தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 11 – மொழியாக்கம்

பெரிய பாப்பா – நாகேந்திரன்

தெலுங்கு மூலக்கதை: டாக்டர். எம். ஹரிகிஷன் 

ஒரு ஊரில் ஒருவன் இருந்தான். அவனுக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் அழகுன்னா அழகு. அப்படியே இரப்பர் பொம்மை மாதிரியே இருப்பாள். அதோடு கணவனும் மனைவியும் அந்தப் பாப்பாவை நல்ல பாசமாகப் பார்த்துக்கொண்டனர். என்ன கேட்டாலும் இல்லை எனாமல் வாங்கிக் கொடுப்பர். அந்தப் பாப்பாவுக்கு மூன்று வயது ஆகும்போது அவங்க அம்மா இறந்து விட்டார். அதோடு அவன் வீட்டில் விளக்கேற்ற யாரும் இல்லாமல் போக மறுமணம் செய்து கொண்டான். அப்படி வந்தவள் சரியான சண்டைக்காரி. புருஷன் பேச்சுக்குச் சுத்தமாக மதிப்புக் கொடுக்கமாட்டாள். அதோடு அவன் அவள் வார்த்தைகளுக்குப் பயந்து போய் அவள் என்ன சொன்னாலும் வாயை மூடிக்கொண்டு அமைதியாக ஊம் கொட்டுவான்.

சில நாள்கள் கழித்து அவளுக்கும் ஒரு மகள் பிறந்தாள். அந்தப் பாப்பா கூட நன்றாகவே இருக்கும். ஆனால் பெரிய பாப்பா அளவுக்கு அவ்வளவு அழகானவள் கிடையாது. அதனால் அவளுக்குப் பெரிய பாப்பாவைப் பார்த்தாலே உடம்பு எல்லாம் பற்றிக் கொண்டு வரும். வீட்டு வேலைகளை எல்லாம் அந்தப் பாப்பாவை வைத்தே செய்து கொள்வாள். காலையில் எழுந்ததிலிருந்து பொழுது சாய்கிற வரைக்கும் ஒரே வேலை.

காலையிலே எழுந்திருக்க வேண்டும். குப்பைகளைக் கூட்டிப் பெருக்க வேண்டும். சாணித் தெளிக்க வேண்டும். சுத்தமாகத் தரைகளைத் துடைக்க வேண்டும். பாத்திரங்களைத் துலக்க வேண்டும், மாடுகளைக் குளிப்பாட்ட வேண்டும். அவற்றிற்கு இரை போட வேண்டும், பால் கறக்க வேண்டும். தண்ணீர் வைக்க வேண்டும். சோறு பொங்க வேண்டும்; ஒன்றெனக் கிடையாது அனைத்து வேலைகளையும் பெரிய பாப்பாதான் செய்ய வேண்டும். அப்படி எல்லா வேலைகளையும் செய்த பிறகு மாடுகளை ஊருக்கு வெளியே பத்திக்கொண்டு போய் மேய்த்து வர வேண்டும்.

பாவம் இவ்வளவு வேலைகளை வாங்குகிறாள் இல்லையா… குறைந்தது சாப்பாட்டையாவது ஒழுங்காகப் போடுவாளா என்றால் அதுவும் கிடையாது. சுடச்சுடச் சோற்றைத் தாம் உண்டுவிட்டு கெட்டுப்போனச் சோறு, மீந்துப்போனக் கறியைப் பொட்டலம் கட்டி மாடுகளுக்குப் போடும்போது கொடுப்பாள். பாவம் அந்தப் பெரிய பாப்பா அவற்றைத் தின்ன முடியாமல் பசியோடே உறங்கி மிகவும் துன்பங்களை அனுபவித்து வந்தாள். சரியாக உணவு இல்லாமல் அந்தப் பாப்பா முகம் வற்றிக் களை இழந்துபோய் இருந்தது.

