“நான் ஜெயிலுக்குப் போறேன், நா ஜெயிலுக்குப் போறேன்” என வடிவேலு ரவுடியாக ஃபார்ம் ஆன மாதிரி, நான் முதல் நாள் இரவிலிருந்தே வீட்டில் சொல்ல ஆரம்பித்துவிட்டேன். “நான் நாளைக்கு வெளியில் போறேன், நான் நாளைக்கு வெளிய போறேன், நாள் முழுவதும் எனக்காகவே செலவு செய்யப்போறேன்!”
“ஜாலியா வீட்டில் இரு ராதா, நாளைக்கு எதுவுமே பண்ணப் போறது இல்ல!”
“அப்போ என்ன பண்ணப் போறே? தூங்கப் போறியா பாட்டி?”
“ஆமான்டா, ராத்திரியில் தூக்கம் வரவில்லை, பகலில் தூக்கமா?”
வீட்டில் அனைவரும் ஒன்றுகூடிப் பேசினார்கள்.
“அம்மா எங்க போறா?”
“அம்மா நேத்தே புதுப்புடவை, பிளவுஸ், வேனிட்டி பேக் ரெடி பண்ணிட்டா. எனக்குத் தெரியும், பாட்டியோட நண்பிகள் கூட ஜாலியா சுத்திட்டு, MTR-ல சாப்பிட்டு, கப்பன் பார்க்கில் உட்கார்ந்து சிரித்துப் பேசி அரட்டை அடிச்சிட்டு வரப்போற… அதுவாதான் இருக்கும்.”
ஆளாளுக்கு என்னை அவர்கள் பார்வையில் எடைபோட… என் கணவர் மெதுவாகப் புன்னகைத்தார். “இந்த ஞாயிற்றுக்கிழமை முறுகலான தோசை எல்லாம் கிடைக்காதா? ராதா, நானும் கூட வரேன்… கோவில் போறியா? இல்ல, உன் பிரண்ட் வீட்டுக்குப் போறியா? சொல்லிட்டுத்தான் போயேன், நானும் உன் கூட வர்றேன், ஜாலியா இரண்டு பேரும் எங்க வேணா போயிட்டு வரலாம்.”
“ஐயோ! நீங்க கோவிலுக்கும் என் பிரண்ட் வீட்டுக்கும் வந்துட்டாலும், ‘பூனையை மடியில கட்டிண்டு பூலோகம் போன மாதிரிதான்’. சரி சரி, நான் கிளம்புறேன் யாரும் என்னைத் தேட வேண்டாம்.”
“சரி, எவ்வளவு பணம் வேணும் சொல்லு?”
“அதெல்லாம் என்கிட்ட இருக்கு.”
பிள்ளையும் அப்பாவும் குசுகுசுவெனச் சிரித்தபடி பேசினார்கள். “காசு கையில் புரளுதே… போகட்டும் போகட்டும்.” கிண்டல்தான் இவருக்கும்.
“அம்மா எங்கே போகணும்னு சொல்லுமா, காரிலேயே டிராப் செய்றேன்.”
“அதெல்லாம் வேண்டாம், நானே ஓலா (Ola) புக் செய்து போயிடுவேன்.”
“ஓலா புக் பண்ணத் தெரியுமா?”
“ஆமா, இது என்ன பெரிய ராக்கெட் சயின்ஸா?”
நடுவில் மருமகளும் மகளும், “அதெல்லாம் அம்மாவுக்குப் புக் பண்ணத் தெரியுமே” என்றனர். என் முகம் மலர்ந்தது. “நாங்க கத்துக்கொடுத்துட்டோம்” என்றனர் கொசுறாக… முறைத்தேன். அதைச் சொல்லணுமா இப்போ?
“Bye, Bye” என நான் சொல்லி, காலை 7 மணிக்கே புறப்பட்டுவிட்டேன். அனைவரின் மனதிலும் தனித்தனியாகக் கேள்விகள். “எங்க போற அம்மா? கோவிலுக்கா? வேணாம்னு நாங்க சொல்லப் போறதில்லையே, சொல்லிட்டுப் போகட்டுமே.”
“உங்க அம்மா போகட்டும் விடுப்பா. அம்மா எப்ப பாரு வீடு, வேலை, சமையல்னு இருப்பா. ஜாலியா அவ எங்காவது போய்விட்டு அப்படியே ஓட்டலுக்குப் போய் சாப்பிட்டுட்டு வரட்டும்.” என் பிள்ளை, பெண்கள் குசுகுசுவென என் காது கேட்கும்படியாகப் பேசினாலும், கேட்காதது போலப் போனை நோண்டிய வண்ணம் இருந்தேன்.
“குண்டுக்கு ரொம்பக் குண்டு தைரியம்டா” என்றார் (ஏதோ தான் அஜித் மாதிரி நினைப்பு). ம்ம்ம்… வந்து கவனிச்சுக்கலாம்.
ஓலா வந்ததும், “அம்மா ஓ.டி.பி (OTP) தெரியுமா?”
“எல்லாம் நான் சொல்லிக்கிறேன்” எனக் காரில் ஏறினேன்.
இந்த ஒரு நாள் எனக்கே எனக்காக! ஒரு நாள் யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் எனக்காக இருக்கப் போறேன்.
நேராக ராஜி வீட்டிற்குப் போய் நின்றது ஓலா. சந்திரகலா, பாரதி, மணி, ராஜி, உஷா, சித்ரா என ஆறு பேரும் “ஹய் ஹய்… ராதா வந்தாச்சு!” என ஓடி வர, சந்தோஷமாக ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டோம்.
