“ம்..” 3

This entry is part 3 of 5 in the series "ம்.."

இந்த உச்சியிலிருந்து எல்லாம் பார்க்க முடிகிறது. சற்றுத் தூரத்தில் தேக்கு மரமொன்றில் நீலக்கழுத்து மஞ்சள் மூக்குப் பறவை ஒன்று தன் இணையுடன் அமர்ந்திருக்கிறது. அந்தப் பக்கம் சில பல காகத்தைப் போல பெரிய சைஸ் பறவைகள் அமர்ந்திருக்கின்றன. வெயில் ஏறிக் கொண்டிருப்பதைப் பொருட் படுத்தாமல்.. இல்லை கொஞ்சம் நிழலாகத் தான் அமர்ந்திருக்கின்றன.

என்னை இன்னொரு ‘ம்’ பிடித்திருக்கின்றது. சந்தோஷம். என்ன? தமிழ்ச் சொல் இல்லையா.. சிமகிழ்ச்சி என்பது சியாக முடிகிறதே.

பகலில் எங்களுக்கு வலுவில்லை என்று முன்பு சொன்னேன். அதெல்லாம் இல்லை. நெடு நாட்களாக நான் தவம் கிடந்து – நினைக்கையிலேயே சிரிப்பு வருகிறது. நான் தவமாம். ம்.. காத்திருந்தது வீண்போகவில்லை. அந்த ஆள் தேக்கு மரங்களைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தான். பின்னால் சென்றேன். என் காரியம் சுலபமாக முடிந்து விட்டது. இன்னும் ஒரு வேலை மட்டும் தான். அதுவும் நடந்துவிடும்.. வெகு சீக்கிரத்திலேயே.

மீண்டும் என் இடத்திற்கு வந்து பார்த்துக் கொண்டேன். காய்த்துப் போய் கரு நிறத்தில் இருந்த கைகள், நீள நகங்கள் கொண்ட விரல்கள் – அவை கொஞ்சம் வலிக்கவும் செய்தன. இருந்தாலும் என்ன? எப்பேர்ப்பட்ட நல்ல காரியங்கள் செய்திருக்கின்றன!

கொஞ்சம் போனஸ் தரலாமா. மெல்ல, கைகளை இதழுக்குக் கொண்டு போய் ஒரு ‘ம்’ கொடுத்தேன். முத்தம்.

____________________________________________

”கண் சிமிட்டும் நேரத்தை விடக் குறைவான நேரத்தில் நகர்ந்திருக்கிறாய் சைந்தவி, நல்லவேளை. இல்லையெனில் அந்தக் கிளை உன் தலையிலேயே தொம் என்று விழுந்திருக்கும். தோள்களை உரசி விழுந்துவிட்டது” என்றார் ஸ்ரீனி.

இன்னும் வலியில் கண் சுருக்கிக் கொண்டிருந்தாள் சைந்தவி. டாக்டர் கருணாஸ் மெல்ல நீவி விட்டுக் கொண்டிருந்தார். “நல்ல வேளை.. சார் சொன்னாற் போல. ஒன்றும் ஆகியிருக்காது என நினைக்கிறேன். எதற்கும் ஒரு எக்ஸ் ரே எடுத்துப் பார்த்து விடலாம்.” என்றார். சைந்தவி அனிச்சையாய் விழுந்த கிளையைப் பார்த்தாள்.

“சார். இது யாரோ முறித்தாற் போல இருக்கிறது”

“யாரும் முறித்திருக்க மாட்டார்கள் சைந்தவி. காற்றில் முறிந்து விழுந்திருக்கிறது”

“கதிரேசன். நீங்கள் இங்கேயா இருக்கிறீர்கள்? என்ன.. போலீஸ்லாம் வந்திருக்கிறது? எதற்காக என்னை அழைத்திருந்தீர்கள்? கடையில் ஆள் போட்டு வர நேரம் ஆகிவிட்டது. யாருக்கு என்ன ஆச்சு? காலைல அப்பாவை நான் பார்க்கவில்லை. இங்கு வந்தாரா என்ன?”

ஸ்ரீநி திரும்பினார். இளைஞன்.. ப்ளூ பாண்ட், டார்க் ரெட் ஷர்ட் அணிந்திருந்தான். தாடி, கண்ணாடி, காதில் கடுக்கன்.

