ஒரு மொழியின் இலக்கியம் வளர்ச்சி அடைந்ததின் ஓர் அடையாளம் அது எவ்வளவுபேரை எட்டியுள்ளது என்பதைப் பொறுத்திருக்கிறது என்று பரவலாக நம்பப்படுகிறது. இது மொழியாக்கம் மூலம்தான் சாத்தியம். குறிப்பிட்டுச் சொன்னால் மேற்கு உலகை எட்ட மிகவும் முக்கியமானது மொழியாக்கம். இங்கு மேற்கு உலகு என்று வலியுறுத்திச் சொன்னதன் காரணம் உலகம் என்பதே மேற்குதான் என்று பலர் நினைத்தும் எழுதியும் வருவதால்தான். சர்வ தேச அங்கீகாரம் என்று சொல்லும்போது எல்லோர் மனத்திலும் இருப்பது ஆங்கிலமும் ஐரோப்பிய மொழிகளும் உள்ள உலகம்தான். குறிப்பிட்டுச் சொன்னால் ஆங்கிலம் பேசும் உலகம். இது குறித்து “To pierce a mustard seed and let in seven oceans” (கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி) என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை ஒன்று ஸுபான் பதிப்பகம் வெளியிட்ட கமலா நரசிம்மனைப் பதிப்பாசிரியராகக் கொண்ட Translating Women: Indian Interventions (Zubaan, 2009) என்ற நூலில் இடம் பெற்றுள்ளது. லீலா நிறுவனத்தின் விரிவுரைத் தொடரில் டெல்லி ஹாபிடாட் மையத்தில் நவம்பர் 21, 2013இல் நான் ஆற்றிய “Ways of Seeing: Text, Translation and Authors Who Refuse to Die” “நோக்கும் விதங்கள்: பிரதியும் மொழிபெயர்ப்பும் இறக்க மறுக்கும் படைப்பாளிகளும்” சமகாலத் தமிழின் பரிணாம வளர்ச்சி குறித்த இந்த நூலுக்குப் பொருந்தும் என்று தோன்றுகிறது. தற்போதைய நிலவரத்தையும் கணிப்பில் எடுத்து மேம்படுத்தப்பட்ட அந்த விரிவுரையைக் கீழே காணலாம்.
நோக்கும் விதங்கள்: பிரதியும் மொழிபெயர்ப்பும்
இறக்க மறுக்கும் படைப்பாளிகளும்
மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியிலிருக்கும் பிரதியை இன்னொரு மொழிக்குக் கொண்டுசெல்வது மட்டுமே அன்று. மொழிபெயர்ப்பு என்பது நோக்கும் ஒரு முறை; இதை நாம் எப்போதும் செய்துகொண்டிருக்கிறோம். ஒரு பிரதி எவ்வாறு பார்க்கப்படுகிறது, தறுவாயில் இடப்படுகிறது, வகைப்படுத்தப்படுகிறது, குறுக்கப்படுகிறது, விரிவாக்கப்படுகிறது என்றறிய நாம் மொழிபெயர்ப்பு என்பதின் பொருளை விரிவாக்கவேண்டிய அவசியம் இருக்கிறது.