ஒருநாள் பெரிய பாப்பா அந்தக் கெட்டுப்போன வாடை அடிக்கிற சோற்றைத் தின்ன முடியாமல், பசியையும் பொறுக்க முடியாமல் அழுதுகொண்டிருக்க, அப்போது அந்தப் பக்கமாக வந்த முனிவர் அதைப் பார்த்து “பாப்பா! எதுக்கு இப்படி அழுதுட்டு இருக்க? உன் கஷ்டந்தான் என்ன?” என்று கேட்டார். அதற்கு அந்தப் பாப்பா கண்களில் கண்ணீர் நிறைந்து வழிய, விம்மி விம்மி அழுதுகொண்டே நடந்தது அனைத்தையும் கூறினாள்.

அதற்கு அந்த முனிவர் “அய்யோ பாவம்!” என்று இரக்கப்பட்டு, பையில் இருந்து ஒரு லட்டை எடுத்துக்கொடுத்து “இதை யார் கண்ணிலும் படாமல் எங்கேயாச்சும் குழி தோண்டிப் புதைத்து வைத்து தினமும் தண்ணி ஊத்திட்டு வா.. அப்புறம் என்ன நடக்குதுனு நீயே பாரு” என்றார்.

அந்தப் பாப்பா மகிழ்ச்சியோடு அந்த லட்டை வாங்கி ஒரு குழி பறித்து நட்டுத் தண்ணீர் ஊற்றினாள். அடுத்தநாள் வந்து பார்த்தால் அங்கொரு செடி முழங்கால் உயரத்திற்கு வளர்ந்திருப்பதைக் கண்டாள். “இதென்ன செடி ஒரு நாள்லயே இவ்வளவு உயரம் வளர்ந்திடுச்சு” என்று ஆச்சரியப்பட்டு மீண்டும் ஒரு வாளியில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றினாள். அடுத்தநாள் காலையிலேயே “இன்னைக்கு எவ்வளவு உயரம் இருக்கோ என்னமோ?” என்று நினைத்து ஓடோடிப் போய்ப் பார்த்தால் செடி வளர்ந்து பெரியதாகிப் பூக்கள் கூடப் பூத்திருந்தன. அந்தப் பாப்பா சந்தோஷமாக ஓடிப்போய் வாளி வாளியாகத் தண்ணீர் எடுத்து வந்து நன்கு ஊற்றினாள்.

அடுத்த நாள் காலையிலேயே கடகடனு வேலைகளையெல்லாம் பார்த்துவிட்டு, மாடுகளைப் பத்திக்கொண்டு வேகவேகமாக வந்து பார்த்தால் வேற என்ன… மரம் முழுவதும் எங்கு பார்த்தாலும் ஒரு இடம் கூட விடாமல் ஒரே லட்டோ லட்டு. அந்தப் பாப்பா பரபரனு வேண்டுமென்கிற லட்டுகளை எல்லாம் பறித்து நிம்மதியாகத் தின்றாள். அன்றையிலிருந்து அந்தப் பாப்பா மாடுகளைப் பத்திக்கொண்டு கெட்டுப்போன சோறு, கறியை வீசி எறிந்து விட்டு வேண்டுமென்கிற லட்டுகளைப் பறித்து வயிறு நிறையத் தின்ன ஆரம்பித்தாள். வயிறு நிறைய நிம்மதியாகச் சாப்பிட்டு வருகிறாள் இல்லையா? அதனால் அவள் முகம் மீண்டும் நன்கு களைகொடுக்க ஆரம்பித்தது.

