சிரிக்கும் ஆறு

பூந்தமிழ், ஷமீரா, கபிலன் மூவரும் இணைபிரியாத தோழர்கள்; ஒன்றாக எட்டாம் வகுப்பில் பயில்பவர்கள்; படிப்பிலும், விளையாட்டிலும் படு சுட்டிகள். விடுமுறை நாட்களில் கிராமத்தின் கிழக்கு எல்லையில் அமைந்திருந்த ஆற்றங்கரைதான் அவர்கள் கூடிக் கதை பேசும் இடம். அவர்கள் கதைபேசி மகிழ்வதற்கென்றே ஆற்றங்கரையில் மணம் வீசி நின்றது பவளமல்லி மரமொன்று.

பூந்தமிழ், கபிலன், ஷமீரா, ஆஷா, கேத்தரின், காருண்யா, மகி, தேவா, ஷீபா, சரணி, என நிறைய சிறுவர் சிறுமியர்கள் வசித்து வந்தார்கள் அந்தக் கிராமத்தில். அனைவரும் துடிப்பானவர்கள். அந்தக் கிராம மக்கள் ஆற்றையும், அங்கு வரும் பறவைகளையும் தங்கள் உயிருக்கும் மேலாக நேசித்தார்கள்.

முன்பனிக்காலம், பின்பனிக் காலம், இளவேனிற் காலம், முதுவேனிற் காலம், கார் காலம், இலையுதிர் காலம், என ஒரு ஆண்டின் ஆறு பருவகாலங்களிலும் பலவண்ணப் பறவைகள் கூடிவிடும் அந்தக் கிராமத்தில்.

“மனிதர்களை மாதிரிதான் பறவைகளும்; கோடை காலத்தில் குளிர்ந்த இடத்தையும், குளிர் காலத்தில் மிதமான வெப்பம் உள்ள இடத்தையும் தேடிச்சென்று சுகம் காணும் இந்தப் பறவைகள்”, என்று பேரன் பூந்தமிழிடம் சொல்லுவார் அவனது தாத்தா.

தாத்தா சொல்லும் விஷயங்களை மனதில் மறக்காமல் நினைவு வைத்துக் கொண்டு தனது தோழர்களிடம் சொல்லுவான் பூந்தமிழ்.

ஆற்றங்கரையில் பலவிதமான அரிய மரங்கள் செழித்து வளர்ந்து நின்றன. நிலத்தடி நீரோட்டம் நிறைந்திருந்த அந்தக் கிராமத்திற்கு அயல்நாட்டுப் பறவைகள் எல்லாம் வந்து கூடும். வெவ்வேறு பருவ காலங்களில் வெவ்வேறு விதமான பறவைகளின் கீச்சொலியில் நிறைந்துவிடும் ஆற்றின் பகுதி.

வலசை வரும் பறவைகள் பசுமையான மரங்களின் உயர்ந்த கிளைகளில் கூடு கட்டியிருப்பதைப் பார்த்து, பூந்தமிழின் தாத்தா சொல்வார்:

“இந்த ஆண்டு மழை அதிகமாக இருக்கும்”.

பறவைகள் கூடுகட்டுவதை வைத்தே மழைபெய்யும் அளவைக் கணித்துவிடுவார் அவர்.

“உயரத்தில் கூடு கட்டினால் மழை அளவு அதிகம்; தாழ்வாகக் கட்டினால் மழை குறைவு”, என்று தாத்தா சொல்லும் மழைக் கணக்கு பூந்தமிழின் மனதுக்குள் ‘பசுமரத்து ஆணியாகப்’ பதிந்து போய் இருந்தது.

“பருவ காலங்களுக்கு ஏற்ப இடம் விட்டு இடம் பறவைகள் செல்வதுதான் ‘வலசை போதல்’ என்று தாத்தா சொன்ன விளக்கத்தைத் தன் தோழர்களிடம் சொல்லுவான் பூந்தமிழ். அவன் சொல்லும் விபரங்களை வியந்து போய் கேட்பான் கபிலன்.

“ஏன் அப்படி இடம் விட்டு இடம் செல்ல வேண்டும்?” என்று தன்னுடைய கோலிக்குண்டு கண்களை உருட்டியபடி எதிர்க்கேள்வி கேட்பாள் ஷமீரா.

“குளிர் காலங்களில் சில பகுதிகளில் நீர் நிலைகள் உறைந்து பனியாக மாறிவிடும். பிறகு எப்படி அங்கு வசிக்கும் பறவைகளுக்கு மீன், பூச்சி, பழங்கள் போன்ற உணவுப் பொருள்கள் கிடைக்கும்? அதனால்தான் வேறு இடம் தேடி அவைகள் பயணம் செய்கின்றன” சலிக்காமல் பதில் சொல்லுவான் பூந்தமிழ்.

