பஃப்ஃபெனப் புதர் போலத் தலைகள், கன்னத்தோரம் புசுபுசுவென தாடி: சில ட்ரிம் செய்யப் பட்டவை, சில அங்கங்கே பரந்த கொடி போல கன்னத்தில் நீட்டிக் கொண்டிருந்தன. குறு குறு கண்கள், என ஒன்று இரண்டு இல்லை.. எட்டுப் பேர் என் வீட்டில் இரண்டு த்ரீ ஸீட்டர் சோஃபாவில் அமர்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர். சிலர் ஜீன்ஸ் டீ ஷர்ட்,சிலர் முக்கால் பேண்ட் டீ ஷர்ட், காதுகளில் சிலருக்குக் கடுக்கன்: சிலருக்குக் கைகளில் வளையம்.
கொஞ்சம் அழுக்காகத்தான் இருந்தார்கள். எல்லாரும் மூன்றாமாண்டு மருத்துவ மாணவர்கள். (பார்ப்பவர்களிடம் கற்பூரம் அடித்து சத்தியம் பண்ணினாலும் நம்ப மாட்டார்கள்!). என் மகன் ராகவ்ராம் (சுருக்கி ராக் – என்ன பாஷையோ) உடன் படிப்பவர்கள். எட்டுப் பேரில் ஒருவன் டாம் (தாமோதரனின் சுருக்கம்) என்னையே கலங்கிய கண்களுடன் பார்த்தவாறு இருந்தபடி கேட்கவும் செய்தான்.
“நித்யா ஆன்ட்டி (நான்தான்), அம்மாவிற்கு மிக மோசமாக இருக்கிறதாம். நாங்கள் திருநெல்வேலி போக வேண்டும். ராக்கும் வந்தால் நன்றாக இருக்கும். நாளைக்கு நீங்கள் நாகர்கோவில் போகிறீர்களாமே. அவன் திருநெல்வேலி வந்து விட்டு உங்களிடம் வந்து விடுவான்” பேசுவதே கொஞ்சம் துக்கத்தின் வெளிப்பாட்டால் குழறலாக வந்தது.
ஏதோ ஒரு திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். ‘வந்ததும் சரியில்லை.. வாய்த்ததும் சரியில்லை’ என. என் விஷயத்தில் அது பொருந்தும்.
பாருங்கள். என் எதிரில் கல்லுப் பிள்ளையார் போல நிற்கும் ராகவ் ஒரு வார்த்தை பேசவில்லை. புதுமுக நடிகை போல உணர்ச்சியற்று நிற்கிறான். இவனை நம்பித்தானே நான் நாகர்கோவிலுக்கு எனது சினேகிதியான அவனது பத்தாம் க்ளாஸ் டீச்சர் தேவி, உடன் அவர் ஹஸ்பெண்ட் மகாதேவன் ப்ளஸ் இவன் என காரில் போகலாம் என திட்டம் போட்டிருந்தேன். அதுவும் ராகவ்விற்கு மூன்றாவது வருடம் முடிவதற்கு முன் பத்து நாட்கள் விடுமுறை என்பதால். அவனும் கூட அதிசயமாக ஒத்துக் கொண்டுவிட்டான் ஆன் ஒன் கண்டிஷன். “அம்மை. நீ தேவ் அங்க்கிள் அண்ட் தேவி டீச்சருடன் கோவில்கள் சுற்று. நான் என் ப்ளஸ்டூ க்ளாஸ் மேட்ஸுடன் சுற்றிக் கொள்கிறேன்”. என்றவன் இப்போது டாமின் தாய்க்கு உடல் நிலை சரியில்லை இன்றே போகவேண்டும் என்று வந்திருக்கிறான்.
