ஜிங்கா ருசித்த தேன் 

“போட்டி ஆரம்பிக்கப் போறோம் வாங்க வாங்க” உற்சாகமா எல்லாரையும் அழைச்சாங்க பாட்டிப்பூச்சி.

அது பட்டாம்பூச்சி உலகம். அங்க பல விதமான பட்டாம்பூச்சிகள் வாழ்ந்தன. பல வண்ணங்கள்ல இருந்தன. பல வடிவங்கள்ல இருந்தன. பட்டாம்பூச்சிகள் உலகத்தில ரொம்பப் பெரிய பூந்தோட்டமும் இருந்தது. உலகத்தில இருக்கற அத்தனைப் பூக்களும் அங்க இருந்தன.

வசந்தகாலத்தில ஒரு போட்டி நடக்கும். இருக்கறதுல வயதான பாட்டிப்பூச்சிதான் போட்டிய நடத்துவாங்க. பாட்டிப்பூச்சி கூப்பிட்டதும் எல்லா பட்டாம்பூச்சிகளும் அங்க ஒன்னு கூடுனாங்க. அப்போ தான் கூட்டுப்புழுவில் இருந்து வெளில வந்தது ஜிங்கா.

‘”இது வசந்த காலம். நாம சிறந்த தேன் பூவைத் தேர்ந்தெடுப்பதற்கான காலம்”

“வசந்த காலம்னா என்ன?” அப்படின்னு கேட்டது ஜிங்கா.

“ஓ நல்வரவு குட்டி. புதிதாகப் பிறந்த குட்டிப் பட்டாம்பூச்சிகள்லாம் முன்னால வாங்க”

பாட்டிப்பூச்சி கூப்பிட்டதும் ஜிங்காவும் மற்ற புதுப் பூச்சிகளும் முன்னாடி போனாங்க.

“வசந்த காலம்னா பூக்கள் பூக்கற காலம். இப்ப விதவிதமான பூக்கள் நம்ம தோட்டம் முழுக்க நிறைஞ்சு இருக்கும். இந்த வசந்த காலத்தில பிறக்கற பட்டாம்பூச்சிகள்தான் போட்டில கலந்துக்கனும்”

“என்ன போட்டி! என்ன போட்டி?” ஆர்வமா கேட்டாங்க குட்டிப்பூச்சிகள்.

“நம்ம தோட்டத்தில் இருக்கற பூக்கள்ல எந்தப்பூவில் சிறந்த தேன் இருக்கு அப்படினு நீங்க சுவை பார்த்துச் சொல்லனும். சிறந்த தேனைக் கண்டுபிடிக்கிற பட்டாம்பூச்சிக்கு 4 சொட்டு தேன் கொடுக்கப்படும். அந்தத் தேன் இருக்கற பூ இந்த வருடத்தின் சிறந்த பூவா அறிவிக்கப்படும். போட்டி ஆரம்பமாகப் போகுது. எல்லாரும் தயாரா?”

எல்லா குட்டிப்பூச்சிகளும் ஆர்வமா வந்து வரிசையா நின்னாங்க. இல்ல பறந்தாங்க.

ஜிங்காவும் ஆர்வமாகக் கிளம்பியது. சுற்றிப் பார்த்தது. அதுக்குள்ள நிறைய பட்டாம்பூச்சிகள் அழகான பெரிய மலர்கள்ல போய் தேனருந்த ஆரம்பிச்சிட்டாங்க.

எல்லாப் பூவிலும் இரண்டு மூன்று பட்டாம்பூச்சிகள்.

தனியா இருந்த ஒரு செம்பருத்திகிட்ட போனது ஜிங்கா. ஆனா ஜிங்காவப் பார்த்ததும் செம்பருத்தி நிறம் மாறியது.

“ஏன் செம்பருத்தி நிறம் மாறி தெரியுது?” குழப்பமாகக் கேட்டது ஜிங்கா.

“ஏன்னா அதுல இதுக்கு மேல தேன் இல்ல. ஏற்கனவே பூச்சிகள் வந்துட்டுப் போய்டுச்சுனு உனக்குக் குறிப்பால் உணர்த்துது” அப்படினு சொன்னாங்க பாட்டிப்பூச்சி.

அடுத்து ஒரு சிவப்பு வண்ண ரோஜாவில் போய் அமர்ந்தது. அதன் கால் வழியா சுவை பார்த்தது. இத விட நல்ல சுவை கிடைக்குதா பாக்கனும். மணம் நிறைந்த மல்லிகைல அமர்ந்தது. மனம் மயக்கும் தாமரைல போய் அமர்ந்தது. வாசம்மிக்க மரிக்கொழுந்தில் போய் அமர்ந்தது.

இப்படி ஒவ்வொரு பூவா சுவை பார்த்தது. ஆனா ஏனோ ஜிங்காவுக்கு இது தான் சிறந்த சுவைனு தோணவே இல்ல. அப்ப எந்தப் பூச்சியும் அமராத தும்பைச் செடியப் பார்த்தது. அது ரொம்பச் சாதாரணமான குட்டிப்பூ. ரொம்ப மணம் இல்ல. ஈர்க்கும் நிறமில்லை.

ஆனா ஜிங்கா தும்பைப்பூல அமர்ந்தது. அமர்ந்ததும் தும்பையோட சுவை ரொம்பப் பிடிச்சிருந்தது.

“பாட்டிப்பூச்சி எனக்கு இந்தத் தேன்தான் பிடிச்சிருக்கு” அப்படின்னு கத்திச்சு.

எல்லாப் பூச்சிகளும் அதை வித்தியாசமாப் பார்த்தாங்க.

பாட்டிப்பூச்சி தீர்ப்பு சொன்னாங்க.

“மணமா இருக்கற, நல்ல நிறமா இருக்கற பூக்கள்தான் இத்தனை வருடங்கள்ல சிறந்த தேன்பூவா தேர்வாகி இருக்கு. ஆனா இந்த வருசம் நம்ம ஜிங்கா வித்தியாசமா தும்பைப்பூவ தேர்ந்தெடுத்திருக்கு. எல்லாரும் ருசி பாருங்க.. வாங்க.. வாங்க” என எல்லாருக்கும் அந்தத் தேன குடுத்தாங்க பாட்டிப்பூச்சி

“ஆமாம்.. நல்லா இருக்கு” என எல்லாப் பூச்சிகளும் ஒப்புக் கொண்டன.

“ஜிங்காதான் இந்த வருட வெற்றியாளர். தும்பைப்பூ தேன்தான் இந்த வருடத்தின் சிறந்த பூத்தேன்” அப்படினு அறிவிச்சாங்க பாட்டிப்பூச்சி.

ஜிங்காவுக்கு இத நம்பவே முடியல. அதுக்கு கொடுக்கப்பட்ட நாலு சொட்டு தேனை அது நண்பர்களோடு பகிர்ந்துக்கிச்சு. புதுப் பட்டாம்பூச்சிகளைப் பார்த்து பெரிய பூச்சிகளுக்கு மகிழ்ச்சி. தும்பைப்பூ ஜெயிச்சதுல தோட்டத்துப் பூக்களுக்கெல்லாம் மகிழ்ச்சி.

Author

Related posts

அனைவரும் சமம்

வாழ்த்துகிறோம்

ஊர்வலம் போன பெரியமனுஷி