தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 4 – மொழியாக்கம்

சின்ன பாப்பா – பெரிய பாப்பா

தெலுங்கு மூலக்கதை: டாக்டர். எம். ஹரிகிஷன் 

‎ஒரு ஊரில் ஒரு ராஜா, ராணி இருந்தனர். அவர்களிடம் ஒரு பெண்நாய் இருந்தது. அது மிகவும் நல்ல நாய். வீட்டிற்கு நல்ல காவலாக இருந்தது. ஒருநாள் ராணி கர்ப்பம் தரித்தாள். அதே நேரத்தில் நாயும் கர்ப்பமாக இருந்தது. கர்ப்பமாய் இருப்பவர்களுக்கு ஏதேதோ தின்ன வேண்டும் என்று இருக்கும் இல்லையா. ராணி என்னமோ லட்டு, ஜாங்கிரி, ஜிலேபி, மைசூர்ப் பாகு.. இப்படி ஒன்றெனக் கிடையாது, என்னென்ன வேண்டும் என்றாலும் அதை நன்கு நெய் மணக்க மணக்கக் கமகமனு மூக்குப் புடைக்கச் செய்யவைத்துத் தின்பாள். அப்படியே நல்ல புளிப்பான புளியங்காய், மாங்காய்களை எல்லாம் நன்கு தின்று வந்தாள்.

‎நாய் கூட அவளைப்போலவே கர்ப்பமாக இருந்தது இல்லையா.. அதற்குக் கூட ஏதேதோ தின்னவேண்டும் என்று இருக்கும் இல்லையா. ஆனால் பாவம், அதற்கு மட்டும் கெட்டுப்போன சோறு, கெட்டுப்போன கறியைப் போடுவார்கள். சும்மா சும்மா வார்த்தைக்கு வார்த்தை அதைத் திட்டிக்கொண்டும் அடித்துக்கொண்டும் இருந்தனர். சரியாக உணவு இல்லாமல் அது மெலிந்து ஒட்டி ஒடுங்கிப்போனது. ஒருநாள் காலையில் இருந்து இராத்திரி வரைக்கும் எவ்வளவு காத்திருந்தும் சின்ன ரொட்டித்துண்டு கூட போடவில்லை. அதனால் நாய் மிகுந்த கோபமடைந்து ராணிக்கு ஒரு சாபம் விட்டது.

‎அந்தச் சாபத்தினால் ராணிக்கு நாய்க்குட்டிகள் பிறந்தன. நாய்க்கு என்னமோ இரண்டு அழகான பெண் குழந்தைகள் பிறந்தன. நாய் தனது குழந்தைகள் இரண்டையும் வாயில் கவ்விக்கொண்டு காட்டிற்குள் கொண்டு சென்றது. வண்ண வண்ணப் பறவைகளின் இறகுகளைக் கொண்டுவந்து மெத்தென்று படுக்கை செய்து படுக்க வைத்தது. காட்டில் கிடைக்கிற நல்ல நல்ல இனிப்பான பழங்களைப் பொறுக்கி வந்து உண்ண வைத்தது. பச்சைக்கொடிகளால் ஊஞ்சல் செய்து ஆட்டியது. தினமும் சுத்தமாகக் குளிப்பாட்டி , அழகாக ஜடை பின்னி, வண்ண வண்ணப் பூக்கள் வைத்தது. அப்படியே மிகுந்த பாசத்தோடும் அன்போடும் வளர்த்து வந்தது. குழந்தைகள் இரண்டு பேரும் ஆடி… பாடி… மெதுவாக வளர்ந்து நன்கு பெரியவர்களாயினர்.‎

‎அந்தக் காட்டிற்கு அருகிலேயே ஒரு இராஜ்யம் இருந்தது. அதனை ஆட்சி செய்கிற ராஜா ஒருமுறை மந்திரியோடு சேர்ந்து வேட்டைக்கு வந்தார். அவர்கள் காட்டில் இந்தப் பெண்கள் இருவரையும் பார்த்து ஆச்சரியமடைந்தனர். இருவரும் மிகவும் அழகாக… பார்க்கப் பொலிவாக… அப்படியே அச்சு அசலாகத் தங்கப் பொம்மை மாதிரியே இருந்தனர் இல்லையா… அதோடு ராஜா சின்னப் பிள்ளையை “என்னோடு வர்றியா…. உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்று வேண்டிக்கொண்டான். அதற்கு சின்னப் பொண்ணு சம்மதித்து ராஜாவோடு மகிழ்ச்சியாகச் சென்றாள்.‎

