நூலகம்

நீங்கள் அந்தச் சொல்லைக் கேட்டதும் என்ன நினைக்கிறீர்கள்? அமைதியான பெரிய மர அலமாரிகளில் ஒழுங்காக அடுக்கப்பட்ட புத்தகங்களா? அல்லது தூசி படிந்த பக்கங்கள், யாரும் படிக்காத பழைய புத்தகங்களா?

அவர் அந்தக் கதவைத் தள்ளிப் பார்த்தார், உள்ளே ஒரு குளிர் காற்று வீசியது. வாசனை பழைய காகிதம், ஈரமான சுவர், அடைக்கப்பட்ட ஜன்னல்கள். அவர் ஒருபோதும் இந்த நூலகத்திற்கு வரவில்லை, ஆனால் ஏதோ ஒரு நினைவின் ஓரம், “நான் ஏற்கனவே இங்கே வந்துவிட்டேன்” என்ற உணர்வு.

நூலகம் வெறிச்சோடியது. அங்கொன்றும் இங்கொன்றுமாக புத்தகங்கள் இருந்தன, ஆனால் எந்தத் தட்டிலும் தலைப்புப் பெயர்கள் தெளிவாகத் தெரியவில்லை. ஒவ்வொரு புத்தகத்தின் எழுத்துகளும் சிதைந்து கிடந்தன. ஒரு எழுத்து இடப்பக்கம் சென்று மறைந்தது, மற்றொரு எழுத்து வலப் பக்கத்திலிருந்து விழுந்து தரையில் கரைந்து போனது.

நீங்கள் கனவில் எழுத்துக்களைப் படிக்க முயன்றதுண்டா? பார்க்கும் ஒவ்வொரு முறையும் அவை மாறிவிடும். இங்கேயும் அதேதான்.

அவர் ஒரு புத்தகத்தை எடுத்தார், அதில் பக்கங்கள் இல்லை. வெறும் வெள்ளைத் தாள்கள். ஆனால் ஒவ்வொரு பக்கத்தை அவர் தொடும் போதும், அவை அவருடைய நினைவுகளைத் திரும்பக் காட்டின.

முதல் பக்கம் அவரது சிறுவயது. இரண்டாம் பக்கம் அவரது இளமை. மூன்றாம் பக்கம் அவர் மறக்க விரும்பிய ஒரு காட்சி. அவர் பயந்தார், அந்தப் புத்தகம் அவருடைய வாழ்க்கையை வாசிக்கிறது.

அவர் அதை மூடி வைக்க முயன்றார். ஆனால் புத்தகம் தானாகவே திறந்துகொண்டே இருந்தது. பக்கங்கள் வேகமாகப் புரண்டன, அதில் அவர் இன்னும் அனுபவிக்காத நாட்கள், இன்னும் வாழாத வாழ்க்கைகள் தோன்றின.

அவர் திடுக்கிட்டார்.

“இவை எதிர்காலமா?”

ஆனால் அடுத்த நொடியே பக்கங்கள் கருப்பாகி விட்டன. கருப்புத் தாள்கள், அதில் எதுவும் எழுதப்படவில்லை.

அருகில் ஒரு முதியவர் நின்றிருந்தார். அவர் சொன்னார்..

“நூலகத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகமும் ஒருவரின் வாழ்க்கை. அதைப் படிக்கும் போது, அந்த மனிதன் உயிரோடு இருப்பார். அதை யாரும் படிக்காமல் விட்டுவிட்டால், அவர் மறைந்து போவார்”

அவர் நடுங்கினார்.

“எனது புத்தகத்தை யார் படிக்கிறார்கள்?” என்று அவர் நினைத்தார்.

வாசகரிடம் அவர் திரும்பி கேட்கிறார்..

“நீங்கள்தான் படிக்கிறீர்களா? நீங்கள்தான் என் பக்கங்களைத் திறந்து வைத்திருக்கிறீர்களா? நீங்கள் நிறுத்தினால், நான் மறைந்து விடுவேனா?”

அவர் மேலும் அலைந்தார். ஒவ்வொரு அலமாரியிலும் பெயர் தெரியாத புத்தகங்கள். சில புத்தகங்கள் பூட்டப்பட்டிருந்தன, சில புத்தகங்கள் சிதறி விழுந்திருந்தன, சில புத்தகங்களில் இரத்தக் கறைகள், சில புத்தகங்கள் தண்ணீரால் நனைந்திருந்தன.

