சின்ன வேலை

மூன்று பேர், ஒரு ஆண், இரண்டு பெண்கள். பாவனி இருக்குமிடம் தாண்டி கையில் சில கத்தைக் காகிதங்களுடன் லிஃப்ட் இருக்கும் வலப்பக்கம் சென்றார்கள்.

காசாளர் நரசிம்ம மூர்த்தி கொஞ்சம் சோம்பலாய் தன் முன் இருந்த கணினியைப் பார்க்க, வாசலில் ‘ர்ர்ர்’ என ஆட்டோ நிற்கும் சப்தம் கேட்க அவள் திரும்பிப் பார்க்கையில், ஒரு வயதான தம்பதி இறங்கிக் கொண்டிருக்க, அவர்கள் நேரே தான் இருக்கும் வரவேற்பு இடத்திற்குத்தான் வருவார்கள் என மனதிற்குள் பட்சி சொல்கையில் ‘கொய்ங்க்’ என்றது செல்லிடப்பேசி.

அவர்கள் வருவதைப் பார்த்தவண்ணம் ஷணப் பொழுதில் செல்லில் நாகராஜ் பெயர் தெரிய, காதில் வைத்து “ஒரு நிமிஷத்தில திரும்பக் கூப்பிடறேன்” எனச் சொல்லி வைக்கவும் அந்தத் தம்பதியில் வயதான பெண்மணி, கொஞ்சம் சாம்பல் நிறச் சேலை, கொல்லென வெளுத்த தலை, கண்களில் கண்ணாடியுடன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொள்ள, உடன் வந்த நபர் அவள் அருகில் வரவும் சரியாக இருந்தது.

அவருக்கு அறுபதுக்கு மேல் வயதிருக்கலாம். மனைவிக்கு நேர்மாறாய் கருமை நிறத் தலை முடி – சாய உபயமாய் இருக்கலாம். காதோரம் கொஞ்சம் நரை மட்டும். கண்களில் தங்க முலாமிட்ட ஃப்ரேம் கண்ணாடி, பின் சிரிக்கும் கண்கள், முறுவலிக்கும் உதடு.

“குட் மார்னிங் மிஸ். இந்த அப்டாமினல் ஸ்கேன் எடுக்க வேண்டும்” புன்னகை மாறாப் பேச்சு.

அவளும் திருப்பி காலை வாழ்த்து சொல்லி பேப்பர்களை வாங்கிச் சரிபார்த்தாள்.. “ஆராவமுதன், அலர்மேல் மங்கை சரிங்களா?.. அப்டாமினலா?.. நீங்கள் இவ்வளவு கட்ட வேண்டும்.. காஷியரிடம்.. கட்டி வாருங்கள்..” எனச் சொல்ல அவர் அங்கே நகர, திரும்பச் செல்பேசி.

எடுத்தாள்.. “பாவனி.. என்ன இன்னிக்குச் சீக்கிரம் போய்ட்ட?” நாகாவின் பதட்டமான குரல்.

“கூட வரும் சுமதி விடுமுறைங்க.. அதனால் சீக்கிரமா வந்துட்டேன். பேஷண்ட்ஸ் வந்து கொண்டே இருக்காங்க”

“ஆனா, என்கிட்ட சொல்ல வேண்டாம்.? இன்னிக்கு எனக்கொரு காணொளி கொடுக்க வேண்டும். தமிழ்ல பிரசென்டேஷன்னு சொல்வாங்க. எம்.டி சீக்கிரமே வர்றேன்னு இருக்கார்.. தவிர ஒரு முக்கியமான நபர் வேற வர்றாராம். அதனால் ரோஹித்த ஸ்கூல் அனுப்ப முடியாத் என்னால..”

“எழுந்துட்டானா?”

“எழுந்துட்டான்.. பட் அவன் ஸ்கூல் பத்தரை.. அதுவரை அவன் கூட இருக்க முடியாதே..”

