அன்று கனகாம்பர மொட்டின் முகம் அவ்வளவு வாடியிருந்தது. எப்போதும் அழகாகப் பூத்திருக்கும் கனகாம்பரத்தை இப்படிப் பார்க்கவே பாவமாக இருந்தது.
அருகில் இருந்த ரோஜா, முல்லை, மல்லி உள்ளிட்ட மலர்கள் எல்லாம் கனகாம்பர மொட்டிடம் அதற்கான காரணம் கேட்டும் பதில் ஏதும் சொல்லாமல் அது அமைதியாக இருந்தது.
நேரம் ஆக ஆக அதற்கு இன்னும் சோகம் அதிகமானது. இதற்கிடையில் அந்தத் தோட்டத்திற்கு வந்த குழந்தைகளும், பெண்களும் அங்கு இருந்த மற்ற பூக்களைப் பறித்துத் தங்கள் தலையில் சூடிக்கொண்டனர்.
கனகாம்பரப் பூக்களை மட்டும் சீண்டுவார் யாரும் இல்லை.
அப்போது தேன் எடுக்க வந்த தேனீ ஒன்று ‘‘ஏன் சோகமாக இருக்கிறாய்’’ என்று கனகாம்பர மொட்டிடம் கேட்டது.
‘‘இந்தத் தோட்டத்தில் உள்ள மற்ற பூக்களை எல்லாம் அனைவரும் விரும்பிப் பறிக்கின்றனர். ஆனால் எங்களை யாரும் கண்டுகொள்வதே இல்லை’’ என்றது அது.
இதைக் கேட்டதும் தேனீயும் ஒரு நிமிடம் சோகமாகிவிட்டது. கனகாம்பர மொட்டிற்கு என்ன ஆறுதல் சொல்வதென்றேத் தெரியவில்லை.
‘‘பூக்களின் இளவரசியிடம் உன் குறைகளைச் சொன்னால் அது தீர்த்து வைக்கும்” என்று சொல்லிவிட்டு தேனீ பறந்து சென்றது.
பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே அந்தத் தோட்டத்தில் பூக்களின் மாநாடு நடைபெறும். அந்த மாநாட்டில் தான் பூக்களின் இளவரசியான குறிஞ்சிப் பூவைப் பார்க்க முடியும். மற்ற நாட்களில் இளவரசி வெளியே வருவதில்லை.
அடுத்த வாரம் பூக்களின் மாநாடு நடக்கப்போவதாகப் பேச்சு இருந்தது. அன்று இளவரசியைப் பார்த்து முறையிடலாம் என்று கனகாம்பர மொட்டு காத்திருந்தது.
மாநாட்டு வேலைகள் எல்லாம் தடபுடலாக நடைபெற்றன. முல்லைப் பூப்பந்தலில் மாநாட்டு மேடை அமைக்கப்பட்டது. சம்பங்கிச் சரமாலை தொடுத்து அழகான நுழைவு வாயில் அமைக்கப்பட்டது.
மாநாட்டு நாளும் வந்தது. தாமரை இலையால் செய்யப்பட்ட நாற்காலி மாநாடு மேடையில் போடப்பட்டிருந்தது. மல்லிகைப் பூவின் மணத்தால் பன்னீர் தெளித்து ஒவ்வொருவரையும் மாநாட்டிற்கு வரவேற்றனர்.
முல்லை, மல்லி, ரோஜா, அல்லி, தாமரை, செண்பகம், சம்பங்கி, காட்டு மல்லி, அரளி உள்ளிட்ட அனைத்து பூக்களும் மாநாட்டிற்கு வந்திருந்தன.
பூ படைவீரர்கள் எல்லாம் புடை சூழ பூக்களின் இளவரசியான குறிஞ்சிப்பூ மாநாட்டு மேடைக்கு வந்தது. மற்ற பூக்கள் எல்லாம் எழுந்து நின்று வரவேற்பு கொடுத்தன. மொட்டு கனகாம்பரம் முதல் வரிசையில் அமர்ந்திருந்தது.
