சூரியன் உச்சியை அடைந்து விட்டான். இருந்தாலும் மேகங்கள் சூழ்ந்திருப்பதால் மெல்லிய வெயில்தான். சூடொன்றும் ஆகவில்லை. இரவில் மழை வந்தாலும் வரலாம். ஆனால் ச்சில்லென்ற காற்று அடித்து எனக்கே ஒரு மாதிரிக் குளிராய் இருக்கிறது.
கூடவே என் கண்ணில் நீர். ஆவி அழலாமா என்ன?. வருகிறதே. பின் என்ன? கீழே அந்த நாய்கள் என்னுடலை அல்லவா இழுத்துக் கொண்டு விட்டன. உயிருடன் இருந்த போது எப்படி இருந்திருப்பேன். இப்போதாவது சுமாராக இருக்கிறேன். அங்கே கிடக்கும் உடல் எவ்வளவு பயங்கரமாக இருக்கிறது.
இப்படி ஆக்கி விட்ட நபரைத்தான் அழித்தாகி விட்டது. இருந்தாலும்.. இருந்தாலும் மறுபடி வெறுமை சூழ்கிறதே.
தவிர, என் அருகில் வந்து நின்று கொண்டிருக்கும் இவர் என்ற இது யார்? எனக்கு அட்வைஸ் மேலே அட்வைஸ்.
“எதுக்கு இப்ப அழுகை? நீ யார்? நீ என்ன செஞ்சுக்கிட்டிருக்கே தெரியுமா? உன்னோட கதை என்ன சொல்லு. கொஞ்சம் இரு, வா.. புளிய மர உச்சிக்குப் போகலாம். உட்கார்ந்து பேசலாம்.. வா”
மெளனமாய் அந்த வயதான ஆவியைப் பின் தொடர்ந்தேன். சொல்லி அழுதால் தீர்ந்துவிடுமாமே. சொல்லவும் வார்த்தைகள் என்னிடம் இருக்கின்றன. சொல்வேன். ம்..
ராகவ்தான் முதலில் காத்யாவைப் பார்த்தான். கிடுகிடென்று அவளிடம் சென்றான், சிகப்புக் காரிலிருந்து இறங்கிய காத்யா – மஞ்சள் நிற ப்ளெய்ன் ஷிஃபான் அணிந்திருந்தாள், கூந்தலை பஃப் என வைத்திருந்தாள் . சின்னதாய் மஞ்சள் பொட்டு. ஸ்லீவ் லெஸ் ப்ளெளஸ்.. அபாரமாக இருந்தாள் – மாத்வியை விட – என நினைத்தான் மாதவ்.
“காத்யா சித்தி” எனச் சொன்னவண்ணம் அருகில் வந்த ராகவ் அவள் கைகளைப் பற்றிக் கொண்டான். “சித்தி.. சித்தி..” எனச் சொன்னான். கண்களிலிருந்து நீர் வழிந்தது.
காத்யா திகைத்தாள், “என்ன ஆச்சு ராகவ்! நேரே வீட்டிற்குப் போனேன். அங்கு அவர் இல்லை. கடைக்கு ஃபோன் செய்தேன். நீ இங்கே வந்திருப்பதாகச் சொன்னார்கள். பார்கவ் எங்கே?”
“மேடம்.. அது பற்றி நான் சொல்கிறேன். என் பெயர் ஸ்ரீநி. சி.ஐ.”
“சரி.. நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்? நீங்கள் யார்? இங்கு எதற்கு?”
“மேடம்.. ஒன் பை ஒன். முதலில் நான் கேள்வி கேட்கிறேன். நீங்கள் எங்கு இருந்தீர்கள்?”
”ஹைதராபாத் ஜாம் நகர். ரெண்டு மாசமா”
“எதுக்கு அங்க போனீங்க? அதுவும் யார்கிட்டையும் சொல்லாம?”
“இல்லியே.. பார்கவ் கிட்ட சொன்னேனே”
“எதுக்குப் போனீங்க?”
“அது பெர்ஸனல் சார். இப்போ சொல்ல முடியாது. பார்கவ் எங்கே? இவன் ஏன் அழறான்? அங்கே மாத்வி கூட வந்திருக்கா போல மாத்வி.. மாதவ்..”
“முதல்ல இந்த சேர்ல உட்காருங்க. நானும் உட்கார்றேன். ராகவ், மாதவ் மாதவி.. நீங்களும் இந்த சேர்ல உட்காருங்க. கதிரேசன் அந்த வாட்டர் பாட்டில் கொடுங்க”
காத்யா அமர்ந்து கொண்டாள். ஹாண்ட்பேகிலிருந்து கர்ச்சீப் எடுத்துத் துடைத்துக் கொண்டாள். வாட்டர் பாட்டில் வாங்கித் தண்ணீர் குடித்தாள்.
