கி. சரஸ்வதி கவிதைகள்

காதல் கோள்கள்

நாம் பூமியில் மட்டும்
சந்தித்துக் கொள்ளவில்லை நண்பனே

மின்னிக் கிடக்கும் பலகோடி நட்சத்திரங்கள்
எப்படி வந்தன என்று கேட்டாய்
நான் உடனே ஒரு முத்தம் தந்தேன்
அவை ஆகின பல கோடியே ஒன்று
தாரகைகளெல்லாம் முத்தங்களெனில் நிலவு?
அது சற்றே நீண்ட முத்தம்

பால்வெளி நிரப்பிய காதலின்
போதாமையில் நாம்
வான்வெளியில் வித்தைகள்
புரியத் தொடங்கினோம்
சூரியச் சந்திர கிரகணங்கள்
நம் ஊடல்
துருவ ஒளி ஜாலம்
நம் கூடல்

காதல் மாதம் நெருங்கும் போது
ஒவ்வொரு முறையும்
நம்மை உலகுக்கு அறிவிக்க
புதுவழி தேடுகிறோம்
நம் காதலில் தோய்ந்த கோள்களை
இம்முறை காட்சிப்படுத்தினோம்

வரிசையில் வந்து வாழ்த்துச்
சொன்னவற்றைத்தான்
அறிவியல் நிகழ்வென
உலகே பார்த்தது.

*************************************************************************************

அதுவும் அவனும்

அதுதான் அவனுக்குச் சாமி
வீழ்ந்துபடும் வேளைகளில்
ஒளிகாட்டும் பெருநம்பிக்கை
துன்பம் கூறிப் புலம்ப வாய்த்த
ஒற்றை நண்பன்

அதுதான் அவனுக்கு ஆயுதம்
துரத்தி வரும் வன்மம் எதிர்க்க
இயற்கை தரும் துணிவு

அதுதான் அவனுக்குப் பொம்மை
தனிமைத் துயரில்
உருக்கொடுத்து உயிர் தந்து
உறவாடும் ஆன்மா

அதுதான் அவனுக்குப் பற்றுக்கோல்
ஏதொன்றும் இயலாத நிலையில்
அவனே அதுவாவான்

நீங்கள் தான் அதைக்
கல் என்று எளிதாய்க்
கூறிச் செல்கிறீர்கள்.

Author

Related posts

அசுரவதம்: 12 – காம நெடுங்கதவின் திறப்பு

கொங்கு வட்டாரவழக்கு – 11: பொழையாக்குப்பா

வழி நடத்தும் நிழல்கள்