ம்.. எனக்குப் புள்ளையாக வந்தது இவன் என்றால், எனக்கு கணவராக வாய்த்தது நடேசன். ம்.. என்னைப் பற்றிச் சொல்கிறேன். நான் நித்யா. பிறந்தது வளர்ந்தது திருவனந்தபுரம். கிட்டத்தட்ட ஐஸ்வர்யா ராய் போல சுமாரான அழகாக இருப்பேன்!. என் அப்பாவுக்கு நகை பிஸினஸ். என்னை 20 வயதிலேயே 12 வயது மூத்த நடேசனிடம் (எம்.டெக் அண்ட் டீ ட்டோட்டலர் அண்ட் அப்போது சென்னையில் வேலை) மாட்டி விட்டார்கள். அவர் சிலசமயம் ரொம்ப்ப நல்லவர், பல சமயம்.. ம்.. போங்க நிறையச் சொல்லலாம். இப்போது இருப்பது அபுதாபியில் ஆஃப்ஷோர் உத்யோகம். பெட்ரோல் கம்பெனி.
நான் அபுதாபியில் ராகவ்வின் 6ம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை இருந்தேன். பின் ப்ளஸ்டூவிற்கு நாகர்கோவில் ஈத்தாமொழி என்னும் ஊரில் இருக்கும் எங்கள் வீட்டிற்கு வந்து, ராகவ்வை இரண்டு வருடங்கள் ப்ளஸ் ஒன் ப்ளஸ் டூ, – ஆகாஷ் க்ளாஸஸ் திருவனந்தபுரத்தில் நீட்டிற்காகச் சேர்த்து – இந்தப் பக்கம் நாகர்கோவில், வீக் எண்ட் ஆகாஷ் க்ளாஸஸிற்காக திருவனந்தபுரம் போய்க் கொண்டு விட்டுக் கொண்டு இருந்தேன். அதுவும் கொரோனா முடிந்த காலத்தில்.
பகவதி அம்மன் அருளில் (குலதெய்வம்) நீட்டில் நம்பத் தகுந்த 535 மார்க் வாங்கினாலும் மெடிக்கல் காலேஜ் வேளச்சேரியில் கிடைக்க, அங்கேயே ஒரு ஃப்ளாட் எடுத்து இவனை காலேஜிற்கு அனுப்பி கண்ணும் கருத்துமாய்ப் பார்த்துக் கொண்டு (டேய், கெட்ட பழக்கங்கள்லாம் வெச்சுக்கிடாத. – அம்ம்மா சரி – ஏதாவது பெஸ்டிங்கறாங்களே அதே மாதிரி கேர்ள்ஃப்ரண்ட்ஸ்லாம் கூடாதுடா. – அம்மா, கேர்ள்ஃப்ரண்ட்ஸ்கெல்லாம் முத தபா கோஸ்டா காஃபில கடலை போடவே 500க்கு மேல ஆகிடும். ரெஸ்டாரெண்ட்லாம் போறதுன்னா இன்னும் ஜாஸ்தி. நீ கொடுக்கற தம்மாத்தூண்டு பாக்கெட் மணி 2000த்துல அதெல்லாம் முடியாதும்மா(எங்கள் இருவருக்கும் அடிக்கடி நடக்கும் உரையாடல்!).) இருந்தேன்.
ப்ளஸ் அவ்வப்போது நடேசனிடம் ஃபோனில் திட்டு வாங்கிக் கொண்டு இருப்பவள்.
என் கணவர் (ம்க்கும்) நடேசன். அவருக்கு எப்போது மூடு இருக்கும் எனச் சொல்ல இயலாது. தவிர, வருடா வருடம் ராகவ்வின் மெடிக்கலுக்கு ஃபீஸ் பல லட்சங்களில் (சொன்னால் மயங்குவீர்கள்), அக்டோபர் தோறும் அனுப்புவார். மூன்று மாதத்திற்கு ஒருமுறை இப்போதெல்லாம் வந்து திட்டி விட்டுப் போவார் (வேற படிப்பிற்கு ஆசைப் பட்டிருக்கக் கூடாதா?). அன்பாக ஒரு வார்த்தை கல்யாணம் ஆன நாள் முதலே கிடையாது. இப்போது என் நாற்பத்திரண்டாவது வயதில் அழகாய் ஸ்லிம் அண்ட் ட்ரிம்மாக ஸந்தூர் சோப் அம்மாவாட்டம் இருப்பதற்கும் ஒரு பாராட்டு கிடையாது.