‎மந்திரி பெரிய பொண்ணைத் தன்னோடு வரச் சொன்னான். பெரிய பொண்ணு மிகவும் நல்லவள். அதனால் அவள் “எங்க அம்மாவிடம் சொல்லாமல் நான் எங்கயும் வரமாட்டேன். அம்மா காட்டுக்குள்ள போயிருக்காங்க. வந்ததும் சொல்லிட்டு கிளம்பலாம்” என்றாள். ஆனால் மந்திரி “இல்லை… இப்பவே எப்படி இருக்கயோ அப்படியே வரணும்” என்று அவள் அழுதாலும் கேட்காமல் பலவந்தமாகத் தூக்கிக்கொண்டு போனான். இந்த விஷயத்தை அம்மாவுக்கு எப்படி தெரியப்படுத்துவது? என்று யோசித்துக்கொண்டிருந்த பெரிய பொண்ணுக்குச் சட்டென்று தன் கழுத்தில் இருந்த மணிமாலை நினைவுக்கு வந்தது. உடனே அந்த மாலையை அறுத்து வழியில் ஒவ்வொரு மணியாகப் போட்டுக்கொண்டு சென்றாள்.‎

‎கொஞ்சநேரத்தில் நாய் வீட்டிற்கு வந்தது. வந்து பார்த்தால் வேற என்ன.. பிள்ளைகள் இரண்டு பேரும் இல்லை. எங்கயாவது விளையாடிக் கொண்டிருக்கிறார்களோ என்னமோ! என்று கத்திக் கத்தி அழைத்தும் பார்த்தது. சுற்றிமுற்றி எல்லா இடங்களிலும் தேடியது. அங்கு இருந்தாதானே வருவதற்கு. பாவம்.. அது அழுது அழுது காடு முழுவதும் கவலையாகச் சுற்றியது. அப்படித் தேடிக்கொண்டிருந்தபோது அதற்கு ஓரிடத்தில் மணிகள் தென்பட்டன. அந்த மணிகளைப் பார்த்ததும் அவை தன் பெரிய பொண்ணுடையது என்று அடையாளம் கண்டுகொண்டது. ஒவ்வொரு மணியாகப் பொறுக்கிக்கொண்டு… பொறுக்கிக்கொண்டு சென்று கடைசியில் பெரிய பொண்ணு வீட்டைச் சென்றடைந்தது.‎

‎தாயைப் பார்த்ததும் பெரிய பொண்ணு “அம்மா” என்று ஓடோடி சென்று மகிழ்ச்சியாக கட்டிப்பிடித்துக்கொண்டாள். வீட்டிற்குள் அழைத்துச் சென்று வகைவகையான பண்டம், பலகாரங்கள் எல்லாம் செய்து கொடுத்தாள். மெத்தென்ற படுக்கை போட்டுப் படுக்கவைத்து, காலுக்கு ஒத்தடம் கொடுத்தாள். விசிறியால் ஆசையாகக் காற்று விசிறினாள். அந்த நாய், பெரிய பொண்ணு வீட்டில் ஒரு நான்கு நாள்கள் இருந்துவிட்டு, ‘சின்னப் பொண்ணு எப்படி இருக்கிறாள்? எனப் பார்த்து வருகிறேன்’ என்று அவர்கள் வீட்டிற்குச் சென்றது.‎

‎சின்னப் பொண்ணுக்கு ஆணவம் அதிகம். பெற்ற தாய் வீட்டிற்கு வந்தால் சந்தோஷப்படாமல்… ‘நாய், எங்க அம்மானு தெரிந்தால் வேற என்ன இருக்கு… என் மரியாதையே போய்விடும்’ என்று நினைத்து, “சீ… சீ… போ.. இங்க இருந்து. இன்னொரு தடவை என் வீட்டு வாசலை மிதிச்சேன்னு பார்த்தேன்..” என்று உலக்கையால் அதன் முதுகில் ஒன்று போட்டு, சுடச்சுடக் கஞ்சியை மேலே ஊற்றினாள். உலக்கையால் அடித்ததில், பாவம் அதோட முதுகு உடைந்துபோனது. சுடச்சுடக் கஞ்சியை எடுத்து மேலே ஊற்றினாள் இல்லையா… அதனால் அதன் உடல் முழுவதும் கொப்பளங்களாகப் பொத்துப்போனது. பாவம்… அது வலியில் அழுதுகொண்டே நொண்டி… நொண்டி.. பெரிய பொண்ணு வீட்டைச் சென்றடைந்தது.

