அம்மா மாறி விட்டாள்

“அம்மா!” பார்கவியின் உள்ளாழம் வரை சென்ற அந்த அழைப்பு அவள் உயிர்வரைத் தொட்டு உலுக்கியது. தன்னைச் சில நொடிகளில் சமன் செய்து கொண்டாள். “சொல்லுப்பா.”

“ம்மா!” மஞ்சளில் சிவப்புப் புள்ளிகளிட்ட சுங்குடிப் புடைவை. கோடாலி முடிச்சு. விபூதிக் கீற்று. அதற்கு மேலே நீளமாய் ஸ்ரீசூர்ணம். அம்மா தெளிவாகத் திருத்தமாக இருந்தாள்.

“உங்க மருமக உண்டாயிருக்கா.”

“ஓ!”

“நீங்க வீட்டுக்கு வந்திடுங்கம்மா. மசக்கை படுத்துது. பெரியவங்களுமில்லாம கஷ்டமாயிருக்கு.”

பார்கவியின் முகம் அமைதியைத் தத்தெடுத்தது. இருக்கையில் சாய்ந்து நேருக்கு நேராய்ப் பார்த்தாள். ஒரே மகன் என்று அவனைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்ததும், சிக்கனம் பிடித்துச் சீட்டுப் பிடித்து வீட்டைக் கட்டியதும், அவன் ஆசைப்பட்டவளையே மேற்கொண்டு எதுவும் பேசாமல் திருமணம் செய்து வைத்துச் சந்தோஷப்பட்டதும் ஏதோ போனஜென்ம நினைவாய் நின்று கலங்கலாய்த் தெரிந்தது.

திருமணமான பத்தே நாளில் மஞ்சுவின் நாக்கு சாட்டை என்று தெரிந்தது. பார்கவிக்கும் வீட்டுவேலையே இடுப்பை ஒடித்தது. மஞ்சுளா துரும்பை நகர்த்த மாட்டாள். லீவு நாளிலும் உதவ மாட்டாள். வேலைக்காரியையும் நிறுத்திவிட்டாள். காலை காபி முதல் இரவு அடுப்புமேடை துடைப்பது வரை இடுப்பொடிந்தது. வயதானதும் தள்ளாமையும் படுத்தின.

எல்லாவற்றுக்கும் சிகரமாய்… அன்றைக்கு முடியவில்லையென்று இருவருக்கும் தயிர்சாதத்தைக் கட்டிக் கொடுத்துவிட்டுச் சுருண்டு படுத்துவிட்டார்.

மாலை… அலுவலகம் விட்டு வந்தவள் கிச்சனில் சுடுசோறும் மட்டன் குழம்பும் வறுவலும் இருப்பதைக் கண்டதுமே கணவனிடம் ஆடித் தீர்த்துவிட்டாள்.

“ஒரு பெரிய மனுசி செய்ற வேலையாங்க இது? சம்பாதிக்கிறோம், வேலைக்குப் போறோம். நமக்குத் தயிர் சோறாம். நாம போனதுமே இவங்க கறியாக்கிச் சாப்பிடுவாங்களாம். என்ன ஒரு திருட்டுத்தனம்! தெனம் இதான் நடக்குதா? எங்கே நடக்கும் இந்த அநியாயம்? அய்யோ! அய்யோ! இந்த வயசுலே நாக்கு ருசியை அடக்க முடியலைன்னா… அப்புறம் எந்த ஆசையைத்தான் அடக்குவாங்க? நாளைக்குச் சந்தி சிரிக்கப் போறோம் உங்கம்மாவாலே.”

மகனோ ஒரு வார்த்தை அவளை அடக்கவில்லை. இவளையும் ஒரு வார்த்தை கேட்கவில்லை. பார்கவி உள்ளுக்குள்ளேயே சுக்கல் சுக்கலாய் உடைந்தாள். அவமானமாயிருந்தது. அப்படியா அவள் வீட்டில் அவளே மறைத்துத் தின்பாள்? அசிங்கப்பட்டு நின்றதில் முகம் கன்றியது. அவரால் பேசக்கூட முடியவில்லை. கூனிக்குறுகி நின்றவளை ஜெகனின் “ச்சீ ச்சீ” என்ற சொல்லும் அருவருப்பான பார்வையும் கொன்று தின்றது.

மறுநாள்… பார்கவியைக் காணோம். வீடு பார்கவியில்லாமல் தள்ளாடியது. மஞ்சுளாவுக்குக் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற்போலிருந்தது. தடுமாறினாள். ஜெகனுக்குத் தானாடாவிட்டாலும் சதையாடியது. லீவ் போட்டுவிட்டுத் தேடினான்.

