ராகவனை முதன்முதலாகத் துபாயில் சந்தித்தேன். அவனைச் சந்திக்குமுன்னரே அவனைப் பற்றிய சிறப்பம்சங்கள் – வியப்பின், ஆர்வத்தின் ஒன்று சேர்ந்த கலவையாக – என் காதுக்கு எட்டியிருந்தன. அனைவரும் அவனின் எதிர்காலம் கணிக்கும் திறனைச் சிலாகித்தனர். ஒரு வரைபடம் போல கைரேகையை வாசிப்பான் என்று வர்ணித்தனர். இவற்றுக்கெல்லாம் மேலாக, துபாய்க்கு வந்து காப்பீட்டுத் தரகு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த ஆறு மாதம் முடிவதற்குள் அவன் செய்து வந்த வேலையை இழந்தான் என்று வம்பு பேசினர்.
அவனைச் சந்தித்த முதல் சந்திப்பிலேயே எனக்கு ரெய்கி செய்ய வேண்டுமாய் கட்டாயப்படுத்தினான் – செய்து காட்டும் விழைவினாலோ, நிரூபிக்க வேண்டும் என்ற உந்துதலினாலோ அல்ல என்பது உணரக் கூடியதாய் இருந்தது. அவனிடம் இருந்ததை என்னுடன் பகிர வேண்டும் என்ற இயல்பான ஆர்வம் வெளிப்பட்டது.
அவன் தன்னுடைய உள்ளங்கையை என் நெற்றிக்கு ஈரங்குலங்களுக்கு மேல் வைத்தான். கிட்டத்தட்ட ஒரு குழந்தையின் காதுக்கருகில் வந்து விளக்குபவனைப் போல பரிவான, மென்மையான குரலில் சொன்னான்:
“ரெய்கி என்பது நான் உனக்கு அளிக்கும் ஆற்றல் என்று நினைக்கிறார்கள். அது சரியானதல்ல. உன் உடல் உன்னிடமிருந்து மறைப்பதை நான் உணர்வது தான் ரெய்கி. அதற்கு நான் நுண்துளைகளுள்ளவனாக இருக்க வேண்டும்.”
சிறு இடைவெளி விட்டு, அவனது கையை என் தலை மீது வைத்திருக்கும் விதத்தை மாற்றினான்.
“உன்னில் நுண்துளைகள் ஏற்படுமானால் அப்போது நீ கசியத் தொடங்குவாய்”
அவனது விரல்கள் சற்று அதிர்ந்தன. அவன் தன் வாயால் பேசியதை விட அவன் விரல்களின் அதிர்வு எனக்கு உணர்த்திய உண்மை அதிகம். அடுத்தவர்களுள் படர்ந்திருக்கும் கலக்கத்தைப் புலன்களால் உணர்ந்து கொள்ளும் அவனால் அவனுள்ளில் உறைந்திருக்கும் தடுமாற்றத்தை உணர முடியாதோ? என்ற கேள்வி என்னுள் எழுந்தது. மற்றவர்களின் கலக்கத்தை நிம்மதியாக்கும் வரை பேசத் தெரிந்தவன்; தனது சொந்த நிம்மதிக்கான கதவை எப்படித் திறப்பது எனத் தெரியாமல் இருப்பவனோ.
சில மாதங்களுக்குப் பின்னர் வேலை நிமித்தம் எனக்குப் பஹ்ரைனுக்குச் செல்ல வேண்டியிருந்தது. மனாமாவில் ஒரு சிற்றுண்டி நிலையத்தில் விபத்தாக ராகவனைப் பார்த்தேன். அவனுக்கு பஹ்ரைனில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் வேலை கிடைத்திருந்தது. அதைச் சொல்லும் போது அவன் குரலில் பெருமிதமில்லை, நிம்மதி இல்லை. தட்பவெப்ப நிலையின் மாற்றத்தை அறிவிப்பவன் போல தட்டையாகப் பேசினான்.
நாங்கள் உட்கார்ந்திருந்த சிற்றுண்டி நிலையம் அவனுடைய அலுவலக கட்டிடத்துக்கு எதிராக இருந்தது. எப்படியோ எங்கள் உரையாடல் கைரேகை பார்ப்பது குறித்துத் திரும்பியது. என் வலது உள்ளங்கையை தன் கைகளால் உயர்த்திப் பிடித்துக் கொண்டான்.