நீண்ட சிவந்த நிறமுடைய கால்களையும், பனங்கிழங்கு போன்ற அழகிய அலகையும் கொண்ட செங்கால் நாரையும், பூநாரையும் அக்டோபர் மாதத்தின் இறுதியில் அந்தக் கிராமத்திற்கு வந்துவிடும். அவைகளைத் தொடர்ந்து மஞ்சள் மூக்கு நாரை, நீர்க்காகம், கூழைக்கெடா, நத்தை கொத்தி நாரை என்று விதம்விதமான பறவைகளும் வந்து சேர்ந்துவிடும்.

ஊசிவால் வாத்துக்கள், பவழக்கால் வாத்துக்கள், நீலத்தலை பூங்குருவிகள் ஆகிய பறவைகளைப் பார்த்தால் சந்தோஷத்தில் துள்ளிக் குதிப்பாள் ஷமீரா. புற்கள், நீர்த்தாவரங்கள், சிறு மீன்கள், தவளைகள், புழுக்கள், நத்தைகள் என ஆற்றுப் பகுதியில், வலசை வரும் பறவைகளுக்கான உணவுகள் நிறைந்து இருந்தன.

ஆற்றில் அழகான கழுத்துகளைக் கொண்ட வாத்துகள் இருந்தன. ஆற்றில் மிதந்து திரியும் சிறுசிறு பூச்சிகளை ‘லபக்’கெனப் பிடித்து விழுங்கிவிடும் இந்த வாத்துக்கள். வாத்துக்களின் கழிவுகளை உண்டு வாழ்ந்தன மீன்கள். அடர்ந்த வெண்மை நிற இறகுகள் கொண்ட வீட்டு வாத்துக்களும், பழுப்பு நிற இறகுகள் கொண்ட காட்டு வாத்துக்களும் ‘க்வாக்…க்வாக்’ என சத்தமிட்டபடி ஆற்றில் சுகமாக நீந்தித் திரிந்தன.

வலசை வரும் பறவைகளையோ, ஆற்றில் ஆனந்தமாகச் சுற்றிவரும் வாத்துக்களையோ அந்தக் கிராமமக்கள் துன்புறுத்த மாட்டார்கள். தீபாவளிப் பண்டிகை நாளில் அந்தக் கிராமத்தில் பட்டாசுகளின் வெடியோசையைக் கேட்கமுடியாது.

ஆற்றின் கரையில் செழிப்பான மரங்கள் மட்டுமில்லாமல் வண்ண வண்ணப் பூக்கள் பூக்கும் காட்டுச் செடிகளும் நிறைந்திருந்தன. வயலட், ஊதா, மஞ்சள், மெஜந்தா, சிவப்பு எனப் பல நிறங்களில் பூத்துக் குலுங்கும் பூக்களைச் சுற்றிவரும் வண்ணத்துப் பூச்சிகளும், தட்டான்களும். ஆற்றங்கரையில் எல்லாக் காலங்களிலும் பறவைகளின் ‘கீச்..கீச்’ ஒலியும், தேன் சிட்டுகளின் ரீங்காரமும், பொன்வண்டுகளின் ‘ங்க்கீ’ எனும் மெல்லிய சீட்டி ஒலியும் நிறைந்திருக்கும்.

பவளமரத்தில் நடு இரவில் ‘குப்பென்று’ பூக்கும் பூக்கள் காலை நேரத்தில் மரத்தைச் சுற்றி உதிர்ந்து கிடக்கும். மெத்து மெத்தென்று குவிந்து கிடக்கும் பவளமல்லிப் பூக்களின் மெத்தையில் சுகமாக அமர்ந்து கதை பேசி மகிழ்வார்கள் பூந்தமிழும் அவன் தோழர்களும்.

அழகும், ரம்மியமுமாக இருந்த இனியனூர் கிராமத்திற்கு சோதனை வந்து சேர்ந்தது. நெகிழிக் குப்பைகள் ரூபத்தில் கிராமத்தைச் சோதனை சூழ்ந்தது. வலசை வரும் பறவைகளின் அழகைப் பார்க்க கிராமத்திற்கு வருகைபுரியும் சுற்றுலா பயணிகள் கிராமத்தைக் குப்பைக் காடாக மாற்றத் தொடங்கினார்கள். அவர்களின் செயல்களால் இனியனூர் கிராமத்தின் தூய காற்று மாசு அடைந்தது. நெகிழிக் குப்பைகள் குவிக்கப்பட்ட இடத்தின் வழியாக ஊடுருவும் மழை நீர் நிலத்தடி நன்னீரை மாசுபடுத்தியது. தேனாற்றில் வீசியெறியப்பட்ட நெகிழிக் குப்பைகள் மக்கிப் போக வழி தெரியாமல் நச்சு வாயுவை வெளிப்படுத்தின. ஆற்றில் ஆக்சிஜன் அளவு குறைந்து மீன்கள் சுவாசிக்கத் தடுமாறின. சில மீன்கள் மூச்சுத்திணறி செத்து மிதந்தன. அவைகளைப் பார்த்து பறவைகளும், வாத்துக்களும் நடுக்கம் அடைந்தன.