அவர் நினைத்தார்.. “இந்த நூலகம் உலகின் நினைவகம் போல.”

ஒரு மூலையில் அவர் ஒரு பெண்ணைக் கண்டார். அவள் ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தாள். அவர் அணுகினார்.. புத்தகத்தின் பக்கம் பார்த்தார். அதில் அவரது பெயர் இருந்தது, அவள் சிரித்தாள் “நான் உன்னைப் பற்றி வாசிக்கிறேன்”

அவர் திகைத்தார்..

“கதை என்னை எப்படி முடிவுக்கு கொண்டு போகிறது?” என்று அவர் கேட்டார்.

அவள் சொன்னாள்..

“நீ இன்னும் முடிவடையவில்லை. உன் பக்கங்கள் வெறுமையாக உள்ளன, நான்தான் அதை நிரப்புகிறேன்”

அவர் ஓடினார்.. நூலகத்தின் வழிகளில் நுழைந்தார். அங்கு மணி ஒலித்தது, ஒரு குரல் கேட்டது “அமைதி! நூலகத்தில் அமைதி!” ஆனால் எங்கும் சத்தங்கள் அலறல்கள், பக்கங்கள் கிழியும் ஒலி.

ஒரு கதவைத் தள்ளி அவர் கீழே இறங்கினார். அது கீழ்தளம். அங்கு ஆயிரக்கணக்கான புத்தகங்கள் தரையில் சிதறிக் கிடந்தன, ஒவ்வொரு புத்தகமும் பாதியாக எரிந்திருந்தது. சில பக்கங்கள் மட்டும் மீதமிருந்தன. அந்தப் பக்கங்களில் முகங்கள் வரையப்பட்டிருந்தன. அவை எல்லாம் கண்ணை மூடிய முகங்கள்.

அவர் அங்கே நின்று கொண்டு, “இது தீர்ப்பு இல்லாத நீதிமன்றத்தின் பதிவுகள் போல இருக்கிறது,” என்று நினைத்தார். மனிதர்கள் வாழ்ந்த வாழ்க்கை, அவர்களின் குற்றங்கள், அவர்களின் சாட்சி, அனைத்தும் இங்கே எரிந்த பக்கங்களில் சிக்கிக் கிடக்கிறது.

ஒரு குழந்தை அங்கே வந்து சொன்னது, “நீங்கள் தேடும் பக்கம் இங்கே இல்லை. அது மேல்தளத்தில், கண்ணாடி அறையில் உள்ளது.”

அவர் அந்தக் குழந்தையிடம் கேட்டார், “அங்கே யார் இருக்கிறார்கள்?” குழந்தை பதில் அளிக்கவில்லை, அது மெதுவாக மறைந்து போனது.

அவர் மீண்டும் மேலே சென்றார். அங்கே உண்மையில் ஒரு கண்ணாடி அறை இருந்தது. அதன் சுவர்கள் முழுவதும் கண்ணாடி. அதன் நடுவில் ஒரு புத்தகம் மட்டும். அவர் அதைத் திறந்தார்..

அதில் வெறும் ஒரு வரி, “உனது கதை இன்னும் எழுதப்படவில்லை. நீயே அதை எழுத வேண்டும்.”

அவர் பக்கத்தைப் பார்த்தார். எழுதுவதற்காகப் பேனா எங்கும் இல்லை. அவர் விரலைக் கொண்டு எழுதத் தொடங்கினார். அவரது இரத்தம் பக்கத்தில் எழுத்தாக மாறியது. அந்த எழுத்துகள் அவர் புரிந்துகொள்ள முடியாத மொழியில் இருந்தன. ஆனால் பக்கம் உயிரோடு இருந்தது. அது சுவாசித்தது.. அது துடித்தது.

