நீலத்தின் ஐம்பது சாயல்கள் – 6 (நிறைவுப்பகுதி)

“ஏஞ்சலினா பாடிக்கொண்டிருந்தாள்… “மேய்ப்பன் அவனே, ஆடுகள் எல்லாம் குழந்தை வடிவத்தில். மன்னவன் அவனே, மக்கள் எல்லாம் மழலை வடிவத்தில்”. நானும், என் தம்பியும், மனைவியும் கேட்டுக்கொண்டிருந்தோம்.. அப்போது எங்களுக்குத் தமிழ் தெரியாது..

போனது ஜான் பெர்ணான்டஸின் வீடு… ஏஞ்சலினா குரல் இனிமையில் சொக்கிய எங்களுக்கு, அதுதான் அவளுடைய கடைசிப் பாடல் எனத் தெரியாது..”


ஷ்ஷ்.. ஹலோ… நான் சைந்தவி.. மேலே நீங்கள் முன்னிரவின் மடியில் கேட்டது கொலைகாரன் குரல்… எஸ், என் குரலில் உற்சாகமா… நாங்கள் கண்டுபிடித்துவிட்டோமே… நாங்கள் என்றால் நான் அண்ட் ஸ்ரீனிவாசப் பெருமாள்.

பிரமோத்தின் வீட்டில் நிறுத்தியவர் சொன்னார்: “சைந்தவி.. ஷ்.. கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்காதே.. வா.. உள்ளே போகலாம்.”

வாசலில் பார்க் செய்யப்பட்டிருந்தது பிரமோத்தின் தந்தையின் கார்… அதைக் கடந்து காலிங் பெல். ம்ஹூம் ஒலிக்கவில்லை.. யாரோ ஆஃப் செய்திருக்கிறார்கள். கதவைத் தட்ட நினைக்க அது திறந்தது.. யாருமில்லை.. உள்ளே சின்ன ஹால், வலதுபுற ஓரம் மாடிப்படி. ஒரு ஈ, காக்கை, கொசு கூடத் தென்படவில்லை..

பெருமாள் முன்னே தாவி ஏற, நானும் ஏற, ஒரு அறைவாயில். அங்கு அவன் நின்றுகொண்டிருந்தான்.. முகம் மூடியிருக்க, கையில் கத்தி மற்றும் கர்ச்சீஃப். படுக்கையில் பிரமோத்தின் அப்பா… நல்ல உறக்கம் போல.

இல்லை.. அந்தக் கர்ச்சீஃபின் ஸ்மெல் புரிந்துவிட்டது.. மயக்க மருந்தின் நெடி..

கத்தியால் பாய முயற்சிக்க, நானும் பெருமாளும் பாய.. பின் என்ன… புரளல், எழுந்து நிற்றல். சீற்றக் கண்களுடன் எங்கள் மேல் வீச முற்பட்டவனைத் தடுத்து, டிஷும் டிஷும் கொடுத்து… விலக்கி……

பின் போன் செய்து மற்றவர்களை வரவழைத்து, அந்த ஆளை இங்கே கொக்குப் பாக்கம் அழைத்து வந்துவிட்டோம்.. போன் செய்கையில் அடுத்த அறையிலிருந்து மோனிகா.. கண்களில் சிவப்பு..

“நீங்கள் எப்படி இங்கே…?” அவள் கண்களில் கேள்விக்குறி..

அவளையும் இட்டுக்கொண்டு… சரி, நல்ல தமிழில் அழைத்துக் கொண்டு வந்துவிட்டோம். இடம் கொக்குப்பாக்கம் ஸ்டேஷன். போன் செய்ததில் தாவி முதலில் வந்திருந்தவர் ஏசிபி விஷ்வம். பின் அந்த ஆளை விசாரித்ததில்தான் இதோ பேசிக்கொண்டிருக்கிறான்..

