“ம்..” 2

This entry is part 2 of 5 in the series "ம்.."

விடிந்தாலே எல்லா உயிரினங்களுக்கும் பசிக்கும் போலிருக்கிறது. நீல வானில் பறவைகள் இடம் வலமாகச் செல்கின்றன. பக்கத்து மரத்தில் ஒரு அணில் தாவித் தாவி ஏதாவது பழமோ கொட்டையோ கிடைக்குமா? எனப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒரு மூலையில் காகம் ஒற்றைக் கண்ணை உருட்டி ஏதோ நினைவில் மரத்தைக் கொத்துகிறது. நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பகலில் எங்களுக்கு உத்வேகம் கம்மி என்று சட்டமாம்.. யார் சொன்னார்கள்? நாங்கள் அதற்காக அமெரிக்காவா போக முடியும்?.

கீழே நடப்பதைப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். போரடிக்கிறது. பறக்கவும் முடியாது. அதற்கு நிறைய ம்.. புண்ணியம் செய்திருக்க வேண்டுமாம். நான் பாவம்தான் செய்திருக்கிறேனாம்.

ம்..

என்ன. ம் என்று எத்தனையோ வார்த்தைகள் இருக்கிறதே. இன்பம் , துன்பம், மோகம், சரசம், காமம் , வேகம், விவேகம், தாகம், வேண்டும், வேண்டாம். நான் ஆசைப்பட்டதை யாரும், ‘ம்.. வாங்கித்தருகிறேன்’ என்று சொன்னதே இல்லை. நான் ஆசைப்படாமல் இருந்தபோது வேகமாக என்னை வந்து தழுவியது அந்த ம்.. மரணம்.


“இந்தாள்னா யாரு?”

“பேரு பார்கவன் சார். நம்ம ஓனர் பத்மவாசனோட ஃப்ரெண்ட்”

இதற்குள் பைப்பில் நீர் வர முகம் கழுவப்பட, தெளிவானது. காயம் எதுவும் இல்லை. நடுத்தர வயது நபர். கழுத்தில் மட்டும் கன்னிப் போய் இருந்தது.

“என்ன நினைக்கிறீர்கள் டாக்டர்?”

“என்ன சொல்ல? ஏதோ அதிர்ச்சியாய்த்தான் இருக்கும். காயங்கள் எதுவும் வெளியில் தெரியவில்லை. ஆனால், கழுத்து திரும்பி இருந்த விதம் சாதாரண அடி போலத் தெரியவில்லை.” என்றார் டாக்டர் கருணாகரன்.

“இவர் எப்படிய்யா வந்தார் இங்கே?”

“இவர் கிட்ட பண்ணை வீட்டுச் சாவி இருக்கு சார்,. இங்கதான் ரெண்டு கிலோ மீட்டர்ல வீடு. முன்னால் எல்லாம், மாசத்துக்கு ரெண்டு முறை வருவார், இப்போ அடிக்கடி வரதில்லை.ஆனா நேத்திக்குப் பார்க்கலை. பசங்க பார்த்தாங்களான்னு கேக்கணும்”

பண்ணை வாசலில் போலீஸ் வேன் வந்து நிற்க அதிலிருந்து இரண்டு நாய்கள், கூடவே இரண்டு காக்கி அரை ட்ராயர் டிஷர்ட் அணிந்த இரு மேய்ப்பர்கள் இறங்கினர். கதிரேசனிடம் திரும்பினார் ஸ்ரீநி.

“இந்தப் பண்ணை எவ்வளவு விஸ்தீரணம்?”

“ஆறு ஏக்கர் சார். இந்தப் பக்கம் தென்னந்தோப்பு, பின் கடந்தால் மாந்தோப்பு 110 மரம். இரண்டைத் தவிர மற்றதெல்லாம் குத்தகை. தாண்டினால் வாழைத் தோப்பு. இடதுபுறம் கரும்புத் தோட்டம். அங்கே போவது கஷ்டம், கரு நாகங்கள் இருக்கும். வாழைத்தோப்பைத் தாண்டி 40 தேக்குமரங்கள் இருக்கின்றன. அதற்கப்புறம் பலாத்தோப்பு. நாங்கள் ஒரு பத்துப் பேர் பார்த்துக் கொள்கிறோம் சார்.”

