சாருவும் சீரியலும்! (ஜாலி சீரியல் கதை)

“காலையில் பார்க்கில் ‘வாக்’ புறப்படும்போதே சாரதாவின் மனசு திக் திக்கென்று இருந்தது. பார்க்கில் எங்கேயாவது கோமளா கண்களில் பட்டுவிடக் கூடாதே என நினைத்தது…. ஆனால் கண்கள் அவளைத் தேடின.

“ஹலோ!” பின்னாலிருந்து வந்த கோமளா காது கிட்ட வந்து கத்தியதும் பயந்தே போயிட்டேன்.

“சாரதா, நான் ஐந்து மணிக்கே வந்து விட்டேன் தெரியுமா?”

“அப்படியா! இருட்டா இருக்குமே?”

“உன்னைத்தான் தேடினேன்!”

“ஆமாம் உனக்கென்ன வேலை, என்னைத்தேட மாட்டாயா?” மனசுக்குள் முணுமுணுத்தேன்.

“அரை மணிநேரம் வாக் முடிச்சுட்டேன் நான் ….”

“ஓ.. அப்படியா?”

“சரி, சரி நீ உட்காரு. நான் ஒரு ரவுண்டு வாக் முடிச்சிட்டு வர்றேன்.”

“இல்லை.. இல்லை.. நான் உன்கூட நடக்கிறேன், நீ சொல்லிட்டே வா!”

“ஐயையோ!! என்னடி இது ரோதனையா போச்சு. போன வாரம் நடந்த சீரியல் கதையை இவ பார்க்காததை ஒன்று இரண்டு சொல்லலாம் ஓகே. ஆனால் போன மாசம் நடந்த கதையை ஒன்று விடாமல் அத்தனை சீரியல் கதையையும் நான் சொல்லணும்.. நடுவில நான் எதுவும் ரீல் விட முடியாது.

“சாரு, நேத்திக்கு எதிலே விட்டே தெரியுமா?” என எடுத்துக் கொடுப்பா இந்த கோமளம். நானும் ஒரு வழியாக ஞாபகப்படுத்திச் சொல்ல ஆரம்பிக்கும் போது…

“அய்யய்யோ.. என்ன சாரு இது? என்ன குழப்பம் உனக்கு? என்ன ஆச்சு? என்ன சொல்ற? அன்னைக்கு மாடியிலிருந்து இறங்கி வரும்போது கீழே விழுந்து விட்டாள் தெய்வயானை. அது போன மாசம், அப்புறம்தான் ஆஸ்பத்திரியில் சேர்த்துச் சரியாயிட்டாளே, அப்புறம் நடந்த இந்த வார கதையைச் சொல்லு…”

அட ஆண்டவனே! இவள் பார்க்காத கதையை என்னைச் சொல்லச் சொல்லி எபிசோட் முதற்கொண்டு எடுத்துக் கொடுக்கிறாளே!!

மூச்சு இறைத்தது இரண்டு ரவுண்டு அடிக்கவே. கூடக் கூட இந்த கோமளா ரொம்ப ஜாலியா ‘அப்புறம் என்ன ஆச்சு? என்ன ஆச்சுன்னு?’ கேட்டுட்டே வருவா.

அவள் என் கூட ஜாலியா நடந்து வர, நான் நடந்து கொண்டே மூச்சிரைக்க இவளுக்குக் கதை வேற சொல்லணும்.

“என்ன நீ லூசா!! எனக்குத் தெரியாது நான் சீரியல்ஸ் பார்க்கறதில்லைன்னு பட்டுன்னு சொல்லிட்டு நடக்க வேண்டியது தானே” என நீங்க கோபப்பட்டு கேட்கறது புரியறது.

“நான் சீரியல் பார்க்கலை, எனக்குத் தெரியாது, எனக்கு டைம் இல்லை” என எனக்குச் சொல்ல வராது, எதுவுமே சொல்ல முடியாது, சொல்லவே விடமாட்டா கோமளா, அப்படி என்னைக்கட்டிப் போட்டு வைச்சு இருக்கா.

“எவ்வளவு கூர்மையா கதை சொல்றே சாரு, அப்படியே நானும் அந்த தேவயானி எபிசோடை டிவியில் பார்த்த மாதிரியே எனக்குப் புரிந்தது, நீ சொல்ற அழகே தனி தான், உன்கிட்ட கதை கேட்டுட்டுப் போனாதான் எனக்கு வீட்டில் வேலையே நடக்குது.” கோமளா எனக்கு ஐஸ் வைக்கும் போது எனக்கு மட்டுமா ஜில்லுன்னு இருக்கு? இதைப் படிக்கும் உங்களுக்கும் ஜில் தானே? அப்படி நான் குளிர்ந்து போய் இவளுக்குக் கதை சொல்ல ஆரம்பித்தது தான் என் தப்பு.

அவள் பக்கத்து வீடு, எதிர்த்த வீடு, அடுத்த தெரு மாமின்னு ஓர் அஞ்சாறு மாமியைக் கூட்டிண்டு பார்க்குக்கே ஒரு நாள் வந்துட்டா கோமளம்…. “அட கொக்க மக்கா!”

