நெஞ்சக் கனல்

இந்த உலகத்தில் பிறப்பது மனிதர்களானாலும் சரி, என்னைப் போலவே மிருகமானாலும் சரி, ஆண்களாகவே பிறக்கக் கூடாது!

ஏனாம்?

பாருங்கள். நான் கண்களில் வெறியுடன் காது விடைத்து மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருக்கிறேன் சில நாட்களாக. நோ ரெஸ்ட். என் மேல் ஜக்கு; அவனும் என் மேல் உட்கார்ந்து என்னுடைய இன்னொரு உடல் உறுப்பு போல மாறி, என்னை ஒட்டிப் படுத்து, பின் நின்று எனக்கான செய்கைகள், சொற்கள் சொல்லி ஓட்டிக்கொண்டிருக்கிறான். இருவருக்கும் ஒரே வெறி, ஒரே இலக்கு தான். வெற்றி பெற வேண்டும்.

எங்களுக்குப் பக்கத்தில் ப்ளாக்கி என்றழைக்கப்படும் என் நண்பன் கறுப்பன். அவன் மேல் அவனைச் செலுத்தும் ஜாக்குலின். அவர்களும் அப்படியே.

ஹச்சோ… நான் யார், ஜக்கு யார், அவர்கள் யார் என்று சொல்லவே இல்லையே!

பணக்கார மனிதர்களின் வீட்டில் பிறக்கும் குழந்தையை வெள்ளி ஸ்பூனில் பிறந்தது என்பார்களாம். நானும் அப்படியே. பிறந்தது ஜேம்ஸ் ராட்ரிகஸின் குதிரை லாயத்தில். என் அம்மாவும் அப்பாவும் தரோ ப்ரீட் என்னும் வகையைச் சார்ந்தவர்கள். நிறைய ரேஸ்களில் அப்பாவும், ஒன்றிரண்டு ரேஸ்களில் அம்மாவும் ஜெயித்திருக்கிறார்களாம்.

ஜேம்ஸ் ராட்ரிகஸ் ஊட்டியில் மிகப்பெரிய எஸ்டேட் ஓனர். அவருக்கு நிறைய பங்களாக்கள், பெரிய கிரவுண்டுகள், பின் நான் பிறந்த குதிரை லாயம் உண்டு. லாயத்தில் கிட்டத் திட்ட அறுபதுக்கும் மேற்பட்ட குதிரைகள் வளர்த்துப் பராமரிக்கிறாராக்கும்.

நான் பிறந்த போது அவருக்கு ஏக சந்தோஷம். அதுவும் செஸ்ட் நெட் என ஆங்கிலத்தில் சொல்லப்படும் செம்பழுப்பு நிறத்தில் பிறந்தேனா… ”ப்ரௌனி என்ன அழகாருக்கு பார் அழகேசா (குதிரை லாயத்தின் பொறுப்பாளர்). இதை வளர்த்துப் பெரிய ரேஸ்காரனாக்கறேனா இல்லையா பார்!” எனில் என்னை எல்லாரும் ப்ரௌனி என்றே தான் கூப்பிடுவார்கள்.

நாங்கள் குதிரை இனங்கள் – எங்களை நிறக்குருடு என்பார்கள். நிறம் தெரியாது என. அப்படி இல்லை. எனக்கு மூன்று நிறம் தெரியும். கறுப்பு, வெள்ளை, என் கலர் சிவப்பு கலந்த மர நிறம் – ரெட்டிஷ் ப்ரௌன்.

ஆக, ஜேம்ஸின் கடைக்கண் பார்வை நேராகவே பட்டதால் அழகேசனும் சரி, அவனது உதவியாளர்களும் சரி, என் மற்ற சகாக்களை விட என்னை நன்கு கவனித்துக்கொண்டார்கள். வேளாவேளைக்கு புஷ்டியான உணவு, புல் வைக்கோல், நிறையத் தண்ணீர். நேரப்பிரகாரம் என்னை நடத்திச் செல்லல், மெல்ல ஓட வைத்தல் எனச் செய்தார்கள்.