ஓவர் டூ கொலைகாரன்…

“நான் தேஜ்பூர்க்காரன்.. அஸ்ஸாமில் அந்த ஊரின் உரத் தொழிற்சாலையில் வேலை.. என் தம்பியும் என் கம்பெனிதான். உரத் தொழிற்சாலை மேலாளராக மாற்றல் செய்யப்பட்டவர்தான் ஜான் பெர்ணான்டஸ்.. நாகர்கோவில்காரர்.. அவர் பெண் ஏஞ்சலினா… அழகிய தேவதை.. பத்து வயது. கிறிஸ்துமஸ் தினத்தில் எங்கள் முன்னால் தமிழ்ப்பாடல் பாடி ஆடிய அவள் மறுநாள் இல்லை. ஆமாம், ஒரு பஸ் ஆக்சிடெண்ட். பதினைந்து வருடம் முன்னால் கிறிஸ்துமஸ் மறுதினம் நிகழ்ந்தது.. எங்கோ டூர் எனக் கிளம்பிய சிறுவ சிறுமிகள் சரேலென மலையிலிருந்து விழுந்து மரணித்தனர்.. ஒருவர் கூட மிஞ்சாமல்… ஐம்பது நீலச் சீருடை அணிந்த புஷ்பங்கள்.. பலவித கனவுகள் கண்களில் கொண்டு, ஹ்ருதயத்தில் வெண்மை மட்டுமே கொண்ட சின்னஞ்சிறு புறாக்கள்.. எல்லாரும் இல்லாமற்போனார்கள்.

காரணம் மழை வெள்ளம் அண்ட் பிரேக் பிடிக்கவில்லை, டிரைவர் குடித்திருந்தார், அவரும் அவுட் எனப் பலவித நியூஸ். நாங்கள் விபத்து இடத்திற்குச் சென்றோம்.. நிறையப் பேருடைய உடல்கள் பள்ளத்தில் விழுந்ததால் கிடைக்கவில்லை.. ‘ஏஞ்சல், ஏஞ்சல்’ என்று ஜானின் மற்றும் அவன் மனைவியின் கதறல்கள் மலைப்பள்ளத்தாக்கில் எதிரொலித்துத்தான் இருந்தது. கடைசியில் வாடிய மலராய் ஏஞ்சல்…

அழைத்து வந்தோம் வீட்டிற்கு.. இல்லை, எடுத்து வந்தோம்… கண்ணீர்தான், அழுகைதான், வருத்தம்தான்… குமுறல்தான். பின் அடக்கமும் செய்தோம்.. வீடு திரும்பி ஜானையும் அவர் மனைவியையும் ஆறுதல் சொல்லித் தேற்ற முடியாமல் திகைத்து.. கொஞ்சம் மறுபடி ஆறுதல் சொல்லி வீடு வந்து தூங்கி எழுந்து மறுநாள் காலை சென்றால்…. ஜானும் இல்லை, அவர் மனைவியும் இல்லை.. இருவரது உடல்கள் மட்டுமே இருந்தன… பாழாய்ப்போன விஷம்.. என்னவோ எனத் தெரியாது. அவர்களுடன் பழகியது சில வருடங்கள்தான்.. ஆனால் எனக்கும் என் மனைவிக்கும் என் தம்பிக்கும் ஆறவில்லை. விபத்து நடந்தது தற்செயல் என விதியை நொந்திருந்தபோதுதான் தெரிந்தது.. ஸ்கூலுக்கு வாங்கிய பஸ்ஸில் கோளாறு என்று..

விசாரித்தால் கைகள் நீண்டன கருணாகர் மீது.. அவர்தான் வாங்கியவர் என… யார் மூலமாக என்றால்…. அது… இந்த பிரமோத்தின் அப்பா.. அங்கங்கே என்று பணம் கொடுத்துக் கேஸைத் திசை திருப்பிவிட்டார்கள். அன்று முடிவெடுத்தோம்.. சென்னை வந்தோம், கொஞ்சம் கஷ்டப்பட்டோம்.. நான்கு வருடங்கள் மொழிப் பயிற்சி எடுத்தோம்.. தமிழ் கற்றுக்கொண்டோம்… மெல்ல மெல்ல எஸ்டாப்ளிஷ் செய்துகொண்டோம். கருணாகர் இங்கே வந்து பிசினஸ் ஆரம்பித்தார்… தொடர்ந்தோம்.. சில வருடங்களுக்கு முன்னால் அவருடன் சேர்ந்தேன்.. பின் மெல்ல மெல்ல மெல்லத் திட்டம் போட்டு….”

