கொள்ளும் நிலையை உருவாக்குகின்றன. சில சமயங்களில் இது தன்னை தாழ்த்தி நினைக்கும் தனிமையான சிந்தனைகளையும் அதிகரிக்கிறது. சமூகத்தில் இருந்து விலகல், நீண்ட கால நட்பு உருவாக்குவதில் சிக்கல், அடுத்த தலைமுறைக்கு மன அழுத்தம் பரவுதல் போன்ற விளைவுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக குழந்தைகள் பெற்றவர்களின் தனிமை நிலையை அவதானித்து, அவர்களுக்கும் சமூகத்தில் பொருந்திக்கொள்ள முடியாத உணர்வு வருகிறது. இது தலைமுறை சார்ந்த மன அழுத்தத்தை உருவாக்குகிறது.

கல்லூரியில் சேரும் பன்னாட்டு மாணவர்கள் தங்கள் நாட்டைச் சேர்ந்த மாணவர்களுடன் நட்பாய் இணையும். அதே நேரம் மனத் தடையையும் மீறி வேற்று மொழி பேசும் அங்கேயே பிறந்து வளர்ந்த புதிய நண்பர்களையும் உருவாக்கிக் கொள்வது அவசியம். சார்பு நிலை விசாவில் புலம் பெயர்ந்து வருபவர்கள், நூலகங்களுக்கு செல்ல பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அங்கே இருக்கும் வாய்ப்புக்களைப் பயன்படுத்திக்கொண்டு பல திறன்களை வளர்த்துக்கொள்ளலாம். இது வேலை வாய்ப்பையும் சமூகத்தில் பங்கேற்பதையும் அதிகரிக்கிறது.

உள்ளூர் நிகழ்வுகளில் பங்கேற்பு, தொண்டு நிறுவனங்களில் ஈடுபாடு, பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மூலம் சமூகத்துடன் இணைந்துகொள்ள முடியும். தனிமையின் காரணத்தை புரிந்துகொண்டு, அதற்கான சிறப்பு மனநல ஆலோசனை பெறுவது மிகவும் உதவிகரமாக இருக்கும். கலாசார பரிமாற்ற நிகழ்வுகள், ஆதரவு குழுக்கள் உருவாக்கம், மென்டார்ஷிப் திட்டங்கள், தொழில்சார் வலையமைப்பு போன்ற முயற்சிகளை சமூகம் மேற்கொள்ள வேண்டும். பன்முக கலாசார புரிதல் மற்றும் சகிப்புத்தன்மையை வளர்க்கும் நிகழ்வுகள் நடத்தப்படவேண்டும். இதனால் பல்வேறு பின்னணியில் இருந்து வரும் மக்கள் ஒன்றிணைந்து வாழும் சூழல் உருவாகும்.

பன்முகத்தன்மை மற்றும் சேர்த்தல் திட்டங்கள், கலாசார உணர்வு பயிற்சிகள், சமமான வாய்ப்பு கொள்கைகள், மன ஆரோக்கிய ஆதரவு போன்ற நடவடிக்கைகளை நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும். பணியாளர்களின் பின்னணியை மதித்து, அவர்களின் திறன்களை வளர்க்க உதவும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். சூழ்நிலை சார்ந்த தனிமை என்பது தற்காலிகமானது என்றாலும், அதன் தாக்கம் நீண்ட காலமாக இருக்கலாம். இதை சமாளிக்க தனிநபர், சமூகம் மற்றும் நிறுவனங்கள் அனைத்தும் இணைந்து முயற்சி செய்ய வேண்டும். பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்ளும் சமூகம், சமமான வாய்ப்புகளை வழங்கும் அமைப்பு, மற்றும் புரிதலுடன் கூடிய மனிதர்கள் இருக்கும் சூழலில் இந்த வகை தனிமை குறைக்கப்படலாம்.

இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு முதலில் அதை அங்கீகரிக்க வேண்டும். பிறகு அதற்கான தீர்வுகளை செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு மனிதருக்கும் தன்னுடைய கலாசாரத்தை பேணியும், புதிய சூழலுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டும் வாழ்வதற்கான உரிமை உண்டு.

Series Navigation<< இளம்பருவ தனிமை: வளர்வதால் வரும் தனிமைமாற்றுத்திறனாளிகளின் தனிமை >>

Author

Related posts

நாள்: 21

நாள்: 20

நாள்: 19