மழையின் ரீங்காரம் – (ஒன்பது குறுங்கவிதைகள்)

1.
தரையில் இலையுதிர்க்கால இலை
காற்றில் சுழன்றாடும் குழந்தை
விழ அஞ்சுவதில்லை இருவரும்.

2.
ஓவிய நோட்டில் வண்ணத்துப்பூச்சி
உருளுகிறது கிரேயான்
சிறகுகள் பெறுகின்றன நிறங்கள்.

3.
காற்றில் உதிருகின்றன பூவிதழ்கள்
ஆச்சரியத்துடன் சேகரிக்கிறது குழந்தை
ஓட மறக்கிறது நேரம்.

4.
அந்திப் பூங்கா
கடைசிச் சிரிப்பைத் துரத்தும் எதிரொலி
ஆளற்று அசையும் ஊஞ்சல்.

5.
மழலையின் பள்ளி முதல் நாள்
ததும்பும் கண்ணீரும், சிறு புன்னகையும்
தைரியம் ரிப்பன்கள் அணியும்.

6.
பாதி அழிந்த மணற்கோட்டை
இரக்கமற்ற அலைகள்
சிரித்தபடி மீண்டும் துவங்குகிறது குழந்தை.

7.
மழை நீர் குட்டை
பிரதிபலிப்பைத் தொடும் சிறு கைகள்
அலை அலையாய் விழிக்கும் கனவுகள்.

8.
ஓடையில் மிதக்கின்றன காகிதப் படகுகள்
வட்டங்களைத் தைக்கின்றன மழைத்துளிகள்
பயணிக்கின்றன கனவுகள்.

9.
கூரையில் மழை முணுமுணுக்கிறது
குழந்தை திருப்பி முணுமுணுக்கிறது
ஒப்புக் கொள்கின்றன வானமும் பாடலும்.

Author

  • எழுத்தாளர், கவிஞர், ஒளிப்படக் கலைஞர். பெங்களூரில் வசிக்கிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை மற்றும் ஆய்வு நிறைஞர் பட்டங்கள் பெற்றவர். சொந்த ஊர் நெல்லை. தனது வலைப்பூ மற்றும் இணைய இதழ்கள், சிற்றிதழ்கள், பத்திரிகைகளில் எழுதி வருகிறார். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை, நூல் விமர்சனம், ஒளிப்படம் ஆகிய பல தளங்களில் இயங்கி வருகிறார். இவரது ‘இலைகள் பழுக்காத உலகம்’ கவிதைத் தொகுப்பு, ‘மு.ஜீவானந்தம்’ இலக்கியப் பரிசையும், ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய' விருதையும் பெற்றுள்ளது. ‘அடை மழை’ சிறுகதைத் தொகுப்பு ‘திருப்பூர் அரிமா சக்தி’ விருதைப் பெற்றுள்ளது. இவர் எடுத்த ஒளிப்படங்களும் பல பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. அட்டை முகப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Related posts

நீலத்தின் ஐம்பது சாயல்கள் – 4

அவளும் அவனும்

ஒரு டீ சொல்லட்டுமா ஸாப்!