நிறுத்தினான்….

”அவரைக் கொலை செய்தாயாக்கும்.. நல்ல பிளான்.. பிரமோத் என்ன பாவம் பண்ணினான்…”

”அவன் அவனது அப்பாவிற்குப் பிறந்ததே பாவம்தான்.. ஆனால் இல்லை.. அவன் வந்து இறப்பான் என நினைக்கவில்லை.. நாங்கள்..”

”நாங்கள் என்றால் ..”

”நானும் என் தம்பியும்..”

”இரண்டு பேரும் தான் இந்தக் கொலைகளைச் செய்தீர்களா..?”

”ஆமாம்.. கருணாகரனை இறுக்கித் தொங்கவிட்டது நாங்கள் தான்.. அந்த அறையில் முன்பு ஊஞ்சல் இருந்திருக்கும் போல, அந்த வளையங்களில் ஒன்றை நாங்கள் உபயோகப்படுத்திக்கொண்டோம்… பின் தம்பி சென்றுவிட்டான்..”

”எங்களைப் ஃபாலோ பண்ணச் சொல்லியிருந்தாயா…?”

”ஆமாம்.. உங்கள் மேல் ஒரு கண் வைக்கச் சொல்லியிருந்தேன்.. இங்கு வந்தால் தடுக்கவும் சொல்லியிருந்தேன்..”

”கண்ணும் வைத்தான் கன்-னும் (Gun) வைத்தான்.. சௌகரியமாக பதினாறாம் அவென்யூவிற்குள் போய் ஓடிவிட்டான்.. பட் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். எங்கள் ஆட்களிடம் இந்நேரம் அவன் வண்டியையும் அவனையும் பிடித்திருப்பார்கள்..” என்றார் பெருமாள்…

”இவ்வளவு அவசரமாக அவரைக் கொல்லக் காரணம்..?”

”அவருக்கு நான் யார் எனத் தெரிந்துவிட்டது என நினைக்கிறேன்.. அதாவது அவர் யார் என நான் தெரிந்துகொண்டதைத் தெரிந்துகொண்டார் என நினைக்கிறேன்..”

”குழப்பாதே…”

”இல்லை உண்மை…”

”ம்… உன் நண்பருக்கு நிகழ்ந்தது அநியாயம், அதற்காக இப்படிச் செய்வது என்பது?…”

பெருமாள் முடிப்பதற்குள் குறுக்கிட்டான் அவன்..

”இல்லை, இந்த பிரமோத்தின் அப்பாதான் அந்த பஸ் வாங்கித் தந்தார்.. அந்த ஸ்கூலிற்கு.. கருணாகரின் மூலமாக…”

”இல்லை இல்லை – ” என அங்கிருந்த பிரமோத் அப்பா அலறினார்..

”பொய் சொல்லாதே” என அவன் உறும, “ஷ்ஷ்” என்றார் ஸ்ரீனிவாசப் பெருமாள்..

”மொஹிந்த் என்ற முகுந்தன் எனப்படும் தேஜ்பூர்க்காரா.. டிரைவர் ஆஃப் கருணாகரா..… -” என்று ஆரம்பித்தார் பெருமாள்…

”அழகான பிளான் தான். மாலில் மற்றவர்களைப் படம் பார்க்க விட்டுவிட்டு, திரும்ப வந்து இவரைக் கொலை செய்து, பின் திரும்பச் சென்று மற்றவர்களுடன் திரும்ப வந்து அழுதது… தேர்ந்த நடிப்பு. ஒவ்வொரு முறையும் கயிற்றுக்குப் பதிலாகத் திக்கான நீலத் துணி… அது என்ன என்று ஃபாரன்சிக் அலசி இருந்தது.. நீல வண்ணத் துணி, ஆனால் முரடு.. கொஞ்சம் பெட்ஷீட் போல அதை இறுக்கி இறுக்கி கயிறாக்கி இருக்கலாம்…