“தெரியாமத் தொலைஞ்சா தேடினா கிடைச்சுடும். இவங்க வேணுமிட்டே காணாமப் போய் ஒளிஞ்சிருக்கிறாங்க. கிடைப்பாங்களா? விடுங்க. தன்னாலே வரட்டும். இப்படி அலைஞ்சு திரிஞ்சாதான் புத்தியிலே உரைக்கும். முன்னாலேயே ப்ளான் பண்ணியிருந்திருக்கணும். அதான் உடனே வெளியேறிட்டாங்க. என்ன கருமமோ? என்னவோ? தினம் நியூஸ்லேதான் என்னென்னமோ வருதே! அவங்களும் பார்க்கச் சிக்குன்னு தானே இருக்கிறாங்க” என்று நொடித்தாள். வேலை பெண்டு நிமிர்த்தியதில் கண்மண் தெரியாத கோபம் வந்தது.

பார்கவி போன மூன்றாம் நாள் அவள் சித்தப்பா போன் செய்தார். “சம்பந்தி நல்லாருக்காங்களா மஞ்சுளா? நானும் அப்பாவும் வந்தோம்டா. இவ்ளோ தூரம் வந்துட்டமேன்னு வீடு வந்தோம். வேண்டாம் வேண்டாம்னு சொல்லியும் உங்க மாமியார் உடனே கடைக்குப் போன் போட்டு மட்டன் கொண்டுவரச் சொல்லிச் சமையல் செஞ்சு போட்டாங்க. எனக்காகவே மிளகு வறுவல் வேற ஸ்பெஷலா செய்தாங்க. தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லுடா. ஆனா அன்னிக்குக் கொஞ்சம் முடியாம இருந்தாங்களோ…”

மேலே பேசியது காதில் ஏறவில்லை. “ஓ, அன்னிக்குச் சமையல் இவங்களுக்காகச் செஞ்சதா?” உதட்டை வளைத்துக்கொண்டு லேசாய் எழுந்த மனசாட்சியைத் தலையில் தட்டிக் கீழே போட்டாள்.

அதன்பிறகு கேட்பவர்களுக்கு எதையோ சொல்லிச் சமாளித்தாள். ஆனாலும் மாமியார் இல்லாத வீடும் ஒருவித மிதப்பைத் தந்தது. “போய்த் தொலையட்டும்“ என்றெண்ணினாள். நாளும் பொழுதும் ஆபிஸ் கேண்டீனும் ஹோட்டலும் ஸ்விக்கி ஆர்டருமாய் நகர்ந்தது. ஆயிற்று… நான்கு வருடம். ஜெகனுக்கு அம்மா நினைவே வராமல் பார்த்துக்கொண்டாள். மஞ்சுதாசனாகிவிட்டான் ஜெகன்.

திருமணமாகி இப்போதுதான் இவள் அம்மாவாகப் போகிறாள். இவளுடைய அம்மா இவள் தங்கையின் இரண்டாம் பேறுகாலத்துக்குச் சிங்கப்பூர் போய்விட்டார். கண்டிப்பாக ஒரு ஆள் வேண்டுமே! நயமாகப் பார்க்கவும் செலவேயில்லாமலும்… ஜெகனிடமும் குழைந்தாள். அழுதாள். மாமியாரிடம் மன்னிப்புக் கேட்க விரும்புவதாய் மாய்மாலம் செய்து ஜெகனை விரட்டினாள். “நான் பாவி! பாவி! “ என்று நெஞ்சிலும் தலையிலும் அடித்துக்கொண்டு அழுதவளைக் காணமாட்டாமல் இதோ… ஜெகன் தாயின் முன்னே நின்று கொண்டிருக்கிறான்.

“என்னம்மா? யோசிக்கிறே!”

“இவங்க இங்க இருக்காங்கன்னு எப்போ, எப்படித் தெரியும்?” கேள்வி வேறொரு முதியவளிடமிருந்து வந்தது. இவர் எப்போது வந்தார்?

“ம்.. தெரியும்.”

“அதான் எப்போலருந்து தெரியும், யார் சொன்னதுன்னு கேட்கிறேன் தம்பி.”

“எங்கம்மா கிட்டே நான் பேசுறேன். நீங்க யாரு நடுவிலே?” ஜெகன் உஷ்ணமானான்.

“நடுவிலே கொஞ்சம் பக்கத்தைக் காணோம்ங்கிற மாதிரி நாலு வருசமா அமைதியாயிருந்திட்டு இப்போ வந்து சொந்தம் கொண்டாடினா எப்படித் தம்பி? இவங்க பாதுகாப்பு, ஆரோக்கியம் எல்லாமே இந்த இல்லத்தைச் சேர்ந்தது. நான்தானே பொறுப்பு.”