“சொல்லுங்க சி ஐ. என் கணவர் பார்கவ் எங்கே? இவன் ஏன் அழறான்? ஏதாச்சும் ஆச்சா?” வார்த்தைகள் படபடவென வந்தன.
“ஸாரி டு ஸே. உங்க கணவர் பார்கவ்வை யாரோ கொலை செய்து விட்டார்கள்”.
“ஆ..” என்றாள். பதற்றத்தில் உட்கார்ந்திருந்த நாற்காலி சாய, மாத்வி தாங்கிப் பிடித்தாள். கண்களில் இருந்து அனிச்சையாகக் கண்ணீர் வழிந்தது.
“என்ன ஆச்சு? ஏன் ராகவ்!! சொல்லு.. நல்லாத் தானே இருந்தார். நேற்று காலைல கூட பேசினாரே”.
ராகவ், “தெரியலை சித்தி. இவங்க இன்வெஸ்டிகேட் பண்ணனும்ங்கறாங்க”
“ராகவ். இப்போ இப்போ…” அழுதாள். “பார்கவ் எங்கே?”
“ஜி ஹெச் கொண்டு போய்ட்டாங்க சித்தி”
“காத்யான்னே சொல்லுன்னு சொல்லி இருக்கேனே ராகவ். இன்ஸ்பெக்டர் என்ன ஆச்சு. என்ன ஆகும்?”.
“தெரியலை மிஸஸ் காத்யா. நிறைய விசாரிக்கணும். உங்க கணவரோட உடலைப் போஸ்ட் மார்ட்டம் பண்ணிப் பார்க்கணும், அப்புறம்தான் ஆன்ஸர்ஸ் கிடைக்கும். சரி.. நீங்க சொல்லுங்க.” என்றபடி பார்த்தார். ஃபாரென்ஸிக்கும், டாக்டரும் இன்னும் கான்ஸ்டபிள்களும் அந்தக் கட்டடத்திற்குச் சென்றிருந்தனர். அங்கு தான் பீட்ஸா வாங்கி வைக்கப் பட்டிருந்தது.
“என்ன சொல்லணும்?”
“திடுமென 2 மாதம் ஹை தராபாத்?”
“அவசியம் சொல்லணுமா?” காத்யா முகம் சிவந்தாள். “எனக்கு எனக்கு டேட் மிஸ்ஸாகிடுத்து. இவ்ளோ வயசுக்கப்புறம் வேண்டுமான்னு நானும் பார்கவ்வும் யோசிச்சோம். அவர் நீ என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு சரின்னார்” நிறுத்தினாள். ராகவ்வைப் பார்த்தாள். “வளர்ந்திருந்தாலும் எனக்கு ராகவ்தான் பையன்னு நான் என்னிக்கோ முடிவு பண்ணிட்டேன். மீன்ஸ் பண்ணிட்டோம் ரெண்டு பேருமே. ஸோ.. அதை மாத்த வேணாம்னு ஹைதராபாத் மாமா வீட்டுக்குப் போய் தங்கி ஹாஸ்பிடல் போய்…” நிறுத்தி தண்ணீர் குடித்தாள்.
“இன்ஸ்பெக்டர். நான் என் அவரைப் பார்க்கணும். கொஞ்சம் விடுகிறீர்களா? நானும் ராகவ்வும் ஜி ஹெச்க்குப் போறோம்.”
“ஓகே காத்யா. எல்லாம் முடிஞ்சவுடன் நாங்க உங்க வீட்டுக்கு விசாரணைக்கு வருவோம். மாதவ் மாத்வி நீங்களும் போகலாம்” என்றபடி மறுபடியும் வந்திருந்த ஆம்புலன்ஸின் அருகில் சென்றார். ட்ரைவர், ஹாஸ்பிடல் ஆட்களிடம் இரண்டு ஸ்ட்ரெச்சர்களை எடுத்து உள் செல்லும்படிப் பணித்தார்.
சைந்தவியும் கூட வந்து கொண்டிருந்தாள். “சைந்தவி வா. கொஞ்சம் பசிக்கறா மாதிரி இருக்குல்ல. வா.. பீட்ஸா சாப்பிடலாம். கதிர் நீங்களும் வாங்க”
காருக்குச் சென்ற காத்யாவிடம் மாதவ், “காத்யா, மாதவியை விட்டுவிட்டு ஜி ஹெச்க்கு வர்றேன். என்ன செய்யலாம்? எனப் பார்க்கலாம். ராகவ்.. உதவி எதுவும் தேவைப்பட்டா என்னைக்கூப்பிடு” என்றான்.