“ஹச்சோ!! நான் என்ன செய்ய முடியும்?..”

“சும்மா எதுவும் சொல்லாதே.. உன்னை யார் வேலை பாருன்னு சொன்னா?.. அதுவும் சின்ன வேலை.. உன் நேரம்லாம் இதுக்கே போகுது.. நல்லாப் பிழியறாங்க. இப்ப நான் என்ன பண்ண?..” அவன் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே ஆராவமுதன் மறுபடி அவளிடம் வந்து நிற்க வேகமாய் “மறுபடி கூப்பிடறேன்” என்று சொல்லி போனை அணைத்து “சொல்லுங்க சார்”

“எங்க போகணும் பாவனி” என அவள் பெயர் குத்திய கிளிப்பைப் பார்த்தபடி ஆரு கேட்க, “இரண்டாம் மாடி சார். லிஃப்ட் இருக்கு. ஒரு நிமிஷம்” என வெளிவந்தாள்.

நாற்காலியில் அமர்ந்திருந்த மிஸஸ் ஆருவிற்குக் கை கொடுத்தாள்.. “நானே எழுந்திருப்பேன்மா” என அவர் சொல்லச் சொல்லக் கேட்காமல், “மெல்ல நடங்கம்மா” எனக் கைப் பிடித்து, பின்னால் ஆரு வர லிஃப்ட் உள்ள இடம் வந்து இரண்டை அழுத்தி, “போய்ட்டு வாங்க” என்றாள்.

ஆரு ஒரு புன்னகையைத் தர, மறுபடி தன் இருக்கை வந்தவளுக்குக் கொஞ்சம் கோபமும் வந்தது. வேலையில் அது என்ன சின்ன வேலை, பெரிய வேலை? கீதையில் சொல்லியிருப்பது என்ன? கடமையைச் செய் பிரதிபலனை டோண்ட் எக்ஸ்பெக்ட்.. ஹச்சோ எதிர்பாராதே…

இந்த பரபரப்பான கீர்த்தி ஸ்கேன் லேபில் ரிசப்ஷன் வேலை. வருபவர்களை ஒவ்வொரு செக்‌ஷனுக்கும் மாடிகளுக்கும் அனுப்ப வேண்டும். அவர்களின் பேப்பர்கள் சரிபார்த்துப் பணத்திற்கு நரசிம்ம மூர்த்தியைக் காண்பித்து அனுப்ப வேண்டும்.. எட்டிலிருந்து மூன்று மணி வரை ஷிஃப்ட்.. பின் போய் ரோஹித்தை அழைத்துச் செல்லச் சரியாய் இருக்கும்.. ம்.

நினைத்துக் கொண்டிருக்கையிலேயே ‘கொய்ங்க்’ என்றது செல்போன்.

ஆலைக் கரும்பாய் அடிபட்டு நிற்குமுன்
வேலைகள் எல்லாமே வீண் – நாகராஜிடமிருந்து.

நாகாவிற்குத் தமிழ் கொஞ்சம் நிறையவே பிடிக்கும். இவளுக்கும்தான். கூடியவரையில் தமிழில்தான் பேசிக் கொள்வார்கள் ஆங்கிலம் கலக்காமல்.

அவனுக்குப் பதில் அப்புறம் சொல்லலாம். இப்பொழுது ரோஹித்தை யார் பார்த்துக் கொள்வார்கள்? பரபரவென இருக்க, மகாகவி வார்த்தைகள் வந்தன நினைவில். தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறுகதை பேசி… ஓ பாரதி.. பிளாக் பி 12-ஆம் எண் பாரதி. எம்பிஏ படிப்பவள். தனி. பெற்றோர் குவைத்தில்.

