மருத்துவர் பக்கம் 5 : நாய்கள் குறித்த எனது பார்வை.

This entry is part 5 of 8 in the series மருத்துவர் பக்கம்

இதில் எனது பார்வை என்பது அறிவியல்பூர்வமானதாகவும் இயன்ற அளவு ஒரு சார்பற்ற தன்மையுடையதாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறேன்.

நாய்களின் கோணத்தில் இருந்தும் மனிதர்களின் கோணத்தில் இருந்தும் இந்தப் பிரச்சனையை அணுகுவது சிறந்த முறையாகப்பட்டது. நாய்கள் குறிப்பாக தெருநாய்கள் சார்பாக நான் வழக்காட அழைத்தது சோவியத் யூனியன் 1957 இல் விண்வெளிக்கு ஸ்புட்னிக் 2 மூலம் திரும்பி வர தொழில்நுட்படம் இல்லாத காலத்தில் மீளாத பயணத்தை மேற்கொண்டு இறந்த “லைக்கா” எனும் தெருநாய்களின் பிரதிநிதி.

மனிதர்கள் சந்திக்கும் இன்னல்களைக் குறித்துப் பேச நாள்தோறும் தெருநாய்களால் இன்னல்களைச் சந்தித்து வரும் குழந்தைகளுள் ஒருவராக இறந்த இந்தியாவின் வட மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி “பிங்கி”யை பிரிதிநிதியாக ஆக்கிக் கொண்டேன்.

நாயும் மனிதனும் ஒன்றா? என்றால் படைப்பிலக்கணத்தில் உயிர்களுக்கு சம மதிப்பு உண்டு. அவை படும் துன்பத்திற்கும் சம மதிப்பு உண்டு.

14,200 ஆண்டுகளுக்கு முன்பு பான் ஓபர்கேசல் எனும் புதைவிடத்தில் மனிதனுடன் நாயும் சேர்த்து புதைக்கப்பட்டிருந்தது அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்டது. இது மனிதனுக்கும் நாய்களுக்கும் இருக்கும் நெருக்கத்தைக் காட்ட ஒரு சோறு பதம்.

உயிர் என்றால் அது அனைத்தும் சமமே. உணவுக்காக அல்லது தற்காப்புக்காக அன்றி ஒரு உயிர் இப்புவியில் மடிவது என்பது அது எவ்வுயிரானாலும் இங்கு வாழும் மனிதாபிமானம் உள்ள யாராலும் ஏற்றுக் கொள்ள இயலாதது என்பதைக் கூறிக் கொண்டு இந்தப் பதிவை எழுதுகிறேன்.

இதை எப்படிப் பேசித் தீர்ப்பது?

சரி இனி அவர்களே தர்க்கம் செய்யட்டும். தர்க்கத்தில் நிறைய அறிவியலும் அறமும் இருக்கும் என்று உறுதி கூறுகிறேன்.

லைக்கா – உலகில் தற்போது வாழ்ந்து வரும் 70 கோடி நாய்களின் சார்பாக இங்கு பேச வாய்ப்பளித்தமைக்கு நன்றி. இந்த 70 கோடி நாய்களில் சுமார் 75% எங்களைப் போன்ற தெரு நாய்கள் தான். விண்வெளிக்கு முதன் முதலில் அனுப்பப்பட்ட விலங்கு என்ற பெயர் எனக்கு என்றென்றும் உண்டு. மீளாத பயணமாக இருப்பினும் அது குறித்து எனது மனித எஜமானர்கள் அறிந்தது போல் நான் அறிந்திருக்க வில்லை. எனினும் மனித குலத்துக்கு உதவியதில் மகிழ்ச்சி

பிங்கி – நாள்தோறும் நம் நாட்டின் தெருக்களில் தெரு நாய்களால் கடிபட்டு அவதிக்குள்ளாகி அதில் மரணிக்கும் பல சிறுமிகள் மற்றும் மனிதர்களின் பிரதிநிதியாக இங்கே பேச இருக்கிறேன். லைக்கா அவர்களே, நீங்கள் மனித குலத்துக்கு செய்த நன்மையை எண்ணி வணங்குகிறேன். ஆனால் உங்களின் சந்ததிகள் தொகையில் அதிகமாகப் பெருகி இப்போது மனிதர்களுக்கு இன்னல் வழங்கிக் கொண்டிருக்கின்றனர். அதைப் பற்றி தங்களின் கருத்து என்ன?