கதிரேசன் ஸ்ரீனியிடம் – ”இது ராகவ், பார்கவனின் மூத்த சம்சாரத்தின் பிள்ளை”

“அப்படி என்றால் இளைய சம்சாரம் என்று ஒன்று இருக்கிறதா கதிரேசன்?”

“இருக்கு சார், ஆனால் இல்லை. அப்புறமாக மெதுவாகச்சொல்கிறேன். ராகவ் கொஞ்சம் வாங்க” என மெல்ல நடத்திக் கூட்டிக் கொண்டு பார்கவன் அதுவாக மாறி இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றான். ஸ்ரீநி பின் தொடர்ந்தார்.

”என்ன? என்ன சொல்ற? கதிரேசா எங்க கூட்டிப் போற?” என்ற ராகவிற்குப் பதில் சொல்லாமல், அருகில் வந்ததும் ஸ்ரீநியிடம், “சார் இவரிடம் முகம் காட்டச் சொல்லுங்கள் கான்ஸ்டபிளை” என்றான்.

கான்ஸ்டபிள் முகம் விலக்க – ”ஓ மை காட். டாடி…ஈ..” எனக் கதறினான் ராகவ். ”யார் சார் இப்படிப் பண்ணினது? ஏன் இப்படி?”.. – குழறினான்.

“தெரியலை. இப்பத்தான் இன்வெஸ்டிகேட் பண்ணிக் கொண்டிருக்கிறோம்” என்றார் ஸ்ரீநி.

ராகவிற்கு ஒரு பாட்டிலில் கான்ஸ்டபிள் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க, சட்டை நனைய நனையக் குடித்தான் அவன்.

கொஞ்சம் தள்ளி போடப்பட்டிருந்த சேர்களில் அமர்ந்து, “சொல்லுங்கள் ராகவ்”

“என் அப்பா நல்லவர் சார். அநியாயத்துக்குச் சுறுசுறு. அவர் தொடங்கினதுதான் “ராகவ் ஸூப்பர் மார்க்கெட்”ங்கற அந்த டிபார்ட்மெண்டல் ஸ்டோர். இப்ப நான் பார்த்துக்கறேன். அவர் புக்ஸ் படித்துக் கொண்டு சினிமா, டூர்னு போய் வருவார்”

“அவருக்கு விரோதிகள்?”

“குறித்து சொல்லும் படி யாரும் கிடையாது.”

“கதிரேசன் ஏதோ சொன்னாரே. இரண்டாவது மனைவி என்று?”

“ஆமாம் சார். எனக்கு ஒரு சித்தி இருந்தார். பெயர் காத்யாயினி. காத்யா”.

“இருந்தார்னா?”.

“இப்போ இங்கு இல்லை. ஹைதராபாத் போய் இருக்காங்க. இரண்டு மாசம் ஆச்சு”

“வேற.. நேத்து ஏன் இங்க வந்தார் பார்கவன்? யாரையாவது பார்க்க வந்தாரா?”

“தெரியலை சார்”

“உங்க சித்தியும் அப்பாவும் சந்தோஷமாத்தான் இருந்தாங்களா?”

“அப்படித் தான் நினைக்கறேன். என்னை நல்லாத்தான் ட்ரீட் பண்ணுவாங்க. அவங்களுக்கும் அப்பாக்கும் 15 வயசு டிஃபரன்ஸ். அந்த ஏஜ் கேப்ல கொஞ்சம் அப்பப்ப சண்டைகள் வருவதுண்டு”

“சண்டைகள்னா?”

“பெரிசுல்லாம் இல்லை சார். குட்டிக் குட்டியா”

“ரெண்டு மாசத்துல உங்க அப்பா உங்க சித்தியைப் பார்க்கப் போகலியா”

“வீடியோ கால்ல பேசிக்குவார்னு நினைக்கறேன். அப்புறம் எனக்கு அப்பப்ப மெஸேஜஸ் கொடுப்பாங்க”.

“ஓ. அப்புறம் என்ன சொல்லுங்க”.

ராகவ் பதில் சொல்லுமுன் சைந்தவியின் செல்ஃபோன். ”சார்.. இங்க வந்து பாருங்க”..