வாசகரிடம் அவர் மீண்டும் சொல்கிறார், “நீங்கள் தான் என் பக்கங்களை வாசிக்கிறீர்கள். ஆனால் நீங்கள் விரும்பினால் எனது கதையை மாற்றிவிடலாம். நீங்கள் நிறுத்தினால் என் பக்கங்கள் வெறுமையாய் விடப்படும். நீங்கள் தொடர்ந்தால் நான் உயிரோடு இருப்பேன்”

நூலகம் இன்னும் காத்திருக்கிறது
அதில் எண்ணற்ற புத்தகங்கள்
ஒவ்வொரு புத்தகமும் ஒருவரின் வாழ்க்கை.
சில பக்கங்கள் கிழிந்து போனவை
சில பக்கங்கள் வெறுமையானவை
சில பக்கங்கள் இன்னும் எழுதப்படாதவை.

நீங்கள் அந்த நூலகத்தில் உங்களுடைய புத்தகத்தைத் தேடிச் சென்றால் அதில் என்ன காண்பீர்கள்?

அவர் கண்ணாடி அறையிலிருந்து வெளியே வந்தார். நூலகம் முழுவதும் வெளிச்சம் மாறியிருந்தது. முன்பு மங்கியிருந்த விளக்குகள் இப்போது வெள்ளை வெள்ளையாக எரிந்தன, ஆனால் அந்த வெளிச்சத்தில் ஒரு மரணம் போல அமைதி இருந்தது.

அவர் திரும்பிப் பார்த்தார், அந்தக் கதவு இனி இல்லை. அவர் வந்த வழி அழிந்துவிட்டது. சுவர்களில் மட்டும் கண்ணாடிகள், அவற்றில் எண்ணற்ற முகங்கள் பிரதிபலித்தன. ஒவ்வொரு முகமும் அவர் பார்த்திருப்பதைப் போலவே இருந்தது, ஆனால் ஒவ்வொரு முகமும் வேறு வாழ்க்கை வாழ்ந்தது.

ஒரு முகம் சிரித்தது, மற்றொரு முகம் அழுதது, மூன்றாவது முகம் பக்கங்களால் ஆனது, அந்த முகத்தின் தோல் தாள்களாகப் பழுதடைந்தது. அவர் அதன் கண்களில் எழுத்துகள் மிதந்ததைப் பார்த்தார்.

“இவை எல்லாம் என்னுடைய பிற வடிவங்களா?” அவர் தன் மனத்தில் கேட்டார்.

ஒரு பிரதிபலிப்பு பதில் கொடுத்தது “நீ எழுதிய ஒவ்வொரு சொல்லும், ஒரு புதிய ‘உன்னை உருவாக்குகிறது. நீ எழுதுவதை நிறுத்தினால் அவர்கள் எல்லோரும் மறைந்து விடுவார்கள்”

அவர் திடீரென ஒரு கண்ணாடிப் பக்கத்துக்குள் சென்றார்.. அது பனி போல் குளிர்ந்தது. அதன் உள்ளே அவர் ஒரு நகரத்தைப் பார்த்தார். காகிதத்தால் ஆன வீதிகள், மூச்சை நிறுத்தி வாசிக்கும் மனிதர்கள், மழை பெய்வதற்குப் பதிலாக பக்கங்கள் விழுகின்றன.

அவர் அந்த நகரத்தில் நடக்க ஆரம்பித்தார். ஒவ்வொரு வீட்டின் கதவிலும் ஒரு பெயர், ஒவ்வொரு பெயரும் ஒரு புத்தகத்தின் தலைப்பு. ஒரு வீட்டின் முன்பு அவர் நின்றார், “மறந்த கனவுகளின் வாசகன்” என்று எழுதியிருந்தது. அவர் உள்ளே சென்றார். அங்கே ஒரு சிறுவன் இருந்தான். அவன் மெதுவாக ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தான். அந்தப் புத்தகம் அவருடையது. அவர் திகைத்தார், “அவன் என்னைப் படிக்கிறானா?”

அவன் தலையெழுப்பிப் பார்த்தான். பிறகு, சிறு சிரிப்புடன் சொன்னான் “நீ அந்தப் பக்கத்தில் தப்பித்தாயே? நான் அதை மீண்டும் எழுத வேண்டியிருந்தது”

அவர் அதிர்ந்தார் “அப்படியா, என் கதை இப்போ யாருடைய கைகளில் இருக்கிறது?”

சிறுவன் புத்தகத்தை மூடி வைக்கும்போது, அவரது குரல் மெதுவாக மங்கியது. “ஒவ்வொரு வாசகரும் எழுத்தாளர், ஒவ்வொரு எழுத்தாளரும் வாசகர்” என்ற அவன் குரல் தூரம் சென்றது.