காலப்போக்கில் நான் ஆறு வருடத்தில் வெகு அழகாக, ஒல்லியாக இருந்து திறமையாக ஓடிக்கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டிருந்த போதில் தான், ஜக்கு என்கிற ஜகன்னாதனை அழைத்து வந்து அறிமுகப்படுத்தினார். ஜாக்கி ஜக்கு திறமையான ஆள். வெள்ளைக்கார ஆள் எனச் சொல்லும் அளவுக்குச் செவேல் நிறம். என் நெளிவு சுளிவுகளைப் புரிந்து கொண்டு, எனக்குப் புரியாத விஷயத்தை – எப்படிக் காற்றைப் போல ஓட வேண்டும்… தடைகள் இருந்தால் எப்படித் தாவ வேண்டும்…, உணவு சத்துள்ள உணவாய் கொள்ளு, ஓட்ஸ் மற்றும் சிறு தானியங்கள் கலந்த தொட்டி நிறைய பானங்கள் எனக் கொடுக்க வைத்தான்.

என்ன, அதே காலகட்டத்தில் தான் ஜேம்ஸ் ராட்ரிகஸ் பூனாவாலா குதிரைப் பண்ணையில் இருந்து கறுப்பனை – ப்ளாக்கி – இன்னொரு தரோ ப்ரெட் வகை, கூடவே பூனாவாலாவில் ட்ரெய்ன் பண்ணப்பட்டவன் – அவனுடன் ஜாக்குலினையும் (அவளும் ஒரு ஜாக்கி – ஆங்க்லோ இந்தியன்) கொண்டு வந்தார். அழகேசன் – ”ப்ளாக்கியும் ரேஸுக்குங்களா? ப்ரௌனி நல்லா தேறி வருதே. கொஞ்சம் மாதங்களில் நல்லா ஓட ஆரம்பிச்சுடுமே” – எனக் கேட்க, ஜேம்ஸ், “ஒண்ணுக்கு ரெண்டா இருக்கட்டும் அழகேசா. அதுங்களுக்கும் ஒரு உத்வேகம் வரும்” எனச் சொல்லி ஜாக்கி ஜக்குவிற்கு ஜாக்கி ஜாக்குவை இன்ட்ரோ செய்தார்.

ஜக்குவிடம் ஒரு ரியாக்‌ஷனும் இல்லை. சொல்ல மறந்துவிட்டேனே… ஏதோ ஒரு முனிவராமே ரிஷ் ரிஷ்.. ரிஷ்ய சிருங்கர் போன்ற பிரகிருதி தான் ஜக்கு. எப்போதும் சீரியஸ். பெண்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான். அதாவது நான் பார்த்ததில்லை. என்னை ஓட்டிச் செல்லும் போது டிராக் வளையுமே, அது போன்ற அபாரமான வளைவுகள் கொண்ட ஜாக்குலினை அல்பமே என்பது போலப் பார்த்து, உதடு ஒரு மில்லிமீட்டர் விரித்து ஹாய் சொன்னான். அவ்வளவு தான்.

ஜாக்குலினும் மென்சிரித்து முகம் மாறினாள். என் நிறத்தில் இருந்த அவளது சுருள் தலை முடிகள் காற்றில் இடமாறின. ஜக்குவைப் போல ஜாக்குவும் நல்ல சிகப்பு; நல்ல அழகி. கூடுமானவரை பீட்டர் மன்னிக்க ஆங்கிலத்தில் தான் பேசுவாள்.

ஆனால் எனக்குக் கறுப்பனை மிகவும் பிடித்திருந்தது. காரணம் அவனும் என்னைப் போலவே ஒல்லி. வாளிப்பான கருநிறத் தேக்குமரம் போன்ற கால்கள்; அடர்த்திப் பிடரி மயிர் கருகருவென. நீள சற்றே உள்வாங்கிய வாழைக்காய் போன்ற காதுகள். தெளிவான குறுகுறு கண்கள். மூக்கு கொஞ்சம் அவ்வப்போது துடித்தது. நல்ல உதடு. அதைவிட என்னிடம் நன்றாகவும் பேசினான் எங்கள் பாஷையில்.