செல்லிடைப்பேசியில் பார்த்து அடித்தாள். ர்ர் என ஒலி சென்று கொண்டே இருக்க, ”பாரதி சீக்கிரம் எடேன்” – முடிவில் அவள் எடுக்க “ஹாய் குட் மார்னிங் பாவி”

“ஆமா நான் பாவி தான்” என்றாள் பாவனி. “பாரதி.. பி12 பொண்ணே. நீ தான் எனக்கு பி12 தரணும் அவசரமா ஒரு உதவி பண்ணனும்டி”

“ஹாஆவ்.. எதுவா இருந்தாலும் அரை மணி ஆகும். இப்பத்தான் தூங்கி எழுந்தேன். குளிக்கணும்”

“ஹச்சோ அதுக்கெல்லாம் நேரம் இல்லடியம்மா. நீயே பால் நிலா மாதிரிதான் இருக்க. கொஞ்சம் ஜல்தியா முகம் அலம்பிக்கோ.. கிளம்பு டிரஸ்ஸும் எடுத்துக்கோ.. வீட்டுக்குப் போய்..” என ஆரம்பித்து ரோஹித்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும் எனச் சொன்னாள்.. “கண்ணோல்லியோ.. அவனை எதிர்ல இருக்கற ஸ்கூல்ல விட்டுடு.. ப்ளீஸ்”

“எனக்கு புராஜெக்ட் இருக்கே. சரி.. போறேன்” என அவள் சொல்ல உடன் பாரதி வருவாள் எனத் தகவல் நாகராஜிற்கு அனுப்பிச் செல்லிடை அணைத்துத் தன் சின்ன இடையில் வைத்துக் கொண்ட பாவனி எதிரில் அமர்ந்திருந்தவர்களை ஒவ்வொருவராய் அழைத்து வேலையில் மும்முரமானாள்..

முக்கால் மணியில் எல்லாரும் சென்று விட – நாகராஜிடமிருந்து ”பாரதி வந்தாள், கிளம்பி விட்டேன். தேங்க்யூ இனியவளே” எனப் பதில் வர மறந்த கோபம் மீண்டெழ “தலைகீழ்ப் ‘ப’ மீசைத் தலைவனே உன்னைக் கலைக்கிறேன் மாலையில் காண்” என அடித்து, ‘ஹை எனக்கும் வெண்பா வருதே’ என நினைத்து அனுப்பித் தலை நிமிர்ந்தால் “குட் மார்னிங்” குறு குறு கண்களுடன் டாக்டர் முகுந்த். அப்டாமினல் ஸ்கேனுக்கு உடன் இருப்பவர்.

பதறி “சொல்லுங்க டாக்டர்”

“ரொம்ப ஃப்ரீயாக்கும்.” என்றார் சிரிக்காமல். “எவ்வளவு பேஷண்ட்ஸ்?”

“அப்டாமினலுக்கு மட்டும் இருபது பேஷண்ட்ஸ் இருக்கும் டாக்டர்”

“குட்” எனச் சொன்னபடி அவர் நடக்க, அவளும் கேஷியரிடம் கண்ணால் பேசி உடன் நடந்தாள்.. அவர் லிஃப்டின் பின் செல்ல அவள் மாடி ஏறினாள்.. இரண்டாம் மாடியில்தான் ரெஸ்ட் ரூம்.. வேலை பார்ப்பவர்களுக்கானது. கொஞ்சம் சுத்தமாக இருக்கும்.. வேகமாய்ப் போய்க் கீழ் வர வேண்டும். அது வரை நோயாளிகள் வராமல் இருக்க வேண்டும்.

ஓய்வறைக்குப் போய் வெளியில் வர, பார்த்தால் ஹாலில் இருபது நாற்காலிகள் ஐந்தைந்தாய். முன்வரிசையில் பளபளா ஆரு உடன் அவர் மனைவி.. மனைவி கொஞ்சம் கண்மூடியிருக்க ஆரு செல்லிடையில் பதிந்து கொண்டிருந்தவர் நிமிர்ந்தார்.

