ப்ரியன் கவிதைகள்

என்றாவது திரும்ப நேர்ந்தால்,
நாம் எப்போதும் சந்திக்கும்
அந்த மரத்தடியில்
கொஞ்சம்
இளைப்பாறிவிட்டுப் போ;

காதல் இன்னும்
அங்கே
உனக்காகக்
காத்துக் கொண்டிருக்கிறது.

*

நாம் சந்தித்த நாளில்
அந்த மரத்தின் கிளையில்
ஒரு குருவி
சுள்ளி சேர்க்க ஆரம்பித்திருந்தது.

நாம் கை கோர்த்த நாளில்
அது முட்டை இட்டிருந்தது.

நாம் முத்தங்களின்
ஈரங்களை
உணர்ந்த நாளில்,
குஞ்சுகள் பொரித்திருந்தன.

நாம் பிரிந்த நாளில்
குஞ்சொன்றை
பருந்து தூக்கிச் சென்றிருந்தது.

மிச்ச குஞ்சுகளை
தப்பித்துப் பிழைக்க வைத்து
வானம் அளக்க
அனுப்பிவைப்போம்…

வா.

*

நீ இல்லாத
இந்த இரவு
நீள்கிறது…
முடிவற்ற
பெரும் பாலையின்
பரப்பென.

வெறுமை –
வெக்கையோடு
கழிப்பவனின்
கழுத்தை கட்டியபடி
விசும்பிக் கொண்டிருக்கிறது
காதல்.

*

மின்னல் வெட்டி
கருகிப் போன
மரம் நான்;

காத்திருக்கிறேன் –
மழையாக
உனை பருகி
உயிர்த்தெழ.

Author

Related posts

என்ன செய்ய?

வரலாற்றில் பொருளாதாரம் – 23

சமன்பாடில்லா சமவெளிப் பயணங்கள்: 10