“மத்தவங்கள் எல்லாம் எங்கே?”

“வந்துட்டாங்க. அவங்க ரொட்டீன் வேலை பார்ப்பதற்காகப் போய் இருக்காங்க”

“அவங்க எல்லாரையும் விசாரிக்கணும். இப்போ பண்ணையைக் காட்டுங்கள், இதோ நாய்களும் வந்துவிட்டன”

நாய்கள் – அழகாய் மர நிறத்தில் கொஞ்சம் கருப்பு கலந்து குட்டிக்குட்டி ஜெர்ஸிக் கன்றுகளைப் போல புஷ்டியாய் இருந்து, ‘ஹ்.. ஹ்’ எனக் கழுத்தில் பட்டையுடன் ஓடி வந்தன. பாலகணேஷ் புன்சிரித்து, ‘மாறா, வீரா.. வா.. வா’ எனச் சொல்ல கொஞ்சம் முறைத்து பின் முகர்ந்து வாலை ஆட்டின.

“இதுங்களோட சின்ன வயதிலிருந்தே பாலகணேஷ் சார் பார்த்துருக்கார். அவர்தான் சரித்திரத் தமிழ்ப்பெயர்லாம் வெச்சார்.. ஆக்சுவலா அப்போ ஒரு சரித்திர நாவல் எழுதிக்கிட்டு இருந்தார்” என்றான் அரைட்ராயர் ட்ரெய்னர்.

“சரி. இதான் பாடி இருக்கற இடம். கொஞ்சம் அந்தப் பக்கம் ஸ்மெல் பண்ணி ஓட விடு. சைந்தவி, ஆம்புலன்ஸ் எங்க இருக்குன்னு பாரு, பாடியைப் போஸ்ட்மார்ட்டத்துக்கு அனுப்பணும்” என்றார் ஸ்ரீநி

“பத்து நிமிஷத்துல வந்துடுவாங்க சார்” என்றாள் போனில் பேசி முடித்த சைந்தவி, கூட வந்த டாக்டர் மற்றும் பாலகணேஷிடம்.

“பார்த்தீங்களா. இதான் வாழ்க்கை. நேற்றிருப்பார் இன்று இல்லை.

ஆவியாய் ஆனபின் ஆவது என்னவாம்
ஆவியாய்ப் போவதும் அல்பமாம் வாழ்க்கையே
ஆவியில் தோய்ந்துதான் ஆண்டவன் நினைக்கையில்
ஆவியாய் மாறுதல் அடைவதும் ஆகுமோ.

ம்.. உசுரோட இருக்கறச்சே அப்பப்ப ஆண்டவனை நினச்சுக்கணும். அப்படின்னு, திருமந்திரத்தில சொல்லியிருக்கு”

“டாக்டர் சிஐ இட்லி பத்திப் பேசறார்னு நினைக்கிறேன்” என்றார் ஃபாரன்ஸிக் பாலகணேஷ்.

“எப்படி?” நடந்து கொண்டே டாக்டர் கருணாகரன் கேட்டார்.

“ஆவில வேக வைக்கண்ணு வருதே!”

சிரித்த சைந்தவி ஸ்ரீநியிடம், “சார் ப்ளீஸ்.. பாரன்ஸிக்கும் டாக்டரும் பாவம் சார்” என்றாள். ”ஒண்னு திருக்குறள், இல்லைன்னா கம்ப ராமாயணம், இல்லைன்னா திருமந்திரம். ஆனா நீங்க சொன்னது உங்க சொந்தச் சரக்கு. திருமந்திரம் இல்லை.. அது சரி.. பார்க்கவன் ஆவியாய் எப்படி அலைவார்னு நினச்சீங்க?”..