லைக்கா – தங்களுக்கு நேர்ந்த துயரத்திற்கு உள்ளபடி வருந்துகிறேன். அது நேர்ந்திருக்கக் கூடாது. நான் கூறுவதைக் கேளுங்கள். உலகில் தற்போது வாழும் நாய்களை நான்கு வகைப்படுத்தலாம். முதல் வகை – எஜமானர்கள் முறையாக வளர்க்கும் நாய்கள் . இவை வீடுகளுக்குள் மட்டும் வைத்து உணவு , இடம் கொடுத்து பராமரிக்கப்படும் வகை. ( OWNED DOGS) .

இரண்டாம் வகை – ஒரு சமூகத்துக்குள் இருக்கும் நாய்கள் . உதாரணம் ஒரு வேலியிடப்பட்ட இடத்துக்குள் பல வீட்டுக்காரர்கள் கட்டுப்பாடாக வளர்க்கும் நாய்கள்.. மேற்கூறிய இரண்டும் சேர்த்து 25% மட்டுமே(COMMUNITY OWNED DOGS)

மூன்றாம் வகை : எந்த எஜமானரும் இல்லாமல் இன்னும் சொல்லப்போனால் எஜமானர்களால் கைவிடப்பட்டு தெரு நாய்களாகத் திரியும் 75% பேர். இந்த நாய்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. தெருவில் கொட்டப்படும் குப்பை , மனிதர்கள் விரும்பிக் கொடுக்கும் உணவுகள் ஆகியவற்றைச் சார்ந்து வாழும் நாய்கள் இவை. இவற்றை சுதந்திரமாக சுற்றித்திரியும் நாய்கள்( FREE ROAMING DOGS) என்றும் கூறலாம்.

நான்காவது வகை : முதலில் தெருக்களில் சுற்றித் திரிந்து வழிமாறி வனாந்திரங்களுக்குள் புகுந்து விட்ட நாய்கள். (FERRAL ANIMALS)

பிங்கி : லைக்கா , இதில் முதல் இரண்டு வகையைப் பற்றி எங்களுக்கு பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் மூன்றாம் வகையான இந்த சுதந்தரிமாகச் சுற்றித் திரியும் நாய்களால் தான் பிரச்சனை எங்களுக்கு. எப்படி இந்த FRD கள் உருவாகுகின்றன என்பதைக் கூறுங்கள் ப்ளீஸ்..

லைக்கா – தெருநாய்கள் தினந்தோறும் வானத்தில் இருந்து குதிப்பதில்லை என்பதை மட்டும் பணிவோடு பதிவு செய்கிறேன். இந்நாளில் சுற்றித் திரியும் பெரும்பான்மை தெருநாய்கள்/ தெரு நாயின் சந்ததிகள் ஆகியன எஜமானரின் கட்டுப்பாட்டுக்குள் வளர்க்கப்பட்ட முன்னாள் வீட்டு நாய்கள் தான் என்பதையும் சேர்த்தே பதிவு செய்கிறேன்.

பொருளாதார சிக்கல், வீடு மாறி விட்டோம், பெற்றோர் மற்றும் அப்பார்ட்மெண்ட்டில் வளர்க்க விடமாட்டேன் என்கிறார்கள் , குட்டி அதிகமாக போட்டு விட்டது – வாங்குவதற்கு ஆளில்லை, நோய் வந்துவிட்டது – பராமரிக்க இயலவில்லை என்று பல காரணங்களுக்காக தெருவில் எங்களைக் கைவிடுவதால் தான் தெருநாய்கள் என்ற ஒரு வகை உருவானது. பொறுப்புடன் நாய்களை எஜமானர்கள் வளர்த்து வருவார்களாயேனால் நாங்கள் ஏன் தெருவில் சுத்தப் போகிறோம்?

பிங்கி – நீங்கள் செய்யும் தவறுக்கு.. மனிதர்களை மட்டும் குறை கூறித் தப்பிக்கப் பார்க்காதீர்கள் லைக்கா. தெருவில் சுற்றித் திரியும் உங்களுக்கு இரக்கப்பட்டு மனிதர்கள் அன்னம் இடுகிறார்கள் ஆனால் அவர்களையே கடித்து வைத்து அவர்களுக்கும் ரேபிஸ் தொற்று ஏற்பட்டு மரணமடைந்த செய்தி பார்க்க முடிகிறது. இது பற்றி உங்களின் விளக்கம் என்ன?