எழுந்து இருவரும் சைந்தவி இருந்த இடத்துக்குச்சென்றனர்.
மாறன், பின்னால் ஒரு பள்ளத்தை வரட் வரட் எனத் தோண்டிக் கொண்டிருந்தது. பக்கத்தில் வீரா சற்றுத் தள்ளி இன்னொரு இடத்தில் கால் நகம் பதித்தது. கொஞ்சம் தோண்டவும் செய்தது. மாறன் தோண்டிய அந்தப் பள்ளத்திலிருந்து கயிறு போல ஒன்று வந்து, இழுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. முழுக்க இழுக்க அது லேடீஸ் ஹேண்ட்பேக்.

ட்ரெய்னரிடம் சொல்லி, அதை எடுக்கச் சொல்வதற்குள் கதிரேசனின் ஃபோன் ஒலிக்க, கேட்ட கேர் டேக்கர் கதிரேசன் அதிர்ந்தான்.

“இன்ஸ்பெக்டர் சார். பலாத் தோப்புக்குள்ள, என் கிட்ட வேலை பார்க்கிற ஆள் விழுந்து கிடக்கானாம்!”

”என்னய்யா இது! ஒண்ணு பார்த்தா இன்னொன்னும் கிடைக்குதா?.. இங்கேயே இரண்டா?. டாக்டர், ஃபாரன்ஸிக் நீங்களும் இங்க இருக்கீங்க செளகர்யமாப்போச்சு. நீங்களும் வாங்க. சைந்தவி. நீ என்ன பண்றே.. “ எனச் சொல்ல ஆரம்பிக்க சைந்தவி க்றீச்சிட்டாள்.

“இரண்டு இல்லை சார். மூணு” என நடுங்கிய வண்ணம் அவள் கை காட்டிய இடத்தில் வீரன் நாய் தோண்டிய குளமாக இருந்த சேற்றினில் ஒரு எலும்பும் தோலுமான கை வெளிப்பட்டிருந்தது.
**

“என்ன ஆச்சு மாதவ். ஏன் இப்போ ப்ரேக் போட்டீங்க?” மாத்வி கேட்டாள்.

”நான் எங்க பிடிச்சேன்? அதுவா ப்ரேக்கடிச்சு நின்னுடுத்து.” கொஞ்சம் புதிர்ப்பார்வையோடு சொன்னான் மாதவ். “உங்க அம்மா வேலையாய் இருக்குமா?” எனச் சொன்ன வண்ணம் மாத்வியைப் பார்த்தவன் திடுக்கிட்டான்.

மாத்வி விறைப்புடன் கண் மூடி இருந்தாள். அவள் உதடுகள் முணுமுணுத்தன.

“என்ன சொல்ற மாதவி” தொட்டான். சிலிர்த்தாள். “கேட்கக் கேட்கச் சொல்லாம இங்கயே வந்துட்டே இல்ல?” குரல் கொஞ்சம் மாறி இருந்தது.

“மாத்வி மாத்வி – உலுக்கினான். “சரி, நான் பார்த்துக்கறேன்” என்று தொடர்ந்தவள் அவன் உலுக்கிய உலுக்கலில் விழித்தாள்.

“என்ன ஆச்சு மாதவ்? ஏன் நின்னுட்டீங்க?”

“ஒண்ணும் ஆகலை. நீ இறங்கு. கொஞ்ச தூரத்துல திவாவும் இறங்கி இருக்கார்” எனச் சொல்லி காரை நிறுத்தி இறங்கியவன் அந்தப்புறம் வந்து கதவைத் திறந்து மாதவிக்குக் கை கொடுத்து இறக்கினான்.

“ நீ என்ன சொன்ன தெரியுமா? ‘ஏன் இங்க வந்தே?’ன்னு சம்பந்தமில்லாமல் ஏதோ கேட்ட. குரல் கூட மாறி இருந்தது”.

“அப்படியா சொன்னேன்! ஐ திங்க்.. அம்மாதான். வாங்க போய்டலாம்”

“இரு, மாம்பழம் வாங்கிட்டுப் போய்டலாம்” என திவாகர் நின்றிருந்த இடத்தை நோக்கி நடந்து அடைந்த போது திவாகர் கொஞ்சம் முழித்தவாறு இருந்தார்.

“இங்கதான் கடை இருக்கு. ஆனா ஆள் யாரும் இல்லை. இந்தப்பக்கம் போலீஸ் ஜீப் வேன்லாம் நின்னுருக்கு, ஆம்புலன்ஸும் வந்திருக்கு, என்னன்னு தெரியலை மாதவ் சார். திரும்பிப் போய்டலாமா?”.

