சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 4

This entry is part 4 of 4 in the series பயணக்கட்டுரைத் தொடர்

மலைமந்திர்

நானும் என் அண்ணனும் புதுதில்லி வாழ்க்கைக்குப் பழகியிருந்தோம். நான் சமைக்க, குளிர் தண்ணீரில் என்னால் பாத்திரங்கள் கழுவ முடியாதென அண்ணன் அந்த வேலையைச் செய்வதுமாகப் பழகி இருந்தோம். நானே கூட பேருந்துகளில் பயணம் செய்யப் பழகிவிட்டேன்.

கும்பகோணத்தில் யாருமில்லாமல் தனியாக இருந்த அம்மாவையும் அப்பாவையும் ஒரு மாற்றத்திற்காகத் தில்லிக்கு வரவழைத்திருந்தோம். அவர்களை எங்காவது ஒரு நீண்ட தூரச் சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டும் என்பது எங்கள் நீண்ட நாள் ஆசை.

ஒரு ஞாயிற்றுக்கிழமை தில்லி மலைமந்திர் கோயிலுக்கு அவர்களை அழைத்துச் சென்றோம். அப்போது அக்‌ஷர்தாம் போன்ற பிரம்மாண்டங்கள் கிடையாது. ராமகிருஷ்ணா புரத்தில் சின்ன குன்றின் மேல் இருந்த சுவாமிநாதர் ஆலயம். படிகள் ஏறிச் செல்லவேண்டும். கற்பகாம்பாள், சிவன் சந்நிதிகள் இருந்தன. கும்பகோணம் பக்கத்தில் இருந்து வருபவர்களுக்கு இயற்கையாகவே சுவாமிலை மீது ஒரு ஈர்ப்பு இருக்கும். அது போலவே படிகள் மீது ஏறி மேலே செல்லவேண்டும். அங்கே சென்று தரிசனம் செய்துவிட்டு பிறகு சோனா ரூபா என்ற உணவகம் சென்று சாப்பிட்டுவிட்டு வருவதாக நினைத்துக்கொண்டிருந்தோம்.

அங்கே ‘தேவநாதன்’ என்பவர் ஒரு சிறு குழுவை வைத்துக்கொண்டு, இன்னும் ஒரு நாலைந்து பேர் கிடைத்தால் பத்ரிநாத் கிளம்பிவிடலாம் என்று பேசிக்கொண்டிருந்தார். ‘தமிழ்க் குரல்’ கேட்டதும் அப்பா ஆர்வமாகத் திரும்பிப் பார்க்க, தேவநாதன் எங்களை நோக்கி ஓடி வந்தார்.

அவர் விளக்கிய ‘ஆன்மிக உல்லாசப் பயணம்’ அப்பாவைக் கவர்ந்தது. தங்குமிடம், சாப்பாடு என அனைத்தும் அவர்கள் பொறுப்பு என்றும், நல்ல வசதியான இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் உறுதியளித்தார். கங்கை நதிக்கரையோரம் இமயமலையைப் பார்க்கும் ஆசையில் நாங்களும் சம்மதித்தோம்.

பயணம் உறுதியானதும், அடுத்த ஒரு வாரம் எங்கள் வீடு ஒரு ‘வார் ரூம்’ போல மாறியது. எங்கு பார்த்தாலும் பத்ரிநாத் பற்றிய பேச்சுகள்தான். அண்ணன் தன் அலுவலக நண்பர்களிடம் இமயமலை ஏறும் ரகசியங்களைக் கேட்டு வர, நான் என் கல்லூரித் தோழிகளிடம் குளிரைத் தாங்கும் வழிகளைப் பற்றித் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தேன்.

தில்லியின் கடுங்குளிரைச் சமாளிக்க சரோஜினி நகர் மார்க்கெட் மற்றும் கன்னாட் பிளேஸில் தேடித்தேடிப் புதிய ஸ்வெட்டர்கள் வாங்கப்பட்டன. மறுபுறம் அம்மா, வழியில் பசித்தால் என்ன செய்வது? என்று கவலைப்பட்டு, முறுக்கு, தேன்குழல் எனத் தின்பண்டங்களைச் சுட்டுப் பொரித்து டப்பாக்களில் அடைப்பதில் மும்முரமாக இருந்தார். கொண்டு செல்ல வேண்டிய பொருட்களின் பட்டியல் நீண்டுகொண்டே போனது.

பயணம் கிளம்பும் போதுதான் எங்களுக்கு அந்தப் பெரிய ‘அதிர்ச்சி’ காத்திருந்தது. தங்குமிடம் பற்றிய தேவநாதனின் வாக்குறுதிகள் அனைத்தும் ஒரு ‘அலங்கரிக்கப்பட்ட பொய்’ என்பது மெல்லப் புரியத் தொடங்கியது. அதைவிடப் பெரிய ஆச்சரியம், அந்தப் பயணத்தில் வந்த அத்தனை பேரையுமே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என நினைத்து அவர் பேசியது!

அந்தக் குடும்பக் குழுவில் 60 வயதுக்குக் குறைவானவர்கள் நான் மற்றும் என் அண்ணன் மட்டும்தான்! இன்னும் திருமணம் கூட ஆகாத ‘யூத்’களாக நாங்கள் இருக்க, மற்றவர்கள் அனைவரும் பக்திப் பழங்களான முதியவர்கள். இப்போதே புண்ணியத் தலங்களுக்கு போய் பாசிட்டிவ் எண்களைக் கூட்டிவிட்டால், பாவங்கள் செய்தாலும் அவை பாதிக்காதல்லவா?

1989-ல், இளைஞர்களான நாங்கள், எங்களை விட மூன்று மடங்கு வயது மூத்தவர்களுடன் இமயமலை ஏறத் தயாரானோம். அப்போதெல்லாம் ஐபோன் என்ன, சாதாரண போன் கூட இல்லை. எல்லாம் தபால் வழிதான். மற்ற அண்ணன், அக்காக்களிடம் கடிதம் மூலம் சொல்லிவிட்டுக் கிளம்பத் தயாரோனோம்.

“பிள்ளை வரதன் என்கிற சமையல்காரர் வருகிறார், அவரும் அவர் உதவியாளர்களும் சமைப்பார்கள் ” என அப்பா ஒரு பெரிய திட்டத்தையே அடுக்குவார். ஹரித்துவார், ரிஷிகேஷ், தேவப்பிரயாக், ருத்ரபிரயாக் வழியாக பத்ரிநாத் செல்லும் அந்தப் பயணப் பட்டியலைப் பார்த்து அப்பாவுக்கும் அண்ணனுக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. ஒரு வழியாகத் தின்பண்டங்கள் மற்றும் புது ஸ்வெட்டர்களுடன், அந்த பெரியவர்கள் குழுவோடு ஆனந்தமாகப் பேருந்தில் ஏறினோம்.

(தொடரும்)

Series Navigation<< சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 3

Author

Related posts

அசுரவதம் பாகம் இரண்டு: (அத்தியாயம் – 2: மலைக்கோட்டை)

உப்புக் காற்று

தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 5 – மொழியாக்கம்