“மாமி உங்களுக்கு வீட்டில் பொழுது போகலையா? கரெண்ட் இல்லையா? நாட்டுப் பெண் டிவி ஆன் விட மாட்டாளா? பேரன் ரிமோட் கொடுக்கலையா? நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க. காலையிலேயே எழுந்து என் கூட பார்க் வாங்களேன், நடைக்கு நடையுமாச்சு, என் பிரண்டு எவ்வளவு அழகாகச் சீரியல் கதை சொல்வா தெரியுமா? நீங்க பார்க்காத எபிசோடை அப்டேட்டா சொல்லிடுவா. நமக்கெல்லாம் இந்த யூடியூப் என்னான்னே தெரியாது அதிலெல்லாம், சாரு கில்லாடி விரல் நுனியில் அத்தனையும் இருக்கும். நாம பார்க்காத சீரியல், அந்த விஜயகுமார் பொண்ணு வனிதா விஷயம், நயன்தாரா, சிம்பு, ஜோதிகா, சாய்பல்லவி என என்ன வேணுமோ இவ கிட்டே கேட்டுத் தெரிஞ்சுக்கலாம். எல்லா விஷயமும் அப்டேட்டா கைவசம் இருக்கும், ரொம்ப ஸ்மார்ட்…” இப்படி என்னை ‘பார்க்கின் மாமியாராகப்’ புகழ்ந்து.. அதில் நான் விழுந்து….. “அய்யோ! அய்யோ!”

“தினமும் காலையில 5 மணிலேர்ந்து 9 மணி வரை என் பொண்டாட்டி பார்க்ல வாக்கிங் போறா சார்” எனச் சாரு வீட்டுக்காரர் தன் மனைவியைப் பற்றி அவர் தோழர்களிடம் சொல்லிப் புகழ….

வாக்கிங்கா?,… வெட்டி டாக்கிங்கில்ல நடக்குது.

“சாரு நீ ஒரு ரவுண்டு வாக் போயிட்டு வந்து எங்களுக்குக் கதை சொன்னா போதும்” எனச் சொல்லிச் சிரிக்கும் சீரியல் பைத்தியங்களை கோமளா என்னோடு கோத்து விட்டுட்டா.

“நடந்துட்டே வந்து கதை சொல்லு சாரு” எனச் சொல்லுவா இரண்டு மாமி, “நீ எனக்குக் கதை சொல்லிண்டே நட” என இந்த ரேவதியும் கூட வருவா. நான் நாலு ரவுண்டு நடந்து வர்றதுக்குள்ளே இவங்க நாலு பேரும் ரவுண்டா பார்க்கில் உட்கார்ந்து வீட்டுக் கதையைப் பேசிய வண்ணம்…

நான் ஒரு ரவுண்டு முடிக்கறதுக்குள்ள ‘சாரு ஆச்சா இது உன் இரண்டாவது ரவுண்டு போதும் வா! எனக்கு நேரமாயிடுத்து நான் போய் மாமாக்கு காபி போடணும்”னு என ஒரு மாமியும்,

“சாரு, அந்த 22-வது எபிசோடை மட்டும் சொல்லிட்டு நட, நான் வீட்டுக்குப் போய் குக்கர் வைக்கணும்” என… அதிகாரமும் உரிமையும் தூள் பறக்கும்… அடடா!! நான் பார்க்குக்கு நடக்க வந்ததை மறந்து சீரியல் கதை சொல்லும் சாருவாயிட்டேன்.

சரி புகழ்ச்சிக்கு மயங்கி நடந்த களைப்புடன் வந்து உட்கார்ந்து கதை சொல்ல ஆரம்பிக்க….

“இது எனக்குத் தெரியுமே! ரம்யா கிருஷ்ணன் நடித்த அந்த சீரியல் தானே? நான் பாதிதான் பார்த்து இருக்கேன், மீதி கதை சொல்லுப்பா உன் வாயாலே கேட்கும் இன்பம் இருக்கே! ஆஹா!”

சரி என்று நான் சொல்ல… “போன மாசம் நடந்தது நீ சொல்றது, அது முடிஞ்சுடுத்தாமே நான் பார்த்திருக்கேன். இந்த மாசம் வேற கதை ஆரம்பித்திருக்கு. இது புதுசு, 10 எபிசோட் ஓடியிருக்கும் நான் இரண்டு பார்த்தேன், அப்புறம் செம வேலை. எனக்குப் பார்க்க முடியலை. கதை சாராம்சமா போச்சு, என்ன ஆச்சோ தெரியலை, இதில் அந்த ‘ராஜா ராணி’ சீரியல்ல நடிச்சவா எல்லோரும் நடிக்கிறா!”

“நான் பார்க்கலையே மாமி!”

“நீ பார்க்கலைன்னாலும் பரவாயில்லை, அதென்னமோ யூடியூப்புல படம், சீரியல் பார்ப்பியாமே அதைப்பார்த்துச் சொல்லு நாளைக்கு வர்றோம்” என அனைவரும் கிளம்ப…

“சாரு”வுக்கு தலை ‘கிர்’ரெனச் சுற்றியது.

Author

Related posts

மாறாததொன்றே மாறாதது

ஒற்றையடிப் பாதை

இனியவன் – 2