பால் வாசம் – (பத்து குறுங்கவிதைகள்)

1. சரசரக்கும் சருகுகள்
கிளை தாவும் அணில்
காற்றின் வேகத்தில்.

2. அமைதியான பின்வாசல்
அணிலின் வாலசைவு விளையாட்டு
நடனமாடும் அசைவின்மை.

3. மரப்பட்டையைச் சூடேற்றும் வெயில்
கொட்டையைக் கொறிக்கும் அணில்
திட்டமிடும் குளிர்காலம்.

4. புற்களில் காலைப் பனித்துளி
நொடியில் மறையும் கால்தடங்கள்
நிசப்தத்தைக் கைப்பற்றும் அணில்கள்.

5. மிதக்கும் மேகங்கள்
மரத்துக்கு மரம் பாயும் அணில்
தைரியத்தை மெச்சும் வானம்.

6. அகன்ற இலைகளைத் தட்டும் மழை
அடியில் வாலைச் சுருட்டிய அணில்
அன்புமயமாகும் அடைக்கலம்.

7. மென்தாடையில் உலர்குச்சிகள்
கிளைகளுக்குள் காலை ஒளி
ஒரு கூட்டின் முதல் மூச்சு.

8. அணில் கூட்டில் பால் வாசம்
மரயிடுக்கில் சேமித்த கொட்டைகள்
அக்கறையில் வாழும் உலகம்.

9. இலைகளை ஊடுருவும் சூரியன்
கண்களைத் திறக்கும் குஞ்சுகள்
எதிர்காலத்தைத் தாங்கும் கிளைகள்.

10. காற்றில் ஆடும் பாழ்மரம்
பொந்தினுள் துடிக்கும் சிறு இதயங்கள்
மெளனமாகக் கவனிக்கும் காடு.
*

ஒளிப்படம்: ராமலக்ஷ்மி

Author

Related posts

சிரிப்பால் சமூகத்தைச் செதுக்கிய யதார்த்தக் கலைஞன்

தமிழே அமிழ்தே – 4

அழகின் வெளிச்சம்.