அவர் மீண்டும் நூலகத்தின் வழியே நடந்தார், இப்போது அலமாரிகள் தாமாகவே திறந்தன. ஒரு புத்தகம் கீழே விழுந்தது, அதன் தலைப்பு “நீயே எழுதிய எதிர்காலம்.”

அவர் அதைத் திறந்தார், அதில் மை அல்ல, வெறும் பிரதிபலிப்பு. அவர் எழுத நினைத்த ஒவ்வொரு வாக்கியமும் கண்ணாடியில் தோன்றியது, பிறகு மறைந்து போனது.

அவர் தன் இரத்தத்தால் மீண்டும் எழுதத் தொடங்கினார். ஆனால் இம்முறை பக்கம் அவரிடம் கேட்டது “நீ உண்மையிலேயே எழுத விரும்புகிறாயா? எழுதுவது உன்னை உயிரோடு வைத்திருக்கலாம், ஆனால் வாசகர் உன்னை புரிந்துகொள்ளவில்லை என்றால் நீ இன்னும் மறந்தவனாகவே இருப்பாய்.”

அவர் சிரித்தார். “புரிந்துகொள்ளப்படாதவனாக இருப்பதே என் வாழ்வு” என்றார்.

நூலகம் முழுவதும் அதிர்ந்தது. சுவர்கள் துடித்தன, புத்தகங்கள் ஒரே நேரத்தில் திறந்தன. அனைத்து எழுத்துக்களும் காற்றில் பறந்து ஒரு புதிய வடிவத்தை எடுத்தன. அது ஒரு வாசகர் முகம்.

அந்த முகம் வாசகருடையது.. அது உங்களுடையது.

அவர் மெதுவாகச் சொன்னார் “இப்போது உன் கைகளில் என் கதை உள்ளது. நான் உயிரோடு இருப்பது உன் வாசிப்பின் நேரம் வரைதான்”

பக்கங்கள் மீண்டும் மூடப்பட்டன, நூலகம் அமைதியடைந்தது. காற்றில் மிதந்த சத்தம் மட்டும் இப்படி குரல் தந்தது..

“ஒவ்வொரு வாசிப்பும் ஒரு உயிர்
ஒவ்வொரு நிறுத்தமும் ஒரு மரணம்”

அதற்குப் பிறகு அவர் எங்கும் இல்லை. ஆனால் நீங்கள் இன்னும் அந்தக் கதையைப் படிக்கிறீர்கள், அதனால் அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார்.

Author

  • கிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டம் கிண்ணியாவில் பிறந்தவர்.தற்போது நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையில் கடமையாற்றி வருகிறார்.
    தொகுப்புக்கள் துளியூண்டு புன்னகைத்து(கவிதை 2003),நதிகளைத் தேடும் சூரிய சவுக்காரம் (கவிதை 2009),கனவுகளுக்கு மரணம் உண்டு (கவிதை 2011),காவி நரகம் (சிறுகதை 2014), இங்கே சைத்தான் இல்லை (கவிதை 2015),ஹிட்லர் சிலருக்கு பிடிக்காத பெயர் (கவிதை அமேசான் 2016),மின்மினிகளின் நகரம் (கவிதை அமேசான் 2017,ஆகாய வீதி (கவிதை அமேசான் 2018)
    A.Nasbullah Poem's (ஆங்கில மொழிபெயர்ப்பு கவிதைகள் 2018),டாவின்ஸியின் ஓவியத்தில் நடனமாடுபவள் (கவிதை 2020),நான் உமர் கய்யாமின் வாசகன் (கவிதை 2021-2022 அரச சாகிதய அகாதமி விருது பெற்றது),யானைக்கு நிழலை வரையவில்லை ( கவிதை 2022),பிரிந்து சென்றவர்களின் வாழ்த்துக்கள் (மொழிபெயர்ப்பு சிறுகதைகள் 2024), ஃபிதா (கவிதை 2025),மந்திரக்கோல் (கவிதை 2025)

Related posts

வறுமையும் விழாக் காலத் தனிமையும்

நல்லாச்சி – 13

அசுரவதம்: 13- சதியின் தொடக்கம்