கொஞ்சம் யோசித்தேன்.. ஷண்முகநாதனின் பேரன் பிரவுன் அண்ட் பிரவுன்.. அண்ட் பிரவுன் டை போட்டிருந்தான்.. இது ஏன் டையாக இருக்கக் கூடாது? பின் கருணாகரன் வேலை பார்த்த ஸ்கூல் நினைவு வந்தது.. அதன் யூனிஃபார்ம் அதுதானே… நீலம். பின் அந்த விபத்தும் கூகுளில் படித்த நினைவு… ஆனால் சத்தியமாக நான் லிங்க் செய்யவில்லை.. ஒரு படப் பெயரினால் எல்லாம் ஒரு இடத்தில் விழுந்துவிட்டது…”

”வெரி குட் ஸ்ரீனிவாசப் பெருமாள்..” என்றார் விஸ்வம்.. ”ஆனால் ரொம்ப அலசிட்டீங்க.. கேஸை.. எல்லார் பேர்லயும் சந்தேகம் வர வைக்கிற மாதிரி பண்ணிட்டீங்களே.”

”நான் என் கடமையைத் தான் செய்தேன் சார்” என்றார் ஸ்ரீநி..

”சரி, இவரை உள்ளே வச்சிடலாம்.. நாளைக்குக் கோர்ட்டுக்குப் போய் ஹேண்ட் ஓவர் பண்ணலாம்.” என்றபடி விஸ்வம் கிளம்ப, நானும் பெருமாளைப் பார்த்தேன்..

”நான் உன்னை விடுறேன் சைந்தவி…”

ஸ்கார்ப்பியோவை எடுத்தார்…

”சார், வெரி குட் சார். சின்ன ஸ்பார்க்… கலக்கிட்டீங்க..”

”என்ன கலக்கி என்ன?” என்றார் பெருமாள்.. கண்கள் கலங்கியிருந்தன.. “வி லாஸ்ட் பிரமோத்..”

”வாட் டு டூ சார்…” என்றேன் நான்.. நானும் குரல் கம்மினேன்..

கொஞ்சம் மௌனித்துச் சாலையைப் பார்த்திருந்தோம். சற்றுப் பின்னர்…….

”ஆமாம் சைந்தவி” என்று இழுத்தார் ஸ்ரீனிவாசப் பெருமாள், ஜீப்பை வளைத்தபடி..

”நார்மலா உன்னோட லவர் பத்தியெல்லாம் பேசுவ.. இந்த வாரம் முழுக்கப் பேசவே இல்லையே…”

”ம்ஹூம்.. வாட்ஸ்அப் கூடப் பண்ணலை.. ஏன்னா நான் விரதம் சார் – அவன்கிட்ட..”

”என்னது, நோ ரொமான்ஸ் வீக்கா..”

”அது அப்படி இல்லை.. ஆனா..”

“ஆனா..?”

”என்னோட ஆள் டெல்லி போயிருக்கான்.. நாளைக்குத்தான் வர்றான்.. நாளையிலிருந்து அவனைப் பற்றி உங்களிடம் பேசுவேன்..”

“இதைத்தான் நாலடியார்ல என்ன சொல்லியிருக்காங்கன்னா, ஒரு கிணத்துல ஒரு தவளை இருந்ததாம்..”

“சார் ப்ளீஸ், இப்போ வேண்டாமே.. எனக்குத் தூக்கம் வருது..-” என்றேன் நான்..

(முற்றும்)

Series Navigation<< நீலத்தின் ஐம்பது சாயல்கள் – 5

Author

Related posts

உன் உழைப்பால் சிகரம் தொடு!

சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 7

நல்லாச்சி – 24