“அகால மரணம்.. இல்லியா சைந்தவி?” எனச் சொல்கையிலேயே மாந்தோப்பிற்கு வந்திருந்தார்கள். மாறன், வீரன் இருவரும் கண்களைச் சுழற்றி, ‘ஹ்.. ஹ்’ என்று முன்னே போய்ப்போய் வாழைத் தோப்புக்குள் நுழைந்து, பின்னர் அதைத் தாண்டி தேக்கு மர வரிசைக்குள் போகாமல் இடதுபுறம் திரும்ப அங்கே சில மரங்கள் இருந்தன.

“இவை எல்லாம் தானாய் வளர்ந்த மரங்கள். புன்னை, அரசு, புளிய மரங்கள்” எனக் கதிரேசன் சொல்கையிலேயே மாறனும் வீரனும் நீர் பதிந்த பாதையில் அவர்களைக் கடந்து, தரையை முகர்ந்த வண்ணம் செல்ல ஸ்ரீநி, சைந்தவி, டாக்டர், மற்றும் ஃபாரன்ஸிக் பின் தொடர்ந்தனர்.

அதுவரை வானம் மூட்டமாகத்தான் இருந்ததால் பகலிலும் சற்றே பொலிவிழந்த வெய்யிலாகத்தான் இருந்தது. திடீரென ஏதோ நினைத்துக் கொண்டு சீறும் மனைவி போல காற்று சுழன்று சுழன்று அடிக்க ஆரம்பித்தது. ஊ.. ஊ…

நாய்களும் அதை எதிர்த்து ஓடின, இவர்களும் சிரமப்பட்டே நடந்தார்கள். நான்கைந்து புளிய மரங்கள் பூதாகாரமாய் அடுத்தடுத்து நிற்க, அவற்றில் நடு மரத்தைக் குறி வைத்து நாய்கள் சென்றன.

சென்றவை அதன் பின் புறத்தில் சென்று, ‘ஹ்ஹ்.. ர்ர்’ எனக் கர்ஜித்த வண்ணம் மெல்லத் தோண்ட ஆரம்பித்தன. ஆவல் மேற்கொண்டு சைந்தவியும் ஸ்ரீநியும் முன்னால் சென்று பார்க்கும் போது…

சைந்தவியின் நேர் மேலே இருந்த புளியமரத்தின் உச்சிக்கிளை – சின்னதுதான் என்றாலும்- யாரோ ஒடித்தாற் போல கீழ்நோக்கி வேகமாக வந்தது


”சொல்லச் சொல்ல நம்ப மாட்டேங்கற பாத்தியா மாதவ்?” என்றபடி சாம்பல் நிற ஹையுண்டை டக்ஸனில் ஏறி அமர்ந்தாள் மாதவி. காரைக் கிளப்பி கார் பார்க்கிங்கிலிருந்து வெளிவந்தவாறே அவளைப் பார்த்தான் மாதவ்.

கரு நீல டாப்ஸ், வெளிர் நீல ஜீன்ஸ், மாநிற முகம், மேலே நெளிநெளியாய்ப் பின்னி விடாமல் அலைஅலையாய் அலைபாயும் கூந்தல். நெற்றியில் நெளிப் பொட்டு, உதடுகளில் மென்மைச் சிவப்பு கூட்டிய லிப் க்ளாஸ்., இலங்கு நுண்ணிடை., டாப்பிற்கும் ஜீன்ஸுக்கும் இடையே பளீர்.

“நம்பற மாதிரியா சொன்னே மாத்வி?”. கார் மெய்ன் ரோட்டில் வந்து வேகமெடுத்தது. “எல்லாத்தையும் விடு. இப்போ இந்த டிரஸ்ல அப்படியே அள்ளுற மாத்வி. பேசாமத் திரும்பலாமான்னு தோணுது. ஆனா, தள்ளிவிட்டுட்டு அம்மாதான் தள்ளி விட்டாங்கன்னு சொல்வே?”..

“மா ஆ தவ்” அவன் ஸ்டியரிங் பிடித்த ஒரு கையைக் கிள்ளினாள். “நெசம்மா பெட்ரூம்ல – நன்னா இருக்குடி குளிக்காம கொள்ளாம -ன்னு அம்மா சொல்லி தள்ளி விட்டா மாதிரி இருந்தது. அது போல இப்போ நீ பார்க்கப் போற லாண்ட்க்கும் போகாதேன்னு பாத்ரூம்ல எழுதிக் காண்பிச்சாங்க. அது மறஞ்சும் போச்சு”.