அதைப் பார்த்த சின்ன அம்மா “இதென்னடா என் மவளுக்கு எவ்வளவு போட்டாலும் அவள் முகம் வாடிட்டே போய்ட்ருக்க இவளுக்கு எதும் போடலனாலும் நல்லா கலையா இருக்கா. என்ன கதை?” என்றெண்ணி மகளை அழைத்து “இன்னைக்கு நீ அக்கா பின்னாலயே அவளுக்குத் தெரியாம போ” என்றாள். அதோடு சின்ன பாப்பா அக்கா பின்னாலயே மறைந்து மறைந்து சென்று லட்டு மரத்தைப் பார்த்து ஓடி வந்து தன் அம்மாவிடம் பார்த்ததை அவ்வாறே கூறினாள். “ஒஹோ! அப்படியா விஷயம்?” என்று நினைத்து அவள் இராத்திரியோடு இராத்திரியாக யாரும் பார்க்காமல் கோடாரியை எடுத்துக்கொண்டு போய் அந்த லட்டு மரத்தை வேரோடு சேர்த்து வெட்டி வீசினாள்.

பெரிய பாப்பா எப்போதும் போல அடுத்தநாள் கூட மாடுகளைப் பத்திக்கொண்டு காட்டிற்குச் சென்றாள். சோறு, கறியை மாடுகளுக்கு முன்னால் வீசிவிட்டுத் துள்ளிக்கொண்டே குன்றிற்கு அருகில் போனாள். அங்கு மரமும் இல்லை லட்டும் இல்லை. பாவம் அந்தப் பாப்பா நொந்துபோய் கீழேயும் மேலேயும் விழுந்து அழ ஆரம்பித்தாள்.

பெரிய பாப்பா அப்படி அழுதுகொண்டிருக்க மீண்டும் அதே வழியில் திரும்பி வந்து கொண்டிருந்த முனிவர் பார்த்து “பாப்பா! பாப்பா! திரும்ப என்னாச்சு? எதுக்கு இப்படி அழுதுட்டு இருக்க? என்னதான் உன் கஷ்டம்?” என்று கேட்டார். அதற்கு அந்தப் பாப்பா கண்களில் கண்ணீர் நிறைந்து வழிய, விம்மி விம்மி அழுதுகொண்டே நடந்தது அனைத்தையும் கூறினாள். அதற்கு அந்த முனிவர் “அய்யோ பாவம்” என்று இரக்கப்பட்டு பையிலிருந்து ஒரு தங்கப் பெட்டியை எடுத்துக் கொடுத்து “இதை வாங்கிக்கோ.. இது ஒன்னும் அப்படி இப்படி சாதாரண பெட்டி கிடையாது. விருப்பத்தை நிறைவேற்றுகிற தங்கப் பெட்டி. நீ என்ன கேட்டாலும் அது இதுல இருந்து வரும். உனக்குக் கல்யாணம் ஆகுற வரைக்கும் தான் இது வேலை செய்யும்” என்று கூறினார். அந்தப் பாப்பா அந்தப் பெட்டியை எடுத்துக்கொண்டு யாருக்கும் தெரியாமல் அமைதியாக ஓர் இடத்தில் மறைத்து வைத்து வேண்டியன எல்லாம் பெற்றுக்கொண்டு நிம்மதியாக இருந்தாள்.

ஒரு நாள் ஊரில் ராஜகுமாரனுக்குச் சுயம்வரம் ஏற்பாடு செய்தனர். எந்தெந்தத் தேசங்களில் இருந்தோ அழகானப் பெண்கள் கீழே இருந்து மேலே வரைக்கும் நகைகளும், ஆபரணங்களுமாக அணிந்தபடி வந்து கொண்டிருந்தனர். சின்ன பாப்பாவைக் கூட அவங்க அம்மா நல்லா அலங்கரித்துப் போய்க்கொண்டிருக்கையில் பெரிய பாப்பா “அம்மா, அம்மா நானும் வர்றேன். என்னையும் கூட்டிட்டு போ” என்று கேட்டாள். அதற்கு அவள் “எல்லாரும் அங்க போயிட்டா வீட்டுல வேலைங்கள யாரு பார்ப்பாங்க?” என்று அவள் பார்க்காதபோது அரிசியில் ஒரு கைப்பிடிக் கல்லை எடுத்துப் போட்டு “இது முழுக்கக் கல்லா இருக்கு. நாங்க வர்றதுக்குள்ள எல்லாத்தையும் நல்லாப் பொறுக்கி வை” என்று மகளோடு சுயம்வரத்திற்குச் சென்றாள்.

