வீட்டுத் திண்ணையில் காலைச் சூரியன்
அந்தி சாயும் வரைக்கும் என் கண் தேடும்,
இத்தனை வருடம் காலடிச் சத்தம்
கேட்டதெல்லாம் இப்போதேன் தூரம்.
ஊர் தாண்டி நீ போனதனால்,
சுவரெல்லாம் நீ சாய்ந்த இடம்,
பாயெல்லாம் நீ படுத்த நினைவுகள்,
பேச ஒரு வார்த்தை இல்லையே நீயின்றி.
பழைய சோற்றைக் கரைக்கையில் ,
உன் முகம் கண் முன்னே மிதக்கும்;
விடியற்காலையில் கோலத்தின் நடுவே,
உன் விரல் ரேகையை மனம் தேடும்.
கூட்டுக்குள் அடைந்த குயிலைப்போல,
வீட்டுக்கே வெளிச்சம் காட்டிய நீ,
இன்று வெளிச்சம் தேடி நகரத்துச் சுழலில்,
அழுகையை மறைத்துச் சிரிப்பாயோ நீ?
‘கண்ணே, நீ நல்லா இருக்கணும்’ –
என் வேண்டுதல் தினம் ஒன்றுதான்;
நீ சம்பாதிக்கும் காசை விட,
உன் சிரிப்பொலி கேட்கத்தான்
காத்திருக்கிறேன்.
நீ வேலைக்குப் போகையில் நம் வீடு
வெறுமையின் சாயம் பூசிக்கிடக்கிறது ;
நீ திரும்பும் நாள் ஒன்றுக்காக,
இந்தத் தாயின் உயிர் காத்துக் கிடக்கிறது.
வாழ்க என் கண்மணியே!
உன் உழைப்பு சிறக்கட்டும்!
இங்கே என் தவிப்பு மட்டும்…
சத்தம் போடாமல் என்னைத் தின்கிறது!
இருக்கட்டுமே, கைக்கு
எட்டும் தூரம் தானே பட்டணம்.
1 comment