“ம்மா! நீ கிளம்பி வாம்மா! நீ இல்லாம வீடு வீடாவேயில்லை. உன் கையாலே சாப்பிட்டு எவ்ளோ நாளாச்சு.”

“இப்படிச் செண்டிமெண்ட்டா பேசியேதான் கவுத்திடுறீங்க. அம்மாக்களும் முட்டாளாகவே இருந்து கவுந்திடுறாங்க. எத்தனை பட்டும் புத்தி வரதேயில்லை.” அவர் போய்விட்டார்.

எரிச்சலானான் ஜெகன். “ஹ்ம்! என் கைச்சாப்பாட்டு ஞாபகம் உனக்கு நாலு வருஷம் கழிச்சு நிதானமா வந்திருக்கு. பரவாயில்லே. ஆமா, உன் மாமியாரை எங்கே ஜெகன்?”

“அவங்க சின்னப் பொண்ணுக்கு டெலிவரின்னு சிங்கப்பூர் போயிட்டாங்க.”

“ஓ.”

“என்னம்மா! பதிலே சொல்லாம… புறப்படும்மா.”

“ஏன்மா இந்தப் பொழப்பு? ஊருலேயிருக்கிற அனாதைகளுக்கெல்லாம் சேவகம் பண்ணிக்கிட்டு… நீங்க வாங்க, ராணி மாதிரி மகன் வீட்டுலே கால்மேலே கால் போட்டு உட்காருவதை விட்டுட்டு…”

“ஓ! அப்படியா சொல்றே! உனக்குக் கல்யாணம் ஆன நாளாய் அப்படி எத்தனை நாள் ராணி மாதிரி உட்கார்ந்திருக்கேன்?”

“சரிம்மா! நடந்ததை விடு. வேணும்னா வேலைக்காரி வச்சிக்கோ. வீட்டுக்கு வாம்மா! இங்கே ப்ரோசீஜரை முடி. வெயிட் பண்றேன். வீட்டுக்குப் போலாம்.”

“முதல்லே ஒரு விஷயத்தைக் கிளியர் பண்ணு ஜெகன். உன் வீட்டுக்கு நீ அம்மாவா கூப்பிடுறியா? இல்லே உன் பொண்டாட்டிக்கு வேலைக்காரியா கூப்பிடுறியா? பெத்த தாயை நாலு வருஷமா தேடாமதானே இருந்தே? இப்போ உங்களுக்கு ஒரு தேவைன்னதும் என் ஞாபகம் வந்திட்டதா? சம்பளமில்லாத வேலைக்காரியா நான் வரணுமா?”

“அப்படியில்லைம்மா? பேரப்புள்ளையை நீ கையிலேந்த வேண்டாமா?”

“கையிலேந்தி வளர்த்திவிட்டதுமே நாக்கு ருசிக்கு அலையுறவ… பிள்ளைக்குக் காட்டாம திங்கிறவ… நாக்கை அடக்க முடியாதவ எதை அடக்குவான்னு பேச்சு வாங்கிட்டு, நீ “ச்ச்சீச்சீ”ன்னு சொல்றதைக் கேட்டுக்கிட்டு ஜடமா நிக்கணுமா?”

ஜெகனுக்குச் செருப்பால் அடித்தாற்போலிருந்தது. நிஜம்தானே? ஒரு தேவைன்னு இப்போது வந்தவன் அம்மா இடம் தெரிஞ்சதுமே வந்திருக்கணும் தானே. மஞ்சு ஆயிரம் சொல்வா… இவனுக்குப் புத்தி எங்கே போனதாம்?

“இப்போ என்னம்மா? வரமாட்டீங்களா? ஏதோ சின்னவங்க… தெரியாம பேச்சை விட்டுட்டோம். அதுக்காக நான் உங்க புள்ளையில்லைன்னு ஆகிடுமா? இல்லை என் புள்ளைதான் உங்கப் பேரப்புள்ளையில்லைன்னு ஆகிடுமா?” அம்மா வரமாட்டாளோ? ஜெகனுக்குப் படபடவென்று வந்தது.

பார்கவி சிரித்தார். “இப்போ என்னம்மா சொல்றே?”

“ஜெகன்! ஒரு உதவி செய்றேன். உங்களுக்குப் பார்த்துக்க உதவிக்கு ஆள் வேண்டும்தானே. இங்கே ரிடையர்ட் நர்ஸ் ஒருத்தவங்க இருக்கிறாங்க. சம்பளம் கொடுத்துடுங்க. காலையில வந்திட்டுச் சாயந்திரம் வந்திடுவாங்க. ஓக்கேன்னா சொல்லு பேசுறேன்.”

