புதுமைப்பெண்

சென்னையை அடுத்த புறநகர்ப்பகுதியான செங்குன்றத்தில் உள்ள ஒரு அரவைமில்லில் ஒரே போலீஸ் கூட்டம். நிறைய அதிகாரிகள், அதில் ஒரே ஒரு பெண் சாதாரண உடையணிந்து, பேசிக்கொண்டிருந்தாள்.

அவள் பெயர் மணிமேகலை. சொற்பத் தொகையான ரூபாய் 1,000/_க்கு, மணிமேகலையும் அவள் குடும்பமும் முழுக்க அரவைமில்லில் அடிமையாக்கப்பட்டனர்.

மணிமேகலை 5ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதைத் தெரிவிக்க வந்தபோது, மணிமேகலையின் பெற்றோர், மற்றும் அவளது தம்பி மாறன் மூவருடன் மணிமேகலையையும் ஒரு வேனில் ஏற்றினர். அந்த வேனில் இவர்களைப்போல் மேலும் சில குடும்பங்கள் ஏற்றப்பட்டிருந்தன. அனைவரும் அரவைமில்லில் இறக்கி விடப்பட்டனர். ‘நடப்பது என்ன?’ என்பது புரியவே ரொம்ப நேரம் ஆனது மணிமேகலைக்கு. அந்த இடத்தில் எல்லா விதமான வேலைகளையும் மணிமேகலை குடும்பத்தைப் போல் அனைத்துக் குடும்பங்களும் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது.

மணிமேகலை நடப்பதைத் தெரிந்துகொண்டு, ‘எப்படி வெளியே செல்வது?’ என யோசித்து, அதைச் செயல்படுத்த முடிவு செய்தாள்.

ஆம்.. ஒரு நாள் யாரும் எதிர்பாராத சமயம் வெளியே வந்து ஒரு காவலரை வழியில் பார்த்து விபரம் தெரிவிக்க, அவர் அவளை ஒரு ஓய்வுபெற்ற அரசு அதிகாரியிடம் அழைத்துச்சென்று விபரம் சொல்ல, அவர் மணிமேகலையிடம் விபரங்களைக்கேட்டறிந்து, உதவி செய்வதாகக்கூறி, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிக்க, அவர்கள்தான் தற்போது அரவை மில்லுக்கு வந்திருந்தனர்.

அந்த அரவைமில்லில் சுமாராக 50 நபர்கள், இம்மாதிரியான கொத்தடிமையாக இருந்தனர். அரசு அலுவலர்கள் அவர்கள் அனைவரையும், கொத்தடிமைத்தனத்தில் இருந்து விடுவித்து, அரவைமில் முதலாளிக்கு அபராதம் விதித்து, 50 குடும்பங்களையும் ஒரு அரசு உணவு விடுதியில் தங்க வைத்தனர்.

சிறுவர், சிறுமியருக்கு அரசுப்பள்ளியில் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மணிமேகலை அவள் படித்த பள்ளியிலேயே தொடர்ந்து படிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் ஆண்களுக்கும், பெண்களுக்கும், அவரவருக்குத் தெரிந்த கைவேலையில் பயிற்சி அளிக்க அரசு அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.

மணிமேகலை சரியான நேரத்தில் இதைச் செய்து அனைவரையும் காத்ததால், அந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் வீரமங்கை எனப் பாராட்டப்பட்டாள்.

Author

  • ஓய்வுபெற்ற அரசு ஊழியர். பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு எழுத ஆரம்பித்திருக்கிறார். தினமணி கவிதை மணி பகுதியில் சுமாராக 20 வாரம் கவிதைகள் வெளியாகியிருக்கின்றன. திருக்குறள் 109-வது அதிகாரமான "வறுமை" என்ற குறளதிகாரத்திற்கு 10- சிறுகதைகள் எழுதி 2022ல் பெரம்பலூர் தாய்த்தமிழ்க்குழு மூலமாக வெளியிடப்பட்டது.
    மின்னிதழ்களில் சிறுகதைகள், கவிதைகள் எழுதி வருகிறார்.  உரத்த சிந்தனை, வானமே எல்லை, அமுதசுரபி, அத்திப்பூ, கல்வெட்டு மாத இதழ்களில் விமர்சனங்கள் வெளிவருகின்றன.

Related posts

சிரிப்பால் சமூகத்தைச் செதுக்கிய யதார்த்தக் கலைஞன்

அழகின் வெளிச்சம்.

அசுரவதம் :18 – கோடு போட்டு நிற்கச் சொன்னான்.. சீதை நிற்கவில்லையே.