நடுத்தரத் தமிழ்க் குடும்பத்திலிருந்து வந்ததால் பாட்டு நடனம் இரண்டும் நான் அறிந்தவையாக இருந்தன. ஒரு முறை ஒரு சிக்கலான சிட்டை ஸ்வரத்தை எனக்குக் கற்றுத் தரும்போது என் இசை ஆசிரியர் சிட்டை ஸ்வரத்தை நான் ஓடும் ஒரு நதியாகப் பார்த்தால் அதை ஒரே மூச்சில் பாட முடியும் என்றார். அதேபோல் “தெருவில் வரானோ” என்ற பதமும் அதற்கான அபிநயத்தின் நுணுக்கங்களும் ஒரு வாழ்க்கை முறையையின் உலகத்தை எனக்குத் திறந்தது. ஒன்றையோ ஒருவரையோ ”பார்க்க” பார்வை இருந்தால் மட்டும் போதாது தரிசனம் ஒன்றைக் காணக்கூடிய கூர்நோக்குத் திறனும் கண்ணோட்டமும் தேவை. இப்படிப் பார்த்தால் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு நூறு சதவிகிதம் மொழியாக்கம் செய்வது என்பது சாத்தியமே ஆகாத ஒன்று. அவற்றின் பண்பாட்டு வெளியிலிருந்து அகற்றப்பட்ட தமிழ்ச் சொற்களின் பொருளின் ஆழம் ஆங்கிலத்தில் தட்டையாகிப் போகலாம். காரணம் பெரும்பாலும் சொற்களுக்கு வெளிப்படையான பொருளும் தனிப்பட்ட பட்டறிவு, மொழியின் முறைகள், மறை குறிப்புகள் இவற்றால் உருவாகும் உட்பொருளும் உண்டு. திருமூலரின் மரத்தை மறைத்தது மாமத யானை/ மரத்தில் மறைந்தது மாமத யானை/ பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்/ பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே குறிப்பது இதைத்தான். கெஸ்டால்ட் என்று ஆங்கிலத்தில் வெளிப்படையாகவும் மறைந்திருக்கும் உருவத்தையும் கூறும் ஈருருவ மொழிக் காட்சியாக இதை நான் கூறவில்லை. நான் கூற வருவது ஒரு சொல், ஒரு படிமம், ஓர் ஒலி இவற்றிலிருந்து பல அடுக்குகளாக எழும்பிவரும் பொருள் குறித்து.
தமிழில் உள்ள கிடுகிடு, குடுகுடு, சலசல, பளபள, மினுமினு, சடசட, கடகட இவற்றை மொழிபெயர்க்க முடியாது. ஒரு மொழியை உள்வாங்குவதும் மொழிபெயர்ப்பதும் மிகவும் கடினமானதாகவே இருந்திருக்கின்றன. பிரதிக்கும் மொழிபெயர்ப்புக்கும் இழுபறி இருந்துகொண்டே இருக்கிறது. சிலசமயம் பரிதவித்துக் கூறிய காலிப் போலவே நாமும் உணருகிறோம். அவர் கூறியது:
யா ரப், வோ ந ஸம்ஜே ஹைன்
நா ஸம்ஜேங்கே மேரி பாத்
யா தே தில் உன்கோ ஔர்
யா தே முஜே ஸுபான் ஔர்
(ஆண்டவனே, அவர்கள் என்னைப் புரிந்துகொள்ளவில்லை
புரிந்துகொள்ளவும் மாட்டார்கள்
அவர்களுக்கு வேறு இதயம் தா
அல்லது எனக்காவது வேறு மொழியை)
இங்கு அவர்கள் என்பது காதலியைக் குறிப்பதாக இருந்தாலும் நாம் பொதுவாக எல்லோரையும் குறித்து ஆண்டவனை யாசிப்பதாக எடுத்துக்கொள்ளலாம். துளசிதாஸ் எழுதிய ராம்சரிதமானஸ் நூலில் மந்தரை கூறும் ஒன்று என் மனத்தில் அடிக்கடி எழும். மைதிலி மொழியில் எழுதும் புகழ்வாய்ந்த எழுத்தாளரான என் தோழி ஷெஃபாலிகா வர்மா என்னுடன் உரையாடும்போது கூறியது. ஒரு கட்டத்தில் மந்தரை கூறுகிறாள்:
பானு கமல குல போஷனிஹாரா
பினு ஜல ஜரி கரௌ ஸோய் சாரா
(ராம்சரிதமானஸ்: அயோத்திகாண்டம்: 16:4)
சூரியன் தாமரைகளின் கூட்டத்தைக் காப்பாற்றுகிறது. ஆனால் நீரில்லாவிட்டால் அவற்றை அது சாம்பலாக்கிவிடும். குளத்துத் தண்ணீரில் இருக்கும்வரைதான் தாமரை சூரியனைக் கண்டு மலரும். குளம் வற்றிவிட்டால் அதே சூரியன் தாமரையை எரித்துவிடும். இந்த அருமையான உருவக்காட்சியை நான் எப்போதும் மொழிபெயர்ப்புக்குப் பயன்படுத்துகிறேன். சொற்களின் கூறுகளுடன் அவற்றின் தறுவாய் என்னும் நீரில் இருக்கும்வரைதான் மொழியாக்கம் என்னும் சூரியன் பிரதியை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும்; இல்லாவிட்டால் அது ஒரு செத்த பிரதியாகிவிடும்.
