காலிக்கூடான எம்ப்ட்டி நெஸ்ட் பருவத்தை, எப்படி மகிழ்ச்சியான, அர்த்தமுள்ள அனுபவமாக மாற்றிக்கொள்வது? இதுநாள் வரை நாம் செய்ய நினைத்த சின்னச் சின்ன செயல்களை நமக்காகச் செய்து மகிழ்ச்சியாக வாழ்க்கையை வாழ்வது எப்படி?
“குழந்தைகள் சென்றுவிட்டனர், நான் தனியாக இருக்கிறேன்” என்பதை, “குழந்தைகள் வெற்றிகரமாக, சுதந்திரமாக வாழ்கின்றனர், நான் அவர்களைச் சிறப்பாக வளர்த்திருக்கிறேன்” என்று ஏன் நேர்மறையான சிந்தனையாக மாற்றிக்கொள்ளக் கூடாது? அவர்களுக்கு ஏதாவது உதவி தேவை என்றால் நிச்சயம் நம்மைக் கேட்கக் கூடிய சுதந்திரம் இருக்கிறது. “எனக்கு இனி என்ன வேலை?” என்பதை, “இப்பொழுது என் விருப்பங்களுக்கு நேரம் ஒதுக்கலாம்” என்று பார்ப்பது அவசியம். “என் தேவை இனி யாருக்கும் இல்லை” என்பதை, “இது அவர்களுக்கான காலம், என் உதவி தேவைப்பட்டால் நிச்சயம் அழைப்பார்கள்” என்று நினைக்கலாம். மாறாக, ‘என் உதவி தேவையான இடங்களில் ஏன் தன்னார்வத் தொண்டு செய்யக்கூடாது?’ என யோசிக்க வேண்டும்.
இதை வாழ்க்கையின் முடிவாகப் பார்க்காமல், ஒரு புதிய தொடக்கமாகப் பார்க்க வேண்டும். வாழ்க்கையின் புதிய கட்டம், புதிய சாத்தியங்கள் என யோசிக்கப் பழக வேண்டும்.
தம்பதியருக்கிடையேயான உறவை வலுப்படுத்துவது மிக முக்கியம். இருபது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கணவன்-மனைவி என்ற நிலைக்குத் திரும்புவது அவசியம். சிறிய விஷயங்கள் கூட பெரிய தாக்கத்தை உருவாக்கும்.
- ஒன்றாகக் காபி அல்லது டீ குடித்துப் பேசுவது.
- தினமும் முப்பது நிமிடங்கள் பிடித்த பாடல்களைக் கேட்பது.
- இரவில் சேர்ந்து சிறிது தூரம் நடந்து செல்வது.
- வார இறுதிக்கான சில பொழுதுபோக்குகளைத் திட்டமிடலாம்.
புதிய அனுபவங்களும் முக்கியம். ஒன்றாகப் புதிய இடங்களுக்குப் பயணம் மேற்கொள்ளலாம். இசை அல்லது நடன வகுப்புகளில் சேரலாம். “இந்த வயதில் கற்றுக்கொண்டு என்ன ஆகப்போகிறது” என்று யோசிக்காமல், நமது விருப்பத்திற்காகச் செய்யும் எதிலும் தவறே இல்லை என மனமுவந்து செய்யலாம்.
குழந்தைகளுடன் புதிய உறவை உருவாக்குவதும் அவசியம். குழந்தைகள் இப்போது பெரியவர்கள். எனவே, அவர்களைக் குழந்தைகளாக நடத்தாமல், அவர்களது வயதுக்கு ஏற்றவாறு பக்குவமாக நடத்துதல் வேண்டும்.
- அவர்கள் எடுக்கும் முடிவுகளை மதிப்பது அவசியம்
- அந்த முடிவுகளில் முரண்பாடு ஏற்பட்டால் அதைப் பக்குவமாக எடுத்துச் சொல்லத் தெரிந்துகொள்ள வேண்டும்.
- அறிவுரை சொல்வதைக் குறைத்துக்கொண்டு, அவர்களே தேவைப்பட்டுக் கேட்டால் மட்டும் நமது கருத்துக்களைச் சொல்ல வேண்டும். அவர்களது முடிவுகளை மதித்தல் மிக அவசியம்.
முக்கியமான ஒரு பழக்கமாக தொலைபேசியில் பேசும்போது புகார் சொல்லாமல் இருப்பது முக்கியம். அதிகமாகப் பேசுவதில்லை என்பதைக் கூட நேரடியாகக் கூறலாம். “பணி அதிகமாக இருக்கிறதா? இல்லை என்றால் நீ அழைக்காமல் இருக்க மாட்டாய் என அறிவேன். நானும் உன்னைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை” என்று சொல்லலாம். அதைக் கடந்து, “பெற்று வளர்த்த பெற்றோரை அழைக்கக்கூட உனக்கு ஐந்து நிமிடம் இல்லையா?” என்று புகார் மாதிரி சொல்லவேண்டிய அவசியம் இல்லை.