ராஜி வீட்டில் பெரிய கிச்சன். அனைத்தும் ரெடியாக இருந்தது. இருவர் தேங்காய் துருவ, வெல்லத்தை இருவர் உடைத்துப் போட்டுப் பூரணம் கிளற, நான் சிரோட்டி ரவை, மைதா மாவையும் கலந்து ஒப்பட்டு செய்ய மாவு ரெடி பண்ணி ஊற வைத்தேன். பிறகு பேச்சு, பேச்சு, ஜோக்கு, சிரிப்புதான்! சுடச்சுடச் சின்ன வெங்காய வத்தக்குழம்பு, உருளைக்கிழங்கு காரக்கறி, அப்பளம், ரசம், தயிர் என ஐயர் மெஸ்ஸிலிருந்து எல்லாம் வந்துவிட்டது.
சாப்பாடு எடுத்து வந்த மாமி, எங்கள் ஆறு பேரையும் உட்கார வைத்து, வாழை இலையில் பரிமாறி, ஜாலியாகச் சிரித்து ஜோக்கடித்தபடி சாப்பிட்டு முடித்தோம். மற்றவர் சமைத்துப் பரிமாற, தோழிகளுடன் சாப்பிடுவது பேரானந்தம்.
பிறகு பேசியபடி கடகடவென்று இரண்டு பேர் வாழை இலையில் ஒப்பட்டு தட்டிக் கொடுக்க, இரண்டு பேர் போட்டு எடுக்க, மடமடவென ஒப்பட்டு செய்து அடுக்கிவிட்டோம்.
ஆறினதும் ஒவ்வொரு வீட்டிற்கும் தலா 25 ஒப்பட்டு பேக் செய்துவிட்டோம் அனைவரும். வீட்டுப் பணியாட்கள் இரண்டு பேர் வந்து கிச்சனைப் பளிச்செனச் சுத்தம் செய்துவிட்டனர்.
ஆபீஸில் நடந்த ஜோக்கெல்லாம் பேசி ஜாலியாக இருக்க, மாலை பிளாஸ்கில் டிகிரி காபியும் மெதுபக்கோடாவும் ஐயர் மெஸ்ஸிலிருந்து வந்தது. சாப்பிட்டுவிட்டு ஒப்பட்டு பேக்குடன் பிரியா விடைபெற்று அனைவரும் அவரவர் வீடு போக இரவு 8 மணி ஆயிற்று.
“என்னம்மா இவ்வளவு லேட்? உங்களைப் பார்த்தவுடன் தான் எங்களுக்கு உசிரே வந்தது. போன் வேற சைலண்ட் மோடில் போட்டிருக்கேள். என்ன இது பாக்கெட்… ஸ்வீட்டா? ஒப்பட்டா? எப்படி MTR-லிருந்து வாங்கி வந்தேளா?”
“நோ, நானே செஞ்சது!” பெருமிதமாகச் சொன்னேன்.
“என்ன நீங்களா?”
“ஆமா, வீட்டில் என்னை ஒரு ஸ்வீட் பண்ண விடுவதில்லை.”
“என்ன ஸ்வீட் வேணும்னு சொல்லுங்க அம்மா, ஆர்டர் பண்ணினா வீட்டுக்கு வந்துடும். அடுப்பில் எண்ணெயை வைத்து கசகசன்னு வேலை பண்ண வேண்டாம்” என, நீங்கள் எப்பவுமே எந்தப் பண்டிகைக்கும் என்னை ஸ்வீட்டோ பலகாரமோ பண்ண விடுவதில்லை. எந்த ஒரு வேலையும் நீங்கள் செய்ய விடவில்லை. தோழிகள் வீட்டிலும் அப்படித்தான்; வேலை செய்யாம, பண்டிகைகளுக்குப் பலகாரம் செய்யாம ஒரே போர்.
நாங்க பிரண்ட்ஸ் எல்லோரும் ஒரு வாரம் முன்பே பிளான் போட்டு, ஒண்ணா போனில் பேசி, “கன்னட வருஷப் பிறப்பு, தமிழ் வருஷப் பிறப்பு அடுத்தடுத்து நாள் வருதே!” எனத் திட்டமிட்டோம்.
பிளான் பண்ணி ராஜி வீட்டில் எல்லோரும் சேர்ந்து ஒப்பட்டு பண்ணினோம். ஜாலியா ரொம்பச் சந்தோஷமா இருந்தது தோழிகள் ஒன்றாகச் சேர்ந்தது. வீட்டில் சமைக்காமல், நாங்களே போட்டுச் சாப்பிடாமல், மற்றவர் பரிமாறச் சாப்பிடுவது குஷி. காபி, பக்கோடாவும் சாப்பிட்டுட்டு வந்துட்டோம்.
“எனக்கான நாளை அனைவரும் எங்களுக்கான நாளாக மாற்றிவிட்டோம். எப்பூடி?” என நான் பெருமிதமாகக் கூற…
“நீங்க எல்லோரும் சும்மாவா? இனிய தோழிகள் அனைவருமே சிங்கப்பெண்கள் ஆச்சே! சோ ஸ்வீட் பிரண்ட்ஸ்னு பட்டம் கொடுக்கிறோம்” என அவர்கள் பங்குக்கு அவர்களும் என்னைக் கலாய்த்தனர்.
எப்பூடி!.