என் கதை ஒன்றின் ஆங்கில மொழிபெயர்ப்பு எனக்கு வரும்போது முதலில் அதில் வரும் படிமங்களையும் ஒலிகளையும் என்னால் புரிந்துகொள்ள முடிவதில்லை. அது என்னுடையது என்று ஏற்றுக்கொள்ள நேரம் எடுக்கிறது. மொழிபெயர்க்கப்பட்ட மொழியின் போக்குக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும்போது கதைகள் ஒரு வகையில் கட்டப்பட்டு சிறகுகள் பூட்டிக்கொண்டு இரண்டு மொழிகளிடையே உள்ள தூரத்தைக் கடப்பதைப் பார்க்க முடிகிறது. ஒரு கதை இன்னொரு மொழியில் உருவெடுக்கும் இந்த மந்திரஜாலம் மீன் பிடிக்கும் படகைக் கடலில் உந்தித் தள்ளுவதைப்போல் ஒரு மொழியாக்கம் இன்னொரு மொழியின் பெருங்கடலில் கதையை மெல்ல உந்தித் தள்ளும்போதுதான் நேர்கிறது. என் கதைகள் மொழிபெயர்க்கப்பட்டது சுவாரசியமான அனுபவங்கள். சிலசமயம் சினமூட்டுவதும் குழப்புவதும் கூட. ஆங்கில மொழி பெயர்ப்பில் அரசியல் இருப்பதை நான் கண்டுகொண்டிருக்கிறேன். பிரதியைத் தேர்வு செய்தல், மொழிபெயர்த்தல், பொது வெளியில் வைத்தல், மூல ஆசிரியரை அறிமுகப்படுத்துதல் என்ற செயல்பாட்டின் அடித்தளத்தில் அதிகாரம் இருக்கிறது. பிரதியையும் மூல ஆசிரியரையும் பண்பாட்டையும் எளிதில் ஏற்கக்கூடிய சந்தைப்படுத்தக்கூடிய வடிவமைப்பில் மாற்ற மொழிபெயர்ப்பாளருடன் விடாத உரையாடல்களும் விவாதங்களும் நடைபெறுகின்றன. இந்திய மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது நிச்சயமாக அது மொழிபெயர்ப்பாளருக்கு அதிகாரத்தைத் தந்து மூல ஆசிரியருக்கும் ஆங்கில வாசகர்களுக்கும் இடையே அதிகாரப் படிநிலையை ஏற்படுத்துகிறது. சட்டென்று சினம் கொள்ளும் மொழிபெயர்ப்பாளர்களை நான் அறிவேன். நான் கூறிய திருத்தங்கள் மொழிபெயர்ப்பில் மேற்கொள்ளப்படவில்லை என்று சுட்டிக்காட்டும்போது ”திருத்தங்கள்” என்ற சொல்லை நான் பயன்படுத்தக் கூடாது; மொழிபெயர்க்கும் மொழியைப் பற்றி என்னை விட அவர்களுக்குத் தெரியும்; அவர்களைத் ”திருத்தும்” தகுதி எனக்கில்லை என்று கூறியவர்கள் உண்டு.