பெரிய பாப்பாவுக்கும் சுயம்வரத்துக்குப் போய்வர வேண்டுமென்று இருந்தது. அதோடு அவர்கள் அப்படிப் போனதும் கடகடனு கல் எல்லாவற்றையும் பொறுக்கி வீசிவிட்டு, தலைக்குக் குளித்துவிட்டு, வேகமாகச் சென்று பெட்டியைக் கொண்டு வந்தாள். அவள் நினைத்ததும் பட்டு ரவிக்கை, பட்டுப் புடவை, வளையல், கம்மல், நெத்திச் சுட்டி, ஒட்டியாணம், வளையல், செருப்பு… இப்படி ஒரே நேரத்தில் கீழே இருந்து மேலே வரைக்கும் தேவையான அனைத்தும் தகதகனு மின்னிக்கொண்டு தயாராயின. பெரிய பாப்பா அவை எல்லாவற்றையும் போட்டுக்கொண்டு ஏழு குதிரைகள் பூட்டிய இரதத்தில் ஏறிச் சுயம்வரத்திற்கு ஜாம் ஜாம்னு சென்றாள்.

சுயம்வரத்தில் தகதகனு மின்னியபடி சுற்றி வந்தப் பெரிய பாப்பாவைப் பார்த்து எல்லோரும் வாயில் விரல் வைத்துக்கொண்டனர். கல்யாணம் ஆகாதவர்கள் கல்யாணம் பண்ணினால் இது மாதிரி ஒரு தங்கப் பொம்மையைத்தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்று நினைக்க… கல்யாணம் ஆனவர்கள் பெற்றால் இப்படி ஒரு பிள்ளையைப் பெற வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தனர். அப்படிப் பெரிய பாப்பா கலகலனு சிரித்துகொண்டு சுற்றி வர, சின்ன பாப்பா பார்த்து ஓடோடித் தன் அம்மாவிடம் சென்று “அம்மா! அம்மா! அக்கா கூட இங்க வந்திருக்கா, அப்படியே தேவதை கணக்கா, எவ்வளவு அழகா இருக்கா தெரியுமா?” என்றாள். அதோடு அவள் “வேலை கொடுத்தா அதை பார்க்காம இங்க வந்துட்டாளா, இரு அவளை ஒரு வழி பண்றேன்” என்று கோபமாகக் கட்டையை எடுத்துப் பெரிய பாப்பாவைத் தேட ஆரம்பித்தாள்.

ராஜகுமாரன் ஒவ்வொருத்தராகப் பார்த்துக்கொண்டு வரும்போது கலகலனு சிரித்துக்கொண்டு சுற்றி வந்து கொண்டிருந்தப் பெரிய பாப்பாவைக் கண்டான். “எவ்வளவு அழகா இருக்கா பிள்ளை… அப்படியே மின்னல் கொடி மாதிரி” என்று மகிழ்ச்சியாகப் போய் அவள் கையைப் பிடித்தான். அப்போது பெரிய பாப்பாவைத் தேடிக்கொண்டு அவளுடைய சின்னம்மா அந்தப் பக்கம் வந்தாள். பெரிய பாப்பா அதிர்ச்சியில் அவள் கண்ணில் படக்கூடாது என்று கையை உதறிவிட்டு ஓடிப்போய் இரதத்தில் ஏறி நொடியில் அங்கிருந்து மறைந்தாள். அவள் அப்படி உதறிப்போனபோது அவள் விரலில் இருந்த வைர மோதிரம் நழுவி ராஜகுமாரன் கையில் விழுந்தது.

