தமிழே அமிழ்தே – 11

கடந்த வாரங்களில் வல்லொற்று (க் ச் ட் த் ப் ற் ) மிகும் இடங்களைப் பார்த்தோம்.

எங்கெல்லாம் இந்த வல்லொற்று மிகாது என்பதையும் இனி பார்ப்போம். ஏனெனில் ஒற்று மிகும் இடங்களில் மிகாமல் எழுதுவது எவ்விதம் தவறோ, அது போன்றே ஒற்று மிகுவது கூடாத இடங்களில் ஒற்று மிகுத்து எழுதுவதும் பிழையாகும்.

உம்மைத் தொகையில் மிகாது.

காட்டாக, நாள் கோள் என்று எழுதுவதை விரித்தால் நாளும் கோளும் என்றாகும். இந்த இடங்களில் ஒற்று வரலாகாது.

நாள்கோள், கைகால், காடுகழனி, பட்டிதொட்டி இது போன்ற உம்மைத் தொகைகளில் ஒற்று மிகாது.

வினைத்தொகை:
மூன்று காலத்திற்கும் பொருந்தும் வகையில் வினைச்சொல் வருவது வினைத்தொகை ஆகும். இதில் ஒற்று மிகாது.

ஒளிர்பொழுது,
ஊறுகாய், சுடுசோறு, விரிகதிர்

குற்றியலுகரங்களுள் மென்தொடர், இடைத்தொடர், ஆய்தத்தொடர் ஆகிய குற்றியலுகரங்களில் ஒற்று மிகாது – முன்னரே சொன்னோம்.
காட்டுகள்:
தெரிந்து கொண்டீர்களா?
நோன்பு துறப்பு.
(மென்தொடர்)

செய்து கொடுத்தான்
நெய்து தந்தான்
(இடைத்தொடர்)

அஃது தெரிந்தது(ஆய்தத் தொடர்)

குறிப்புப் பெயரெச்சத்தில் ஒற்று மிகாது.

நல்ல தலைவர்

அதுபோல, தெரிநிலைப் பெயரெச்சத்திலும் ஒற்று மிகாது

கடித்த பாம்பு, துடித்த சிறுவன்
(வினைச்சொல் பெயரைக் கொண்டு முடிவது பெயரெச்சம் – இறந்த கால வினையைக் குறித்து நின்று காலம் காட்டுவதால் தெரிநிலைப் பெயரெச்சம்).

எழுவாய்த் தொடரிலும் வல்லினம் மிகாது

கால் கடுத்தது
கை தட்டியது

அடுக்குத் தொடர், இரட்டைக் கிளவிகளில் ஒற்று மிகாது

போ போ, பார் பார்,

கலகல, சலசல

பெயருக்கும் வினைக்கும் உரித்தான சொற்கள் உரிச்சொற்கள் எனப்படும்.
நனி பேதை, கடிகமழ்.

அன்மொழித் தொகையில் ஒற்று மிகாது.
துடியிடை தோன்றினாள்.

வினைமுற்றிய தொடரிலும் ஒற்று மிகாது.

தோன்றியது கவிதை

அதுபோன்றே, தொடர்மொழி ஈற்று நெடிலின் பின்னும் ஒற்று மிகாது.

காட்டு:
நேரே கண்டான்
நடந்தே சென்றான்.

வியங்கோள் வினைமுற்றும் வல்லினம் மிகா இடமாகும்.

வருக கண்ணா
வாழ்க தலைவா.

(இத்தொடரில் சிறிது இடைவேளைக்குப் பிறகு இன்னுமின்னும் தமிழின் அமிழ்தான பா வகைகள் பற்றியும் தொடர்வோம்)

Author

Related posts

மாயா

அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 4: மனைவி என்னும் மதியூகி )

மருத்துவர் பக்கம் -16: ஆரோக்கிய ரமலான் 2026