“முக்கால்வாசி பேர்கள் இந்த ரேகைகள் நமது எதிர்காலத்தைக் காண்பிப்பதாக நினைக்கின்றனர். அது உண்மையில்லை. நமது ஆன்மாவின் பழக்கங்களைக் காட்டுகின்றன இந்த ரேகைகள். உன்னுள்ளில் எதுவும் மாறாமல், உன் முன்னால் நடப்பவை எதுவும் மாறப்போவதில்லை.”
என் கட்டை விரலுக்கருகே மங்கலான ரேகைக்கு மேல் தன் விரலை மேவினான். “தைரியத்துக்கு எதிர்வினையாற்றுகிறது இந்த ரேகை” என்று முனகினான். “அதிர்ஷ்டம், விதி- இவற்றுக்கெல்லாம் இல்லை. தைரியத்துக்கு மட்டும்.”
அவனுடைய வாழ்க்கை அவனுக்கு எதையும் திருப்பித் தராமல், விடாமல் அவனிடமிருந்து கோரும் ஒற்றை விஷயம் தைரியந்தான் எனும் திடீர் பிரக்ஞையை அடைந்தவனைப் போல் என் கையை விடுவித்தான். மற்றவர்களின் வாழ்க்கையை ரேகைகளின் வழி படிக்கத் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளும் இவன், தன்னுடைய வாழ்க்கையின் ரேகைகள் எங்கே தொடங்கி எங்கே முடிகின்றன என்பதை மட்டும் பார்க்கத் தயங்குகிறான் என்ற தோணல் என்னுள்.
பஹ்ரைனிலிருந்து கிளம்பும் தினத்தன்று, நாங்கள் காபிக் கடையை விட்டு வெளியே வந்த போது, தயக்கத்துடன் பெயரிட்டு அழைத்து என்னை நிறுத்தினான்.
“உனக்கு ஆட்சேபணை இல்லையென்றால், என் மனைவி லதாவிடம் கொடுப்பதற்காக ஒன்றை உன்னுடன் எடுத்துச் செல்வாயா?”
சிறிய உறையொன்றை நீட்டினான். இரண்டாக மடிக்கப்பட்ட, அதிகமாகக் கையாளப்பட்டுச் சுருங்கிய மூலைகளுடன் இருந்தது அந்த உறை. ராகவன் வேலை செய்த நிறுவனத்தின் சின்னம் உறையில் அச்சிடப்பட்டிருந்தது.
“இந்த மாதம் சேமித்த தொகை.”
நான் சிரித்துக்கொண்டே அதை ஏற்றுக்கொண்டேன். “நிச்சயமாக.”
நாள் முழுவதும் அந்த எண்ணத்தைச் சுமந்து கொண்டிருந்த ஒருவனின் நிம்மதியுடன் அவன் அப்போது பெருமூச்சு விட்டிருக்கக் கூடும்!
ராகவன் கொடுத்த முகவரி அல் கராமாவில் இருந்தது. லதா கதவைத் திறந்தாள். ஒரு மாதத்தை அதன் பாதி பட்ஜெட்டில் எப்படி ஓட்ட வேண்டும் என்று தெரிந்த ஒரு பெண்ணின் அமைதியுடன் மெல்லிய தலையசைப்புடன் நான் எடுத்து வந்திருந்த உறையை வாங்கிக் கொண்டாள்.
“அவர் எப்போது வருவார்?” என்று நான் கேட்டேன்.
“அவர் அங்கே ஒரு நிதி நிறுவனத்தில் இரண்டு மாதம் முன்னர் சேர்ந்தார். முதல் வருடத்தில் சம்பளத்துடன் விடுப்பு எடுக்கும் வசதி இல்லை. எப்படியாவது நாங்கள் சமாளிப்போம்.”
புன்னகையுடன் உதிர்த்தாளெனினும் அவர்கள் இருவரும் சுமந்து கொண்டிருந்த எடைக்கு எதிர்மாறாகக் கடைசி இரண்டு வார்த்தைகள் மெல்லியதாக ஒலித்தன.
ஒரு வருடம் கடந்து போனது.
ஒரு நாள் மதியம், நண்பர்களின் அரட்டையில் ராகவனின் பெயரை யாரோ எடுத்தார்கள். ‘இன்னமும் பஹ்ரைனில்தான் இருக்கிறானா?’ என யாரோ கேட்டனர். பதில் அங்கிருந்த ஒருவருக்கும் தெரியவில்லை. எனக்கும் தெரிந்திருக்கவில்லை.
அவன் இப்போது எங்கே இருக்கிறான்? என்பதை உறுதிப்படுத்த நான் அவனது வீட்டுத் தொலைபேசி எண்ணை அடுத்த நாள் டயல் செய்தேன்.