“சார்.. இப்ப இரண்டாவது டாக்டர் வந்தாச்சு.. கூப்பிட்டுடுவாங்க” மென்மையாகச் சொன்னவளைப் பார்த்தார் ஆரு.

“இவ தூங்கிட்டாளா தெரியலையே. கண்மூடிண்டு இருக்கா.. அசைவே காணோம் அதான் பையனுக்கு மெசேஜ் அனுப்பிச்சேன்”

“மாமி” என உலுக்க அவர் மனைவியிடம் அசைவில்லை.. ஆரு கையிலிருந்த பாட்டிலைப் பிடுங்கித் தண்ணீர் எடுத்துத் தெளிக்கக் கொஞ்சம் கண்விழித்தாள் அலமு மாமி.

“கொஞ்சம் கிறு கிறுன்னது தலை.. காலைல சர்க்கரை மாத்திரை டாக்டர் மாத்திக் கொடுத்தாரோன்னோ அதைப் போட்டதால இருக்குமா?”

“ஹச்சோ.. மே பி லோ சுகர்” என நினைத்த பாவனி தாவி மூலையில் இருந்த இரண்டாவது மாடி ரிசப்ஷனிஸ்ட் உமாவிடம் “உன் ஹேண்ட்பேக் கொடு” “எதுக்குடி?” திறந்து ஒரு சாக்லேட் எடுத்து “இருக்கும்னு நினச்சேன் தேங்க்ஸ்டி” சொல்லி மாமியிடம் வந்து “வாயில் போட்டு மெல்லுங்கோ” என்றாள்.

கொஞ்சம் அவர் போட்டுக் கொள்ள முகம் மலர்ந்தது. “தேங்க்ஸ்டி பொண்ணே!”

“சார்.. ரெண்டு பேரும் வாங்க” என அழைத்து டாக்டர் முகுந்த் அறைக்கதவைத் தட்டி உள்ளே இருந்த உதவியாளரிடம் “நெக்ஸ்ட் இவங்களுக்கு ஸ்கேன் சொல்லுங்க ராமன் சார்” எனச் சொல்லி அவர்களை அறைக்கு வெளியே அமரவைத்து ஹாலுக்கு வந்தவள் மோதிக் கொண்டாள்.

நிமிர்ந்தால் நாகாஸ். அவள் மனம் கவர்ந்த பாழாய்ப் போனவன். “நீங்க எங்கே இங்க?”

“ம்.. என்னோட எம்டியோட அப்பா அம்மா இங்க வந்துருக்காங்களாம். அம்மாக்கு ஏதோ உடம்பு முடியலையாம்.. மெசேஜ் எம்டிக்கு வந்தது. அவர் கார்ல வந்துண்டிருக்கார். நான் பைக்ல சொய்ங்க்க்“ என்றவன் “அந்த அப்பா தான் என் பிரசென்டேஷனப் பார்க்கப் போற விருந்தாளி தெரியுமோ.. ஏன் பரபரக்கறே? அதோ எம்டியே வந்துட்டார்”

நடுத்தர வயதைக் கடந்த நரை விழுந்த செவேல் எம்.டி “பார்த்தியா நாகா. எங்க இருக்காங்க?”

“அவங்க பேரு என்ன சார்?” – பாவனி.

அவர் சொல்ல பாவனி டாக்டர் முகுந்த்தின் அறையைக் காட்ட அப்போதுதான் அறைவிட்டு வெளியே வந்த ஆரு “ஒண்ணுமில்லை தயாளா. லோ சுகர். இந்தப் பொண் தான் ஹெல்ப் பண்ணிச்சு” எனப் பாவனியைப் பார்த்துச் சொன்னார்.

நாகா பிரகாசமானான். “இவள் என் மிஸஸ் சார்” என்றான்.

Author

Related posts

முதிர்ந்த முள்மரம்

அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 7: அறுந்த மூக்கு

இனியவன் – 1