ராகவ் ப்ளஸ்டூ படிக்கும் போதெல்லாம் ஓரளவுக்கு என்னிடம் பேசிக் கொண்டுதானிருந்தான். எப்போது மருத்துவத்தில் சேர்த்தேனோ அவ்வளவு தான். காலேஜில் கொண்டுவிட்டால் இறங்குவான். பேசமாட்டான். திரும்பும்போதும் வந்து அவனறையில் புகுந்து கொள்வான்.
என் படிப்பு எம். பி. ஏ ஹெச் ஆர் – கல்யாணம் ஆகி முடித்தேன் என்றாலும் ராகவ் பிறந்த சிலவருடங்களில் பார்த்துக் கொண்டிருந்த நல்ல வேலையையும் விட்டு விட்டேன். கொஞ்சம் யோகா ஜூம்பா பரீட்சை எழுதிக் கற்றுக் கொண்டு, அபுதாபியிலும் இப்போது வேளச்சேரியிலும் சிறிய அளவில் க்ளாஸ் எடுத்துக் கொண்டிருக்கிறேனா.. ஏதோ பொழுது போகிறது.
என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்?.
யெஸ். டாம்மின் அம்மாவிற்கு பார்க்கின்ஸன் வியாதி என மூன்று மாதங்கள் முன் தெரியவந்தது. அதற்கே ஹாஸ்பிடல் சேர்த்து தெரிய இரண்டு மாதங்கள் ஆனது. பின் கொஞ்சம் கொஞ்சமாய் உடல் நலம் குறைய ஆரம்பித்து இதோ இப்போது சீரியஸ்.
அவ்வப்போது என் சீரியஸ் போரான வாழ்க்கையில் மகாதேவ், தேவி டீச்சர்- பெரிய ரிலீஃப். நாங்கள் அபுதாபியில் ஒரே காம்பெளண்ட் குடியிருப்புகளில் வேறு வேறு ப்ளாட்களில் குடியிருந்தோம். அப்போது பழக்கம்.
மகாதேவன் அபுதாபியில் பல வருடங்கள் வேலை பார்த்து நான்கு வருடங்கள் முன்னால்தான் சென்னை திரும்பினார். அடையாறில் த்ரீ பெட்ரூம் ப்ளாட் ஏற்கெனவே வாங்கியது. அங்கு வந்துவிட்டார். அவ்வப்போது வந்து நகைச்சுவையாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். ஃபோனிலும் பேசிக் கொண்டிருப்பார்கள்.
முன்பெல்லாம் லீவில் நாங்கள் சென்னை வரும் போது அவர்களும் வந்து ஈத்தாமொழி வீட்டில் தங்கி திருவனந்தபுரம், திருவட்டாறு என கோவில்கள் போய் வருவது வழக்கம். ராகவ்வின் ஸ்கூலினால், இப்போது காலேஜினால் நான்கைந்து வருடங்கள் செல்ல முடியவில்லை. எனில் இப்போது சேர்ந்து இருக்கலாம் என நான் – ஃபோனில் நடேசனைத் தடவி -‘எப்பப் பார்த்தாலும் செலவு சொல்லிக்கிட்டே இரு’ – கிளம்பி கொஞ்சம் வெகேஷன் போல இருக்கலாம் என நினைக்கையில் ராகவ் முன்னால் செல்கிறேன் என்கிறான். இல்லை நண்பர்கள் மூலமாகக் கேட்கிறான்.