லதா பதிலளித்தாள்.
“அவர் வீட்டில்தான் இருக்கிறார்.”
அவள் குரல் சீராக இருந்தாலும், அடிக்கடி ஒத்திகை பார்க்கப்பட்ட உறுதித்தன்மையுடன் ஒலித்தது.
நல விசாரிப்புகளைத் தொடர்ந்து ஓர் இடைநிறுத்தத்திற்குப் பிறகு அவள் சொன்னாள்:
“அவர் நல்ல விஷயங்களைச் சொல்கிறார் – அண்டை வீட்டார், கட்டிடத்தில் உள்ள ஆண்கள், அவரிடம் வருபவர்கள் என அனைவருக்கும். அவர் பாசிடிவ்வான விஷயங்களைப் பேசுகிறார். விடை பெற்றுச் செல்லும் போது அவர்கள் கனத்தை இழந்து லேசாக உணர்கிறார்கள். சில நேரங்களில் இவர் அவர்களிடம் பேசுவதை நான் சமையலறையிலிருந்து கேட்கிறேன். நானும் அவரைக் கிட்டத்தட்ட நம்பிவிடும்படி இருக்கும்.”
தொலைபேசியினூடே அவள் மூச்சு லேசாக நடுங்கியது.
“ஆனால் கைரேகை பார்க்க வந்தவர்கள் போனவுடன், இனிப்புணர்வும் அவர்களுடன் சென்று விடுகிறது. குன்றிமணி அளவுக்குக் கூட இனிமை இங்கே தங்காது. கை நிறையச் சம்பளமும் மனதெங்கும் நிம்மதியும் என்று திரும்பும் என்று நான் ஏங்கிக் கொண்டிருக்கையில் உள்ளங்கையைக் காட்ட இன்னொருவர் யாராவது வந்து விடுவார். இவர் மறுபடியும் பேச ஆரம்பித்து விடுவார் “
சிறிது நிசப்தம்.
சற்றுத் தயங்கிப் பின்னர் அமைதியான, சோர்வான கசப்புடன் சொன்னாள்:
“பள்ளி செல்லும் பதினைந்து வயதாகும் மகளின் விரல்களில் சில மாதங்களாக நுட்பமான நடுக்கம். எழுதுகிற போதும், பேனாவைப் பிடிக்கிற போதும், எல்லாமே கைநழுவிச் சிதறுகிறது. ஒரு நாளில் தீரப்போவதில்லை என மருத்துவர்கள் சொல்கிறார்கள்… மெதுமெதுவாக வாழ்க்கை முழுதும் திருப்பிப் போடப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவள் சிரித்துச் சிரித்து இதை மறைத்துச் சமாளிக்கிறாள். நாங்களும் அதே போல நடிக்கிறோம்.”
“சந்தைக்காக மிகச்சிறந்த இனிப்புகளைத் தயாரிக்கும் ஒரு மிட்டாய்க்காரனுடன் வாழ்கிறேன் நான். வாடிக்கையாளர்கள் வருகிறார்கள், ருசிக்கிறார்கள், சிரிக்கிறார்கள், அவரைப் பாராட்டுகிறார்கள். ஆனால் சர்க்கரை படிந்த கைகளுடன் மிட்டாய்க்காரன் வீடு திரும்பி விடுவான். அவனுக்கு சாப்பிட இனிப்பு எதுவும் இருக்காது.”
உள்ளிருந்து ஓர் இளம்பெண் கூப்பிட்ட குரல் கேட்டது. மகளாக இருக்கக்கூடும். லதா தொலைபேசி உரையாடலை முடித்துக் கொண்டாள். தொலைபேசியை வைத்த பின்னரும் லதாவின் வார்த்தைகள் தொடர்ந்து என்னுடன் பேசின. ராகவனுள் இருந்த வெற்றிடம் கொஞ்சங்கொஞ்சமாக தென்படத் தொடங்கியது.
அன்று மாலையில் ராகவன் போன் செய்தான். பஹ்ரைனில் அவனைச் சந்தித்தபோது இல்லாதிருந்த குரலமைதி அவனிடம் திரும்பிய மாதிரி இருந்தது. பஹ்ரைனிலிருந்து திரும்பியபின், துபாயில் அவனுக்கு வேலை, வருமானம் எதுவும் இல்லை; வருமானம் இல்லாமல் அவன் நாட்களை ஜோதிடத்திலும், கைரேகை பார்ப்பதிலும் செலவழிப்பதை லதா குறிப்பால் உணர்த்தியதைத் தெரிந்ததாக நான் அவனிடம் காட்டிக் கொள்ளவில்லை.
