நல்லாச்சி – 21

This entry is part 21 of 26 in the series நல்லாச்சி

விதைத்த சோளக்காடு அறுவடைக்கு நிற்கிறது
தளவாடங்களுடன் கிளம்புகிறது குடும்பம்
கோணிகளோடு நல்லாச்சியும்
சிறு பையுடன் பேத்தியும் தொடர்கின்றனர்

கும்பிட்டு அறுத்த
முதல் கதிரே சாவியாய் இருக்க
அடுத்தடுத்த கதிர்களும் அப்படியே
போனால் போகிறதென
ஒன்றிரண்டு சோளமுத்துகளைச் சுமந்து
வெறுஞ்சிப்பியாய் பிளந்திருக்கின்றன மீதமுள்ளவை
பறவைகள் பாதி நாம் மீதியென
பிரிக்கத்தேவையின்றி
காலிப்பாத்திரத்தை வைத்திருக்கிறாள் மண்மாதா
மலைத்து நிற்கின்றனர் மற்றவர்
பரிகசிக்கிறாள் பேத்தி

அன்னைக்காய்ப் பரிகிறாள் நல்லாச்சி
எத்தனை பசித்திருந்தாளோ
கொடுத்ததையெல்லாம் செரித்துவிட்டாள்
மனங்குளிர்ந்த மண்மாதா
நாம் கொதிக்கப் பார்த்திருப்பாளோ
அடுத்த விளைச்சலைப் பெருக்கித்தருவாள்
கிடைத்தவற்றை வீடுசேர்ப்போம் கோழிகளுக்காகும்
இதுவும் அன்னையின் பிரசாதமே
நல்லாச்சியைத் தொடர்கிறாள்
புத்திக்கொள்முதல் செய்த பேத்தி.

Series Navigation<< நல்லாச்சி – 20நல்லாச்சி – 22 >>

Author

Related posts

என்ன செய்ய?

வரலாற்றில் பொருளாதாரம் – 23

சமன்பாடில்லா சமவெளிப் பயணங்கள்: 10