கோடிக்கணக்கில் இனியனூர் கிராமத்திற்குப் புகழிடம் தேடி வந்த அயல்நாட்டுப் பறவைகளின் எண்ணிக்கை இலட்சங்களாகக் குறைந்துவிட்டது. இந்த நிலை நீடித்தால் அழகிய ஆறு அழிந்துவிடும்; பறவைகள் வருவதும் மறைந்துவிடும்; மரங்கள் பட்டுப் போய் இனியனூர் கிராமம் வறண்ட பூமியாக மாறிவிடும் என்ற அச்சம் வந்துவிட்டது கிராமத்து மக்களுக்கு.

உடனடியாகச் செயலில் இறங்கினார்கள் ஊர்ப் பெரியவர்கள். “நெகிழிகள் இல்லாத தேனாறு”, “நெகிழி பொருட்கள் தடைசெய்யப்பட்ட கிராமம்” போன்ற பதாகைகள் கிராமம் முழுக்க வைக்கப்பட்டது. சுற்றுலா வரும் பயணிகள் தீவிரமான சோதனைக்குப் பிறகே ஊருக்குள் அனுமதிக்கப்பட்டார்கள்.

ஆற்றை நிறைத்துக் கிடந்த நெகிழிக் குப்பைகள் தூய்மை செய்யப்பட்டன. இனியனூர் கிராமத்துப் பெரியவர்களோடு இணைந்து சிறுவர், சிறுமிகளும் தூய்மைப் பணியில் பம்பரமாகச் செயல்பட்டார்கள். குப்பைகள் மறுசுழற்சிக்காக மாநகராட்சி வண்டிகளில் ஏற்றி அனுப்பப்பட்டன. புயல்வேகப் பணியில் ஆறு விரைவில் சுத்தம் அடைந்தது; அதன் அழகு மீண்டும் திரும்பியது. ஆறு பளிங்கு போல் ஜொலித்தது. பூந்தமிழ், கபிலன், ஷமீரா ஆகியோர்களின் முகம் சூர்யகாந்திப் பூவாக மலர்ந்தது.

நெகிழிக் குப்பைகள் இல்லாத தூய ஆற்றில் வாத்துக்கள் “க்வாக்…க்வாக்” என மகிழ்ச்சிக் கூச்சலிட்டபடி சுற்றிவந்தன; கிராமத்தை பவளமல்லிப் பூக்களின் மணம் கலந்த தூய காற்று நிறைத்தது.
தூய்மையான ஆற்றின் சிரிப்பைக் கேட்டு குழந்தைகள் மகிழ்ந்து போனார்கள்.

Author

  • 1967ல் பிறந்த இவரது பத்துக்கும் மேற்பட்ட நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. 2023-ல் வெளிவந்த கி.ராஜநாராயணனின் ஒன்பது தொகுதிகள் நூலாக்கத்தில் பதிப்பாசிரியராகச் செயல்பட்டுள்ளார். தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் கீழ் இவரது சிறுவர் கதைகள் நூலாக்கம் பெற்றுள்ளன. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், அறம் கிளை 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் நடத்திய கவிஞர் கலை இலக்கியா நினைவு நூல் விமர்சனப் போட்டியில் தொடர்ச்சியாக இருமுறை முதல் பரிசினை வென்றுள்ளார். சாகித்திய அகாதெமி நிறுவனத்திற்காகத் தொகுக்கப்படும் சிறார் கதைத் தொகுப்புகளில் இடம்பெற இவரது கதைகள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. தமிழக அரசின் 2023-24-ஆண்டிற்கான, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டிற்காக கலை இலக்கிய படைப்புகளை உருவாக்கிடும் எழுத்தாளருக்கான ரூ.1,00,000/- பரிசுத்தொகையையும், பாராட்டுச் சான்றிதழையும், இவரது "சுதந்திரவேங்கை ஒண்டிவீரன் பகடை" எனும் நாவல் பெற்றுள்ளது. விகடன், பொம்மி, பேசும் புதிய சக்தி, தும்பி, காக்கைச் சிறகினிலே, மானுடம், தனிமை-வெளி, பள்ளிக் கல்வித்துறைக்காக வெளிவரும் பள்ளி மாணவர்களுக்கான "ஊஞ்சல்", தினமலர் மாணவர்களுக்கான 'பட்டம்’ போன்ற பல்வேறு இதழ்களிலும் தொடர்ந்து இவர் எழுதி வருகிறார்.

Related posts

அனைவரும் சமம்

வாழ்த்துகிறோம்

ஊர்வலம் போன பெரியமனுஷி