முன்னுரை நிறம் – மனித இனத்தில் உயர்வு, தாழ்வு பேதம் தோன்றக் காரணங்களுள் முதன்மையாக உள்ளது தோலின் நிறம். புவியில் வாழ் நிலம் பொறுத்தே மனிதனின் நிறம் பெரும்பாலும் அமைகிறது. சூரியனின் புற ஊதாக் கதிர்களும் (UV rays), வெம்மையும் அதிகம் தாக்கும் நிலப்பரப்புகளில் வாழ்கின்றவர்கள் மாநிறம்/கருமை நிறச் சாயலில் இருப்பர். தோலில் மெலனின் (Melanin) என்னும் நிறமி இவர்களுக்குக் கூடுதலாக இருக்கும். சூரியக் கதிர்களின் பாதிப்பிலிருந்து காக்கும் கவசம், இயற்கையாக அமைந்த வரம் Melanin. இந்த நிறமி குறைவாக இருந்தால் வெளிர் நிறத்தவராக இருப்பர். இவர்களுக்கு sun burn முதல் skin cancer வரை வரும் பாதிப்புகள் அதிகம். இனக் கலப்பின் காரணமாகவோ (cross-race), மரபணு காரணமாகவோ (genes) மாநிற மக்கள் வாழ் நிலங்களில் சிலர் வெளிர் நிறமாகவும், வெளிர் நிறத்தவர் நிலங்களில் சிலர் கருமை நிறமாகவும் இருக்கலாம்.
எந்நிறமாக இருப்பினும் அழகு அழகுதான். கடந்த மூன்று தசாப்தங்களாக அழகு சாதனப் பொருட்கள் விற்கும் நிறுவனங்கள் விளம்பரங்களின் வாயிலாகக் கருமை/மாநிறம் இழிவு என்பது போன்ற போலியான பிம்பத்தை மக்களிடையே விதைத்துள்ளன. விளைவு தேவையற்ற தாழ்வுமனப்பான்மை குறிப்பாகப் பெண்களுக்குத் தன்னம்பிக்கை குறைதல், காதலோ, கல்யாணமோ தனக்கு அமைய வேண்டுமென்றால் வெளிர் நிறமாகக் காட்ட வேண்டும் என்ற மெனக்கெடல், கண்ணாடியில் தன் நிறத்தைத் தானே நொந்து கொள்ளுதல், வெளியிடங்களில் சந்திக்கும் கிண்டல் கேலியை எதிர்கொள்ள முடியாத துயரம், அதற்காக நிறமாற்ற லேகியங்களை அள்ளி அள்ளிப் பூசி ஒரு பயனும் கிடைக்காமல் விரக்தியடைதல், இதெல்லாம் என்ன கொடுமை?
அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் நிறத்தை வெண்மையாக மாற்றும் என விளம்பரம் செய்து எந்த ஒரு அழகு சாதனத்தையும் விற்க முடியாது. அந்த கூழ்களிலும், பசைகளிலும் (lotions, creams) தோல் வெளுக்கும் (skin whitening) என்று பெரும்பாலும் இருக்காது. உங்கள் நிறம் எதுவோ (skin tone) வெள்ளை, இளஞ்சிவப்பு, வெளிர் மாநிறம், மாநிறம், கருமை அதனை எங்கள் பொருள் மேலும் மெருகூட்டும், அழகிற்கு அழகு சேர்க்கும் என்று விளம்பரப்படுத்துவதாகவே இருக்கும். மக்களும் தங்கள் நிறத்திற்கு ஏற்ற பொருட்களை வாங்கிச் செல்வர். மாறாக வெண்மை உயர்ந்தது என்ற பிரச்சாரம் ஓங்கினால் அது நிறபேதம் என்ற போராட்டம் வெடிக்க வைக்கும்.
நம் தென்னகத்தில் எப்பொழுதுமே வெளிர் நிறம் போற்றப்பட்டதா என்று பார்த்தால் இல்லை, சங்க இலக்கியங்களில் மாநிற/கருமை நிறம்தான் பெண்களின் அழகு என்று பல பாடல்களில் கூறப்பட்டுள்ளது. அதுதான் நிலம் சார்ந்த பிரதிபலிப்பாக இருந்தது. உதாரணங்களைப் பார்ப்போம்,
குறுந்தொகை 27, வெள்ளிவீதியார்
கன்று முண்ணாது கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்துக் காஅங்
கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குலென் *மாமைக் கவினே
பாலைத் திணைப் பாடல்கள் பிரிதலும் பிரிதல் நிமித்தமும் ஆதலால் இதில் தலைவனைப் பிரிந்த தலைவியின் துயர் வெளிப்பாடு – பசுவின் தீஞ்சுவையான பால் கன்றினாலும் உண்ணப்படாது, கறக்கும் கலத்திலும் விழாது, மண்ணில் வீணே சிந்தினாற்போல், எனக்கும் பயன்படாது, என் தலைவனுக்கும் இன்பம் செய்யாது, பசலை நோயால் தோல் வெளிறித் தேமல் படர்ந்துள்ளதே என் கருமை அழகு.