லைக்கா – பிங்கி.. உங்களின் ஆதங்கம் எனக்குப் புரிகிறது. நான் மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையே ஏற்பட்ட பந்தத்தை பற்றிக் கூறினால் இங்கு நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் வனாந்திரியாக சுற்றிக் கொண்டிருந்த காலந்தொட்டே மனிதனின் பழக்கத்துக்கு கட்டுப்பட்டு அவர்களுக்கு உதவியாக ஒத்தாசையாக இருக்க வந்த வன விலங்குகளுள் முதல் இடம் – நாய்களுக்குத் தான்.

ஆம். எங்களின் மூதாதையரான ஓநாய் குடும்பத்தை விட்டு மனிதர்களுடன் இணக்கமாக வாழும் கேனிஸ் ஃபெமிலியாரிஸ் எனும் இனமாக உருமாற்றம் கண்டோம். மனிதர்களின் உயிர்வாழ்வை உறுதி செய்த வேட்டைக்குத் துணையாக நின்றோம். ஏனைய விலங்கினங்களிடம் காப்பாற்றும் தோழனாக இருந்தோம். கடந்த 10,000 வருடங்களாக நீங்கள் விவசாயத்தைக் கண்டறிந்த பின், ஆடு மாடுகளை மேய்க்கும் பேய்ப்பனாக உதவி இருக்கிறோம். வீடுகளை கள்வர்களிடம் இருந்து பாதுகாக்கும் பொறுப்பை கவனித்து வந்திருக்கிறோம்.

எனினும், எங்களின் மூதாதயைரான ஓநாய்களின் குணம் என்பது எங்களுக்கு சில நேரம் எங்களை அறியாமல் வந்துவிடும் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. அது எங்களின் இயற்கை. பல நேரங்களில், மனிதர்களால் அச்சுறுத்தல் ஏற்படுமோ என்ற எண்ணத்தில் தற்காப்புக்காகவும் தாக்குதல் நடத்தப்படுகிறது. கூடவே மனிதர்களுள் சிலரும் எங்களை சீண்டி மகிழ்ச்சி காணும் பதக்கத்துடன் இருக்கின்றனர். இது எங்களின் பழைய குணத்தைக் காட்ட உந்துதுகிறது.

பிங்கி – என்ன சொல்கிறீர்கள்? ஏதுமறியா குழந்தைகள் உங்களைச் சீண்டினார்களா? குழந்தைகளையும் தாக்குகிறீர்கள். வழியில் எதுவும் செய்யாமல் நடந்து செல்லும் பாதசாரிகளையும் கடிக்கிறீர்கள். இதற்கு காரணம் வேறு கற்பிக்கிறீர்களா?

லைக்கா – நாய்களின் இயற்கை குணத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் எங்களின் எல்லைகளை பராமரிப்பதில் மிகவும் கறாராக இருப்போம். எல்லைகளுக்குள் வரும் அந்நியர்களை எங்களின் விரோதிகளாகப் பார்ப்போம். இது எங்களின் இயற்கை. பெரிய உருவம் கொண்ட மனிதர்களாக இருப்பின் அவர்களை எங்களை விட பலமான எதிரியாக பார்ப்போம். ஆனால் குழந்தைகளைப் பொருத்தவரை அவை உருவத்தில் உயரத்தில் குறைவாக இருப்பதால் எங்களுக்கு சரிசமமான எதிரி போன்ற தோற்றம் உருவாகிவிடுகிறது. மேலும் குழந்தைகள் பயத்தில் அழுவது, அல்லது ஓடுவது எங்களின் பழைய ஓநாய் குணத்தைக் காட்டுவதற்கு உந்திவிடுகிறது. இதுவே நடக்கிறது.

மற்றபடி உணவுக்காக வேட்டையாடும் நோக்கத்துடன் குழந்தைகளையோ பெரியவர்களையோ தாக்குவதில்லை. கடந்த பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதர்களுடன் வாழ்ந்து விட்டதால் வேட்டையாடும் பழக்கம் மறந்து விட்டது. தற்போது நடப்பவை பெரும்பான்மை தற்காப்புக்காக நடக்கும் தாக்குதல்கள் என்பதைக் கூறுகிறேன்.