நான், கறுப்பன் மற்றும் சில குதிரைகள் எல்லாம் எங்கள் லாயத்திலிருந்து ஒன்றாகவே கிரவுண்டில் சென்று பிராக்டிஸ் – ஓடி விட்டு வருவோம். கறுப்பன் செம ஸ்பீட். பல முறை வேகமாக மின்னல் கீற்றாக ஓடி என்னைப் பின் தங்க வைத்துவிட்டான். நான் என்ன இளைத்தவனா என்ன? உறுதி கொண்டு சீறிச் சீறி அவனுக்கு இணையாக ஓடி வந்தேன்.

எட்டு மாதத்தில் கறுப்பன் எனது உயிர் நண்பனாகிவிட்டான். ஜாக்குவும் ஜக்குவும் எப்போதும் போல உர்ர். அவர்களது உரையாடல் காபி ஷாப்பின் முன்னால் இப்படி இருக்கும்:

“எனக்கு சாக்லேட் ப்ரௌனி” – கடைக்காரரிடம் ஜக்கு. “எனக்கு ப்ளாக் காபி” – ஜாக்குலின். வாங்கிக்கொண்டு நகர்ந்து விடுவார்கள். (எங்களைத் தவிர வேறு யாரையும் நினைக்க மாட்டார்கள் போல!) குட்டிப் புன்னகை மட்டும் செய்வார்கள் என நினைக்கிறேன்.

ஒரு நாள் பயிற்சி முடிந்து திரும்பி வந்த போது லாயத்தில் என் அறை அருகே ஒரு வெள்ளைக்காரி – வெள்ளைக் குதிரையைக் கட்டி வைத்திருந்தார்கள். பார்த்தாலே தெரிந்துவிட்டது; அது அவனில்லை, அவள் என்று. அழகான வெளிர் நிறம், கருநாவற்பழக் கண்கள், தெளிவான அப்போது தான் பூத்த ரோஜா போன்ற மெல்லிய வெளிர் சிவப்பு இதழ் (அப்பப்ப இந்த நிறம் எனக்குத் தெரிய வரும்!), நீளமான கோன் ஐஸ்கிரீம் நாசி, நல்ல நீண்ட காதுகள், கொஞ்சமான எடை கொண்ட இடை, ஒல்லி அல்லி மலர்க் கால்கள் என நின்றிருந்தவள் என்னைப் பார்த்து ப்ஹிர் எனப் பல்லைக் காட்டினாள்.

நான் கண்டுகொள்ளவில்லை. காரணம் ரேஸில் கலந்த பின்பு தான் பெண்கள் என உறுதியாய் நினைத்திருந்தேன். எனக்கு உசுப்பேற்றியது ஜக்குவும் கூட.

கறுப்பன் என் வலப்புற அறையில் நின்றுகொண்டான். இவள் இடப்புறம். வாலைச் சுழற்றி அடித்தாள் வெள்ளையம்மா.

”ப்ரௌனி… நீ என்னைக் கண்டுகொள்ளவே இல்லையே!”

“வெள்ளையம்மா… நீ மார்வாரி என நினைக்கிறேன். உன் காதுகள் மடிந்து இருப்பதைப் பார்த்தாலே தெரிகிறது. உன் இனத்தில் தான் உன்னை விடுவார்கள், என்னை ஆளை விடு.”

“போடா மோசம் நீ. ஏன்?”

“ஏனெனில்…” இந்தப் புறம் கறுப்பனைப் பார்த்தேன். “இந்தக் கறுப்பன் எனக்குப் போதும்!”

வெள்ளையம்மா மறுபடி ப்ஹிர் எனச் சிரித்தாள். “வெளியில் சொல்லாதே ப்ரௌனி, எல்லாரும் உன்னைப் பார்த்து கெக்கெக் கே எனச் சிரிப்பார்கள்”. கடைசி கே ஆங்கில எழுத்து ‘G’ யில் ஆரம்பிக்கும் கே. கறுப்பனும் அந்தப் பக்கம் சிரித்துக் கனைத்து தனது அறுபத்து நான்கு பற்களைக் காட்டினான்.

“என்ன சிரிப்பு வெள்ளையம்மா? நீ ரெண்டு மூன்று குட்டி போட்டுவிட்டால் அவ்வளவு தான். வேறு எங்கேயோ அனுப்பிவிடுவார்கள். பின் பஞ்சாபி மனிதர் கல்யாணங்களில் மாப்பிள்ளையின் பாராக்கில் தேர் மட்டும் ஓட்டுவாய் தெரியுமா?” எனச் சொல்லி நான் சிரிக்க, உம் என முகத்தை வைத்துத் திருப்பிக்கொண்டாள். (பஞ்சாபிக் கல்யாணங்களில் பெண் குதிரை தான் விடுவார்கள்).