ராஜா வீரர்களை அழைத்து “வீடு வீடாகப் போய் இதை எல்லாருக்கும் மாட்டிப் பாருங்க. யாருக்குச் சரியாக இருக்கோ அவங்களைக் கூட்டிட்டு வாங்க” என்று கூறி அனுப்பினான். அவர்கள் அந்த மோதிரம் யாருக்குச் சரியாக இருக்கிறது என்று ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று தேடிக்கொண்டு இவர்களது வீட்டிற்கு வந்து “உங்க வீட்டுல கல்யாண வயசுல பொண்ணு இருக்காங்களா?” என்று கேட்டனர். அதற்கு அவள் “இருக்காங்க” என்று தனது சொந்த மகளை அழைத்து வந்தாள். அந்தப் பாப்பா அதை மாட்டிப் பார்த்தால் அது சேரவில்லை. அப்போதுதான் புற்கட்டைத் தலையில் வைத்துக்கொண்டு அந்தப் பக்கம் வந்தாள் பெரிய பாப்பா.

வீரர்கள் அந்தப் பாப்பாவைப் பார்த்து “அவள் யார்?” என்று கேட்க, “எங்க வேலைக்காரி” என்று கூறினாள். ஆனாலும் அவர்கள் “எல்லாருக்கும் மாட்டிப் பார்த்துட்டே வந்தோம் இல்லையா. இவளுக்கும் மாட்டிப் பார்ப்போம். ஒரு வேலை முடியும்” என்று நினைத்து அந்தப் பாப்பாவை அழைத்து மாட்டிப் பார்த்தால் சரியாகப் பொருந்திப்போனது. கையோடு அவர்கள் விரைந்து ஓடோடிப் போய் ராஜகுமாரனிடம் விஷயத்தைத் தெரிவித்தனர்.

ராஜகுமாரன் சந்தோஷமாக ரதத்தில் அங்கு வந்து பெரிய பாப்பாவைத் தங்கப் பல்லக்கில் அமர வைத்து அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். பணிப்பெண்கள் அவளை நன்றாகக் குளிக்க வைத்து, பட்டுத் துணிகள் கட்டி, நகைகளை அணிவித்ததும் பார்ப்பவர்களது கண்கள் ஜொலித்தன. “அப்பா! அப்படியே சிலை மாதிரி எவ்வளவு அழகாக இருக்கா பிள்ளை” என்று நினைத்தனர். ராஜகுமாரன் ஊர்மக்கள் அனைவரையும் அழைத்து நல்ல வைபோகமாகத் திருமணம் செய்து கொண்டான். பெரிய பாப்பா மிகவும் நல்லவள் இல்லையா. அதனால் நடந்தது எல்லாவற்றையும் மறந்து அம்மாவையும் மகளையும் கூடத் திருமணத்திற்கு அழைத்து, நல்ல மரியாதை செய்து எடுத்துச் செல்ல முடியாத அளவிற்கு நகைகளும், ஆபரணங்களுமாகக் கைநிறையக் கொடுத்து அனுப்பினாள்.

திருமணமான சில மாதங்களில் பெரிய பாப்பா கர்ப்பம் தரித்தாள். அந்தப் பாப்பாவுக்கு ஒருமுறை பிறந்த வீட்டுக்குச் சென்று அம்மாவை, தங்கையை, ஊரிலுள்ள அனைவரையும் பார்த்து வரவேண்டும் என்று இருந்தது. அவள் கேட்டதும் ராஜகுமாரன் “சரி! போயிட்டு சீக்கிரம் வா” என்று பல்லக்கில் அழைத்துச் சென்று பிறந்த வீட்டில் விட்டுவிட்டு வந்தான். அவள் ஊரிலுள்ள அனைவருக்கும் நல்ல நல்ல பரிசுகளைக் கொண்டு வந்து கொடுத்தாள்.