பிங்கி – நீங்கள் தற்காப்புக்காக என்று கூறுகிறீர்கள். அதில் எங்களைப் போன்ற அப்பாவிகளின் உயிர்கள் அல்லவா பறிபோய் விடுகிறது.
இன்னும் பலருக்கும் ரேபிஸ் எனும் கொடிய நோயைப் பரப்புகிறீர்கள். ரேபிஸ் நோய் அல்லாமல் டாக்சோகோரா கேனிஸ் ( Toxocora canis) , லெய்ஸ்மேனியாசிஸ்( Leishmaniasis) , எகினோகோக்கஸ் கல்லீரல் கட்டி ஆகிய 300 நோய்கள் பரப்பப்படுகின்றன. இது குறித்த உங்களின் விளக்கம் என்ன லைக்கா?

லைக்கா – அன்பிற்குரிய பிங்கி, நாங்கள் ரேபிஸ் நோயை விரும்பிப் பரப்புவதில்லை. நாங்களும் ரேபிஸ் வைரஸால் திப்புக்குள்ளாகிறோம்.
மனிதர்களிடையே எப்படி இன்ஃப்ளுயன்சா, கொரோனா போன்ற வைரஸ்கள் பல்கிப் பரவுகின்றனவோ அது போல ரேபிஸ் வைரஸ் நாய் இனத்திடம் பல்கிப் பெருகுமாறு இருக்கிறது. இந்தத் தொற்று நோயாக மாறும் போது வெறி நாய் நோய் ஏற்பட்டு காணும் அனைத்தையும் கடிக்குமாறு அறிகுறி தோன்றுகிறது. இதன் விளைவாக எங்களுக்கும் மரணம் ஏற்படுகிறது. நாங்கள் கடிக்கும் மனிதர்கள் உட்பட பிற விலங்குகளுக்கும் பரவுகிறது. இது முற்றிலும் துரதிருஷ்டவசமானது.

முறையாக வளர்க்கப்படும் நாய்களுக்கு அதன் எஜமானர்கள் சரியாக தடுப்பூசிகளை செலுத்தி விடுகின்றனர். தெரு நாய்களான எங்களுக்கும் இத்தகைய ரேபிஸ் தடுப்பூசிகளை முறையாக வழங்கினால் எங்களுக்கும் பாதுகாப்பை வழங்கி அது மனிதர்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் யுக்தியாக அமையும்.

பிங்கி – என்ன நாங்கள் எங்களைப் பாதுகாத்துக் கொள்ள உங்களுக்கு தடுப்பூசி போட வேண்டுமா? இதற்காக ஆகும் செலவினத்தை நாங்கள் ஏற்க வேண்டுமா?

லைக்கா – ஆம் சகோதரி பிங்கி. “ஒற்றை சுகாதாரம்” (One Health) என்பது மனிதர்களின் ஆரோக்கியம் ( Human Health) அவர்களுடன் பிணைந்திருக்கும் விலங்குகள் நலன் ( Animal Health) கூடவே சுற்றுச் சூழல் நலன் ( Environmental Health) இவற்றை வெகுவாகச் சார்ந்துள்ளது. எனவே, மனிதர்களுடன் மிகவும் இணக்கமாக வாழ்ந்து வரும் எங்களது சுகாதாரத்தை பராமரிப்பதில் தங்களின் மேலான பங்கு உள்ளது.

எங்களுக்காக சுயமாக சிந்திக்கும் திறன் இல்லை. நாங்கள் எங்களுக்கான தடுப்பூசிகளை நாங்களே சென்று மையங்களில் செலுத்திக் கொள்ளும் புலம் இல்லை. ஆனால் மனிதர்களுக்குத் தெரியும்.. தெரு நாய்களில் 70% நாய்களுக்கு ஆண்டு தோறும் ரேபிஸ் தடுப்பூசி வழங்குவது, ரேபிஸ் தொற்றை நாய்களுக்கு வராமல் தடுக்கும். இதன் விளைவாக மனிதர்களுக்கும் ரேபிஸ் பரவாது. ரேபிஸ் மரணங்கள் வெகுவாகக் குறையும். நீங்கள் பெரியம்மை நோயையும் போலியோவையும் ஒழித்ததைப் போல எங்களிடம் இருந்து ரேபிஸையும் ஒழித்து விடுங்கள். நாங்களும் ஆரோக்கியமாக இருப்போம். மனிதர்களும் ஆரோக்கியமாக இருக்கலாம்.