தொடர்ந்த சில மாத இடைவிடாதப் பயிற்சியில் நானும் கறுப்பனும் 550 கிலோவில் மென்மையான சிறகு உடல் கொண்டுவிட்டோம். நான் மணிக்கு 45 கிமீ வேகம், கறுப்பன் 46 கிமீ வேகமாம். ஜக்கு என் காதில் சொன்னான்; முயற்சி செய்தால் செய்து விடுவேனாம்.

ஒரு நாள் மாலை, ஜேம்ஸிற்குச் சொந்தமான திடலில் வழக்கம் போல் நான், கறுப்பன், இன்னும் பத்து சகாக்கள் ஓடிப் பிராக்டிஸ் செய்து ஓட ஆரம்பித்த இடத்திற்கு வந்த போது ஆச்சரியம். ஜேம்ஸ் ராட்ரிகஸ் வந்திருந்தார். கூடவே இன்னொருவர். அவரது ஃப்ரெண்ட், பிலாசபர், கார்டியன் என அவரால் சொல்லப்படும் ஒரு நண்பர்.

நாங்கள் மூச்சிரைக்க நிற்க, ஜக்கு இறங்கி என்னைத் தடவிக்கொடுத்து உச்சி முகர, ஜாக்குலின் கறுப்பனின் முதுகைத் தடவி முகத்தை நீவி விட்டாள்.

”குட்” என்றார் ஜேம்ஸ் – ஜாக்குலின், ஜக்குவிடம். நண்பரிடம் திரும்பி, ”எப்படி ப்ரௌனி? என் வளர்ப்பு. எவ்வளவு அழகாய் ஓடுகிறான். இந்த ஊட்டி ரேஸில் இறக்கப் போகிறேன் இவனை. இந்த நீலகிரிஸ் தங்கக் கோப்பையை எப்படியும் பெற்றுவிடுவான். என்ன சொல்கிறீர்கள்” எனக் கேட்டார்.

ஜேம்ஸின் நண்பர் சற்று என்னருகில் வந்தார். என் முகத்தைத் தடவிப் பார்த்தார். பின் அசைந்துகொண்டிருந்த என் ஒல்லியான கால்களை. பின் கறுப்பனிடம் சென்றார். அவன் முகம், கால்கள், முதுகு, பிடரி எனத் தடவினார். பின் ஜேம்ஸிடம், ”இரண்டு பேரையும் போட்டியில் இறக்கி விடு ஜேம்ஸ்.”

“பட் வில்சன், ப்ரௌனி நான் வளர்த்துப் பிராக்டிஸ் செய்தது.”

“இல்லை. இரண்டும் இறங்கட்டும்.”

“ஒன்று தோல்வி அடைந்துவிடுமே.”

“கெட் ரிட் ஆப் ஒன். ஒன்றை ஒழித்து விடு” என்றார் வில்சன்.

ஜேம்ஸ் திகைத்தார். “சரி, தோற்றதை விற்று விடுகிறேன்” என்றார்.

வில்சன் மென்மையாக, தீர்மானமாகச் சொன்னார். “நான் சொன்னது தீர்த்து விடு என்று. தோற்ற ஜாக்கியை நீக்கிவிடு”. * நாங்கள் நால்வருமே அதிர்ந்தோம். அதிர்ச்சி ஜக்கு, ஜாக்குவிடம் ஒட்டிக்கொள்ள, நானும் கறுப்பனும் கால் மாற்றி மாற்றி அன்-ஈஸியாக உணர்ந்தோம்.

ஜேம்ஸின் குரு வில்சன். அவர் சொல்வதைத் தான் செய்வார் ஜேம்ஸ் என்பது எங்களுக்குத் தெரியும். எனில் எங்கள் நால்வர் உணர்வுகளிலும் தீப்பிடித்துக்கொண்டு விட்டது.

அன்றிலிருந்து வழக்கமான ஜாலியாக இல்லாமல் சூடு பிடித்தது எங்கள் பிராக்டிஸ்.