சின்னம்மா வெளியில் நன்கு சிரித்துப் பேசினாலும் உள்ளுக்குள்ளே இவள் வைபோகங்களைப் பார்த்து வயிறெரிந்து கொண்டிருந்தாள். “எப்படியாவது இவளைக் கொன்னு, இவள் இடத்துல என் மகளை வைக்கிறேன், என் மகள் ராணி ஆய்டுவா இல்லையா” என்று எண்ணி மகளை அழைத்து என்ன செய்ய வேண்டுமென்று சொன்னாள்.

ஒருநாள் சின்ன பாப்பா பெரிய பாப்பாவிடம் போய் “அக்கா! அக்கா! ஊருக்கு வெளியே இருக்குற கோயிலைப் பார்த்துட்டு வருவோம்…. வா!” என்று அழைத்துச் சென்றாள். அந்தத் கோயிலுக்குப் பக்கத்திலேயே ஒரு பெரிய கிணறு இருந்தது. அக்காவை அந்தக் கிணற்றுக்கு அருகில் அழைத்துக்கொண்டு சென்று “அக்கா! அக்கா! உன் நகை எல்லாத்தையும் நான் போட்டுக்கிறேன். என்னோடது எல்லாத்தையும் நீ போட்டுக்கோ. அப்ப நீ அழகா இருக்கியா, நான் அழகா இருக்கேனானு தண்ணியில பார்ப்போம்” என்றாள். அதற்குப் பெரிய பாப்பா “அவங்க அழகு அவங்களுக்கு.. தங்கச்சி… நம்மளுக்குள்ள எதுக்குப் போட்டி?” என்றாள். ஆனாலும் சின்னப் பாப்பா அதை ஏற்றுக் கொள்ளவில்லை. சரியென்று பெரிய பாப்பா தன் நகை எல்லாவற்றையும் சின்னப் பாப்பாவிடம் கொடுத்துவிட்டுச் சின்ன பாப்பா நகை எல்லாவற்றையும் தான் அணிந்துகொண்டாள். இருவரும் கிணற்றிற்குள் எட்டிப் பார்த்தனர். பெரிய பாப்பா அப்படிப் பார்த்துக் கொண்டிருந்தபோது சின்ன பாப்பா அமைதியாகப் பின்னாலிருந்து அவள் காலைப் பிடித்துப் படார்னு உள்ளே தள்ளிவிட்டாள்.

அப்படித் தள்ளிவிட்டதும் வீட்டிற்குப் போய் அப்படியே பெரிய பாப்பா மாதிரியே நகை எல்லாவற்றையும் போட்டு அலங்கரித்துக் கொண்டாள். ஒரு வாரம் ஆனதும் அழைத்துச் செல்வதற்கு அவள் கணவன் வந்தான். அவன் அவளைப் பார்த்து “முகம் எல்லாம் வாடிப் போயி என் மனைவி இப்படி இருக்காளே என்னடா இது …” என்று நினைத்தான். அப்போது அவள் அம்மா “நேத்து குளத்துக் கரையில கால் வழுக்கிப் படியிலிருந்து தபதபனு கீழே விழுந்துட்டா. கர்ப்பம் கலைஞ்சிடுச்சு. அதுக்கு அழுது அழுது முகம் எல்லாம் அப்படியே வாடிப் போச்சு” என்று பொய் வார்த்தைகளைக் கூறித் தன் மகளை ராஜகுமாரனுடன் அனுப்பி வைத்தாள்.

இங்கே பெரிய பாப்பாவைக் கிணற்றில் தள்ளிவிட்டாள் இல்லையா. அந்தக் கிணற்றில் வெகுநாள்களுக்கு முன்பிருந்தே ஒரு ஏழு அடி நாகராஜன் தன் மனைவி குழந்தைகளோடு வசித்து வந்தான். அந்த நாகராஜாவுக்கு நான்கு மாதத்திற்கு முன்னால் தலையில் பெரிய காயம் ஏற்பட்டிருந்தது. நாளுக்கு நாள் வலி அதிகரித்துக்கொண்டிருந்ததே தவிர குறைந்தபாடு இல்லை. அந்த நேரத்தில் பெரிய பாப்பா, அவ்வளவு உயரத்தில் இருந்து சரியாகப் பாம்பிற்குப் புண் எங்கு இருந்ததோ அங்கேயே படார்னு விழுந்தாள். அப்படி விழுந்ததில் புண் பிய்ந்துபோய் உள்ளிருந்த சலம் எல்லாம் வடிந்து, காயத்தின் வலி குறைந்தது. பெரிய பாப்பா கூடத் தண்ணீரில் விழப்போய் நாகராஜன் மேல் விழுந்தாள் இல்லையா அதனால் அவளுக்கு அடியேதும் படவில்லை.