“நான் மீண்டும் பல வருடங்களுக்குப் பிறகு ஜோதிடம் பார்க்கத் துவங்கியுள்ளேன்” என்றான்.
“மக்களுக்குப் பிடித்துக் கொள்ள ஏதாவது தேவையாய் இருக்கிறது. எனவே நான் அவர்களுக்கு எதிர்காலக் கணிப்பு என்னும் இனிமையான தணிப்பைக் கொடுக்கிறேன். புத சந்திர யோகம் ஒருவரின் ஜாதகத்தில் இருந்தது. ‘வானிலை மையத்தில் வேலை செய்கிறீர்களா?’ என்று அவரிடம் கேட்டேன். ஆச்சரியப்பட்டார். சரியாக கண்டுபிடித்ததற்குப் பாராட்டினார். வானிலை மையத்தின் போக்குவரத்து ஒப்பந்தக்காரராம்.” – போனில் சிரிப்பொலி. ராகவனுடைய நகைச்சுவை எனக்குப் புரியவில்லை. எப்போதுமே தீவிரமாக இருப்பவனின் நகைச்சுவை ஒரு முகமூடி.
“நீ அவர்களுக்காகக் கணிக்கும் விஷயங்கள் பலிக்கின்றனவா?” என்று நான் கேட்டேன்.
சிறிது மௌனம் நிலவியது.
அவன் கூறினான்: “யாரும் என்னிடம் சொல்ல மாட்டார்கள். அதை அவர்கள் சொல்லாமல் இருப்பதே நல்லது…. நானும் என் வீட்டுப் பிரச்னைகளை யாரிடமும் சொல்லாதிருப்பது போல.. ‘எப்போது நல்லநேரம் வரும்?’ என என்னைக் கேட்க வருபவர்களுக்கு ஜாதகக் கட்டத்தில் கிரக நிலையைப் பார்த்துச் சொல்கிறேன்…நல்லநேரம் வராது என்று சொல்லத் தேர்வுரிமை இல்லை…சனியோ, பாம்பிரட்டையரோ, கெட்ட கிரகங்களின் ஆதிக்கம் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையை அளித்துத்தான் ஆக வேண்டியுள்ளது…விழுங்கத் தக்க ஒன்றைக் கேட்க மட்டுமே அவர்கள் விரும்புகிறார்கள்”
திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான விஷயங்களைச் சொல்லி மந்தமாகிவிட்ட – சோர்வான அவநம்பிக்கையின் குரலாக அவனது குரல் தாழ்ந்தது. லதா பகிர்ந்த மகளின் நரம்பியல் கோளாறு குறித்து அவன் எதுவும் கூறவில்லை.
அந்த தருணத்தில் நான் அவனைத் தெளிவாகப் புரிந்து கொண்டேன்.
எதிர்காலத்தின் மிட்டாய் தயாரிப்பாளனாக அவன் இருக்கிறான் – சர்க்கரையான கணிப்புகளை வழங்குகிறான். அவற்றை தோல்வி, ஏமாற்றம் எதுவும் கலக்காமல் வடிவமைக்கிறான். ஆறுதல் தேடுவோருக்கு அதை அளிக்கிறான். அவன் சொல்வதைக் கேட்டு அவர்களின் மனம் பாரம் குறைந்து மகிழ்வடைகிறது.
தயாரித்த இனிப்புகளில் அல்ல, எஞ்சிய துளி வாசனையில் – அவனது சொந்த கைகளில் படிந்த சர்க்கரையின் வாசத்தில் – அவன் வாழ்கிறான்.
அவனது கணிப்புகள் எப்போதாவது யாருக்காவது உண்மையாகியுள்ளதா என்பது பொருட்டல்ல – துளி நம்பிக்கையைத் தவிர அவை மற்றவர்களுக்கு அளிப்பது வேறொன்றுமில்லை. தனக்கான நம்பிக்கையாக, தனது வாழ்க்கைச் சிக்கல்களின் தீர்வுச் சின்னங்களைத் தேடும் பயணமாக அது துவங்கியிருக்கலாம். ஆனால் இன்றோ, மற்றவர்களுக்காக வடிவமைத்த நம்பிக்கை என்னும் ஒரு மருந்துப்போலியை சுவாசித்து மட்டுமே நாட்களைக் கடத்துகிறான். மக்களுக்கு அந்த இனிப்பு தேவைப்படுகிறது. ராகவனுக்கு அதை எப்படித் தயாரிப்பது? என்பது தெரியும்.