‘யே..’ என்று கத்திக் கொண்டு செல்லும் இளம் பள்ளிச் சிறுவனைப் போல அந்த ஜீப் ஒற்றைக் கோடாய் – இருவழிப் பாதையில் சென்று கொண்டிருக்க, இரு புறமும் விதவிதமான நிறங்களில் – செம்பழுப்பு, செவ்வண்ணம், மஞ்சள் வெளிர்+ அடர்த்தியான மர நிறம்.- என மலைகள் பின்னோக்கிச் சென்றவண்ணம் இருந்தன. ஒரு சந்தர்ப்பத்தில் மலைகள் எல்லாம் கொஞ்சம் பின்னோக்க, படக்கென “கார்கில்” என ஹிந்தியில் எழுதப் பட்ட பலகையும் பின் செல்ல ஜீப் உள் நுழைந்தது.
ஜீப்பினுள் பின்னிருக்கையில் இருந்த நாகாஸ் இருபுறமும் பார்த்தவண்ணம் இருந்தார். அவரின் இடதுபுறம் பாவ்னி, கண்களில் குளிர்கண்ணாடி, நல்ல சிகப்பு ஸ்வெட்டர் , ஜீன்ஸ் என இருந்தாள். காதோரம் நரையும் கொஞ்சம் அலை பாய, அந்தக் காலத்து அழகிதான். வயதானால் கவிதைக்கெல்லாம் முதுமையா வந்து விடுகிறது? பாவ்னியும் அப்படித்தான் என நாகாஸ் நினைத்துக் கொண்டார். முன்னால் லடாக்கிய ட்ரைவர் முன்ஷு – குட்டிப் பையன் ஜீப்பை ஓட்டியவண்ணம், “கார்கில் கிராமத்தின் உள்நுழைந்து பின், டிராஸ் போவோம் மேம் சாப்” என்றான் பாவ்னியிடம் தூய்மையான இந்தியில்.
பாவ்னியும் ஓகே எனச் சொல்லி அவரைப் பார்க்க நாகாஸ் முறுவலித்தார்.
நாகாஸ் மஸ்கட்டில் பலகாலம் வேலை பார்த்தவர். பாவ்னி ஒரே மனைவி: பாடினி ஒரே மகள் – இப்படிச் சொன்னால் பாவ்னி அடிப்பாள். நான்கு வருடம் முன் சென்னை வந்து, சென்னையில் சமர்த்தாய் சி.ஏ முடித்து விவ்ருதி போன்ற பெரிய கம்பெனியில் வேலை பார்த்திருந்த பாடினிக்கு வரன் பார்த்து திருமணமும் செய்தாகி விட்டது. அதே சென்னைப் பையன்தான். பின் என்ன? கொஞ்சம் ஊர் சுற்றலாம் என கோவில் குளம் எல்லாம் சுற்றி, (மஸ்கட்டில் இருந்த போது வருடம் இருமுறை வந்து செல்லும்போது பாடினியைப் பார்த்துக் கொள்ளவே நேரம் சரியாகி இருக்கும் – சென்னையில் அவள் படித்ததால்) எனில் இப்போது ஊர் சுற்றல் தான்.
இரு நாட்கள் முன் ஸ்ரீநகர் வந்து படகுவீடு சில சுற்றும் இடங்கள் எனப் பார்த்து விட்டு இப்போது கார்கில் வழியாக லே, லடாக்.
நல்ல சுற்றுலாக் கம்பெனி- என மாப்பிள்ளை பார்கவன் சிபாரிசு செய்த இடத்தில் பதிவு செய்து ஒரு வார விடுமுறை போல. என்ன விடுமுறை – ஓய்வு தான் எடுத்தாகி விட்டதே என பாவ்னி கிண்டல் செய்வாள்.
இப்போது ஜீப் கார்கில் – சின்ன கிராமம் போல அல்லது குட்டி நகரம் எனச் சொல்லலாமா- அதற்குள் செல்ல -ஒரு கட்டிடம் காட்டி ஹோட்டல் ஹேவன் கார்கில்- “இங்குதான் இராத் தங்குகிறீர்கள் மேம்சாப். இப்போ டிராஸ் வார் மெமோரியல் சென்று வரலாம்” என்றான் முன்ஷூ.
