ஜப்பானியச் சிறுவர் கதைகள் 4 – மொழியாக்கம்

4. கின்தாரோ

முன்னொரு காலத்தில், ஜப்பான் நாட்டில் அஷிகரா மலையில் ஒரு சிறுவன் அவனுடைய அம்மாவுடன் வாழ்ந்தான். அந்தச் சிறுவனின் பெயர் கின்தாரோ. ஜப்பானிய மொழியில் ‘கின்’ என்றால் தங்கம், ‘தாரோ’ என்பது ஆண் குழந்தைகளின் பொதுப்பெயர். கின்தாரோ மிகவும் வலிமையான சிறுவன்.

அவன் பனியனும் கால்சட்டையும் சேர்த்துத் தைக்கப்பட்ட ஒரு உடையை அணிந்திருப்பான். அந்த பனியனில் அவனுடைய அம்மா ‘கின்’ என்னும் எழுத்தை அழகாக வரைந்து தந்தார். அவன் அந்த உடையை அணிந்துகொண்டு மகிழ்ச்சியாக அஷிகாரா மலையில் விளையாடுவான். அந்த மலையில் இருக்கும் விலங்குகள் அனைத்திற்கும் கின்தாரோவை மிகவும் பிடிக்கும். முயல்கள், குரங்குகள், காட்டுப்பன்றிகள், கரடிகள் எனப் பல விலங்குகள் அவனுடன் நட்பாக இருந்தன.

கின்தாரோ வலிமையான சிறுவனாக இருந்ததால் விலங்குகளுடன் நடக்கும் விளையாட்டில் அவனே வெற்றி பெறுவான். சுமோ மற்போர் விளையாட்டில் அவனை எந்த விலங்காலும் வெல்ல முடியாது.

ஒரு கரடிக்குத் தன் வலிமையில் நம்பிக்கை இருந்தது. அது தன் வலிமையால் கின்தாரோவை சுமோ மற்போரில் வெல்ல முடியும் என நினைத்தது. அவனைப் போட்டிக்கு அழைத்தது. அந்த விளையாட்டுப் போட்டியிலும் அவனே வெற்றி பெற்றான். வலிமையான அந்தக் கரடிக்கு கின்தாரோவை மிகவும் பிடித்துப்போனது. அது அவனைத் தன் தோள்களில் தூக்கிக்கொண்டு மலையில் சுற்றித் திரிந்தது.

ஒருநாள் கின்தாரோவும் அவனுடைய விலங்கு நண்பர்களும் கூட்டாகப் பயணம் சென்றனர். அவர்களுடைய வழியில் ஒரு நீரோடை இரண்டு குன்றுகளுக்கு இடையே ஓடியது. அந்த நீரோடையை அவர்களால் கடக்க முடியவில்லை. குன்றின் மீது ஒரு உயரமான மரம் இருந்தது. விலங்குகளும் கின்தாரோவும் அந்த மரத்தை எடுத்து நீரோடையின் மீது பாலமாகக் கட்ட நினைத்தனர்.

முதலில் கரடி அந்த மரத்தை அசைத்துப் பார்த்தது, மரம் ஆடவில்லை. கரடி தன் வலிமை அனைத்தையும் காட்டி மரத்தை அசைத்தது. அப்போதும் மரம் அசையவில்லை. பின்னர், கின்தாரோ மரத்தை அசைக்க முயற்சிசெய்தான். மரம் மெதுவாக அசைந்தது. கொஞ்சம் கொஞ்சமாக மரத்தை அசைத்து அதைக் கீழே தள்ளினான். பிறகு அதைப் பாலமாக நீரோடையின் மீது போட்டான்.

அப்போது, “ஆஹா எவ்வளவு வலிமை” என்னும் குரல் கேட்டது.

அங்கே ஒரு சாமுராய் வீரரும் அவருடைய குழுவினரும் நின்றிருந்தனர். கின்தாரோவின் வலிமையை அந்த சாமுராய் வீரர் பாராட்டினார்.

“சிறுவனே, உனக்கு வலிமை இருக்கிறது. நீ என்னுடன் சேர்ந்துவிடுகிறாயா? பிற்காலத்தில் நீ சிறந்த வீரனாக வளருவாய்” என்றார்.

“வீரனாகவா? நானா?” என கின்தாரோ கேட்டான்.

“ஆமாம். நீ வீரனாக வளருவாய்” என சாமுராய் வீரர் பதில் சொன்னார்.

அவன் வீட்டுக்குச் சென்று தன் அம்மாவிடம் அனுமதி கேட்டான்.

“கின்தாரோ, உன்னுடைய அப்பாவும் சிறந்த வீரராக இருந்தவர். நீயும் சிறந்த வீரனாக வளருவாய். சாமுராய் வீரருடன் செல். என்னைப் பற்றிக் கவலைப்படாதே. நீ வீரனாகி வா” என மகிழ்ச்சியுடன் அவனை அனுப்பினார்.

“அம்மா என்னை வலிமையாக வளர்த்ததற்கு நன்றி. நான் வீரனாகி, இங்கு வந்து உன்னையும் என்னுடன் அழைத்துச் செல்வேன்” எனத் தன் அம்மாவிற்கு அவன் உறுதியளித்தான். பிறகு தன்னுடைய விலங்கு நண்பர்களிடமும் அம்மாவிடமும் விடைபெற்று சாமுராயுடன் புறப்பட்டான்.

கின்தாரோ வளர்ந்து சிறந்த வீரனானான். வீரனாக வளர்ந்த பிறகு அவன் சகாதா கின்டோக்கி என அழைக்கப்பட்டான். தன்னுடைய வலிமையாலும் வீரத்தாலும் சகாதா கின்டோக்கி ‘ஓயே’ என்னும் மலையிலிருந்த அரக்கனை அடக்கினான். அதன் பிறகு அவன் தன்னுடைய அம்மாவைக் காண அஷிகாரா மலைக்குச் சென்றான். அரக்கனை அடக்கிய வெற்றியைக் கொண்டாடிய பின், அங்கு தன் அம்மாவுடன் அவன் மகிழ்ச்சியாக வாழ்ந்தான்.

Series Navigation<< ஜப்பானிய சிறுவர் கதைகள் 3 – மொழியாக்கம்ஜப்பானியச் சிறுவர் கதைகள் 5 – மொழியாக்கம் >>

Author

Related posts

சிரிப்பால் சமூகத்தைச் செதுக்கிய யதார்த்தக் கலைஞன்

காலத்தின் ஆன்மா.

பால் வாசம் – (பத்து குறுங்கவிதைகள்)