‎‎தாயை அப்படிப் பார்த்துப் பெரிய பாப்பாவுக்குக் கண்ணீர் கண்ணீராக வந்தது. கொப்பளங்களில் எண்ணெய் தடவினாள். விசிறியால் நன்கு காற்று வீசினாள். தாய் பெரிய பாப்பாவை அருகில் அழைத்து “இனி நான் பிழைக்க மாட்டேன். நான் இறந்ததும் என்னை வீட்டிலேயே ஒரு மூலையில புதைச்சி… சரியா ஒரு மாசம் கழிச்சுத் தோண்டிப் பாரு” என்று சொல்லிவிட்டு இறந்துபோனது. பெரிய பாப்பா தாய் சொன்னது போலவே வீட்டில் ஒரு மூலையில் புதைத்துவிட்டு ஒரு மாதம் கழித்து அங்கே தோண்டிப் பார்த்தாள். பார்த்தால் வேற என்ன? கண்கள் ஜொலித்தன. மணிகள், மாணிக்கங்கள், இரத்தினங்கள், வைரம் வைடூரியங்கள், நகைகள், ஆபரணங்கள் தகதகனு மின்னிக்கொண்டிருந்தன. பெரிய பாப்பா அவை எல்லாவற்றையும் போட்டுக்கொண்டு ஊர் முழுவதும் மகிழ்ச்சியாகச் சுற்றிவந்தாள். ‎

‎சின்ன பாப்பா “அக்காக்கு இந்த நகைங்க எல்லாம் எப்படிக் கிடைச்சுது!” என்று ஆச்சரியப்பட்டு ஒருநாள் வீட்டிற்கு வந்து கேட்டாள். அக்கா அப்பாவியாக நடந்தது அனைத்தையும் கூறினாள். சின்னவள் சாதாரணமானவள் கிடையாது இல்லையா… சரியான சண்டைக்காரி. அதோடு “அம்மா அஸ்தியில எனக்கும் சரிபாதி பங்கு உண்டு. மரியாதையா கொடுக்றியா… இல்லையா?” என்று சண்டைக்கட்டிப் பாதி நகைகளைத் தூக்கிக்கொண்டு போனாள். கண்ணாடி முன்னால் அமர்ந்து சந்தோஷமாக அந்த நகைகள், ஆபரணங்கள் எல்லாவற்றையும் கழுத்தில் போட்டுக்கொண்டாள்.

‎அவ்வளவுதான்‎…

‎‎உடனே அவள் உடல் முழுக்கக் கொப்பளம் கொப்பளமாக வரத் தொடங்கியது மட்டுமில்லாமல் நெருப்பாய்க் கொதித்தது. எங்கு எங்கிருந்தோ வைத்தியர்கள் எல்லாம் வந்தனர். விதவிதமாக மருந்து எல்லாம் கொடுத்தனர். அப்போதும் கொஞ்சம் கூடக் குறையாமல் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போனது.

‎‎அதோடு சின்னப் பொண்ணுக்கு செய்த தப்பு எல்லாம் புரிந்துபோய், ஓடோடி அக்காவிடம் சென்று அவள் நகைகள் எல்லாவற்றையும் திரும்பக் கொடுத்தாள். அப்போதும் கொப்பளங்கள் கொஞ்சம் கூடக் குறையவில்லை. அப்போது அம்மா சமாதிக்கு அருகில் உட்கார்ந்து “அம்மா.. அம்மா.. தப்பு பண்ணிட்டேன். இந்த ஒரு தடவை என்னை மன்னிச்சிரு” என்று கண்ணீர் வடித்தாள். என்னதான் இருந்தாலும் அம்மா அம்மாதான் இல்லையா.. பிள்ளைகள் தப்பு பண்ணும்போது கோபப்பட்டாலும் திரும்பவும் சேர்த்துக்கொள்வாள் இல்லையா.. அதோடு அவள் உடலில் இருந்த கொப்பளங்கள் எல்லாம் கணத்தில் மறைந்துபோயின. அவள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பினாள்.

Series Navigation<< தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 3 – மொழியாக்கம்தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 5 – மொழியாக்கம் >>

Author

  • மு.இராமர் மாசானம் என்ற இயற்பெயருடைய இவரது சொந்த ஊர் திருநெல்வேலி. தற்போது ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருக்கிற 'திராவிடன் பல்கலைக் கழகம்' இல் முனைவர்பட்ட ஆய்வாளராக உள்ளார். 'ஒப்பாய்வு நோக்கில் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் கீர்த்தனைகளும் பக்த இராமதாசு கீர்த்தனைகளும்' எனும் தலைப்பில் ஒப்பிலக்கிய ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மைசூரில் இருக்கிற இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தில் (CIIL) தெலு(ங்)கு மொழியில் பத்து மாதகால பட்டய வகுப்பு முடித்திருக்கிறார். அதன் வெளிப்பாடாக தெலுங்கில் டாக்டர். எம். ஹரிகிஷன் அவர்கள் எழுதிய தெலு(ங்)கு நாட்டுப்புறக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்.

Related posts

நீலத்தின் ஐம்பது சாயல்கள் – 3

வரலாற்றில் பொருளாதாரம் – 18

நல்லாச்சி – 22