உணவெல்லாம் வழக்கத்தில் பாதியாகக் குறைத்தேன். ஜக்குவும் கூட உண்டதை நான் பார்க்கவில்லை. என்ன இந்த மனிதப் பதர்களை நம்பக் கூடாது எனக் கோபம் என்னுள் எழுந்தது. ரேஸில் ஜெயிக்கவில்லை என்றால் நான் அல்லது கறுப்பன் மரிக்க வேண்டுமாம். வில்சன் சொல்ல ஜேம்ஸ் தலையாட்டுகிறார்.

அதைவிட ஜக்குவின் மாற்றம். ஏனெனில் ஜாக்குலினுக்கு ஏற்கனவே அமெரிக்க ரேஸ்கிளப்பில் ஆஃபர் இருக்கிறதாம்; சொல்லியிருக்கிறாளாம். எனில் வாழ்வா சாவா என்பது இவன் வேலை மட்டும் தானாம்.

என்னை ஓட்டிச் செல்லும் போது என் காதுகளில் பேசி உருவேற்றிக்கொண்டே வந்தான் அவன். “ஜெயிக்கணும் எனும் போது இலக்கை மட்டும் கண்ணில் வைத்துக்கொள்ள வேண்டும், ப்ரௌனி. வெளியில் தென்படும் ஒலிகள் கேட்கக் கூடாது, நீ ஓடும் தரை கூட உனக்குத் தெரியக் கூடாது. ஜெயிக்க வேண்டும். நீ ஜெயிப்பாய்.. ஐ நோ ஐ நோ. என் நெஞ்சுக்குள் கனல் ஏற்றி வைத்துவிட்டேன் ப்ரௌனி. நீயும் ஏற்றிக்கொள். நடக்கும், ஜெயிப்பது நடக்கும்”.

முதலில் அவன் சொல்வது போரடித்தாலும் என் உணர்வுகளிலும் தீப்பற்றிக்கொண்டது. ஜெயிப்போம்; பின் பார்ப்போம் ஜேம்ஸ் மனது மாறி கறுப்பனைக் காப்பாற்ற மாட்டாரா என்று.

மறுநாள் ரேஸ் என்றால் முதல் நாள் இரவு. சாதாரணமாகக் குதிரை லாயத்தில் எங்களை எல்லாம் பார்க்க வரமாட்டான் ஜக்கு. அன்று வந்தான். என்னைப் பார்த்தான்; அருகில் வரவில்லை. கடந்து போனான்… போனது கறுப்பனிடம்.

எனக்குப் பகீர் என்றது. என்ன இது? ஏதாவது ஊசி கீசி போட்டு கறுப்பனின் வேகத்தைக் குறைத்துவிடப் போகிறானா என்ன? போன ஐந்து நிமிடத்தில் வெளியில் வந்தான். என்னை ஒரு பட்டும் படாத பார்வை பார்த்து விலகிச் சென்றுவிட்டான்.

மறுநாள். ஊட்டி ரேஸ் மைதானம்.

ஸ்பெஷல் தங்கக் கோப்பைக்கான ரேஸ் என்பதால் கூட்டம் அதிகம். நானும் இன்னும் பதினைந்து குதிரைகளும் எண்கள் இடப்பட்ட அறையில் நின்றிருந்தோம். என் மேல் ஜாக்கி ஜக்கு. என் எண் 1. அடுத்து கறுப்பன் எண் 2. மூன்றாவது வெள்ளைச்சாமி (வெள்ளையம்மாவின் கணவன்!) எண் மூன்று. மூவரும் ஜேம்ஸிற்குச் சொந்தமானவர்கள். பின் இருக்கும் எட்டு பத்து குதிரைகள் கல்கத்தா, டெல்லி, பெங்களூர் என்று வந்திருந்தன.

காலையில் கால் வயிறு தான் குடித்திருந்தேன் – கொள்ளு, ஓட்ஸ் கலவை. ஒரே பரபரப்பாக இருந்தது எனக்கு. என்னை விடக் கொஞ்சம் அமைதியில்லாமல் இருந்தான் ஜக்கு. அவன் மேல் கோபம் என்றாலும் கறுப்பனை என்ன செய்திருப்பான் என்ற கவலை இருந்தாலும், இப்போதைக்கு என் மனதில் ஒன்றே ஒன்று தான் இருந்தது. வெற்றி இலக்கு. வெல்ல வேண்டும்; எதைப் பற்றியும் கவலைப்படாதே. ஜக்கு கால்களை என் இருபுறமும் இறுக்கிப் பிடித்துக்கொண்டு வெடியோசைக்காகக் காத்திருந்தான்.