பிங்கி – அனைவரும் இந்த ரேபிஸ் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறோம் ஆனால் தெரு நாய்களால் தினந்தோறும் நாய்க்கடி சார்ந்த காயங்கள், நீங்கள் வாகனங்களுக்கு இடையே ஓடி அதனால் ஏற்படும் விபத்துகள், காயங்கள், மரணங்கள் என்று பிரச்சனைகள் ஏராளமாக உள்ளன லைக்கா..

லைக்கா – தாங்கள் சுமத்தும் குற்றச்சாட்டை ஏற்கிறேன். ஆனால் வாகனங்களுக்கு இடையே நாங்கள் வேண்டுமென்றே வருவதில்லை. யாரையும் தெரிந்தே மரணமடைய வைக்க வேண்டும என்ற எண்ணமும் எங்களுக்கு இல்லை. மனிதர்களில் சிலர் தெரிந்தே கொலை புரிகின்றனர் மது அருந்தி வாகனம் ஓட்டி விபத்து செய்கின்றனர். ஆனால் அத்தகைய மாபாதக செயல்களை நாங்கள் அறிந்து செய்வதில்லை
இன்னும் சொல்லப்போனால் அந்த விபத்துகளில் சிக்கி நாய்களுக்கும் படுகாயம் மரணம் ஏற்படுகிறது.

பிங்கி – நான் எந்தக் குற்றச்சாட்டு வைத்தாலும் அதற்கு ஒரு காரணத்தைக் கூறுகிறீர். இதற்கு விமோசனம் தான் என்ன? அதையும் நீங்களே கூறுங்களேன். நான் நினைக்கும் விமோசனம்- உங்கள் தெருநாய் இனத்தையே இப்புவியில் இருந்து இல்லாமல் செய்து விட்டால் என்ன?

லைக்கா – சகோதரி பிங்கி.. தங்களின் ஆற்றாமையை உணர்கிறேன். ஆனால் இவ்வளவு சினம் எங்களின் மீது வேண்டாம். நான் மனிதர்களுக்கு நாய் இனம் செய்து வந்த செய்து வரும் சேவைகளைக் கூறுகிறேன். பிறகு ஒரு முடிவுக்கு வாருங்கள். ஓநாய்கள் – நாட்டில் வளரும் நாய்களாக முதலில் பழக்கப்படுத்தப்பட்ட போது வேட்டைக்கும் பாதுகாக்கவும் பயன்பட்டன. பிறகு ஆடுகள் மாடுகளை மேய்க்கப் பயன்பட்டன. காவல் துறை மற்றும் ராணுவத்தில் வெடிகுண்டு அறியவும் திருடர்களை அறியவும் மோப்ப சக்திக்காக பணியாற்றுகின்றன.
இன்னும் மனிதர்கள் தங்களின் தனிமையைப் போக்கிக்கொள்ள மன அமைதி தரும் உற்ற நண்பனாக எங்களை வளர்கிறார்கள்.

மனிதர்களுக்கான மருந்துகள் கண்டுபிடிப்பில் இன்சுலின் எனும் உயிர்காக்கும் மருந்தைக் கண்டறிந்ததில் இருந்து தற்காலத்தில் புற்று நோய் மருத்துவ ஆராய்ச்சி வரை நாய்கள் பயன்படுகிறோம். நாய்களின் இதயங்களைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வின் முடிவாகத் தான்
மனிதர்களின் இதயத்தில் பொருத்தப்படும் வால்வுகள், பைப்பாஸ் ஆபரேசனின் போது பயன்படும் இதய நுரையீரல் இயந்திரம், ஃபிப்ரிலேட்டர் கருவி ஆகியன கண்டறியப்பட நாய்கள் உதவின என்றால் அது மிகையல்ல.

இப்போது இதய செயலிழப்பு மருந்துகள் கண்டறிய நாய்கள் பயன்பட்டு வருகின்றன. இப்படியாக பல்லாயிரம் ஆண்டுகளாக உங்களுடன் வாழ்ந்து வரும் எங்களை அடியோடு அழிப்பது என்பது அறிவியல் பூர்வமாக பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வராது. CULLING எனும் தெரு நாய்களைக் கொல்லும் முறை நீண்ட கால நாய்களின் தொகைக் கட்டுப்பாட்டுக்கு உதவாது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

பிங்கி – அப்ப தெருநாய்களான உங்கள் அனைவரையும் பிடித்து அடைக்கலங்களில் வைத்து அங்கு வளர்க்கலாமா?

