வள்ளுவன் தந்த பொதுமறை
பிறவிக் கடல் நீந்தப் பொற்கலம்!
ஈராயிரங் கால நீதிநூல்
வாழ்வியல் செறிவாக்கிடும் நற்பாடம்!
முப்பாலின் முத்தான பாக்கள்
பண்பு நெறியூட்டும் நல்லுரம்!
அன்பும், அறமும், கல்வியும்,
அரசு முறையும், குடி கடமையும்
பாங்கே படிப்பிக்கும் போதிமரம்!
அருளும், நட்பும், இன்சொல்லும்
இன்பமும், இல்லறமும், காதலும்
சேர்ந்தே பொதிந்துள்ள நித்திலம் !
அல்லவை, நல்லவை யாவையும்
தெளிவுறச் செய்யும் நூலகம்!
இருவரியில் அருந் தத்துவங்கள்
பொதிந்துள்ள பெரும் பொக்கிஷம்!
அணுவினுள் ஆழ்கடல் ஏழினை
அடைத்த மகாசக்தி வள்ளுவம்!