கைப்பிடி உணவும் கண்டாலும்
தன் இனம் கரைந்தழைத்து
கூடி உண்ணும் காக்கை;
கூட்டுக்குள் புழுவாய் ஒடுங்கினாலும்
கடுந்தவமிருந்து ஒரு நாள்
வண்ணச் சிறகடிக்கும் பட்டாம்பூச்சி;
இனத்தில் ஒன்று அடிபட்டால்
பதறித் துடித்துச் சுற்றி
உதவிக்காகப் பரிதவிக்கும் குரங்கு;
வீழும் பயம் விடுத்து
சேய் விண்ணில் பறக்க
பயிற்றுவிக்கும் தாய்க் குருவி;
நிறம் கருப்பென வெட்காமல்
வேங்குழலொத்த தீங்குரலால்
பெருமிதமாய்ப் பாடும் குயில்;
அயராதுழைத்து சேர்த்து வைத்தால்
இயலாத காலத்தில் பயனாகும்
என்றுணர்த்தும் எறும்புக் கூட்டம்;
ஆக,
இயற்கைப் பாடம் உணர்த்துவதோ
வாழ்வில் செம்மை பெற
உயிரினங்களை வாசிக்க வேண்டும்!