நாகராஜன் மகிழ்ச்சியாக அவளைப் பார்த்தபடி “யாரம்மா நீ? பார்க்க வயிற்றுப் புள்ளக்காரியா தெரியுற, எதனால இப்படி கிணத்துல விழுந்துட்ட? என்னதான் உன் கஷ்டம்?” என்று கேட்டான். அப்போது அவள் விம்மி விம்மி அழுதுகொண்டே நடந்தது அனைத்தையும் கூறினாள். நாகேந்திரன் “அய்யோ பாவம்” என்று இரக்கப்பட்டு “நீ எதுக்கும் கவலைப்படாதே. உன் புருஷன் வந்து கூட்டிப் போகிற வரைக்கும் எங்க நாக லோகத்துல எங்க கூடயே இரு” என்று அவளை வீட்டிற்கு அழைத்துக்கொண்டு சென்றான்.

சில நாள்களில் அவளுக்குப் பழம் மாதிரி பையன் பிறந்தான். நாகேந்திரன், அவர் மனைவி பிள்ளைகள், ஊரிலுள்ள அனைவரும் அந்தப் பையனைப் பாசமாகச் சொந்தப் பிள்ளை மாதிரி வளர்க்கத் தொடங்கினர். அப்படி அவளுக்கு நாகலோகமே பிறந்த வீடாகிப் போனது. பையன் மெதுவாக வளர்ந்து பெரியவனாகி ஐந்து வயதை எட்டினான்.

ஒருநாள் ஒரு வளையல்காரர் “வளையல் அம்மா! … வளையல்!” என்று கத்திக் கொண்டே சென்றுகொண்டிருக்க அதைக் கேட்ட பெரிய பாப்பா “அண்ணா! அண்ணா! ஓ வளையல்காரண்ணா… கொஞ்சம் இப்படி வந்து எங்களுக்கு வளையல் போட்டுட்டு போண்ணா” என்று கிணற்றுக்குள் இருந்து அழைத்தாள். அவன் சுற்றியும் பார்த்துவிட்டு கிணற்றிற்கு உள்ளே எட்டிப் பார்த்தால் அவள் தெரிந்தாள்.

“உள்ளே எப்படி வர்றது?” என்று கேட்டான்.

அவள் நாகேந்திரனை நினைத்ததும் மேலிருந்து கீழே படிகள் தோன்றின. வளையல்காரன் உள்ளே இறங்கினான். அவள் அவனுக்குத் தெரியாமல் இருக்க முகத்தில் முகமூடி அணிந்திருந்தாள். அவன் வளையலைப் போட்டுக்கொண்டிருக்கும்போது அவள் மகன் விளையாடிக்கொண்டே அங்கு வந்தான். அந்த வளையல்காரனுக்கு அந்தப் பிள்ளையைப் பார்க்க அப்படியே தங்கள் ராஜாவைப் பார்ப்பது போல் இருந்தது. அதோடு அவன் “அம்மா! அம்மா! யாரு நீ? இந்த கிணத்துக்குள்ள எதுக்கு இருக்க?” என்று கேட்டான். அவள் நடந்தது அனைத்தையும் கூறினாள்.