டாமின் அருகில் சென்றேன். மெல்ல அவன் தலையை ஆதுரமாகத்தடவினேன். “டாம் ஒன்றும் ஆகாது. ராக்கை நீங்கள் கூட்டிச் செல்லுங்கள்” என்றேன். ராகவ்வைப் பார்த்தால் நேருக்கு நேர் சூர்யா சிம்ரனைப் பார்ப்பது போன்ற எக்ஸ்ப்ரஷன்லெஸ் பார்வை வேறெங்கோ பார்த்தான்.
”போய்விட்டு – நாங்கள் நாளை வெள்ளி ஈவ்னிங் போவோம். சனி, ஞாயிறு வந்து விடு என்ன?”
“ம், எனக்கு ட்ரஸ் எடுத்துவைம்மா.. இப்போதே கிளம்பறேன்”
இதுதான் இவன். நான் உடனே செய்ய வேண்டும். தானாகத் தெரியாது. ம்.. என்ன செய்ய? ஒரே பிள்ளையாய்ப் பெற்றாய் விட்டது.
மறு நாள் காரில் நாகர்கோவில் சென்ற போதும் கூட தேவி டீச்சர் மஹாதேவனிடம் ராகவ்வின் பிஹேவியர், பேசாமல் இருப்பது குறித்துச் சொல்லிக் கொண்டிருந்தேன்
“டீச்சர் (அப்படித்தான் அழைப்பேன்). சில சமயங்களில் வெறுத்து வருகிறது. போன மாசம் கொஞ்சம் உடம்பு முடியவில்லை. பெட்ரூமில் படுத்திருந்தேன். அப்போதும் கூட வந்தான் ராகவ். முகம் சோர்ந்து இருக்கிறதே என்ன ஏது? என்று கேட்கவில்லை. அவன் என் அறைக்கு வருவதற்கு ஒன்றே ஒன்றுதான் காரணம். ஸ்விக்கியில் பிடித்தது ஆர்டர் செய்வான். அதற்கு நான் பணம் அனுப்ப வேண்டும்”.
“இந்த வயசுப் பசங்க இந்தக் காலத்தில் அப்படித்தான். நீங்க கவலைப் படாதீங்க நித்யா. என்ன நல்ல க்ரேட் எடுத்திருக்கிறான்தானே?” என்றார் வண்டி ஓட்டிக் கொண்டிருந்த மகாதேவன்.
“ச் . நித்தி. நாங்கதான் பல வருஷமா பார்க்கறோமே. நல்ல பையன். ஏதோ காலேஜ் சேர்ந்து கொஞ்சம் மாறி இருக்கான். இதுவே நிரந்தரம்னு எல்லாம் நினச்சுக்காதே. எல்லாமே மாறும்” இது தேவி டீச்சர்.
மாறி மாறி கார் ஓட்டி நாகர்கோவில் சேர மாலை ஆறு மணி. ஈத்தாமொழி கிராமத்து வீட்டை அடைந்தவுடன் ஃபோன். டாம். ராகவ்வின் சினேகிதன். குரலில் அழுகை.
“அம்மா போய்ட்டாங்க ஆன்ட்டி” எப்படி ஆறுதல் சொல முடியும்?. திடீர் என லட்சத்தில் ஒருவருக்கு வரும் வியாதி வந்து டாமின் அம்மாவைக் கொண்டு போய்விடும் என. பையன் டாக்டர் ஆவதையாவது பார்த்திருக்கலாம். ஏதோ தெரிந்த ஆறுதல் சொல்லி விட்டு – தைர்யமா இருப்பா – சொல்லி ராகவ்விடம் பேசினேன். அவன் டாமிடமிருந்து தள்ளி நின்று சொன்னான். ”அனேகமாக மறுநாள் ஆகிவிடும்மா. நான் நாளை ஈவ்னிங் வர்றேன்”
மறு நாள் நாங்கள் பக்கத்திலிருந்த திருப்பதிசாரம்,இந்தப் பக்கம் உள்ள குழந்தை பகவதி அம்மன் கோவில் போய் விட்டு வர மாலை ஆகிவிட்டது. நல்ல மழை வேறு. மறுபடி சென்னை போவதை நினைக்க பயம்மாக வேறு இருந்தது. காட்டு வெய்யில்!