அவர்கள் கிளம்ப, ஹையுண்டை டுஸ்ஸானைக் கிளப்பிய மாதவ்.. பண்ணையிலிருந்து வெளியே வரும் வரை பேசாமலே இருந்தான். பின் மெய்ன் ரோட்டுக்கு வந்தவுடன்,
“மாத்வி ஆர்யூ ஆல்ரைட்?
“ம்” என்றாள் மாத்வி ஈனஸ்வரத்தில்.
”போகும் போது ஹோட்டல்ல சாப்பிடலாம். ஆனா ஒண்ணு”
“என்ன?”.
“இதுலல்லாம் மாட்டிக்க வேணாம்னுதான் உங்க அம்மா ‘போகாதே’ சொன்னாங்களா. அப்புறம் இன்னொண்ணு”.
“சொல்லு மாதவ்.. படுத்தாதே”.
“காத்யா உன்னை விட இன்னும் அழகா இருக்கா”
மாத்வி நறுக்கென அவனைக் கிள்ளினாள். “வீட்டுக்கு வாய்யா. பார்த்துக்கறேன்!”..
காவிரியில் வெள்ளம் வரும்போது பார்த்திருக்கிறீர்களா?.
ஏகப்பட்ட சுழல்கள் இருக்கும். சென்றால் ஆளை அப்படியே உள்ளிழுக்கும். அது போலத்தான் ஒரு நடு நிலை அரசாங்கப் பள்ளியில் ஆசிரியரான ஒருவருக்கு ஐந்தாவது மகளாகப் பிறந்த இந்தக் காவிரிக்கும் – அது நான்தான் – வாழும் போது எவ்வளவு சுழல்கள். எல்லாமே துன்பச் சுழல்கள்தான். இளமைப் பருவத்தைப் பற்றிக் கேட்காதீர்கள். பிறந்தேன் வளர்ந்தேன். பின்னர் என்னை இந்த ஜெயராஜிற்குக் கட்டி வைத்து விட்டார்கள்.
ஆரம்பத்தில் நன்றாகத்தான் இருந்தது. அவர் ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தார். பின் பிஸினஸ். ரியல் எஸ்டேட் ப்ரோக்கரேஜ், தோட்டவேலை தெரிந்ததால் இந்தப் பண்ணை வேலையில் சேர்ந்தார். சொந்த வீடு வாங்கினார். அவரை ‘ஆ..’ என்று பெருமையுடன்தான் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அப்புறம்தான் மாற ஆரம்பித்தார்.
பார்கவன்தான் பத்மவாசன் பண்ணையின் வரவு செலவுக் கணக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். அதற்காக அவர் வீட்டிற்குச் சென்று வருவார் இவர். நானும் செல்வேன். அங்கு காத்யாவைப் பார்த்தார். நானும் பார்த்தேன். அவள் அழகில் இவர் விழுந்து விட்டார் எனத் தெரியாது. அவள் அழகைப் பற்றி இரவில் என்னிடமே சொல்லி என்னைக் கொஞ்சுவார். எனக்கு எரியும். அப்புறம் அதுவும் நின்று விட்டது. எதற்கெடுத்தாலும் எரிச்சல், திட்டுதல், அடி என என் வாழ்க்கை நரகமானது. ஆனால் காத்யா அப்படி இல்லை. அவளைப் பொறுத்தவரை ஜெயராஜ் ஒரு பண்ணை வேலையாள். அவ்வளவுதான்.
என்னவோ வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்த போது திடீரென ஒரு வாரம் அவரிடம் மாற்றங்கள். என்னை வழக்கம் போலக் கொஞ்ச ஆரம்பித்தார். நான் ஒரு மட்டி, லூசு, தத்தி, நம்பினேன். இரண்டு மாதங்களுக்கு முன்னால் ஒரு நாள் மாலை மயங்கும் நேரம், நண்பனின் கார் என ஒரு காரெடுத்து என்னை இங்கு அழைத்து வந்தார். இரவைக் கழிக்கலாம் என்றார். ரொமாண்டிக் பேச்சுக்கள் எல்லாம் வெளிப்பட்டன.