அந்த வளையல்காரன் வெளியே வந்ததும் ஓடோடி ராஜாவிடம் சென்று நடந்தது அனைத்தையும் கூறினான். அதற்கு ராஜா ஆச்சரியத்தோடு “அது என் மனைவினா அப்புறம் இங்க வீட்டுல இருக்கிறது யாரு? இது என்ன கதைனு விசாரிக்க வேண்டியதுதான்” என்று எண்ணி வளையல்காரன் வேஷம் போட்டுக்கொண்டு “வளையலம்மா! வளையல்!” என்று கத்திக் கொண்டே அடுத்தநாள் கிணற்றுப் பக்கம் போனான்.

அந்தச் சத்தம் கேட்கவும் “ஓ வளையல்காரண்ணா! உள்ள வா, எனக்கு நல்ல வளையலா போட்டுட்டு போ” என்று அழைத்தாள். உடனே கிணற்றிற்குள் படிகள் தோன்றின. ராஜா உள்ளே சென்றார். பையனைப் பார்க்க அப்படியே அச்சு அடித்த மாதிரி தன்னைப் போலவே இருந்தான்.

அவள் முகத்தைப் பார்த்தான். அவள் முகமூடி போட்டிருந்தாள் இல்லையா அதனால் முகம் சரியாகத் தெரியவில்லை. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு முகமூடியைப் பிடித்து ஒரு இழு இழுத்தான். வேற என்ன… தன் மனைவிதான். ஆச்சரியமடைந்து போனான்.

ராஜா அப்படி முகமூடியை எடுத்ததும் அவள் அதிர்ந்துபோய் “யாருடா நீ? என் வீட்டுக்கு வந்து என் கவசத்தையே இழுக்குறியா? … இரு, உன்ன ஒரு வழி பண்றேன்” என்று நாகேந்திரனை அழைக்கப்போனாள். அப்போது ராஜா “நில்லு நில்லு! என்னை யாருனு நினைச்ச? வளையல்காரன் இல்ல. உன் புருஷன்” என்று வேஷத்தைக் கலைத்தான். அவள் கணவனை அடையாளம் கண்டு மகிழ்ச்சியாக நாகலோகத்திற்கு அழைத்துப்போனாள். நாகலோகம் முழுவதும் அவர்கள் இருவரையும் பார்த்து “எவ்வளவு அழகான ஜோடி. கிளியும் மைனாவும் மாதிரி” என்று எண்ணியவாறு ஆசீர்வதித்து பிறந்த வீட்டுக்காரர்கள் போல நல்ல சேலை கட்டிவிட்டு கண்களில் நீரோடு புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

ராஜகுமாரன் வீட்டிற்கு வந்ததும் இத்தனை நாள்களாகத் தன்னை ஏமாற்றியதற்காகச் சின்ன பாப்பாவிற்கு மொட்டை அடித்து, கழுதை மேல் ஏற்றி, ஊரை விட்டு ஒதுக்கினான்.

Series Navigation<< தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 10 – மொழியாக்கம்

Author

  • மு.இராமர் மாசானம் என்ற இயற்பெயருடைய இவரது சொந்த ஊர் திருநெல்வேலி. தற்போது ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருக்கிற 'திராவிடன் பல்கலைக் கழகம்' இல் முனைவர்பட்ட ஆய்வாளராக உள்ளார். 'ஒப்பாய்வு நோக்கில் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் கீர்த்தனைகளும் பக்த இராமதாசு கீர்த்தனைகளும்' எனும் தலைப்பில் ஒப்பிலக்கிய ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மைசூரில் இருக்கிற இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தில் (CIIL) தெலு(ங்)கு மொழியில் பத்து மாதகால பட்டய வகுப்பு முடித்திருக்கிறார். அதன் வெளிப்பாடாக தெலுங்கில் டாக்டர். எம். ஹரிகிஷன் அவர்கள் எழுதிய தெலு(ங்)கு நாட்டுப்புறக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்.

Related posts

மாறாததொன்றே மாறாதது

ஒற்றையடிப் பாதை

இனியவன் – 2