தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 10 – மொழியாக்கம்

‎‎மூன்று கத்திரிக்காய்கள்

தெலுங்கு மூலக்கதை: டாக்டர். எம். ஹரிகிஷன் 

ஒரு ஊரி்ல் எல்லண்ணா என்று ஒருவன் இருந்தான். அவனுக்குச் சின்ன வயதில் இருந்தே கத்திரிக்காய்க் கறி என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் அந்த ஊரில் அந்த வருடம் யாரும் கத்திரிக்காய்த் தோட்டம் போடவில்லை. அதோடு கத்திரிக்காய் சாப்பிட எவ்வளவு ஆசை இருந்தாலும் கிடைக்காமல் வருத்தத்தில் இருந்தான்

‎ஒருநாள் வேலை விஷயமாக அவன் பக்கத்து ஊருக்குச் சென்று கொண்டிருந்தபோது பாதி வழியில் ஒரு செடியில் மூன்று கத்திரிக்காய்களைக் கண்டான். அவற்றைப் பார்த்ததும் அவன் வாயில் சர்ரென எச்சில் ஊறியது. “எத்தனை நாள் கழிச்சி” என்று நாக்கைச் சப்பைக் கொட்டிக்கொண்டு பரபரவெனச் சென்று அந்த மூன்று காய்களையும் பறித்துக்கொண்டு, ஒரே ஓட்டமாய் வீட்டிற்குத் திரும்பி வந்தான்.

‎அப்படி வீட்டிற்கு வந்ததும் வராததும் மனைவியை அழைத்து “ஏம்மா!… எனக்குப் பக்கத்து ஊர்ல கொஞ்சம் வேலை இருக்கு . சர்ருன்னு போய்ட்டு சர்ருனு வந்துடுறேன். அதுக்குள்ள நல்லா மசாலா தடவி இந்த மூனு காயுவளையும் போட்டு கமகமனு கத்திரிக்காய்க் கறி சமைச்சு வையி. ருசியா மட்டும் இல்லனு வையி அவ்ளோதான் பாத்துக்கோ” என்று கூறிவிட்டுச் சென்றான்.

‎அவள் மிகவும் அப்பாவி. புருஷன் என்ன சொன்னாரோ அப்படியே செய்வதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அதோடு புருஷன் சொன்னது போலவே அந்த மூன்று கத்திரிக்காய்களையும் எடுத்து, நன்கு மசாலா அரைத்து, கத்திரிக்காயின் நான்கு பக்கங்களிலும் கீறி, உள்ளே நன்கு மசாலா தடவி அடுப்பில் ஏற்றினாள்.

‎சிறிது நேரத்திற்கு எல்லாம் அவளுக்குக் கத்திரிக்காய்கள் நன்கு வெந்தனவா இல்லையா? என்று சந்தேகம் வந்தது. கறி நன்றாக இல்லை என்றால் புருஷன் உதைத்தாலும் உதைப்பான் என்று பயந்துபோய் “பார்ப்போமே” என்று ஒன்றை எடுத்து வாயில் போட்டு வெந்துவிட்டதா? இல்லையா? என்று பார்த்தாள்.

‎சிறிது நேரம் ஆனதும் அவளுக்கு மீண்டும் கத்திரிக்காயில் உப்பும் காரமும் ஏறியதா இல்லையா? என்று சந்தேகம் வந்தது. கறி நல்லா இல்லை என்றால் புருஷன் உதைத்தாலும் உதைப்பான் என்று பயந்துபோய் “பார்ப்போமே” என்று இன்னொன்றையும் எடுத்து வாயில் போட்டு உப்பு, காரம் ஏறியதா? இல்லையா? என்று பார்த்தாள்.

‎அதற்குள் அவள் கணவன் வேலை எல்லாவற்றையும் முடித்துவிட்டு கத்திரிக்காய்க் கறி சாப்பிடலாம் என்று வேக வேகமாய் வீட்டிற்கு வந்தான். வீட்டிற்குள் வந்ததும் வராததும் அவனுக்கு மசாலா வாசனை கும்மென்று வீசியது. வாயில் எச்சில் சர்ரென ஊறிக்கொண்டிருக்க தட்டை எடுத்துவந்து முன்னால் வைத்து “என்ன! வாசனை பயங்கரமா இருக்கு! வாவா… எடுத்து வந்து வையி வா” என்றான்.

‎வெந்துவிட்டதா இல்லையா என்று ஒன்று, உப்பு, காரம் ஏறியதா இல்லையா என்று இன்னொன்று என சமைக்கும்போதே தின்றுவிட்டாள் இல்லையா! இன்னும் அங்கே மீதம் இருப்பது ஒன்றே ஒன்று. அவள் அவனுடைய தட்டில் அந்த ஒரு கத்திரிக்காயை வைத்தாள். அதைப் பார்த்து அவன் அதிர்ந்து போனான். “அதென்ன! நான் மூனு கொண்டு வந்து கொடுத்தா நீ ஒன்னதான் போடுற. மிச்ச ரெண்டையும் எங்க?” என்றான் கோபமாக.

‎அதற்கு அவள் “நீங்கதானே ருசியா இல்லனு வையி அவ்ளோதான்னிங்க. அதனால சமைக்கிறப்ப வெந்துடுச்சா இல்லையானு பாக்க ஒன்னு, உப்பு காரம் ஏறியிருக்கா இல்லையானு பாக்க இன்னொன்னுனு தின்னுட்டேன்” என்றாள். அதற்கு அவன் “என்னது! உனக்கு தெரியாதா கத்திரிக்காய் கறினா எனக்கு எவ்ளோ பிடிக்கும்னு ? அப்டி தெரிஞ்சிருந்தும் கூட எப்டி தின்ன அந்த ரெண்டையும்?” என்றான் கோபமாக.

‎அவள் அப்பாவி இல்லையா.. அதனால் “எப்டி தின்ன?” என்று கணவன் கேட்டுக்கொண்டிருக்க, காட்டவில்லை என்றால் ஏதும் சொல்வாரோ என்னமோ?! என்று பயந்துபோய் அவன் தட்டில் இருந்த அந்த ஒரு கத்திரிக்காயையும் டபக்குனு வாயில் போட்டு மென்றுகொண்டே “இதோ இப்படிதான் தின்னேன்” என்று காண்பித்தாள்.

Series Navigation<< தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 9 – மொழியாக்கம்

Author

  • மு.இராமர் மாசானம் என்ற இயற்பெயருடைய இவரது சொந்த ஊர் திருநெல்வேலி. தற்போது ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருக்கிற 'திராவிடன் பல்கலைக் கழகம்' இல் முனைவர்பட்ட ஆய்வாளராக உள்ளார். 'ஒப்பாய்வு நோக்கில் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் கீர்த்தனைகளும் பக்த இராமதாசு கீர்த்தனைகளும்' எனும் தலைப்பில் ஒப்பிலக்கிய ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மைசூரில் இருக்கிற இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தில் (CIIL) தெலு(ங்)கு மொழியில் பத்து மாதகால பட்டய வகுப்பு முடித்திருக்கிறார். அதன் வெளிப்பாடாக தெலுங்கில் டாக்டர். எம். ஹரிகிஷன் அவர்கள் எழுதிய தெலு(ங்)கு நாட்டுப்புறக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்.

Related posts

தொழில் போட்டி

புத்தக மதிப்புரை – கல்பனா ரத்தன்

அவள் நடக்கிறாள்