லைக்கா – நீங்கள் கூறும் முறைக்குப் பெயர் “ஷெல்டரிங்” (Sheltering). இதற்கு ஒரு நாய்க்கு 12 சதுர அடி இடம் வேண்டும். இந்தியாவில் தற்போது ஒன்றரை கோடி தெரு நாய்கள் உள்ளன. இவற்றுக்கு இடம் ஒதுக்கி பராமரிப்பது என்பது மிகவும் காஸ்ட்லியான விஷயம் . இதைத் தொடர்ந்து நடத்துவதும் நடப்பில் சாத்தியமற்றது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடத்தலாம் ஆனாலும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஷெல்டரிங் முறை ஒத்துவராமல் போகலாம். மேலும், தெருநாய்கள் அதிகமிருக்கும் தெருக்களில் இருந்து பிடித்து வந்து தெருநாய்கள் குறைவாக இருக்கும் தெருக்களில் விடுவது தான் தற்காலத்தில் வளரும் நாடுகளில் நடந்து வருகிறது. இது குறைவான நேரத்தில் அந்தக் குறிப்பிட்ட தெருவில் நாய்களின் எண்ணிக்கையை அதிகரித்து இன்னும் மனிதர்களைக் கடிக்கும் தன்மை கூடுகிறது.

பிங்கி – எங்களைப் பொருத்தவரை தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பது பிரச்சனையின் தீவிரத்தை அதிகரிக்கிறது. தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அறிவியல் பூர்வமான அணுகுமுறை தான் என்னவென்று நீங்களே கூறுங்கள் லைக்கா?

லைக்கா – நான் கூறும் விஷயத்தை செவிகொடுத்துக் கேட்கும் தங்களுக்கு முதலில் நன்றி . மனிதர்களிடையே தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்த என்ன செய்யப்படுகிறது ?

பிங்கி – தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. லைக்கா – அதே தான். தெருநாய்களுக்கும் ஆண்டு தோறும் 70% நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசியைத் தொடர்ந்து தொய்வின்றி வழங்க வேண்டும். இதன் வழியாக ரேபிஸ் பரவுவதை கட்டுப்படுத்திடலாம். ரேபிஸ் வராமல் தடுக்க, நாய்க்கடியில் காயமுற்றவர்களுக்கு ரேபிஸ் தடுப்பூசிகள் வழங்கப்படுவதும் அதனால் தான்.

பிங்கி – நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த என்ன செய்வது?

லைக்கா – மனிதர்களில் அதீத மக்கள் தொகையை கட்டுப்படுத்த என்ன செய்யப்படுகிறது? மக்களை கொலை செய்வதா நடந்து வருகிறது ?

பிங்கி – இல்லை. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த மக்களைக் கொல்வது சரியான அணுகுமுறையாக இருக்க முடியுமா? நிச்சயம் முடியாது. கர்ப்பத் தடை, குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மற்றும் மாத்திரைகள், காப்பர் டி போன்றவை மனிதர்களில் பிரயோகிக்கப்படுகின்றன.

லைக்கா – அதே தான் எங்களுக்கும் செய்ய வேண்டும். அதுவே அறிவியல் பூர்வமானது. நாய்களுக்குக் கருத்தடை சிகிச்சை செய்து மீண்டும் தெருவில் விட்டுவிடுவது கூடவே ரேபிஸ் தடுப்பூசி வழங்குவது இதை முறையாகச் செய்தால் காலப்போக்கில் தெருநாய்கள் குறையும்
ஆனால் முற்றிலும் இல்லாமல் போகாது.

பிங்கி – இந்த அறிவியல் பூர்வமான அணுகுமுறைகளைக் கடைபிடித்து தெருநாய்களைக் கட்டுப்படுத்திட வேண்டும். ஏன் தெருநாய்கள் முற்றிலும் இல்லாமல் போகாதா? அப்படி போய் விட்டால் நன்றாக இருக்குமே.