காரின் டிக்கியிலிருந்து ஹாட் பேக் – ஏற்கெனவே ஹோட்டலில் இருந்து வாங்கிய உணவு வகைகள். அந்த மாடி அறையில் தங்கினோம். உணவுகள் மிகச் சுவையாக இருந்தன, நான் ருசித்துச் சாப்பிட்டேன். அவரும் கொஞ்சம் சாப்பிட்டார். பின் தென்னந்தோப்புப் பக்கம் போகலாம் என்றார். போனோம்.. அங்கே சின்னதாகக் கல் பெஞ்ச் இருந்தது. ஒரு சோகை விளக்கும் உண்டு. அங்கு அமர்ந்தோம்.
பின்தான் அவர் முகம் மாறியது. இன்னொரு பெண்ணைக் காதலிப்பதாகவும், அவளையே கல்யாணம் பண்ணிக் கொள்வதாகவும் கூறினார். நான் டைவர்ஸ் தர வேண்டுமாம்.
நான் மறுத்தேன். ‘யாரது காத்யாவா?’ என்றேன். ‘இல்லை’ என்றார். யாரோ சரோஜினியாம். நான் கத்த ஆரம்பிக்க என் கண்கள் மங்கின. சோர்ந்து கீழே விழுந்தேன். பின் சற்றுப் பொழுதில் நானே கீழே கிடந்த என் உடலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் சிரித்தார். வெறிச்சிரிப்பு. பின் நடந்ததுதான் உங்களுக்குத் தெரியுமே. ஏற்கெனவே புளியமரத்தின் பின்னால் எனக்குக் குழி வெட்டி இருந்தார். அதில் என்னுடலைப் போட்டு மூடினார். அருகிலேயே என்னுடைய ஹேண்ட் பேக். அதன் பிறகு ரெண்டு மாதம் எங்கோ சென்றுவிட்டு – எங்கோ என்ன.. மறுமணம் செய்திருப்பார்- பின் இன்றுதான் வந்தார்.
என்னுடனேயே இருந்து எனக்கு மிகப் பெரிய ‘ம்’ செய்துவிட்டார். துரோகம். அவரைக் கொன்றது தப்பில்லைதானே?”
நான் விம்மினேன். என் கண்கள் பொங்கி நீரை வடித்தன. அந்த அம்மாள் கேட்டுக் கொண்டிருந்தாள். ஆதுரமாக என் கூந்தலைக் கோதி விட்டார். “புரிகிறது. ஆனால் ஏன் பார்க்கவனைக் கொன்றாய்? அவர் நல்லவராமே”
“நல்லவராய் இருந்தாலும் ஜெயராஜைக் கெடுத்ததே அவர்தான். கேட்கும்போதெல்லாம் பணம். அஃப்கோர்ஸ் சம்பள அட்வான்ஸ்தான். தவிர, அவர் மனைவியின் அழகுதானே என் வாழ்க்கைக்கு எமனாய் வந்தது.. பொருமிப் புழுங்கிக் கொண்டே இருந்தேன். தனியாக நேற்று மாட்டினார். ஒரே அடி”
“அசடே.. ஜெயராஜ் நல்ல தோட்டக்காரன். அதனால் பேசிக்கொண்டிருந்திருப்பார். ஆனால், காத்யா என நினைத்து மாத்வியை- என் பெண்ணைக் கொல்ல முயன்றது எந்த விதத்தில் நியாயம்?” அந்த அம்மாளின் குரல் உயர்ந்தது.
“எனக்குத் தெரியவில்லை, தூரத்திலிருந்து பார்க்கையில் காத்யா போல் இருந்தது அந்தப் பெண். நானும் இளநீர்கள் மேல் இருந்த அரிவாளை உயர்த்தித் தலையில் போடலாம் எனப் பார்த்தேன். யாரோ தட்டி விட்டாற்போலக் காலில் விழுந்து விட்டது. நீங்கள்தானா?”
“இங்கே ஏதாவது கண் டாக்டரின் ஆவி இருந்தால் காட்டிக் கொள் கண்களை” என்றவர் “ஆமாம் காவிரி. மாத்வி என் பெண். அவளுக்கு ஏதோ ஆபத்து என எனக்குத் தோன்றிக் கொண்டே இருந்தது. ஒரு புறம் என் பையன் ஊரில் எனக்கு உண்டான கர்மாக்கள் செய்து கொண்டு இருந்தான். இப்போதும் செய்கிறான். இருந்தாலும் அவளைக் காப்பாற்ற நினைத்தேன். இங்கு வராதே எனச் சொன்னேன். நிறுத்தப் பார்த்தேன். முடியவில்லை. இங்கு வந்தால் உன்னைப் பார்த்தேன், உன் செய்கைகளையும். அந்த எஸ்.ஐ பெண் என்ன பாவம் செய்தாள்? ஏன் அவளைக் கொல்லப் பார்த்தாய்?”