“அதெல்லாம் பிரமை மாத்வி”

”எங்கம்மாக்கு இ.எஸ்.பி பவர்ஸ்லாம் உண்டு தெரியுமா? உசுரோட இருந்தப்ப, ப்ளஸ்டூல்ல நான் இன்ன மார்க் எடுப்பேன், கணக்குல 198 ன்னு சொன்னாங்க.. அப்படியே ஆச்சு. ஒரு மாமாக்கு ஃபோன் பண்ணி, நீ அந்த ட்ரெய்ன்ல மும்பை போகாதேன்னாங்க. ஆக்ஸிடெண்ட் ஆகிடும்னு தோணுதுன்னாங்க. அந்த மாமா போக, அதே மாதிரி ஆக்ஸிடெண்ட் ஆகி கால்ல முறிவு ஏற்பட்டுச்சு. சரியாக ஆறு மாதம் ஆச்சு அவருக்கு நடக்கிறதுக்கு. அப்புறம் நான் வேலைக்குப் போக ஆரம்பிச்ச உடனே, உன் பெயர்லயே ஒரு ஆள் உன் கிட்ட மாட்டுவான்னு சிரிச்சுக்கிட்டே சொன்னாங்க. நீ மாட்டினாய். இன்னும் நிறைய்ய்ய மாதவ். இப்போ ஏன் அவங்க இல்லாட்டாலும் சொல்லி இருக்கக் கூடாது?”

“மாத்வி. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. உனக்கு உங்க அம்மா பேர்ல ஓவர் அப்செஷன்”.

“இப்பக் கூட இப்பக் கூட….” கொஞ்சம் வேகமாகச் சொன்னாள் மாத்வி. “உனக்கு ஒரு நல்ல நியூஸ் கிடைக்கும். எங்கேயோ போகப் போறேன்னு சொல்றா மாதிரி இருக்கு. தெரியுமா?”. கடகடவெனச் சிரித்தபடி காரோட்டிய மாதவ்வின் சிரிப்பு தடைப்பட்டது செல்ஃபோன் அழைப்பினால்.

மெல்ல காரை மெய்ன் ரோட்டிலிருந்து சைட் பார்க் பண்ணி, ஃபோனை எடுத்தபடி கீழிறங்கி சில நிமிஷம் பேசிக் கொண்டிருந்தான். சர்.. சர்ரென சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. நிறுத்திய இடத்தில் மரங்கள் வரிசையாய் இருந்ததால் கொஞ்சம் நிழலாய் இருந்தது.

அவனையே பார்த்தவண்ணம் இருந்தாள் மாதவி. அழகன்.. ஜிம் பாடி, கையில்லா ப்ரெளன் டிஷர்ட்டில் பைசெப்ஸ் காட்டும் புஜங்கள். வெளிர் மஞ்சள் ஜீன்ஸ் மெல்லிய தாடி. கொஞ்சம் கலைந்திருந்த தலைமுடி. பார்க்க ஹாண்ட்ஸம்தான். எந்தப் பெண்ணும் அவனை ஒரு முறை பார்த்தால் திரும்பவும் பார்ப்பாள். பார்த்தால் உதைப்பேன். ம், இது என் ஆள்.

பேசி முடித்துவிட்டு நேரே அவளது கதவுக்கு வந்தான். திறந்து அவளை இழுத்து அழுந்த இதழில் பதிந்து எழுந்தான். “ஏய் என்ன இது.. இங்கிட்டே?” என அவள் கேட்க பதில் சொல்லாமல் மறுபடி ட்ரைவர் ஸீட்டில் அமர்ந்து அவளை இழுத்து மறுபடி ஒத்தடம் உதடுகளால். சில நிமிடங்கள் கண் சிவக்க உடல் துடிக்க மெல்ல விலகினாள். “என்ன இது மாதவ்.. எதுக்காக இது?”