“நான் அவன் கண்ணுக்குத் தெரியவே மாட்டேனா பாவ்னா?” சிரித்தார் நாகாஸ்.
அவளும் சிரித்தாள்.. ஏனெனில் காலையில் சந்தித்தபோது ஹிந்தியில் அவன் உரையாட பதிலுக்கு பாவ்னியும் உரையாட (ஹிந்தி சீரியல்கள் உபயம்) அவன் உருகிவிட்டான். பாவ்னியை கொஞ்சம் உற்றுப் பார்த்தவாறே ஜீப்பை எடுத்தான் முன்ஷீ.. “உங்களுக்கு அழகான் நீல விழிகள் மேம் ஸாப்” எனச் சொல்ல கடகடவென நகைத்தாள் பாவ்னி. “தாங்க்யூ” சொல்ல வழியெங்கும் பேசிப் பேசியே நண்பர்கள் போல் ஆகிவிட்டனர். (ச்சும்மா அலட்டாதே பாவ்னி. உனக்கு யவன ராணியின் விழிகள் என்று எனக்குத் தெரியுமே. எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன் – இது நாகாஸின் கிண்டல் மொழிகள்). நாகாஸிடம் உடைந்த ஆங்கிலத்தில்தான் அவ்வப்போது பேசுவான் அவன். கூட ஜீப்பில் லடாக்கிய மொழிப் பாடல்களும் போட்டுக் கொண்டு வந்திருந்தான். ஜீப் மக்கள் நடந்து கொண்டிருந்த கார்கள் சென்று கொண்டிருந்த, கொஞ்சம் அவ்வப்போது பைக்குகள் சென்ற நெரிசலான தெருக்கள் வழியாகக் கடந்து பின் டிராஸ் செல்லும் செம்மண் பாதையில் ஓட்டமெடுத்தது.
ஒன்றே கால் மணி நேரம், இரு புறமும் அழகான மலைகள். கொஞ்சம் ஜீப்பின் கண்ணாடியை இறக்கி விட்டால் ச்சில்லீர் காற்று அந்த மதிய வேளையிலும். ஜூன் மாதமாகையால் அவ்வளவாக வெயில் இல்லை.
மஹேந்திரா ஜீப் மெல்ல மெல்ல செம்மண்ணைத் தாண்டிய தார்ச்சாலையில் வேகம் குறைக்க, கார்கில் வார் மெமோரியல் தெரிய, நாகாஸின் நெஞ்சுள் ஒரு துன்பப் பந்து எழுந்து அடைத்தது. நுழைவாயிலில் நுழைய தேசியக் கொடிகளின் வரிசை. மெல்லக் கார் நிறுத்தும் இடத்தில் நின்றபோது அந்த ராணுவ ஜோதி தீபம் – அமர்ஜவான் ஜோதி -தெளிவாகத் தெரிந்தது. மெலிதான இளம் சிவப்பு வண்ணத்தில் ஐந்து தூண்கள் நின்றிருக்க நடுவில் இருந்ததில் இருந்து ஒளி வந்து கொண்டிருந்தது. கார் நிறுத்தும் இடத்தில் சில கார்கள், சில வேன்கள் நின்றிருந்தன. வந்தவர்கள் உள் சென்றிருப்பர் போலும்.
இறங்கி நாகாஸும் பாவ்னியும் நடந்தார்கள். டோலோலிங்க் மலையின் அடிவாரத்தில் இருந்த அந்த மெமோரியல் அமைதியாகக் காட்சியளிக்க பத்துப் பதினைந்து இந்திய ராணுவ வீரர்கள் இயந்திரத் துப்பாக்கிகளுடன் நின்றும், நடந்தும் இருந்தார்கள். அங்கிருந்து பார்க்க டைகர் மலைச் சிகரம் தெரிய, அருகில் நெருங்க நெருங்க, ஒரு புறம் கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களின் சமாதிகள் தென்பட முதலில் சென்றார்கள்.
வரிசையாக எவ்வளவு பேர். நமக்காக எல்லையில் குளிர், பனி என்றும் பார்க்காமல் போரிட்டு உயிர் துறந்திருக்கிறார்கள் என நினைக்கையிலேயே பாவ்னியின் கண்களில் அருவி, நாகாஸின் கண்களில் குளம்.