லைக்கா – இதற்கும் காரணம் மனிதர்களாகிய நீங்கள் தான். நாய்களை வளர்க்கிறேன் என்று வாங்கி அதை முறையாகப் பராமரிக்காமல் கைவிட்டு தெருநாய்களாக மாற்றுவது மனிதர்கள் தான். எனவே நாய்களை வாங்கும் போது அதிக வரி விதிக்கும் முறையையும், நாய் வளர்ப்போரைக் கண்காணிப்புக்குள் கொண்டு வரவும், அவர்கள் பொறுப்புடன் நாய்களை வளர்த்து வருவதை உறுதி செய்வதும் சட்டப்படி முக்கியமாகிறது. இதை அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

நாய்கள் வளர்ப்பது நல்லது தான். அவற்றுக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து சரியாக வளர்ப்பது அதை விட நல்லது. கூடவே தங்களின் நாயால் பிறருக்கு துன்பம் நேராமல் வளர்ப்பது தான் மிகவும் முக்கியம். இதை சட்டம் உறுதி செய்ய வேண்டும்.

பிங்கி – இப்போது நானும் என்னுடன் இதைப் படிக்கும் என் சகோதர சகோதரிகளும் உண்மையான நிலையைப் புரிந்து கொண்டோம். நாம் இனி செய்ய வேண்டியது இது தான். சில முக்கிய யோசனைகள் எனக்குப் படுறது. மக்கள் நல அரசு – தெருநாய்களைக் கட்டுப்படுத்துவதைத் தனித்துறையாக அறிவித்து அதை செயல்படுத்தத் தேவையான நிதி, கட்டுமானங்கள், கால்நடை மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்ட பணியிடங்களை உருவாக்கி இதை மட்டுமே வேலையாகச் செய்யப் பணிக்கலாம்.

இந்தத் துறை

  • தெருநாய்கள் கண்காணிப்பு
  • வளர்ப்பு நாய்கள் கண்காணிப்பு
    வளர்ப்பு நாய்களுக்கான உரிமம் வழங்குதல், சட்டம் மீறுவோர்க்கு அபராதம் விதித்தல்
  • நாய்களுக்கு சிப் பொருத்தி கண்காணித்தல்
  • நாய்களுக்கு தடுப்பூசி வழங்குதல்
  • கடிபட்ட மனிதர்களுக்கு உடனடியாக தடுப்பூசி வழங்குதல் அதுகுறித்த விழிப்புணர்வு அதிகரித்தல்
  • நோயுண்ட நாய்களை அப்புறப்படுத்தி அடைக்கல மையங்களில் சிகிச்சை அளித்தல்
  • ரேபிஸ் வந்த நாய்களை/ வெறி பிடித்த நாய்களை உடனே அப்புறப்படுத்தி அவை இறக்கும் வரை தனிமைப்படுத்துதல்.
  • நாய்களுக்கு கருத்தடை சிகிச்சையைச் செய்தல்.
  • மக்களுக்கு ரேபிஸ் குறித்தும், பொறுப்பான நாய் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
    ஆகிய பணிகளைத் தொடர்ந்து செய்து வர வேண்டும்.
    -தெருநாய்களை தத்தெடுப்பதை ஊக்குவித்தல் அப்போது, பொறுப்பான, சட்டத்துக்கு கட்டுப்பட்ட நாய் வளர்ப்பால் புதிதாக தெருநாய்கள்
    உருவாவது தடுக்கப்படும்.

இருக்கும் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி வழங்கப்படுவதால் அவற்றுக்கு ரேபிஸ் தொற்று பரவாது. கூடவே கருத்தடை அறுவை சிகிச்சையும் செய்யப்படுவதால் இனப்பெருக்கம் செய்யாமல் இப்போது வாழும் நாய்கள் அதன் ஆயுட்காலம் வரை வாழ்ந்து இறக்கும். இதற்கு CAPTURE NEUTER VACCINATE RETURN என்று பெயர் .சுருக்கமாக CNVR. அதோடு கொஞ்சம் கொஞ்சமாக நாம் தெருநாய்களைக் கட்டுப்படுத்திட முடியும்.

லைக்கா வழியாகவும் பிங்கி வழியாகவும் இப்போது நிலவும் மனிதர்கள் – நாய்களிடையே நிலவும் உடல் சார்ந்த மனநலம் சார்ந்த உளவியல் சார்ந்த பிரச்சனைகளை அறிவியல் ரீதியாக பேச எத்தனித்தேன்.

தெரு நாய்க்கடியால் ரேபிஸ் தொற்று ஏற்பட்டு மக்கள் மரணிக்கும் போதும் , குழந்தைகள் கடிக்கப்பட்டு இறக்கும் போதும் மனம் துடிதுடித்துப் போகும். உணர்ச்சிப் பெருக்கில் அவற்றைக் கொன்று போட்டால் என்ன? என்றும் நமக்குத் தோன்றும். ஆனால் அறிவியல் பூர்வமாகவும் மனிதாபிமான வழியாகவும் அது தீர்வன்று.