“என் உடலைக் கண்டு பிடித்து விடுவார்களே என்றுதான். அதுவும், ஜஸ்ட் பக்கத்தில் விழுவது போலத்தான் கிளையை முறித்தேன்”
“ஆவி ஆனதற்கப்புறமும் பாவம் செய்ய நினைக்கலாமா?”
“ஆவிகளுக்கெல்லாம் பாவ புண்ணியம் இருக்கிறதாம்மா?” சிரித்தேன்.
”இப்போது ஏன் சிரிக்கிறாய்?”
“ஏ ஐ இல் படம் போடுகிறார்கள் அம்மா. பழக்க தோஷம்!”.
முகம் மாறினேன். “இப்போது நான் என்ன செய்வது அம்மா? இப்படியே அலைந்து கொண்டே இருக்க வேண்டுமா?” அவர் தோளில் சாய்ந்து புலம்பினேன்.
“காவிரி, நான் நிறைவாழ்க்கை வாழ்ந்தவள். என் கடமைகளைச் சரிவரச்செய்திருக்கிறேன். என் சகோதரியின் மகள்தான் காத்யா. அவளுக்கு இப்படி நிகழும் எனத் தெரியாது. தெரிந்திருந்தால் அப்போதே நீ பார்கவனைக் கொல்வதைத் தடுத்திருப்பேன். ஜெயராஜ்ஜின் மரணத்தையும்தான். மரணம் என்பது ஒவ்வொரு பிறவிக்கும் நடக்கும் விஷயம். அதில் முரண்பாடு என்னவென்றால் அது நிகழும் போது அந்தப் பிறவிக்குத் தெரியாது. அதே தான் உனக்கும். கோபத்தை மனதில் வைத்து, துரோகத்தை நினைத்து நினைத்து.. இறந்த பிறகும் குரோதத்தை வளர்த்துக் கொண்டு விட்டாய் மனத்தினுள்.”
“ஜெயராஜ் செய்தது தவறு. மிகப் பெரிய குற்றம். தண்டிக்க வேண்டியது ஆண்டவன். ஆவிகளாகிய நாம் அல்ல. இப்போது பார்.. உன் கொலை மற்றும் நீ செய்த கொலைகள் – இவற்றை ஆராய்வதற்கே இந்த போலீஸ் சி ஐக்கு சில பல மாதங்கள் ஆகிவிடும். ராகவ் காத்யாதான் கொன்றிருப்பார்களா?. உன் உடலுக்குப் பெயர் என்ன? நீ யார்? என ஆராய்வார்கள். பின்னர்தான் ஜெயராஜிற்கு வருவார்கள். எத்தனை பேருக்கு எத்தனை கஷ்டம். அனேகமாகக் கண்டு பிடிக்க முடியாது. கோப்பை இழுத்து மூடி விடுவார்கள். பார்கவன், ஜெயராஜின் விதி உன்னால் முடிய வேண்டும் என்றிருக்கிறதுபோல. ஆனால், உனக்குத் தான் தீராப் பாவம்.”
“உன்னைக் குழப்பவில்லை, ஆனால் ஒன்று.. இப்போது உன் உடலில் எஞ்சி இருப்பதைப் போஸ்ட் மார்ட்டம் செய்தபின் எரித்து விடுவார்கள். நீ கரைந்து இன்னொரு ஜென்மம் எடுத்தாலும் எடுப்பாய். அதில் உன் பாவத்திற்கான விலையும், உன் ஆசைகள் பூர்த்தி ஆவதும் நடந்தாலும் நடக்கும். எனக்கு இன்னும் நான்கு நாட்கள்தான். என் கர்மாக்கள் முடிந்தவுடன் நானும் கரைந்து விடுவேன். இன்னொரு ஜென்மம் உண்டா? என எனக்குத் தெரியாது. அதனால், நான் உனக்கு ஒன்று செய்யப் போகிறேன். இறைத்துதி.. உனக்குச் சொல்லிக் கொடுக்கிறேன். நீயும் சொல்லிப் பார். உனக்கு நல்லது நடக்கும்” நீளமாகப்பேசி முடித்தது மாத்வியின் அன்னையின் ஆவி.
எனக்குக் கொஞ்சம் அமைதி வந்தாற்போல் இருந்தது.
“தாங்க்ஸ்மா. என்னைத் தூய்மைப்படுத்த நினைக்கும் உங்களது பெயரைச் சொல்லவில்லையே”
“இன்னொரு ‘ம்’.. அமிர்தம்” என்றார் மாத்வியின் அம்மா.
(முற்றும்)