மெல்ல நடந்து ஊடி வீரர்களின் பெயர்களைப் படித்துவிட்டு வெளியே வந்தால் ஒரு கேப்டனின் நினைவுக் கட்டிடம் – கேப்டன் விக்ரம் பத்ரா கார்கில் போரில் உயிர் விட்டவர்களில் ஒருவர் -அவரது தனியாகத் தெரிய பாவ்னியும் நாகாஸும் ஏதும் பேசாமல் மெளனமாக வணங்கினர். நாகாஸ் நினைத்தாற் போல தரையில் விழுந்து வணங்கி எழ, பாவ்னியும் எஸ் வடிவில் விழுந்து வணங்கி எழுந்தாள்.
நெஞ்சில் ஊடிய துக்கம் கண்களின் வழியாக வரத் திரும்பிச் செல்ல முற்பட்ட போது ஒரு ராணுவ வீரன் மெஷின் கன்னுடன், இவர்களது இயக்கங்களைப் பார்த்துக் கொண்டிருந்தவன் – சட்டையில் மகேந்திரசிங் என அட்டை இருந்தது -”சாப் இதைப் பார்க்கவில்லையே “ என ஒரு கட்டிடத்தைக் காட்டினான். காட்டிய இடத்தில் மனோஜ் பாண்டே காலரி – வீரத்தின் நினைவிடம் என ஒரு குடில் சற்றுத் தொலைவில் தென்பட, அங்கு சென்றார்கள் இருவரும்.
உள்ளே கார்கில் போரில் ஈடுபட்ட வீரர்களின் அஸ்தி, புகைப்படங்கள், விவரணைகள் படிக்கப் படிக்க நாகாஸுக்கும் பாவ்னிக்கும் மனதில் கனம் கூடியது. குளிர் உடலை ஊடுறுவ ஏறக் கஷ்டமான மலைப் பகுதியில் பல நாட்கள் மனம் சோராமல் கையில் கனக்கும் இயந்திரத் துப்பாக்கிகளுடன் ஏறி, நின்று, பதுங்கி, காத்திருந்து எதிரிகளைத் துவம்சம் செய்யும்போது தன் உயிரையும் கொடுத்திருந்த பல வீரர்கள். சில சமயங்களில் இரண்டு நாட்களுக்கும் மேலாகி விட்டதாம் உணவுப் பொருட்கள் மலை மேல் செல்ல. அவற்றையும் சகித்து, குளிரையும் வென்று எதிரிகளையும் வென்றவர்களின் வீர மரணம். அவர்களது அஸ்தி குட்டியாய் சாட்சியாய் மெளனித்திருந்தது. பின் புகைப்படங்களைப்பார்க்கப், படிக்க மனதில் திகீர் கனம்.
வெளிவந்து அந்த மகேந்திர சிங்கிற்கு சுக்ரியா – நன்றி சொல்லிக் கும்பிட்டார் நாகாஸ். “கேண்ட்டீன் ” என அவனிடம் கேட்க அவன் அந்தப் பக்கம் ஒரு திசையைக் காட்டினான். அவர்களை முன் செல்லவிட்டு மகேந்திர சிங்கும் பின் தொடர்ந்தான். நாகாஸ், தான் மஸ்கட்டில் வேலை பார்த்து இங்கு வந்ததைப் பகிர்ந்து கொண்டார். “நாங்கள் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். எங்களைக் காப்பதற்காக இங்கு உழைக்கிறீர்கள் உயிர் கொடுத்து!”.
அவனும் முறுவலித்து, ராணுவத்தில் பதினைந்து வருடம் இருந்ததைச் சொல்லிப் பேசிக் கொண்டே நடக்க – சின்ன காண்ட்டீன், அதன் முன்புறம் சில பல பெஞ்ச்சுகள். மதிய வெயில் குளிர்காற்றுடன் இதமாக இருக்க அந்தப் பக்கம் என்ன இருக்கிறது என்று பார்க்க முற்படுகையில் தான் அது நிகழ்ந்தது.