ஜாக்குலின் பரபரப்பில்லாமல் இருந்தாள். அவள் அணிந்திருந்த குட்டித் தொப்பி அவள் கூந்தலை மறைக்க முயன்று தோற்றது. கறுப்பனும் கூடக் கண்களில் சலனமில்லாமல் இருந்தான் என நினைக்கிறேன்.

டம்ம்ம்!

குண்டு வெடிக்கப்பட, எங்கள் எண்ணிட்ட பலகைகள் திறக்க, நாங்கள் மேகத்திலிருந்து சீறி வானிலிருந்து மண்ணில் இறங்கும் மழை போல வெளிவந்தோம்.

ஹோ எனக் கூச்சல் – என் காதுகளில் விழவில்லை. வயிற்றை அழுத்திக் கால்களை இடுக்கி, என் முதுகில் பிடரியில் முகம் புதைத்து என் பாஷையில் ‘போ’ என ஜக்கு சொன்னது மட்டும் கேட்டது. ஒரே வேகம் தான்.

சில நேரத்தில் மற்றவர்களைப் பின் தள்ளி நாங்கள் மூவர் மட்டும் ஓடிக்கொண்டிருந்தோம். நான், கறுப்பன், பின் கல்கத்தா ராணி. சொல்ல மறந்துவிட்டேன்; ரேஸிற்காக எனக்குக் கொடுத்த பெயர் சேஸ் நட். கறுப்பனின் பெயர் ப்ளாக் டயமண்ட்.

‘சேஸ் நட், சேஸ் நட்’ என என் பெயரை ஜனங்கள் உச்சரிப்பது என் காதுகளில் விழத் தான் செய்தது. முன்னங்கால்கள் தரையில் பாவுமுன்னர் பின்னங்கால்கள் அந்த இடத்திற்கு வருவது போல் ஓடிக்கொண்டிருக்கிறேன் என்று மட்டும் தெரிந்தது.

பக்கத்தில் கறுப்பன். அவனையும் ‘ப்ளாக் டயமண்ட் கம் கம்’ எனச் சொல்வது விழுந்தது. ஆனால் நான் சைடில் திரும்பவே இல்லையே!

கடைசியில் ‘ஹோ ஹோ’ எனச் சத்தம். ‘செஸ்ட் நட் யூ மேட் இட்’ எனக் குரல்கள். கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் சோர்வாகக் கறுப்பன். ஹைய்யா… நான் முதல் இடமா? ஜக்கு குதித்திறங்க, ஜேம்ஸ் ஓடிவந்து ஜக்குவைக் கை குலுக்கி என்னை அணைத்துக்கொண்டார். ஜாக்குலின் களைத்தபடி இறங்கினாள்.

கறுப்பனைப் பார்த்தால் கறுப்பனின் கண்ணோரம் நீர். என்னை ஒரு பார்வை பார்த்தான். “நண்பா, நாம் இனி சந்திக்க மாட்டோம்” எனச் சொல்கிறானா?

பின்னால் நடந்த தங்கக் கோப்பை வைபவங்களில் என் மனம் செல்லவே இல்லை. உம்மென்றே போஸ் கொடுத்தேன் புகைப்படங்களுக்கு. மறுபடி கறுப்பனைத் தேடினேன்; பார்க்க முடியவில்லை.


நிகழ்ச்சிகள் எல்லாம் ரேஸ் மைதானத்தில் முடிந்தவுடன் என்னை ஜக்கு ஓட்டிச் சென்றான். உடை மாற்றியிருந்தான். கறுப்பு டி-ஷர்ட் அப்புறம் ஏதோ நிற ஜீன்ஸ் – எனக்குத் தெரியவில்லை. நானும் மௌனமாக அவன் அசைவிற்குக் கட்டுப்பட்டு ஓடினேன். ஒரு புல்வெளிச் சமவெளியில் நிறுத்தினான். இறங்கினான். என்னை அணைத்துக்கொண்டான். அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

“சாதிச்சுட்டடா ப்ரௌனி!”