கொஞ்சம் காஃபி குடித்து விட்டுப் பேசிக் கொண்டிருக்கையில் ராகவ்வே வந்தான் – பைக்கில். நாகர்கோவிலில் என் சித்தப்பா வீடு இருக்கிறது. வழக்கமாக அவன் அங்கு செல்வான். இப்போதும் போய் குளித்து உடை மாற்றி வந்து விட்டான்.
நண்பனின் அம்மாவின் மரணத்தால் கண்கள் கலங்கி தலை கலைந்து இருந்ததா என்ன?. ம்ஹும் ஒன்றும் இல்லை.
வீட்டிற்குள் வந்து அவனுடைய அறைக்குச் சென்று உடை மாற்றி வந்தான். நான் தேவி டீச்சர், மகாதேவன் ஏதோ பேசிக் கொண்டிருக்க, அவனும் வந்து ஒரு சோஃபாவில் அமர்ந்தான்.
ஏதோ யோசிப்பது போல் இருந்தது. பின் எழுந்து என் அருகில் அமர்ந்தான். தேவியும் மகாதேவனும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
என் கைகள் பற்றி, “அம்மா… டாம் ரொம்ப அழுதாம்மா. எங்க எல்லாருக்கும் எப்படி ஆறுதல் சொல்றதுன்னு தெரியல. இனிமே நான் யாருகிட்ட பேசுவேன்? என்னை யாரு பார்த்துப்பா?ன்னு ஒரு கத்து கத்தினாம் பாரு.. எங்களுக்கெல்லாம் ஆடிப் போச்சு. அப்புறம் சமாதானப்படுத்தினோம்.”
என்ன சொல்ல வருகிறான்! எனக் கேள்விக்குறியாய் அவனைப் பார்த்தேன்.
“இல்லம்மா. நீயும் அடிக்கடி புலம்புவ ஃபோன்ல. என்கூட ராகவ் பேச மாட்டேங்கறான்னு மத்தவங்க கிட்ட சொல்லிக்கிட்டு இருப்பே. ஒனக்கு ஒண்ணும் ஆகாதுன்னு எனக்குத் தெரியும். அவன் சொன்னப்பதான் எனக்குக் கொஞ்சம் உறச்ச மாதிரி இருந்தது. இனி உங்கூட பேசுவேன். ஓகேயா? என்ன, கொஞ்சம் படிப்புல்லாம் இருக்கு. அதான் பேச டைம் கிடைக்கவில்லை. திடீர்னு உனக்கு ஒண்ணும் ஆகிடாதுல்ல” என்று சொல்லித் தழுதழுத்து(அப்படித் தான் எனக்குத் தோன்றியது) அணைத்துக் கொள்ள எனக்கு உள்ளூறப் பூரித்து கண்கள் குளமாகப் பார்க்கையில்…
தேவி டீச்சர், ”எலேய். போய் முகம் கழுவி, வாய் கொப்பளிச்சு உன் ரூம்ல உன் வேலையைப் பாரு. சும்மா ஏதாவது சொல்லிக்கிட்டிருக்காதே” என்றார். அவன் அறைக்குச் சென்றதும் மகாதேவன் தேவியைப் பொருள்பொதிந்த பார்வை பார்த்துச் சிரித்தார்.
”எதுக்கு சிரிக்கறீங்க?” எனச் சொல்லுகையிலேயே ராகவ் மறுபடி வந்தான். உடை மாற்றி இருந்தான்.
“அம்மா நாகர்கோவில் போறேன் ஃப்ரெண்ட்ஸப் பார்க்க. அங்க ஒரு கடைல ஒரு ஷர்ட் பார்த்தேன். வாங்கிக்கட்டா?. ஒரு ஆயிரம் ரூபாய் ஜிபே அனுப்பேன்!” என்றான்.
அவர்களது சிரிப்பிற்கான காரணம் எனக்குப் புரிந்தது.
(முற்றும்)