பலகைகள் இருந்த இடத்தில் ஒரு பத்துப் பேர் கொண்ட சுற்றுலாப் பயணிகள் சமோசா மற்றும் பானம் அருந்தியபடியே இருக்க – இவர்கள் நடந்து கொண்டே இருந்த போது – ஒரு சின்னப் பெண்- கவுன் அணிந்து – பத்து வயதிருக்கலாம். சுற்றிச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தது – ஒரு கணத்தில் படக்கென அந்தச் செம்மண் சாலையில் வீழ, அவளின் கைகள் கால்கள் விலுக் விலுக்கென இழுத்துக் கொண்டன.
நாகாஸ் தாவினார்.
அதற்குள் கும்பல் சேர்ந்து விட, மகேந்திர சிங் மற்றும் சில ராணுவ வீரர்களும் ஓடி வர, நாகாஸும் பாவ்னியும் அங்கே சென்றார்கள். “விலகுங்கள் விலகுங்கள்” என்றார் நாகாஸ். அவர் குரலில் இருந்த பதட்டம் மட்டும் கம்பீரத்தில் கூட்டம் வழி விட, ஒரு ராணுவ வீரன் இன்னொருவனிடம் மிலிட்டரி டாக்டரை கார்கிலிருந்து கூட்டி வரவேண்டும் எனச் சொல்லிக் கொண்டிருந்தான். நாகாஸ் இறங்கி பரிசோதித்தார். அந்தச் சிறுமியின் விலுக் விலுக் உதைத்தல் மற்றும் உதடு கோணல் அதிகரித்திருக்க, நாகாஸ் பார்வையைத் திருப்ப ஏற்கெனவே பாவ்னி கார் பார்க்கை நோக்கி ஓடிச் சென்று கொண்டிருப்பதைக் கண்டார்.
“சாப் நீங்கள்?” கேள்வியாய் மகேந்திர சிங் வினவ, “நான் டாக்டர் நாக சுப்பிரமணியன். நியூராலஜிஸ்ட்” என்றபடி கையை பாக்கெட்டில் விட, ஒரு சாவி தட்டுப்பட அந்தச் சிறுமியின் கையில் கொடுத்தார். கொஞ்சமும் குறையவில்லை. மறுபடியும் விழியுயர்த்த மூச்சிரைப்புடன் முன்ஷூ. கையில் மெடிக்கல் கிட். பின் ஓடி வரும் பாவ்னி.
மெடிக்கல் கிட்டைக் கையில் வாங்கி வேக வேகமாகத் திறந்து ஒரு இஞ்செக்ஷன்பாட்டிலை எடுத்து, “ஸோல்ஜர் கொஞ்சம் கரம் பானி கொண்டு வரச் சொல்கிறீர்களா?“ என மகேந்திரசிங்கிடம் சொல்லி ஊசி இருந்த பெட்டியையும் திறந்தார். அதற்குள் அந்தச் சிறுமியின் தாய் தந்தை அவளை ஒரு பெஞ்ச்சில் கிடத்தி இருந்தார்கள். “ஷ்.. டோண்ட் வொர்ரி” என அவர்களிடம் சொல்லி பாத்திரத்தில் வென்னீர் வர, ஊசியைப் போட்டு இடுக்கியால் எடுத்து இஞ்செக்ஷனில் ஏற்றி கிடுகிடுவென அந்தச் சிறுமியின் தொடையில் ஏற்ற அவளது உலுக்கல்கள் கொஞ்சம் குறைந்தது. குனிந்து விழிகளைத் திறந்து பார்த்தார். பின் “ இனிப் பயமில்லை. சற்று நேரத்தில் விழித்து விடுவாள்.” என்றார்.
சிறுமியின் அப்பா மிக்க நன்றி என ஹிந்தியில் சொல்ல, மகேந்திர சிங் ஆச்சர்யமாய்ப் பார்த்தான்.
“எப்படி டாக்டர் இது. எப்போதும் மருந்துகள் கைவசம் வைத்திருப்பீர்களா என்ன?”
“சில முக்கியமான மருந்துகள் மட்டும் ஸோல்ஜர். அதுவும் இந்த மருந்து எப்போதும் என்னிடம் இருக்கும். காரணம் என்னுடைய மறுபாதி பாவ்னி” பாவ்னி அந்தச் சிறுமியை மெல்லத் தட்டி மடியில் வைத்துக் கொண்டிருந்தாள்.