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் இந்திய மொழியின் மூல ஆசிரியரை இன்னொரு தளத்துக்கு “உயர்த்தும்” உபகாரமாகவே பார்க்கிறார். இந்திய மொழி எழுத்தாளரும் அதை ஒரு ”பதவி உயர்வு” போலவே உணர்கிறார். சொல்லப்போனால், கிட்டத்தட்ட, அழகற்ற ஒரு தவளை கம்பீரமான ராஜகுமாரனாக மாறுவது, சபிக்கப்பட்ட கல் ஒன்று தெய்வீக ஆணொருவர் மிதித்ததும் பெண்ணாய் மாறுவது போன்ற மந்திரஜால மாற்றம் இது. இந்த மாற்றத்தின் நடைமுறையில் எழுத்து பலவகை வாசகர்கள் இருக்கும் சந்தையில் எளிதில் எட்டக்கூடிய நுகரும் பொருளாகிறது. ஆங்கில வாசகர்களை மொழிபெயர்ப்பைப் புரிந்துகொள்ள எந்த வகையிலும் தொல்லைப்படுத்தக்கூடாது என்பதைத் தெரிந்துகொண்டேன். அவர்கள் அதிகச் சலுகைகளைப் பெற்றவர்கள்; அதனால் உணவு, உடை, உறவுமுறைகள் எல்லாமே அவர்களுக்கு அடிக்குறிப்புகளில், இறுதிக் குறிப்புகளில் அரும்பதவுரைத் தொகுதிகளில் பிட்டுப்பிட்டு வைக்கப் படவேண்டும். ஷாம்பேய்ன், மற்ற கவர்ச்சியான பெயர்களுடைய மேலைநாட்டு உணவு வகைகள், மற்ற எத்தனையோ விஷயங்கள் இவற்றை எல்லாம் என்னவென்றே புரியாமல் இளம் வயதில் நாம் வாசித்திருப்பது எல்லாம் யாருக்கும் ஒரு பொருட்டே கிடையாது.
தற்போது செய்யப்படும் மொழிபெயர்ப்புகள் பிரதியின் அடுக்குகளை எல்லாம் பிரித்து எல்லாம் துல்லியமாகத் தெரியும்படி அதன் அடி வயிறுவரை காட்டுவதுதான். கதைகள் எல்லாவற்றையும் வெளிப்படுத்துபவை அல்ல, கதைகள் என்பவை மறைத்து வைத்துக் கொள்பவை என்பது என் எண்ணம். உணர்வுகளையும் சில கூறுகளையும் கதைகள் மறைத்துவைக்கும் முறை ஒவ்வொரு வாசகருக்கும் கதைகள் ஒவ்வொரு விதமாகத் திறக்கின்றன. ஒரு கதையோ பிரதியோ எல்லாவற்றையும் காட்டும்படி நிர்வாணமாக்கப்படக் கூடாது; சில மர்மங்கள் இருக்க வேண்டும். இது நேர ஒரு மொழிபெயர்ப்பாளர் பிரதியை அடக்கத்துடன் அணுக வேண்டும்; படைப்பாளிகள் இறக்க மறுக்க வேண்டும்!
இதை எழுதிப் பல ஆண்டுகளாகிவிட்டன. மொழிபெயர்ப்பு என்பது எந்த வகையிலும் மூலத்தைவிடக் குறைவானது இல்லை என்றே இப்போதும் நான் நம்புகிறேன். மொழிபெயர்ப்ப்பு என்பது ஒரு சொல் விடாமல் செய்யப்பட வேண்டும் என்றோ இளக்கம் இல்லாமல் இருக்க வேண்டும் என்றோ நான் நினைக்கவில்லை. ஆனால் மொழிபெயர்ப்பில் அரசியல் உள்ளது என்பதை மறுக்க முடியாது. பல மொழிபெயர்ப்பாளர்கள் மொழிபெயர்ப்பு மூலத்தைவிட உயர்ந்தது, மூல ஆசிரியர்களைக் கலந்துகொள்வது தேவையில்லை என்றே நினைக்கிறார்கள். ஆங்கில வாசகர்களுக்கோ மற்ற மொழி வாசகர்களுக்கோ தேவையில்லை என்று அவர்கள் நினைப்பதை அவர்கள் நீக்கவும் தயங்குவதில்லை. நான் கம்பளிப்பூச்சி என்று ஒரு கதையில் எழுதியிருந்ததை பாம்பு என்று ஒரு மொழிபெயர்ப்பாளரும் பூரான் என்று இன்னொருவரும் மொழிபெயர்த்திருந்தார்கள்.