பாட்டு, நடனம், இசைக்கச்சேரி என்று கோலாகலமாகத் தொடங்கியது பூக்களின் மாநாடு. தேனீக்களும், வண்டுகளும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டன.
மாநாட்டில் பூக்களின் மணத்தைப் பற்றிச் சொல்லவா வேண்டும். அனைத்து மலர்களின் மணமும் ஒன்று சேர்ந்து பக்கத்து ஊர் வரை நறுமணம் வீசியது.
ஒவ்வொரு பூவையும் நலம் விசாரித்தது குறிஞ்சிப் பூ. அடுத்ததாக கனகாம்பர மொட்டின் தருணம். இதற்காகவே காத்திருந்த மொட்டு, எழுந்து தனது ஆதங்கத்தைச் சொன்னது.
இவ்வளவு நாட்களாக இப்படி ஒரு குறையை யாருமே சொன்னது கிடையாது. கனகாம்பர மொட்டின் வருத்தத்தை நன்கு உணர்ந்து கொண்டது குறிஞ்சிப் பூ.
மற்ற பூக்களைப் பார்த்து வருத்தம் அடையும் கனகாம்பர மொட்டிற்கு என்ன சொல்லிப் புரிய வைப்பது என யோசித்தது குறிஞ்சிப்பூ,
தண்ணீரில் மட்டுமே பூக்கும், நிலத்தைப் பற்றி அறிந்திடாத தாமரையையும் அல்லியையும் முதலில் அறிமுகப்படுத்தி வைத்தது குறிஞ்சிப்பூ.
‘‘மற்ற பூக்களோடு சேர்ந்து ஒன்றாக வாழாமல் எப்படி குளத்தில் தனியாக இவை இருக்கிறதோ” என்று நினைத்துக் கொண்டது கனகாம்பர மொட்டு.
இப்படியே ஒவ்வொரு பூவினைப் பற்றியும் அறிமுகப்படுத்தி, அவற்றைப் பற்றி எடுத்துச் சொன்னது குறிஞ்சிப்பூ. சில பூக்களின் கதைகளைக் கேட்டதும் கனகாம்பர மொட்டுக்கு அழுகை வருவது போல் இருந்தது.
கடைசியாக. “என்னைப் பற்றி உனக்குத் தெரியுமா” என்று கேட்டது குறிஞ்சிப் பூ.
‘‘ஓ! நன்றாகத் தெரியுமே, நீங்கள் தான் பூக்களின் இளவரசி’’ என்றது.
‘‘நான் பூக்களின் இளவரசி என்றுதான் உனக்குத் தெரியும், என்னால் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பூக்க முடியும் அது உனக்குத் தெரியுமா’’ என்றது.
‘‘என்னது! பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையா, எனக்குத் தலையே சுற்றுவது போல் உள்ளது’’ என்றது கனகாம்பர மொட்டு.
“ஆம்! மொட்டாக இருக்கும் காலத்திற்காக வருந்தாதே.. நீ மலர்ந்தால்தான் மற்றவர்களின் பார்வை உன்மீது படும். மலர்தல் என்பது கற்றுக்கொள்வதால் கிடைக்கும் பரிசு. புரிகிறதா?” எனக் கேட்டது குறிஞ்சிப்பூ.
தான் அவசரப்படாமல் நிதானமாக வாழ்க்கையைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்துகொண்ட கனகாம்பர மொட்டு, சந்தோஷத்துடன் தலையாட்டியது.
அன்றுதான் முதல் முறையாக தனது நிறைகளை மட்டுமே நினைத்து மகிழ்ச்சி அடைந்தது. அடுத்தநாள் புதுப் புத்துணர்ச்சியோடு மலர்ந்திருந்தது கனகாம்பரப்பூ.