திருக்குறள், காமத்துப்பால் – களவியல் – நலம் புனைந்துரைத்தல் – 1113 “முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு” காதலிக்கு – மாவிலையின் துளிர் போன்ற அடர் பழுப்பு நிற மென்மையான மேனி, முத்துப்பல் வரிசை, இயல்பான மணமோ நறுமணம், மையெழுதிய வேல்விழி, மூங்கில் போன்ற தோள்.
திருக்குறள், காமத்துப்பால் – களவியல் – புணர்ச்சி மகிழ்தல் – 1107 “தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் அம்மா அரிவை முயக்கு.” அழகிய மாநிறம் உடைய காதலியின் தழுவுதல், தானே உழைத்துச் சேர்த்ததைப் பலருக்கும் பகுத்து வழங்கி உண்டு களிப்பதில் ஏற்படும் இன்பத்துக்கு ஒப்பானது.
அகநானூறு 45, வெள்ளிவீதியார், திணை: பாலை, தோழிக்குத் தலைமகள் சொல்லியது பாடல்: வாடல் உழுஞ்சில்.
காடு இறந்தனரே காதலர் மாமை
அரி நுண் பசலை பாஅய்ப் பீரத்து
எழில் மலர் புரைதல் வேண்டும்
தலைவனின் பிரிவால் ஏற்பட்ட ஏக்கத்தால் ஊணுறக்கம் இழந்த தலைவியின் மேனி மெலிந்து வாடி மேனியின் நிறமும் வெளுத்துப் போனது. மாந்தளிர் போன்ற மாமை நிறத்துடன் மின்னிய மேனி (மாமை), பசலை பாய்ந்து பீர்க்கம் பூவைப் போல் பழுப்பேறிப் போனது.
குறுந்தொகை 147. தலைவன் கூற்று, பாடியவர்: கோப்பெருஞ் சோழன், திணை: பாலை, தலைமகன் பிரிந்தவிடத்துக் கனாக் கண்டு சொல்லியது,
வேனிற் பாதிரிக் கூன்மல ரன்ன
மயிரேர் பொழுகிய வங்கலுழ் மாமை
நுண்பூண் மடந்தையைத் தந்தோய் போல
இன்றுயில் எடுப்புதி கனவே
எள்ளார் அம்ம துணைப்பிரிந் தோரே
கனவே! கோடைக்காலத்தில் மலரும் பாதிரியின் வளைந்த மலரின் மகரந்தக் கம்பி போன்ற மென்மையான மயிர் எழுந்து படர்ந்த அழகான மாமை நிறத்தையும், நுண்ணிய வேலைப்பாடுடைய அணிகலன்களை அணிந்த தலைவியைக் கொண்டுவந்து இனிய தூக்கத்திலிருந்து என்னை எழுப்புகின்றாய். நீ என்னை ஏமாற்றிவிட்டாய். நீ இப்படி ஏமாற்றினாலும், தங்கள் துணையைப் பிரிந்திருப்பவர்கள் கனவிலாவது அவர்களைக் காண முடிந்ததே என்று எண்ணுவார்கள். ஆகவே, உன்னை இகழ மாட்டார்கள், என்று கூறுகிறான்.
ஐங்குறுநூறு பாடல் – 31-40, புலவர் – ஓரம்போகியார், திணை – மருதம், தோழியை விளித்துத், தலைவி தன் கணவன் பிற மகளிருடன் வாழ்வதைச் சொல்லி அங்கலாய்த்துக் கொள்ளும் பாடல்கள் பாடல் – 35
அம்ம வாழி, தோழி! நம் ஊர்ப்
பொய்கை ஆம்பல் நார் உரி மென் கால்
நிறத்தினும் நிழற்றுதல் மன்னே;
இனிப் பசந்தன்று, என் *மாமைக் கவினே
தோழி வாழி, என் மேனி, பிரிந்த தலைவனை எண்ணி ஆம்பல் கொடியில் உரித்த நார் நிறத்தைக் காட்டிலும் அழகிய மாமை நிறம் வெளிறிப் போய்ப் பசந்து கிடக்கிறது.
முடிவுரை இன்னும் இன்னும் இலக்கியத் தரவுகள் எடுத்துக்காட்டாய்க் கூறிக் கொண்டே போகலாம். நம் பெண்களின் மாநிறம்/கருமை நிறம் கொள்ளை அழகு. சங்கப் பாடல்களும், கவிதைகளுமாக இயற்கையான அழகைப் போற்றிக் கொண்டாட அடுத்த தலைமுறைக்காவது சொல்லிக் கொடுக்க வேண்டும்..