பாரம்பரியத் தமிழ்ச் சமூக வாய்ப்புகளும், நவீன சமூக வாய்ப்புகளும் நிறைய உண்டு. தமிழ் வரலாற்று மையங்கள் நடத்தும் சுற்றுலா, தமிழ் இலக்கியக் கூட்டங்கள் போன்ற இடங்களுக்குச் சென்று வரலாம்.
தொண்டுப் பணி மற்றும் சமூக சேவை மிக முக்கியம். தன்னார்வலர்களாகத் தொண்டு செய்யும் முதியோர் மிக மகிழ்ச்சியாகவும் நீண்ட ஆயுளுடனும் இருக்கின்றனர். தமிழ்ச் சூழலில், அன்னதானம் சமைத்தல், பரிமாறுதல், சிறு பள்ளிகளில் தொண்டர் ஆசிரியராகக் குழந்தைகளுக்குக் கல்வி கற்பித்தல், முதியோர் இல்லங்கள் பார்வையிடுதல், நேரம் செலவிடுதல், ஆலயங்களில் சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக மரம் நடுதல், பூங்கா பராமரிப்பு போன்றவை நல்ல மன திருப்தியையும் மகிழ்ச்சியையும் தரும்.
- எந்த வயதிலும் கற்க முடியும். புதிய மொழிகள் கற்கலாம். இசை, நடனம் ஆகியவை கற்கலாம். எழுதப் பழகலாம்.
- புதிய பொழுதுபோக்குகளைப் பழக முயற்சிக்கலாம்.
- தோட்டக்கலை மிகத் திருப்திகரமானது; செடிகள் வளர்வதைப் பார்க்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இதைத் தவிர புகைப்படக்கலையைப் பயிலலாம்.
உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வது உடல் வலிமையைக் கூட்டும், நெகிழ்வுத்தன்மையைக் கொடுக்கும், மன அழுத்தத்தைக் குறைக்கும், மேலும் நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். அதையும் தவிர, நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரும். உடற்பயிற்சிக் கூடத்துக்குச் செல்வது நல்ல நண்பர்களையும் பெற்றுத் தரும்.
மேலே சொன்ன வழிகளைப் பயிற்சி செய்து கொள்ளலாம். அன்றியும், மனச்சோர்வு ஏற்பட்டால், தியானம் செய்து மனதை ஒருநிலைப்படுத்தி உற்சாகப்படுத்திக் கொள்ளலாம்.
நமது உடல்நலனுக்கு நாம்தான் பொறுப்பு என்ற எண்ணம் வர வேண்டும். சின்ன சின்ன உடல்நலக் குறைவுகள் வரத் தொடங்கலாம். அவை நீண்டநாள் கவனிப்பைக் கோருபவையாக இருந்தால், பிள்ளைகளின் அன்பையும் அரவணைப்பையும் எதிர்பார்க்கும்.
விதவையர், விவாகரத்து பெற்றோர், திருமணமாகாதோர் போன்றோருக்கு இந்தத் தனிமையின் தாக்கம் இன்னுமே அதிகம். அவர்களுக்கு சமூகம் கொடுக்கும் அழுத்தம் அதிகம். அதை ஒப்புநோக்கும் போது பிள்ளைகளைப் பிரிந்து இருக்கும் பெற்றோரின் தனிமை அவ்வளவு சுமையானதல்ல. ஆனாலும், தனிமை என்பது அவரவர் மனப்பாங்கைப் பொறுத்தது. ஓர் அளவுகோல் கொண்டு அளக்க இயலாதது.
வளர்ந்து வெளிநாட்டில் பணி செய்யும் பிள்ளைகளை நம்பி அளவுக்கு அதிகமாகக் கடன் வாங்கியபின், அதை அடைக்க முடியாமல் திணறும் பெற்றோர்களின் நிலை இன்னும் பரிதாபகரமானது.
ஒத்த வயதினரோடு முதியோர் இல்லத்தில் சென்று வாழ்வது ஒன்றும் மோசமான முடிவல்ல. மேலும், பிள்ளைகள் பணிக்காக அயல்நாட்டில் இருக்கும் போது இதுபோன்ற இல்லங்களில் நல்ல கவனிப்போடு இருப்பது நல்ல முடிவே. இனிமேல் “பிள்ளைகள் கவனிக்காமல் விட்டுவிட்டனர்” என்ற குறைபாடு தேவையில்லை. மேலை நாடுகளில் இருப்பது போல பகல் நேர டே கேர் இருந்தால், முழுநாள் சென்று மற்றவர்களோடு நேரம் செலவிடலாம். மாலை வீட்டிற்குத் திரும்பிவிடலாம்.
அவரவருக்கு ஏற்றவாறு வாழப் பழகிக்கொள்ள வேண்டும். முன்புபோல இல்லாமல், இப்போதெல்லாம் 65 வயதெல்லாம் முதுமைக்கான வயதே அல்ல. மேலை நாடுகளில் பணியிடங்களில் ஓய்வு பெறும் வயதே 67 என்று உயர்த்தப்பட்டுவிட்டது. எனவே சோர்ந்து போகாமல், உற்சாகத்துடன் வாழ்க்கையை வாழ்வது ஒன்றே பிள்ளைகளுக்கும் மகிழ்ச்சியைத் தரவல்லது.