“அதோ, அங்கே யாரோ வர்றாங்க போல் இருக்கே”

திவாகரைப் பார்த்துத்தான் அந்த ஆள் வந்தான். “என்ன சார் மாம்பழம் வேண்டுமா?”

“என்னய்யா வேன் ஜீப் லாம் இருக்கு?”

“ஏதோ பிரச்னை. அதான் போலீஸ் வந்திருக்காங்க. நீங்க நாளைக்கு வாங்க சார். நல்ல பழம்லாம் இருக்கு.”

“சரி” என்றார் திவாகர்.

“கிளம்பலாமா” என திவாகர் கேட்க மாத்வி மாதவ்வின் தோளைத் தொட்டாள்.

“என்னன்னு தெரியலை மாதவ். கொஞ்சம் வயிற்றைக் கலக்குது. இங்க பக்கத்துல பாத்ரூம் இருக்கா கேளுங்க”.

”பாத்ரூமா சார்.. கொஞ்சம் நடந்து அந்தக் கட்டடம் பாருங்க, அங்கே கீழேயே இருக்கு”

மாத்வியை அணைத்து அந்த இடத்திற்குக் கூட்டிச் சென்றான் மாதவன். விசித்திரமாய்ப் போலீஸ் ஜீப், வேன் ஆம்புலன்ஸ். ஏற்கெனவே உடல் ஏற்றப்பட்டு மூடி இருந்ததால் ஒன்றும் தெரியவில்லை.

“நல்ல நேரம் பார்த்தோம் மாம்பழம் வாங்கறதுக்கு. நீ போய்ட்டு வா மாத்வி” என்றவன் “ஒரு நிமிஷம் இரு” என்று உள்ளே சென்று பார்த்துவிட்டு வந்தான். “நல்ல வேளை, கண்ணாடி எல்லாம் இல்லை. உங்க அம்மா வரமாட்டாங்கன்னு நினைக்கிறேன்!”

அந்த அவஸ்தையிலும் மாதவ்வை முறைத்து பாத்ரூமுக்குள் சென்று தாழ் போட்டுக் கொண்டாள் மாத்வி.

அந்தப் பக்கம் இருந்த கான்ஸ்டபிள்கள், “என்ன சார்? என்ன விஷயம்?” என்று கேட்க, மாம்பழக்காரனைக் கை காட்டிச் சொல்லிக் கொண்டிருந்தான் மாதவ்.

மாத்வி வெளியில் வந்தாள். “வா போலாம்”.

வெறித்த பார்வை பார்த்தாள். அவனைப் பற்றிக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள். “கொஞ்சம் பயம்மா இருக்கு மாதவ். ஆம்புலன்ஸ் எதுக்கு? உள்ள இருக்கறது பாடியா என்ன?”

“பாடி தாம்மா. நீங்க அப்படியே கிளம்பிப் போய்டுங்க” என்றார் கான்ஸ்டபிள்.

அவர்கள் நடக்கையில் அந்தப் பக்கம் இருந்த சுவரின் ஓரம் இளநீர்க் காய்கள் அடுக்கப்பட்டிருந்தன.அதன் மேல் ஒரு அரிவாள் வைக்கப்பட்டிருந்தது. அதிசயமாய்ச் சரசரவென மழை பெய்ய ஆரம்பிக்க, கொஞ்சம் வேகமாய் இவர்கள் நடக்க, மேலிருந்த அரிவாள் யாரோ எடுத்தாற்போல் எழும்பி இவளை நோக்கி வர, யாரோ தட்டி விட்டாற்போல் தடாலென திசைமாறி மாதவியின் காலின் முன் விழுந்து ஒலி எழுப்பியது.

மாத்வி விக்கித்து மாதவனின் மேல் சாய்ந்து மயங்கி விழுந்தாள்.

Series Navigation<< “ம்..” 2“ம்..” 4 >>

Author

Related posts

சிரிப்பால் சமூகத்தைச் செதுக்கிய யதார்த்தக் கலைஞன்

அசுரவதம் :18 – கோடு போட்டு நிற்கச் சொன்னான்.. சீதை நிற்கவில்லையே.

“ம்..” 5 (இறுதிப்பகுதி)