“நீதான் சொன்னியே குட் நியூஸ்னு.. குட் நியூஸ்தான். எனக்கொரு ஆஃபர் வந்திருக்கு சிங்கப்பூர்ல. வீட்டுக்கு வந்து பார்க்கணும். பரவால்ல.. நீயா சொன்னியா?, உங்க அம்மா சொன்னாங்களா? தெரியாது. இண்டீட் குட் நியூஸ்”.

”நான்தான் சொன்னேனில்லை? ஆனாலும் மோசம்ப்பா. வலிக்குது..” என உதட்டைச் சுளித்தாள்.

“இப்ப உங்க அம்மா ஒண்ணும் சொல்லலையாக்கும்! அதுவும் ரோட்ல கிஸ் பண்ணேன்னு..”

“போடா” எனச் சொல்லி வெட்கியவள் சீரியஸானாள். “ஆமா இப்ப எதுக்கு லேண்ட்? அதுவும் உன் பாஸுக்கு இப்ப பார்க்கணுமா அவசியமா? நீதான் வேலையை விடப்போறியே?”.

“ஸீ.. ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருந்தார் என் பாஸ். அந்த லேண்ட் காரனும் டபாய்ச்சுக்கிட்டு இருந்தான்.. இன்னிக்கு மாட்டினான்” எனச் சொல்லும்போதே “கொஞ்சம் வேகம்.. வேகம்” என்றாள் மாத்வி. குரல் சற்றே மாறினாற்போல் பிரமை.

சைடில் திரும்பி ஒரு கணம் வெறித்துப் பார்த்து “ஏற்கெனவே ஸ்பீட்தானே மாத்வி” சொல்லி ஆக்ஸிலேட்டரை அழுத்த கார் பத்மவாசன் பண்ணை போர்டைக் கடந்தது. ஒரு கிலோமீட்டர் சென்றதும் “எதுக்கு இவ்ளோ ஸ்பீட்?” எனக் கொஞ்சலாகக் குரல் வரத் திரும்பினான். மாத்வி பயந்த கண்களுடன் வெறித்தாள்.

“ஏய் நீதானே சொன்ன?” என்றவண்ணம் கார் கொஞ்சம் பக்கலில் இருந்த சாலையில் திரும்பி ஒரு வாசலில் நிற்க, அங்கு திவாகர் நின்றிருந்தார். ரியல் எஸ்டேட் ஏஜண்ட்.

இறங்கிக் கொஞ்சம் நடந்து அவர் காட்டிய மனைகள், அவற்றின் அளவுகள், விலை எல்லாம் கேட்டு கிளம்பும் போது திவாகர் கேட்டார்.

“மாதவ் சார் மாம்பழம் பிடிக்குமா?”.

“என்னை விட, மாதவிக்குப் பிடிக்கும்”.

“அப்படின்னா கொஞ்சம் இருங்க. நான் என் வண்டியை எடுக்கிறேன். பக்கத்துல பங்கன பள்ளி, இமாம் பசந்த் ஃபார்ம்ல குறைச்ச விலைல்ல கிடைக்கும்” எனச் சொல்லி அவர் அவருடைய வெள்ளை சுஸுகியை எடுக்க, மாதவ் பின் தொடர்ந்தான்.

திவாகர் மெய்ன் ரோட்டுக்கு வந்து வேகம் பிடித்து, அந்தப் பண்ணை வந்ததும் வளைய, பின் தொடர்ந்த மாதவ்வும் வளைந்தான்.. ஆனால் ஸுஸுகியைத் தொடர முடியவில்லை.

காரணம், அவன் ப்ரேக் பிடிக்காமலேயே கார் க்றீச்சென நின்றது. அது பத்மவாசன் பண்ணை.

(தொடரும்)

Series Navigation<< “ம்..” 1“ம்..” 3 >>

Author

Related posts

சிரிப்பால் சமூகத்தைச் செதுக்கிய யதார்த்தக் கலைஞன்

அசுரவதம் :18 – கோடு போட்டு நிற்கச் சொன்னான்.. சீதை நிற்கவில்லையே.

“ம்..” 5 (இறுதிப்பகுதி)