எனக்கு ஜெயிக்க வேண்டுமென்ற நெஞ்சக் கனல் இருந்தது உண்மை தான். ஆனால் இப்போது வேறு கனல் – ப்ளாக்கி மரிக்கப் போகிறானே என்று. உசுப்பேற்றியவன் இவன் தானே. நான் சௌகரியமாகச் செத்துப் போயிருப்பேனே.

என் காதுகள் விடைத்தன. மூக்கு உள்வாங்கியது. கோபம் உள்ளங்கால்களில் இருந்து உச்சந்தலைக்கு ஏறியது.

ஒரு ஷணப் பொழுதில் முடிவெடுத்து இரண்டு கால்களால் நின்று அவனை, அவன் வயிற்றை நோக்கி ஓங்கி இரண்டு கால்களால் உதைக்க….

இல்லை; மெல்லத் தான் அவன் வயிற்றில் பட்டது. சமயோசிதமாக விலகிவிட்டான். இருந்தும் ரத்தம்.

அவன் கோபமெல்லாம் படவில்லை. “குதி ப்ரௌனி, குதி. உனக்குச் சந்தோஷம் என எனக்குத் தெரியும்.. ஸ் ஆ!” என்றவன் மெல்ல அவன் வயிற்றைத் தடவி விட்டுக்கொண்டான். ”அது என்னாச்சுன்னா ஒழுங்கா சாப்பிடலையா… அப்புறம் உடம்பும் மனசும் ஹீட்டா இருந்ததா நட்ட நடுவயித்துல கொப்புளம். கொஞ்சம் பெயின் தான், நீ உதைச்சதுல உடைஞ்சு ரத்தம். சரியாயிடும்” என்றவன் தொடர்ந்தான்:

“உனக்குத் தெரியுமா ப்ரௌனி? ப்ளாக்கிக்கு ஒண்ணும் ஆகாது. ஜேம்ஸ் ஒண்ணும் செய்ய மாட்டேன்னுட்டார். காரணம் என்ன தெரியுமா?” மெல்லச் சிரித்தான். “நீயும் நானும் சௌதி போகப் போறோமே; உனக்கு நல்ல விலை கிட்டத்தட்ட 30 லட்சம், எனக்கும் நல்ல வேலை. அத்தோட ப்ளாக்கியையும் வாங்கிக்கறார் சௌதி பிசினஸ் மேன். ஜாக்குலினுக்கும் அங்கேயே வேலை. அப்புறம் ஜாக்குலினைப் பிரபோஸ் பண்ணலாம்னு இருக்கேன். அவள் கட்டியணைச்சு கைகுலுக்கினாப்பா, எவ்ளோ இதமா இருந்துச்சு தெரியுமா? நான் தான் பைத்தியமாட்டமா கறுப்பன் கிட்டக்க விட்டுக் கொடுன்னுல்லாம் உங்க பாஷையில சொன்னேன். ஆனா அவனும் நல்லா ஓடினான். இன்னொன்று, ஜேம்ஸ் சொன்னார் – என்னையும் ஜாக்குலினையும் உசுப்பேத்தத் தான் வில்சன் அப்படிச் சொன்னாராம். ஜாக்கிகள் எல்லாம் காதலியை விடக் குதிரைகளை ரொம்ப லவ் பண்ணுவாங்க தெரியுமா? ம்” என்றவன், “இதுக்கெல்லாம் காரணம் நீதான் ப்ரௌனி” என்று என்னை இழுத்து என் நெற்றியில் மறுபடியும் முத்தமிட, எனக்குக் கண்ணில் நீர் வந்தது.

பின் மெல்ல என்னை நடத்தி அவனும் நடந்தான். நான் தலைகுனிந்தபடி வேகமாக நடந்தேன். காரணங்கள் இரண்டு: ஒன்று சந்தோஷம் – கறுப்பனை மறுபடி பார்க்கலாம் என்று; இரண்டாவது மிக முக்கியமானது… பசிப்பா..

Author

Related posts

இனியவன் – 5 (இறுதிப்பகுதி)

ஏப்ரல் – 1

மாயக் கோடுகள்