“ஏம்மா? சொந்த ரத்தம் மாதிரி வேலைக்கு வரவுங்க பார்த்துக்கிடுவாங்களா?”

“சொந்த ரத்தமா? நீயா பேசுறே? உனக்கு ரத்தத்தைப் பாலாக்கிக் கொடுத்த அம்மாவை நீ எப்படி நடத்துனேன்னு யோசிச்சுப் பாரு. உன் பொண்டாட்டி பேசுறப்போ நீ என்ன செய்தேன்னும் யோசி. நாம என்ன விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை பண்ண முடியும். அப்போ என்னை வேலை வாங்கி விரட்டிக்கிட்டே இருந்தீங்க. இப்போ உங்களுக்குத் தேவைன்னதுமே நாங்க ஓடி வந்திடணுமோ? நான் வீட்டைவிட்டுப் போனதுமே நீ முன்னாலேயே தேடி வந்திருந்தாக் கூட மனசு இளகியிருக்கும். இப்போ இறுகிப் போய்க்கிடக்கு. நாங்களும் மனுஷங்கதான். உடம்புலே சக்தியிருக்கிற வரை உறிஞ்சுட்டுச் சக்கையா எறிஞ்சுடுறீங்க. இல்லைன்னா பேசியே கொல்றீங்க. எத்தனை அம்மா மனசு இங்கே கதறிக்கிட்டு நிக்குது தெரியுமா? புறப்படு… எனக்கும் நிறைய வேலையிருக்கு.”

“நீயெல்லாம் அம்மாதானா?” ஜெகன் கடுகடுப்போடு வார்த்தைகளைத் துப்பினான்.

“அம்மாவா இருக்கிறதாலேதான் யோசனை சொன்னேன். அன்னிக்கு நடந்தது என்னன்னு தெரிஞ்சுக்காமலே பேசுனீங்களே! நீயாவது நினைச்சியா நம்ம அம்மா அப்படித் தனியே சமைச்சுச் சாப்பிடுவாங்களான்னு? அவ பேசப் பேச நீயும் “ச்சீ”ன்னு தானே பார்த்தே. பெத்த அம்மாவோட நடத்தையைப் பேசுறாளேன்னு உன் ரத்தம் கொதிச்சுதா? இல்லேதானே? அன்னிக்கு உன் பொஞ்சாதியோட அப்பாவும் அவர் தம்பியும் வந்திருந்தாங்க. சம்பந்தியாச்சேன்னு என் மகன் மரியாதைக்காக உடம்பு முடியாம ஆக்கிப் போட்டேன். ஒரு கவளம் சாப்பிட்டிருப்பேனா? என்னா பேச்சு பேசினா ஒம் பொண்டாட்டி? மனசொடிஞ்சு போய நடுத்தெருவுலே போக்கிடம் தெரியாம நின்னப்போ இதோ இவங்கதான் கூட்டிட்டு வந்தாங்க. இல்லைன்னா என்ன கதியாயிருப்பேனோ. நிதானமா நாலு வருசம் கழிச்சு வந்து என் வூட்டுக்காரிக்கு ஆயா வேலை பாருன்னு கூப்பிடுறே… அந்த பார்கவி அன்னிக்கே செத்துட்டா. இவ அனாதை பார்கவி. தப்புதப்பு… நான் ஏன் அனாதை? என்னைச் சுத்தி இத்தனை மனுஷிகளும் குழந்தைகளும் இருக்கிறப்போ… சொந்த ரத்தம் தருகிற உறவை விட, இந்தப் பந்தமும் சொந்தமும்தான் ஒசத்தியாப் படுது.”

“அம்மா….!”

“மன்னிச்சுடு ஜெகன். நம்ம உறவு அழியாத தொப்பூழ்கொடி உறவுன்னு தான் நினைச்சிருந்தேன். இங்கே வந்து பார்த்ததும்தான் தெரியுது, இந்தத் தொப்பூழ்க் கொடி ரத்தபந்தம் எல்லாமே மாய்மாலமான அலங்கார வார்த்தைங்கன்னு. என்னைப் பொறுத்தவரை நம்ம உறவு சுட்ட மண்ணு. இனி இது எப்போதுமே ஒட்டாது. நீ போகலாம்.”

ஜெகன் குன்றலோடு நகர்ந்தான்.

“அம்மா மாறித்தான் விட்டாள்!“

Author

Related posts

இனியவன் – 5 (இறுதிப்பகுதி)

ஏப்ரல் – 1

நெஞ்சக் கனல்