மாறாக கருத்தடையும் கூடவே தடுப்பூசியும் நோயுண்ட நாய்களுக்கு அடைக்கலம்/தனிமைப்படுத்துதல் இதுவே தீர்வாக அமையும் என்று நம்புகிறேன். நான் நாய்கள் நல ஆர்வலரோ நாயை வளர்த்தவனும் அல்லன். நாய்கள் வளர்ப்பவர்களையோ நாய்களையோ வெறுப்பவனும் அல்லன். அன்றாடம் தெருவில் பயணம் செய்பவன். எனது பிள்ளைகளும் தினந்தோறும் தெருவில் நடந்து செல்கிறார்கள்.

அதிகரித்து வரும் தெரு நாய்களால் சிக்கல்களை அன்றாடம் அனுபவிப்பவன் தினந்தோறும் வரும் ரேபிஸ் மரண செய்திகள் கூடவே குழந்தைகள் மரண செய்திகளை பார்த்து பதட்டம் கொள்ளும் சராசரி குடும்பஸ்தன். எனினும் நான் நவீன அறிவியல் பேசுபவன்- மனிதாபிமானமும் அனைத்துயிர்களும் சமம் என்ற கருதும் மருத்துவன் என்பதால் எனது விருப்பு வெறுப்பு கடந்து அறிவியல் பார்வையில் இந்தப் பிரச்சனையை நோக்கியிருக்கிறேன். பொறுமையாகப் படித்த அனைவருக்கும் நன்றி.

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

இப்பதிவுக்காகப் படித்த ஆய்வு கட்டுரைகளில் சில…

  1. Matter H., Daniels T. Dog ecology and population biology. In: Macpherson C.N.L., Meslin F.X., Wandeler A.I., editors. Dogs, Zoonoses and Public Health. CABI Publishing; New York, NY, USA: 2000. pp. 17–62.
  2. International Companion Animal Management Coalition (ICAM) Humane Dog Population Management Guidance. ICAM; UK: 2008.
  3. Tasker L. Stray Animal Control Practices (Europe) WSPA and RSPCA; London, UK: 2007
  4. Hiby E., Atema K.N., Brimley R., Hammond-Seaman A., Jones M., Rowan A., Fogelberg E., Kennedy M., Balaram D., Nel L., et al. Scoping review of indicators and methods of measurement used to evaluate the impact of dog population management interventions. BMC Vet. Res. 2017;13:1–20
  5. Morales C., Férnandez C., Hernández H., Falcón N. Dog bite accidents in a children hospital at Lima, Peru. Retrospective study from 1995–2009. Rev. Peru. Med. Exp. Salud Publica. 2011;28:639–642
  6. Totton S.C., Wandeler A.I., Ribble C.S., Rosatte R.C., McEwen S.A. Stray dog population health in Jodhpur, India in the wake of an animal birth control (ABC) program. Prev. Vet. Med. 2011;98:215–220
    7.Reese J. Dogs and dog control in developing countries. In: Salem D., Rowan A., editors. The State of the Animals. Humane Society Press; Washington, DC, USA: 2005. pp. 55–64
  7. Bögel K., Frucht K., Drysdale G., Remfry J. World Health Organisation Guidelines for Dog Population Management. WHO; Geneva, Switzerland
  8. Totton S.C., Wandeler A.I., Zinsstag J., Bauch C.T., Ribble C.S., Rosatte R.C., McEwen S.A. Stray dog population demographics in Jodhpur, India following a population control/rabies vaccination program. Prev. Vet. Med. 2010;97:51–57
  9. Yoak A.J., Reece J.F., Gehrt S.D., Hamilton I.M. Disease control through fertility control: Secondary benefits of animal birth control in Indian street dogs. Prev. Vet. Med. 2014;113:152–156
Series Navigation<< மருத்துவர் பக்கம் – 4: பழங்களும் பாதகங்களும்மருத்துவர் பக்கம் 6:- வாயுத் தொல்லை >>

Author

Related posts

வழி நடத்தும் நிழல்கள்

நல்லாச்சி – 12

அசுரவதம்: 12 – காம நெடுங்கதவின் திறப்பு