மொழிபெயர்ப்பாளர்களின் வேலையைக் குறைத்து மதிப்பிடுவது அல்ல என் நோக்கம். நான் சுட்டிக்காட்ட விரும்புவது இந்திய மொழிபெயர்ப்பாளர்களாலோ மேலை நாட்டு மொழி பெயர்ப்பாளர்களாலோ மொழியாக்கம் செய்யப்படும்போது ஒரு படைப்பாளி எதிர்கொள்ளும் அதிகாரப் படிநிலை குறித்து. மொழியாக்கம் பெருகிவிட்ட தற்போதைய நிலைமையில் ஐரோப்பிய அல்லது மற்ற நாட்டவர்கள் தமிழ் நூலை ஆங்கிலம் மூலம் மொழிபெயர்க்கிறார்கள். மூல ஆசிரியருடன் தொடர்பு கொள்வதை அவர்களோ அவர்கள் பதிப்பாளர்களோ விரும்புவது இல்லை. மற்ற இந்திய மொழிகளின் மொழிபெயர்ப்பாளர்களும் மூலத் தமிழ் ஆசிரியருடன் கலந்தாலோசிப்பதை விரும்புவதில்லை. அதற்காகச் சண்டை போட வேண்டியிருக்கிறது. தற்போது செயற்கை நுண்ணறிவு உதவியுடனும் மொழிபெயர்ப்பு நடக்கிறது.
வெளிநாட்டில் நடைபெறும் மொழிபெயர்ப்பு கருதரங்குகளில் நான் கலந்துகொண்டிருக்கிறேன். இதில் மூல ஆசிரியர்கள் செய்ய வேண்டியதெல்லாம் மூலப் பிரதியிலிருந்து ஒரு பாராவை அதன் ஒலியை மற்றவர்கள் அறியப் படிக்கவேண்டியதுதான். மொழிபெயர்ப்பின் நுணுக்கங்கள், மொழிபெயர்ப்பின் சிக்கல்கள், மொழிபெயர்ப்பு மூலத்தை எப்படி உயர்த்துகிறது என்பது பற்றியெல்லாம் மொழிபெயர்ப்பாளர்களே பேசுவார்கள். மூல ஆசிரியர்கள் ”கீழ் நிலையில்” வைத்தே பார்க்கப்படுகிறார்கள் பொதுவாக. ஒரு முறை இத்தகைய கருத்தரங்கு ஒன்றில் நான் சாப்பாட்டு இடைவேளையில் இரண்டாம் முறையாக எதையோ எடுத்துக்கொண்டபோது, ஓர் ஐரோப்பிய மொழிபெயர்ப்பாளர் என்னிடம், ”நிறையச் சாப்பிடு-கிறீர்களே” என்றார். உண்மையில் நிலைமை அவ்வளவு மோசமாகத்தான் இருக்கிறது.
ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளர் மூலப்பிரதியை முற்றுமாகத் தன் கையில் எடுத்துக்கொண்டு பொறுப்பு மாற்றீடு செய்ய மாட்டார். அவர் படகைத் தள்ளுவதுபோல் மெல்ல அதை இன்னொரு மொழியின் கடலில் உந்துவார். ஏனென்றால் அவருக்குத் தெரியும் படகு கடலளவே முக்கியமானது; அதை மூழ்காமல் வைத்திருப்பதுதான் மொழிபெயர்ப்பாளரும் படைப்பாளியும் அடையும் உண்மையான வெற்றி. ஒரு தரப்பு முயற்சியாக மொழிபெயர்ப்பு எப்போதுமே நடைபெறக்கூடாது; எப்போதுமே அது இணைந்த முயற்சியாகவே இருக்க வேண்டும். தமிழ் இலக்கியம் திக்கெட்டும் செல்லட்டும் அதன் மகிமையை இழக்காமல்.