கேள்விக் குறியாய் மகேந்திர சிங் அவரைப் பார்த்தான்.
“ஏனெனில் அவளுக்கும் எப்போதாவது இந்த எபிலெப்ஸி – வலிப்பு வருவது உண்டு. அதுவும் ஊர் சுற்றச் செல்லும் போது கண்டிப்பாக எடுத்துச் செல்வேன்”
அவர் சொல்லி முடிப்பதற்குள் ‘ஊய்ங்க் ஊய்ங்க்’ எனச் சத்தமிட்டபடி ஆம்புலன்ஸ் நுழைந்தது.
“இப்போது அந்தச் சிறுமிக்கு?”
“மருத்துவமனைக்கு எல்லாம் போக வேண்டாம். கொஞ்சம் சிறிது நேரம் ஓய்வெடுக்கட்டும். நீங்கள் எங்கு தங்குகிறீர்கள்? மறுபடியும் பயணிக்கிறீர்களா என்ன?” என சிறுமியின் அப்பாவைக் கேட்டார். “ஒன்று சொல்லுங்கள். அந்தச் சிறுமியின் பெயர்?”
“யோகிதா” என்றாள் அவள் அம்மா கலங்கிய கண்களுடன் கொஞ்சம் முறுவலுடன்.
“யோகிதா மயக்குபவள், திறமை மிக்கவள் என அர்த்தம் முன்பு படித்திருக்கிறேன். அழகான பெயர். இதோ விழித்து விட்டாளே”.
அந்தச் சிறுமி மலங்க மலங்க விழிக்க, அவள் கையில் ஆற்றப்பட்ட டீ கொடுக்கப் பட்டது. அதை வாங்கி பாவ்னி மெல்லக் குடிக்க வைத்தாள்.
“ஹவ் ஆர் யூ பேபி. ஓகே தானே”.
மெல்லத் தலையாட்டியது அது.
“நாங்கள் கார்கிலில்தான் தங்கப் போகிறோம் டாக்டர். பின், லே செல்கிறோம்“ என்றார் யோகிதாவின் அப்பா. அவர்களுடன் வந்தவர்கள் ஓவ்வொருவராக வந்து நாகாஸின் கையைக் குலுக்கினார்கள். மகேந்திர சிங்குடன் இருந்த ராணுவ வீரர்களும் கூட.
முறுவலுடன் ஏற்றுக் கொண்டார் நாகாஸ்.
மகேந்திர சிங் அருகில் வந்தான்.
“என்னமோ நாங்கள் உயிரைக் காப்பாற்றுகிறோம் என்று சொன்னீர்கள். இப்போது நீங்கள் காத்திருக்கிறீர்களே யோகிதாவின் உயிரை. எனில் நாமிருவரும் ஒன்றுதானே. உயிரைக் காப்பாற்றுபவர்கள்தானே!”
படபடவென ஹிந்தியில் அவன் பொழிய, நெற்றிச் சுருக்கி பாவ்னியைப் பார்க்க, பாவ்னி சிரித்த படி மொழி பெயர்த்தாள்.
“ம்ஹூம் இல்லை. ஸோல்ஜர். நான் உடன் பட மாட்டேன்”
“எப்படி? ஏன்?”
“நான் உயிரைக் காப்பாற்றும் மருத்துவன்தான். இல்லை எனச் சொல்லவில்லை. பல பேர் உயிர்களை அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றி இருக்கிறேன். ஆனால் நீங்கள் அப்படி இல்லை. நீங்கள் உங்கள் உயிரைக் கொடுத்து, இங்கே பனியிலும் குளிரிலும் வாடி எங்களைக் காக்கிறீர்கள். ம்ஹூம்.. ஒன்றாகவெல்லாம் மாட்டேன்” என மென்மையாகச் சொன்னார் நாகாஸ். மகேந்திரசிங் கொஞ்சம் மெளனித்தான். அவனது உணர்வுகளைக் காட்டாத கண்களில் சிறு சலனம்.
பின் நாகாஸைக் கேட்டான். “ஒரு டீ சொல்லட்டுமா ஸாப்?”.
நாகாஸ் முறுவலித்தார்.,
(முற்றும்)