சீனாவில் உள்ள ஹூனான் மாகாணத்தில் 16 வயதுடைய வளர் இளம் சிறுமி ஒருவர் பிறந்தநாளுக்கு ஒரு உடுப்பு எடுத்துள்ளார்.
அந்த உடுப்புக்குள் உடல் சரியாக பொருந்த வேண்டும் என்பதற்காக இரண்டு வாரங்களாக
தினமும் கொஞ்சம் காய்கறிகளும் கூடவே வயிற்றுப் போக்கைத் தூண்டக்கூடிய மாத்திரைகளையும் உட்கொண்டு வந்துள்ளார்.
திடீரென ஒரு நாள் கால்களில் வலு சிறிதும் இல்லாமல் கீழே விழ, மூச்சுத் திணறல் ஏற்பட்டு உடனடியாக அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது ரத்தத்தில் பொட்டாசியம் அளவுகள் அபாயகரமான அளவு குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. இதன் விளைவாக தசைகள் மற்றும் நரம்புகள் இயக்க முடக்கம் ஏற்பட்டு
சுவாச செயலிழப்பு மற்றும் இதய முடக்கம் ஏற்படும் நிலை வரை கொண்டு சென்றுள்ளது.
எனினும் சரியான நேரத்தில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டதால் அவருக்கு பொட்டாசியம் வழங்கப்பட்டு உயிர்பிழைத்திருக்கிறார்.
உணவில் மாவுச்சத்து + புரதச்சத்து + கொழுப்புச் சத்து + நுண்சத்துகளான வைட்டமின்கள் + தாது உப்புகளான மினரல்கள் ஆகியவை மொத்தமும் அடங்கியிருப்பதே சமச்சீர் உணவாகும்.
ஒருவேளை நீங்கள் உடல் எடை குறைக்க விரும்பி மாவுச்சத்தைக் குறைத்தால் கொழுப்புச் சத்தை தேவையான அளவு கூட்ட வேண்டும். ஒரு போதும் தேவையான புரதச் சத்து உட்கொள்ளலில் கைவைக்கலாகாது.
மேலும் அன்றாட அத்தியாவசியத் தேவையான வைட்டமின்கள் மற்றும் மினரல்களில் கைவைத்தால் பிரச்சனை இன்னும் அதிகமாகும்.
இந்தச் சிறுமியின் விஷயத்தில் காய்கறிகள் வழியாக குறைந்த அளவு வைட்டமின்கள்+ தாது உப்புகள் ,
உடலால் கிரகிக்க இயலாத நார்ச்சத்து , கொஞ்சம் நீர் ஆகியவை மட்டுமே கிடைத்திருக்கும்.
இதனால் ஏற்கனவே உடல் நீரிழிப்பு – தாது உப்பு குறைபாடு ஆகியவற்றிற்கு தள்ளப்பட்டிருக்கும்
இந்த சூழ்நிலையில் எடையைக் குறைக்கிறேன் என பேதி ஆகும் மாத்திரைகளை வேறு உட்கொள்ளும் போது அபாய அளவு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு உடலில் உள்ள தாது உப்புகள் வெளியேறும்.
குறிப்பாக பொட்டாசியம் அளவுகள் குறைந்தாலும் கூறினாலும் ஆபத்து தான்.
பொட்டாசியம் என்பது நமது தசைகள் இறுக்கமாவதற்குத் தேவை நரம்புகள் வழியாக சமிக்ஞைகள் கடத்தப்படுவதற்குத் தேவை.
இவை அளவில் குறைந்தால் கை கால் செயலிழந்து பக்கவாதம் போன்ற நிலை ஏற்படும். மூச்சு விடுவதற்குத் தேவையான நெஞ்சு போர்த்திய தசைகளும் சரியாக வேலை செய்யாமல் மூச்சுத் திணறல் ஏற்படும், இதயத்தின் தசைகளும் வலுவிழந்து இதய செயல் முடக்க நிலை ஏற்பட்டு மரணம் சம்பவிக்கும்.
உடல் எடை அதிகமாக இருந்தால் அதை ஆரோக்கிய காரணங்களுக்காக குறைப்பது குறித்து சிந்திப்பது நற்சிந்தனை
ஆனால்
கட்டாயம் உடல் எடை குறைத்தே ஆக வேண்டும். அதையும் உடனே ஜெட் வேகத்தில் குறைத்தாக வேண்டும். திரைப்படங்களில் காணும் நடிகைகள் போல சைஸ் ஜீரோவுடன் இருந்தால் தான் அழகு என்று வெளிக்கட்டாயங்களுக்காக டயட் என்ற பெயரில் இது குறித்த கற்றறிவு பட்டறிவு அனுபவ அறிவு நிபுணரின் பரிந்துரை என்று ஏதுமில்லாமல் பலரும் டயட்டில் குதித்து வருகின்றனர்.
நான் கூறிக்கொள்வதெல்லாம் ஒன்று தான்
நமது உடல் இயக்கத்துக்குத் தேவையான மாவுச்சத்து / கொழுப்புச் சத்து உடலின் புணர்நிர்மானத்துக்கும் ஆக்கத்துக்கும் தேவையான புரதச்சத்து ஆகிய மூன்றையும் முழுமையாக நிறுத்தி விட்டு ஒரு டயட்டை யாரும் கற்பனை கூட செய்திட முடியாது.
ஆனால் அப்படி ஒரு டயட்டைத் தான் இந்த சிறுமி கடைபிடித்துள்ளார்.
இவரைப் போன்று வேறு யாரும் நமது மாநிலத்தில் இவ்வாறு இறங்கிப் பார்த்து விடக்கூடாது என்பதற்காகவே இந்தப் பதிவு.
மாவுச்சத்தைக் குறைத்தால் கொழுப்புச் சத்தைக் கூட்டுங்கள் கொழுப்புச் சத்தை அளவில் குறைத்தாலும் புரதச்சத்து உட்கொள்ளலில் குறைபாடு செய்து விடாதீர்கள்
தினசரி வைட்டமின்கள் மினரல்கள் சரியாகக் கிடைப்பதை உறுதி செய்யுங்கள்.
முறையாக கற்றறிந்து உணவு முறையை சரியாகப் பின்பற்றி எடை குறையுங்கள்
அல்லது
கற்றறிந்தோர் சொல் கேட்டு அதைப் பின்பற்றுங்கள்
வேகமாக எடை குறைவதை விடவும் உயிர் வாழ்தல் முக்கியம் மறவாதீர்கள்…
தீதும் நன்றும் பிறர்தர வாரா….
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை